கடவுள் முதலில்
பூமியை உருவாக்கினார். அதன் பின்னர் பூமி இருட்டாக இருக்கிறது என்று கருதி, சூரியனையும், சந்திரனையும்
படைத்தார் என்று பைபிள், குரான், யூதமதம் ஆகிய
மூன்று பிரதான மதங்களும் சொல்கின்றன. அதேபோல இந்து மதத்தின் உபவேதங்களில் ஒன்றான, 'ஜோதிசம்' எனச்
சொல்லப்படும் சோதிடத்தில்,
பூமியை மையமாக
வைத்து நவக்கிரகங்கள் சுற்றுகின்றன என்ற அடிப்படையிலேயே கணிப்புகள் யாவும்
இருக்கின்றன. பூமியை சுற்றி மற்றவைகள் சுழல்கின்றன என்ற இந்த சிந்தனையை தான் அன்று
வானசாத்திரமும் கொண்டு இருந்தது புலன்படுகிறது. அதனால் தான், மத
நம்பிக்கைகளுக்கு விரோதமாக கலீலியோ கலிலி பூமியை சூரியன் சுற்றிவரவில்லை என்றும், மாறாக பூமியே
சூரியனை சுற்றி வருவதாக கூறினார் என்று, ரோமன் கத்தோலிக்க திருச்சபை, அவரை “பூமிதான் யையப்புள்ளி. சூரியன் உள்பட
எல்லாமே பூமியைத்தான் சுற்றுகிறது. பூமி நிலையானது” என்று கட்டாயப்படுத்தி சொல்ல வைத்தார்கள் என்பது வரலாறு. பண்டைய பல
நாகரிகங்களில், வானம் பல
கடவுள்களின் வீடாக இருந்ததும் காணப்படுகிறது. அவர் அங்கிருந்து பூமியில் வாழும்
உயிரினங்களில் செல்வாக்கு செலுத்துகிறார் என நம்பப்பட்டது. எனவே, வானத்தில் உள்ள
வடிவங்கள், அதாவது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்
போன்றவை நிச்சயமாக அந்த செல்வாக்கை
பிரதிபலிக்க வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியதே சோதிடம் ஆகும்.
சுருக்கமாக சொன்னால் "கோள்களின் கோலாலட்டமே ! குவலயத்தின் சதுராட்டம் !"
எனலாம்
சோதிடம் என்பது
ஒரு அமானுஷ்ய பயிற்சியாக [பொது ஆய்வுக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்விகமான ஒன்றாக / an occult practice] பண்டைய
மெசொப்பொத்தேமியா, எகிப்து, இந்தியா, மெக்ஸிகோ
நாட்டின் தெற்கு மெக்ஸிகோ [south-eastern Mexico] பகுதியில் உள்ள யுகடான் தீபகற்பம் மற்றும்
சீனாவில் [Mesopotamia,
Egypt, India, Yucatán Peninsula and China] ஆரம்பித்தது
வரலாற்றின் மூலம் தெரியவருகிறது. இவைகளில் பதியப்பட்ட மிகவும் பழமை வாய்ந்தது, கி மு 2000 ஆண்டு பழைய
பாபிலோனிய காலத்தை [Old
Babylonian period] சேர்ந்தது ஆகும். எவ்வாறாயினும் இதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, சோதிடம் பற்றி
சில புரிதல்கள் சுமேரியனிடம் இருந்ததும் தெரியவருகிறது. இவர்கள் கிரகங்களின்
இயக்கங்களை கவனித்து, அவைகளுக்கு
கடவுளைப் போன்ற அம்சங்களையும் சக்திகளையும் கொடுத்தார்கள் [assigned them godlike features and
powers]. ஒவ்வொரு கிரகமும் ஒரு ஆண் அல்லது பெண் தெய்வத்தை
குறித்ததுடன், வாழ்க்கையின் சில
பகுதிகளை அவர்கள் ஆட்சி புரிந்தனர். கிரக இயக்கங்களின் முறைகள் [pattern of planetary movements], சகுனங்களை
தெரிவிப்பதாக சோதிடர்கள் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கூறி,
அந்த சகுனங்கள்
எதை எமக்கு விளக்குவதாக தெளிவு படுத்தி, எனவே அந்த விளக்கத்தை அல்லது அதற்காக அவர்கள் எடுத்துரைத்த
ஆலோசனைகளை முறையாக செயல் படுத்த வேண்டும் என்று கூறினார்கள். உதாரணமாக, நாட்டில்
ஏற்படும் கேடுகளையும் மற்றும் மன்னருக்கு அல்லது ஆளுநருக்கு எதிர்காலத்தில்
ஏற்படும் வெற்றி அல்லது தோல்விகளையும் நேரத்துடன் கூறி அதற்கான ஆலோசனைகளையும்
வழங்கினார்கள். அதுமட்டும் அல்ல, சூரிய, சந்திர, கிரக கணிதங்களைக் கொண்டு பன்னிரு இராசி சக்கரத்தை
அமைத்தார்கள். ஒவ்வொரு இரசிக்கும் [ராசிக்கூட்டம் எனப்படும் விண்மீன்
தொகுதிகளுக்கு] சம அளவாக,
முப்பது பாகை
வீதம், எளிமையாக
வருவதற்காக சதுரமாக வரைந்து பன்னிரு கட்டங்களாக முதல் முதல் பிரித்தவர்கள் இந்த பாபிலோனியர்களே ஆவார்கள்.
பாபிலோனியர்கள் சூரியன் சந்திரன் தவிர, ஐந்து கோள்களையும் கண்டுபிடித்து, இவைகளுக்கு
கடவுள் பண்புகளையும் கொடுத்தார்கள். உதாரணமாக, சூரியன் = சமாஷ் [shamash], சந்திரன் = சின் [Sin], செவ்வாய் = நெர்கள் [Nergal], புதன் = நாபு
[Nabu (Nebo)], குரு = மார்துக் [Marduk], சுக்கிரன் = இஸ்தர் [goddess Ishtar], & சனி = நினிப் [Ninurta (Ninib)] ஆகும். இப்படித்தான் மெல்ல மெல்ல, அன்றைய வானசாத்திரமும்
சோதிடமும் சேர்ந்து வளர்ச்சி அடைந்தது.
பாபிலோனியாவில்
ஆரம்பித்த சோதிடவியலானது மேற்குப் பக்கமாக எகிப்து, கிரேக்கம் மற்றும் உரோமிற்கும், கிழக்கு பக்கமாக
இந்தியா, சீனா போன்ற
நாடுகளுக்கும் மற்றும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் பரவியதாக அறிகிறோம். அதுமட்டும்
அல்ல, பாபிலோனியாவின்
முதல் அரச பரம்பரைக் காலத்தில், அதிகமாக கி மு 16 ம் நூற்றாண்டில் விண்வெளி சகுனங்களை தொகுத்து கூறும் 'எனுமா அனு
என்லில்' [ One of the
most remarkable texts from ancient Mesopotamia is the collection of celestial
omens known as Enuma Anu Enlil, which was discovered in the library of the
Assyrian king Aššurbanipal in Nineveh] என்ற முதல் சோதிடநூல்
களிமண் பலகையில் வெளிவந்தது இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த பாபிலோனிய
சோதிட நூலில், சந்திரன்
தொடர்பான சகுனங்கள், சூரியன் தொடர்பான
சகுனங்கள், வானிலை தொடர்பான
மற்றும் கோள்கள் தொடர்பான சகுனங்கள் தொகுக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, எள் விதைத்தல் காலமான, ஏப்ரல் / மே யில், அவர்களின் இரண்டாவது மாதமான 'அஜாரு' வில் [ஏறத்தாழ தமிழ் மாதம் சித்திரையில்], மாலை நேரத்தில்
சந்திர கிரகணம் ஏற்பட்டால்,
அரசன் இறப்பான், மற்றும் அந்த
அரசனின் மகன் தந்தையின் சிம்மாசனத்திற்கு தகுதி உள்ளவனாக இருந்தாலும், அவனால் அதில்
அமரமுடியாது இருக்கும் என்று கூறுகிறது. [When in the month Ajaru [April/May / Harvest; sowing sesame],
during the evening watch, the moon eclipses, the king will die. The sons of the
king will vie for the throne of their father, but will not sit on it.]. பாபிலோனியன்
நாட்காட்டி, 12 சந்திர
மாதங்களையும், ஒரு ஆண்டில்
ஏறத்தாழ 354 நாள்களையும்
கொண்டிருந்தன. இன்று வழக்கில் உள்ள, ஒருவர் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கோள்களின்
இருப்பிடம் மற்றும் 12 இராசிகள்
போன்றவற்றை வைத்து, ஒருவரின் எதிர்
காலத்தை கணிக்கும் சோதிடத்தின் ஆரம்ப கட்டம் அதிகமாக கி மு மூன்றாம் நூற்றாண்டில்
ஆரம்பித்தது தெரிய வருகிறது.
மெசோஅமெரிக்கா
என்பது நவீன மெக்ஸிகோவின் பகுதி மற்றும் மத்திய அமெரிக்காவின் வடக்கே உள்ள
பகுதியாகும், இங்கு கி மு 2000 ஆண்டு அளவில்
தொடங்கிய மாயா நாகரிகம், கி.பி. 150 வாக்கில் உச்சத்தை அடைந்தது. அவர்கள் தனித்துவமான
நாட்காட்டியை தயாரித்ததுடன், மாயன் குருக்கள், நாட்காட்டியை அடிப்படையாக கொண்டு, உலகளாவிய
நிகழ்வுகள் மட்டும் அல்ல,
ஒவ்வொரு நபரின்
தனிப்பட்ட எதிர்காலத்தையும், அவர்களின் பிறந்த திகதியில் இருந்து கணித்தார்கள் என்று
அறியமுடிகிறது. [The
Mayan calendar is a unique tool that has come down to us through the dark ages.
With his help the Mayan priests knew how to predict not only global events, but
also the personal future of each person]. வேதத்தின் ஆறு
பாகங்களில் ஒன்றானதும் இன்று இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் சோதிடத்தின் ஆரம்பம் கி மு 1000
ஆண்டளவில் தோன்றி இருக்கலாமென நம்பப்படுகிறது. வாழ்க்கையில் எந்த
முக்கியமான படியையும் அல்லது நிகழ்வையும், சாதகத்தில் உகந்த அறிகுறிகள் காணப்படும் பொழுதே பொதுவாக
ஆரம்பித்தார்கள். இன்னும் ஆரம்பிக்கிறார்கள். அது போலவே, சாதகம்
பார்க்காமல் எந்த திருமணமும் பொதுவாக நடைபெறுவதும் இல்லை. மனிதனுக்கும்
விண்ணிற்கும் தொடர்பு, வெறும் இருப்பு
மட்டும் அல்ல, வாழ்வும்
இருக்கக் கூடும் என்னும்,
மனிதனுடைய ஒரு
யதார்த்த கற்பனையிலிருந்து தோன்றியதுதான் 'வரும்பொருள் உரைத்தல்' என்னும் இந்த சோதிடம் ஆகும். சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ்
என்பது ஒளி அல்லது பிரகாசம் என்றுகொள்ளலாம். விண்மீன் மண்டலஞ்சார்ந்த ஒளி
வடிவங்கள் மனிதர்களின் விதியை தீர்மானிக்கிறது என்ற அடிப்படையில் வேத சோதிடம்
செயல்படுகிறது எனலாம் ["Jyotish"—the science of light—Vedic astrology deals with astral
light patterns that are thought to determine our destiny].
சோதிடம் எவ்வளவு
தூரம் ஆட்சி செலுத்தியது என்பதற்கு
நல்லதொரு எடுத்துக்காட்டு ஒன்று பெரிய புராணத்தில் காணப்படுகிறது. உதாரணமாக, பக்தி காலம் என
போற்றப்படும் நாயனார் காலத்தில், சோழ மன்னனாகிய சுபதேவனும், அவன் பட்டத்தரசி கமலவதியும் சிதம்பரம் போய்
மக்கட் பேறு கேட்டு வழிபட்டார்கள். அதன் பின் கமலவதி கருவுற்றாள். கருமுதிர்ந்து
மகவு பெறும் வேளை வந்த போது, ‘இன்னும் ஒரு நாளிகை கழித்துப் பிறக்குமானால் இக்குழந்தை
மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் சொன்னனர்கள். அவ்வாறு ஒருநாளிகை கழித்துப்
பிறப்பதற்காக அரசியை தலைகீழாக மேலே தூக்கி
நிறுத்தினார்கள் என பெரிய புராணம் கூறுகிறது. குறித்த வண்ணம் ஒரு நாளிகை
கழித்து ஆண்குழந்தை பிறந்தது.கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன, ஈன்ற தாய்
அக்குழந்தையைக் கண்டு ‘என் கோச் செங்கணானனே’என அருமை தோன்ற அழைத்தார். இவரே
பின்னாளில் ”கோச்செங்கட் சோழ நாயனார்” என்று புகழப்பெற்றார் என்கிறது புராணம்.
அது மட்டும் அல்ல
சோதிடத்துடன் தொடர்புடைய 'பழமொழி'களையும் இன்றும்
மக்களிடையே புழக்கத்தில் இருப்பதை காண்கிறோம். உதாரணமாக, "மூல நட்சத்திரப்
பெண்ணா? வேண்டவே
வேண்டாம்! மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் மணமகன் தன் தாயையோ, தந்தையையோ இழக்க நேரிடும்." என்று
நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான
பழக்கம் இன்றும் தொடர்கிறது. அதனை
"ஆண்
மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம்" என்று கூறுவார். அது போல,
"கன்னியில்
செவ்வாய் கடலும் வற்றும்"
"சனி
பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது"
"சித்திரையில்
பிறந்தவன் தெருவில் திரிவான்"
"பத்தில் குரு
வந்தால் பதவி பறி போகும்"
"பொன்
கிடைத்தாலும் புதன் கிடைக்காது,"
"பரணி
நட்சத்திரத்தில் பிறந்தவன் தரணி ஆள்வான்."
என்ற பழமொழிகளும்
அதன் மேல் உள்ள நம்பிக்கைகளும் இன்னும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. பால்வெளி
மண்டலத்தில் சிறு துகளான பூமியைப்போல் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான
கிரகங்களின் இருப்பை கண்டறிந்துள்ள விஞ்ஞானத்தின் முன்னால், கண்ணுக்கு
தெரிந்த வெறும் சில உண்மையான / கற்பனையான [ராகு & கேது]
கிரகங்களின் நகர்வை மையமாக வைத்து கூறப்படும் இந்த சோதிடம் மக்களை எவ்வளவு
தூரம் ஆட்டிப்படைக்கிறது என்பது ஆச்சிரியமாகவே உள்ளது !
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 03 வாசிக்க அழுத்துங்கள் 👉 Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 03
ஆரம்பத்திலிருந்து வாசிக்க click
No comments:
Post a Comment