கதை: சேனாதியின் சபதம்

 


சேனாதிராஜா கனடா வந்துசேர்ந்து சில நாட்களே நகர்ந்திருந்தன.

 

ஊருக்குப் போய்  அவனைத் திருமணம் முடித்துக் கனடா திரும்பிய பிரகாஷினியின் ஸ்பொன்சரில் ,அவன் சிலமாதங்கள் கழித்து விமானம் ஏறி கனடா வந்து சேரும் வரையில் அவனது கற்பனைகள் விமானத்தினைவிட பலமடங்கு வேகமாகவே பறந்துகொண்டன.

 

எத்தனை பேர் வெளிநாடு வரும் ஆசையில் பெற்றோரின் சொத்துக்களை விற்றும்,ஈடுவைத்தும் விமானமேறி இடையில் பிடிபட்டு திரும்பிவந்தோரும், இறங்கிய இன்னொரு நாட்டிலிருந்து போகவேண்டிய நாட்டு எல்லையில் தாங்கமுடியாத பனியினுள்  சிக்குப்பட்டு இறந்தவர்களுக்கும், இடையில் கடல் மார்க்கமாக களவாக சிறு படகுகளில் சென்று கடலுக்கு இரையானோர்களும் என பல்வகையான துயரச் செய்திகளை அவன் கடந்த காலங்களில் ஊடகங்கள்  வாயிலாகக்  கேட்டிருப்பான். அந்த வகையில் தான் ஒரு அதிஷ்டசாலி என்று பெருமையோடு வந்து இறங்கினான் சேனாதி.

 

கனடா அவன் வந்தபின் வாடகைக்கு வீடு பார்த்ததிலிருந்து ,வீட்டுக்கு தேவையான தளபாடங்கள் , குசினிப் பாத்திரங்கள் வரை வீட்டிற்கு வாங்கி வந்து பிரகாஷினி ஒரு ஆண்மகன் போன்று ஓடியாடி சேர்த்தது, இலங்கையிலிருந்து வந்த அவனுக்கு வியப்பினைக கொடுத்திருந்தாலும், அவள் போகுமிடமெல்லாம் தொலைபேசியிலும்,நேரிலும் ,தமிழிலும் ,ஆங்கிலத்திலும்  தந்திரமாகத் தூள் கிளப்புவதைக்  கேட்கும்போது , அவனுக்கு தன்னை  நினைக்க,நினைக்க ஆத்திரமும், வெட்கமும், அவமானமுமாக இருந்தது.

 

ஊரில் வளர்ந்த  காலத்தில் ஊரில் இருந்த  பாடசாலைக்கே ஒழுங்காக அவன் சென்றதில்லை. இலவசமாக கிடைத்த பாடப் புத்தகங்களைக் கூட ஒருமுறை விரித்துப் படித்ததில்லை. அம்மாவுக்கு மாமாமார்கள் அனுப்பும் வெளிநாட்டுக் காசில் கிடைத்த அதை சொர்க்க வாழ்க்கையாக எண்ணி அவன் மோட்டார் சைக்கிளுடன்  கையில் கைபேசியுமாகச்  சுற்றித்திரிய எப்படிக் காலம் கடந்ததோ  தெரியவில்லை.அப்பா தன் தொழிலில் கவனம் செலுத்த, அம்மா தொலைக்காட்சி நாடகங்களே கதியென்று கிடக்க சேனாதிராஜா தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை நன்றாகப் பயன்படுத்தியதாகவே அன்று சந்தோஷமடைந்தான்.ஆனால் இன்று...

 

வருடந்தோறும் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்து செல்லும் உறவுகள் 'அவன் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும், கற்றவனுக்குத்தான் சென்ற இடமெல்லாம் மதிப்பு'  என்று கூறும் அறிவுரைகள் கேட்டு, அவர்கள்மேல்  மனதுள் கொதிப்படைந்தாலும் ,அவர்கள் சுளையாகத் தரப்போகும் வெளிநாட்டுப் பணத்தினை எண்ணி எத்தனை முறை பொறுமையைச்  சாதித்திருக்கிறான்.

 

மாணவ பருவத்தில் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு இப்போது உணர்ந்து என்ன பயன்? ஒரு சில வருட சந்தோஷத்திற்காக, தன் பல்லாண்டு காலத்திற்கு கிடைக்கவேண்டிய மதிப்பினையும் கெளரவத்தினையும் சந்தோஷத்தையும்  பாழடித்த   அவனுக்கு தன்னை நினைத்துத்  தன்  தலையில் அடித்துக் ஓவென்று குளறவேண்டும் போலிருந்தது.

 

பிரகாஷினியும் அன்று அவனைப்  புரிந்தவள் போன்று  ''என்னப்பா ஊரில இருக்குமட்டும் போனில  ஓயாம கதைப்பியல், இப்ப எதோ யோசித்துக்கொண்டு இருக்கிறியள். அ ..உங்களுக்கு ஒன்று சொல்லவேண்டும் .இங்க புதுசாய் வந்தவை இங்கிலிஷ் இலவசமாய் படிக்கலாம்.ஒரு வேலை கிடைக்கும் வரை படிக்கலாம் தானேயப்பா!''

 

நிமிர்ந்து அவளை ஒருமுறை பார்த்த சேனாதியால் எதுவும் பதில் கூறமுடியவில்லை. துக்கம்தான் தொண்டையை அடைத்தது.  தன்னைவிட எவ்வளவோ அதிகம் படித்து , இந்த வயதிலேயே ஒரு கம்பெனிக்கு மனேஜராக இருக்கும்  தன் மனைவிக்குமுன் தான் ஒரு மாணவனாகப் பள்ளி செல்வதா? அதை ஒரு அவமானமாகவே  எண்ணினான் சேனாதி. அவன் மனம் புழுங்கியது. அவனை எண்ணி நெஞ்சம் எரிமலைபோல் வெடித்துக்கொண்டது. எங்காவது யாருமில்லாத இடத்தில் போயிருந்து  தன்மேலுள்ள ஆத்திரம் தீரக் கத்தவேண்டும் போலிருந்தது.

 

'இங்க, உங்களுக்குத்தான் போன் வந்திருக்கு, உங்க பிரென்ட் தனுஷ் ' என்றவாறே பிரகாஷினி நீட்டிய போனை கையில் ஏந்திக்கொண்டான் சேனாதி.

 

'ஹலோ ,சேனாதி என்னடா மச்சான், உன்ர குரல், ஏதன் சுகமில்லையேடா?'

 

'இல்லை மச்சான்.' என தளதளத்த  குரலிலேயே பதிலளித்தான் சேனாதி.

 

'மச்சான் நீ வேலைக்கு போற எண்டால் சோசல் இன்சூரன்ஸ் நம்பர் எடுக்கவேணும். அதுவரைக்கும் சும்மா இருக்கப்போறியே. சும்மா இருந்தால் மதிப்பில்லை மச்சான்.அதுதான் என்ர பொஸ்ஸோட கதைச்சனான். அவன் ஒரு வேலை இருக்குதாம். நம்பர் வந்தபிறகு நம்பரை தரட்டாம். அதுவரை கையில காசுக்கு வேலை செய்யலாமாம். இப்பிடி வேற இடத்தில வேலை தரமாட்டான்கள் மச்சான். நீ என்ன சொல்லுறாய்?'

 

வேலை என்று யோசித்த  சேனாதி 'அது என்ன வேலை' என்று இழுத்துக்கொள்ள, குறுக்கிட்ட தனுஷ் 'மச்சான் நாங்க கிழிச்ச படிப்புக்கு இங்க என்ன கிளார்க் உத்தியோகமே கிடைக்கப்போகுது. றெஸ்ற்ரோறன்ட்டில டிஸ் வாஷிங் தான் மச்சான். நாளைக்குக்கு காலையில  ரெடியா இரு மச்சான். ஓகே தானே?

 

வீட்டில் இருந்து யோசித்து செத்துப் பிழைப்பதைவிட இது பரவாயில்லை என்று தோன்றிய சேனாதி தள தளத்த குரலில் 'சரிடா'என்று ஆமோதித்த வேளையில் அவன் அம்மாவின் அந்த வழமையான குரல் ஒருமுறை அவன் காதில் ஒலித்ததுபோல் இருந்தது.

 

ஊரில் இருக்கையில் அம்மா கிள்ளித்தந்த சோற்றினை ஒரு வெட்டு வெட்டிவிட்டு ,சாப்பிட்ட கோப்பையினைக் கழுவும் பஞ்சியில் ,ஒரு வாய் சோற்றினை கோப்பையோடு மிச்சம்விட்டு  செல்கையில்,  அப்பாவின் கண்டிப்புக்கு அம்மா கூறும் சமாதானம் 'அவன் வடிவாய் கழுவமாட்டான், கிடக்கட்டு,  நாய்க்கும் சோறு போடவேணும்.போட்டுட்டு நான் கழுவிறன்.'

 

இங்கு மறுநாள்...

 

டொரோண்டோ நகரத்தின் மிகவும் நெரிசலான பகுதியில் அமைந்திருக்கும் பரபரப்பான உணவகத்தில் மலைபோல் குவிக்கப்பட்ட எச்சிக் கோப்பைகளை சுத்தம்செய்து, கழுவும் இயந்திரத்தில் போட்டு எடுத்துக்கொண்டிருந்த சேனாதியின் முதுகெலும்பில்  யாரோ ஈட்டியால் மீண்டும் மீண்டும் முதுகில் குத்துவதுபோல்   வேதனை அதிகரித்துக் கொண்டிருந்தது. 'ஐயோ , என்னைப்போல் இல்லாமல் ஊரில எல்லாரும் நல்லாய் படிக்கவேணும் , படிக்கவேணும்' என்று முணுமுணுக்கத் தொடங்கியவன் தன்னை அறியாமலேயே 'எல்லோரும் படியுங்கோ..' என்று  சத்தமாகவே தமிழில் கத்திவிட்டான் சேனாதி.

 

அவனது குரல் அலறலாக கேட்டிடவே அவ் உணவக முதலாளி முதல் தனுஷ் வரையில் அவ்விடத்தில் கூடிவிட்டனர். நிலைமை உணர்ந்த தனுஷ் ஏதோ முதலாளிக்கு கூறி சமாளித்துக் கொண்டான்.

 

தன் நிலையினை எண்ணிய சேனாதியின் கண்களிலிருந்து அவனது  கண்ணீர் செந்நீராக ஓடிக்கொண்ருந்தது. அவனது மணிக்கட்டில் வீழ்ந்த சில கண்ணீர்த்துளிகளை தன் நெற்றியில் மணிக்கட்டால் இட்டவன்  ' எனக்குப் பிறக்கும் பிள்ளைகளை சிறந்த கல்விமான்களாக உருவாக்க என் உயிர் உள்ளவரையில் கடுமையாக உழைப்பேன்,உழைப்பேன் என உறுதி எடுத்துக்கொண்டான் சேனாதிராஜா.

கதை:செ.மனுவேந்தன்

1 comment:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Monday, April 05, 2021

    சேனாதிராஜாவின் சபதங்கள் தான் , இந்த புலம்பெயர் நாட்டில் அடுத்த தலைமுறையை ஒரு குறிக்கோளை [சிலரை தவிர, பலரை] நோக்கி நகர்த்துகிறது என்பது உண்மையே. ஆனால் அவர்கள் இலங்கையில் இருந்து வந்த படியால், இன்னும் பிள்ளைகள் மருத்துவ துறையில், பொறியியல் துறையில், கணக்கியல் துறையில், சட்ட துறையில் என்று மட்டும் குறிக்கோளாக இருக்கிறார்கள். அது கட்டாயம் மாற்றப்பட்டு , மற்ற துறைகளையும் சிந்திக்க தொடங்க வேண்டும். ஏன் என்றால் இங்கு அவைகளுக்கும் நல்ல வாய்ப்பு உண்டு. உதாரணமாக, அரசியல், வரலாறு, ஊடக துறைகள் இன்று எமக்கு முக்கியமாக வேண்டியவையாகவும் உள்ளன . அதே நேரம் வணிக துறையும் முக்கியமான ஒன்றே !.

    ReplyDelete