சித்தர் சிந்திய முத்துகள் .......3/33

 


சிவவாக்கியம்-201

பூவும் நீரும் என்மனம் பொருந்து கோயில் என் உளம்
ஆவி ஓடி லிங்கமாய் அகண்டம் எங்கும் ஆகினாய்
மேவுகின்ற ஐவரும் விலங்கு தூப தீபமாய்
ஆடுகின்ற கூத்தனுக்கோர் அந்தி சந்தி இல்லையே!!!

பூவாகவும், நீராகவும் இருப்பது என் மனம். அதில் ஈசன் பொருந்தி கோயில் கொண்டிருப்பது என் உள்ளம். ஆவியான ஆன்மா இலிங்கமாக அமைந்து என் உடலிலும் இவ்வுலகங்கள் யாவிலும் நிறைந்து நின்றுள்ளது. இந்த அகிலம் எங்கும் நிறைந்த ஐம்பூதங்களும் என் உடலில் மேவி ஐம்புலங்களாக மணமாகவும், சோதியாகவும் விளங்கி ஆட்டுவிக்கின்ற ஈசன் எனக்குள் நடராஜனாக இரவு பகல் இல்லாது  எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கின்றான். அவனை இராப்பகல் இல்லா இடத்தே கண்டுகொண்டு தியானம் செய்யுங்கள்.  
******************************************* 

சிவவாக்கியம்-202 

 
உருக்கலந்த பின்னலோ உன்னை நான் அறிந்தது
இருக்கில்  என் மறக்கில் என் நினந்திருந்த போதெலாம்
உருக்கலந்து நின்ற போது நீயம் நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே!!!

ஈஸ்வரா! நான் ஆன்மாவாக இருந்து உருவாகி வளர்ந்து, உன்னைக் கலந்து இவ்வுடம்பைப் பெற்றேன். என் உடலில் உருவாக நின்ற என்னை என்னிலே இருந்து, என்னிலே மறந்து, என்னிலே நினைந்து, என்னிலே அறிந்து கொண்டேன். உன் உருவை அறிந்து என் உடல் பொருள் ஆவியை உன்னிடம் ஒப்படைத்து என் ஊண் உருகி, உயிர் உருகி தியானித்து உன்னுடன் கலக்கும் போது, நீயும் நானும் ஒன்றாகி நிற்பதை உணர்ந்து கொண்டேன். உன் திருவருளால் ஞானம் பெற்று தவம் செய்யும் போது, சிவமே உண்மை என்பதை தெளிந்து கொண்டேன்.  
******************************************* 

சிவவாக்கியம்-204  

பொய்க்குடத்தில் ஐந்தொதுங்கி போகம் வீசுமாறு போல்
இச்சடமும்  இந்திரியமும் நீரு மேல் அலைந்ததே
அக்குடம்  சலத்தை மொண்டு அமர்ந்திருந்த வாறு போல்
இச்சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே!!

பொய்க் குடமாகிய மானுட உடம்பில் ஐந்து பூதங்களும் அமைந்து மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களும் சுகபோகங்களை அனுபவிக்கின்றது. இந்த உடம்பும் இந்திரியங்களும் நாதவிந்தாக நீரினால் அமைந்தே அலைந்து கொண்டிருக்கின்றது. மண் குடத்தில் நீரை ஊற்றி வைத்தால் அது எப்படி உறுதியாக சாயாமல் இருக்கின்றதோ, அது போலவே பொய்க் குடமான இந்த உடம்பில் மெய்ப் பொருளாக சிவம் உகந்து அமர்ந்திருப்பதால் தான் இவ்வுலகில் உயிர்கள் நிலைத்திருக்கின்றது. சிவம் போனால் சவமே!!


************** .அன்புடன் கே எம் தர்மா.


0 comments:

Post a Comment