நேர்மைக்கு வந்த சோதனை


மனிதன் என்பவன்  உணர்வுகளால், செயல்பாடுகளால் வேறு உயிரினங்களிலிருந்து பல்வேறு வகைகளிலிருந்து வேறுபட்டவன். அவனுக்கென்று இருக்கவேண்டிய குணங்களில் நேர்மையும் ஒன்றுதான்.

ஆனால் இன்றய ஊடகங்களில் பின்வரும் செய்திகள்/விளம்பரங்கள்  அதிசயம் எனக் கோடிட்டுக் காட்டிடப்படுகின்றன.


1.நேர்மையான நீதிபதிக்குப் பாராட்டுவிழா

நீதிபதி என்றாலே அவர் நேர்மையாக க்கடமை ஆற்றவேண்டியவர்தானே. ஆனால் இக்காலத்தில் நேர்மையாக பணிபுரியும்  நீதிபதிக்குப் பாராட்டுவிழா எனில் நாட்டில் நீதி செத்துவிட்டது என்பதே அர்த்தமாகும்.

 

2.வீதியில் பெண் ஒருவர் கண்டெடுத்த ஒரு கோடி பணம் கொண்ட பையினை போலீஸ் உதவியுடன் உரியவரிடம் சேர்ப்பு.  அப்பெண்ணுக்கும் ,போலீசுக்கும் பாராட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் குவிகின்றன.

மனிதப்  பிறவி என்பதற்கே இயல்பாக  இருக்கவேண்டிய அம்சங்களில் ஒன்றுதான் நேர்மை. அப்பெண் அதனை செய்திருக்கிறார். போலீசும் ஒத்துழைப்பினை நல்கியுள்ளது.அது போலீசின் கடமையும் கூட. இன்று சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு வந்து சேரும் பாராட்டுகளைக் கவனிக்கும்போது, மனிதரிடமும் ,போலீஸ் கடமையிலும் நேர்மை என்பது எவ்வளவு தூரம் அந்நியமாகிவிட்டது என்பது தெளிவாகப் புரிகிறது.

 

3.வியாபார  விளம்பரம் - நேர்மையான சேவை, நியாயமான விலை.

 நேர்மை , நாணயம் என்பதற்கு காசு எனும்  கருத்தும்  உண்டு. நாணயம்/காசு  என்றதை மையமாகக் கொண்டதே வியாபாரம் என்பதும் வணிகத்துக்குரிய தர்மம் என்பதுவும்  குழந்தைகளுக்கும் தெரிந்த விடயம். நாணயம் இல்லாவிடில், நுகர்வோரின்  புறக்கணிப்பினால்  வியாபாரம்  படுத்துவிடும் என்பதுவும் யாவரும் அறிந்த விடயம். அப்படி இருக்கையில் நேர்மை என வியாபார நிலையங்களில் ஏன் இவ்வாசகங்கள் தொங்கவேண்டும். அப்படியானால் அங்கும் நேர்மை தூக்கில் தொங்கிவிட்டதா?  என்ற சந்தேகம் எழுகிறது.

 

மேலும் என் அனுபவத்தில் ஒன்றினை இங்கு இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

என்னுடைய கதைப் புத்தகத்தினை வாங்கிச் சென்ற என் நண்பன் நீண்ட நாட்களாக திருப்பித் தரவில்லை. நான் அவனுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது மாலை 6 மணிக்கு வரும்படி கூறினான். நானும் அவன் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றிருந்தேன். அவன் என்னைக் கண்டபின்னரே எனது புத்தகத்தினைத் தேட ஆரம்பித்தான். ஒரு மணி நேரம் கடந்தபின் கூறினான், தன் மனைவி வாசிக்க எடுத்திருக்க வேணும் ,மனுசி வந்தபின் கேட்டு எடுத்து வைக்கிறேன் என்றான்.

எனக்கு உள்ளூர ஆத்திரமாக வந்தது. இவன் இல்லாத புத்தகத்திற்காக என்னை ஏன் அலைக்கழிக்கிறான் என்றிருந்தது. நேர்மையானவன் என்றால் புத்தகத்தினை கையில் எடுத்தபின் அல்லவோ நான் போக வேண்டிய நேரத்தினை சொல்லியிருக்க வேண்டும். என்ன மனுஷன் இவன் இன்று எனக்குள் முணு முணுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

மறுநாள் அவனுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டேன். அப்போதும் கூட அவன் எனது தொடர்பில் நின்றவாறு, அப்போதுதான் தன் மனைவியிடம் அப்புத்தகம் எடுத்த நீங்களோ? எனக் கேட்டு தன் நேர்மை இன்மையின் ஆழத்தினை மேலும் தெளிவுபடுத்திக்கொண்டான். இதில் வேடிக்கை என்னவென்றால் [வழித் தேங்காயை எடுத்துப் பிள்ளையாருக்கு அடித்த கதையாய்] அப்புத்தகம் அவனது மனைவியின் கையால் மனைவியின் நண்பியின் கைக்கு மாறிவிட்டது. இன்னும் ஓசியில் அப்புத்தகம் எத்தனை கைகள் மாறுமோ என்பது சொல்லமுடியாத அளவிற்கு இன்று நேர்மை இறந்துவிட்டது.

 

இப்படியாக நேர்மை என்பது படு பள்ளத்தில் வீழ்ந்துவிட்டதால்தான் ஒரு சில மனிதர்களின் நேர்மை இன்று இமயமலை போன்று அனைவரினதும் கண்களில் புலப்படுகிறது போலும்!!

-செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment