மொஹஞ்சதாரோவுடன் என்ன தொடர்பு?
ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு
முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும்
ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?
ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள்.
ஆதிச்சநல்லூர்
தொல்லியல் தலத்தில் 2004
- 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி.
சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 சதுர மீட்டர்
பரப்பளவிற்குள் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. பல பானைகளில்
மடக்கிவைக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்ட மனிதர்களின் முழு எலும்புக்கூடுகள்
கிடைத்தன.
இந்த ஆய்வை
நடத்திய டி. சத்யமூர்த்தி அடுத்த ஆண்டே பணி ஓய்வு பெற்றுவிட, ஆதிச்சநல்லூர்
அகழாய்வு தொடர்பான அறிக்கை எழுதப்படாமலேயே இருந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில்
வழக்குகள்கூட நடைபெற்றன. இந்த நிலையில், இது தொடர்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த
டாக்டர் சத்யபாமா பத்ரிநாத் எழுதிமுடித்து, சமர்ப்பித்திருக்கிறார்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வுத் தலம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
தூத்துக்குடி
மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வலதுபுற கரையில் அமைந்துள்ளது ஆதிச்சநல்லூர்
புதைமேடு. இந்த இடத்தை முதலில் கண்டுபிடித்தது பெர்லினைச் சேர்ந்த எஃப். ஜகோர்
என்பவர். 1876ல் திருநெல்வேலி
மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஸ்டூவர்ட்டும் இவருடன் சேர்ந்து இந்த ஆய்வில்
ஈடுபட்டார். இந்த அகழாய்வில் பல மண் பாண்டங்கள், இரும்பினாலான பொருட்கள், எலும்புக்கூடுகள்
ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
உண்மையில், அந்த சமயத்தில்
அகழாய்வு செய்ய வேண்டுமென அந்த இடம் தோண்டப்படவில்லை. ரயில் பாதை அமைப்பதற்கு
சரளைக் கற்களை தோண்டி எடுப்பதற்காக குழிகளை வெட்டியபோது பானை ஓடுகளும் பிற
பொருட்களும் தென்பட்டதால்,
அந்தப் பணி
நிறுத்தப்பட்டு, அகழாய்வு
செய்யப்பட்டது. ஜகோரும் ஸ்டூவர்டும் பல தொல்லியல் பொருட்களை இங்கிருந்து
சேகரித்தனர். பிறகு இந்தப் பொருட்கள் பெர்லினுக்குக் கொண்டுசெல்லப்பட்டன.
இதற்குப் பிறகு, 19ஆம் நூற்றாண்டின்
இறுதியில் இந்தியத் தொல்லியல் துறையை சேர்ந்த டாக்டர் அலெக்ஸாண்டர் ரியா, ஆதிச்சநல்லூரைப்
பற்றிக் கேள்விப்பட்டு 1899-1900ல் அங்கு சென்று
பார்த்தார். அப்போது சிறிய அளவிலேயே குழிகளைத் தோண்டி அவர் ஆய்வுசெய்தார். பிறகு 1903-04ல் திரும்பி வந்த
ரியா, அங்கு பெரிய
அளவிலான அகழாய்வுகளை மேற்கொண்டார். சரளைக் கற்களைத் தோண்டுவதற்காக வெட்டப்பட்ட
பள்ளத்தைச் சுற்றியே இவரது அகழாய்வுக் குழிகள் அமைந்திருந்தன. பாரீசைச் சேர்ந்த
லூயி லாபிக்கும் இந்த ஆய்வில் இணைந்துகொள்ள, பெரிய அளவில் பொருட்கள் இங்கிருந்து சேகரிக்கப்பட்டன.
அலெக்ஸாண்டர் ரியா செய்த ஆய்வின் போது கிடைத்த பொருட்கள், தற்போது சென்னை
எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
தாமிரபரணிக்
கரையில் உள்ள தொல்லியல் தலங்களை அடையாளம் காண பாளையங்கோட்டையிலிருந்து தாமிரபரணி
கடலில் கலப்பது வரை நடந்துசென்று 38 இடங்களை அடையாளம் கண்டார் ரியா.
ஆதிச்சநல்லூர்
அகழாய்வு நடந்த இடமென்பது இறந்தவர்களை புதைக்கும் இடம். இந்த இடத்திற்கு அருகில்
மக்கள் வாழ்ந்த இடமாக தாமிரபரணி ஆற்றின் வடபகுதியில் உள்ள கொங்கராயங்குறிச்சி
அடையாளம் காணப்பட்டது. இந்தப் பகுதியில் கிடைத்த மண்பாண்டங்கள் வேறு விதமாக
இருந்தன. இதன் மூலம், இறுதிச்
சடங்குகளுக்கெனவே தனியாக பானைகளைச் செய்யும் பழக்கம் இருந்திருப்பது
கண்டறியப்பட்டது. ஆதிச்சநல்லூர் ஒரு வணிகத் தலமாக இருந்திருக்கலாம் எனக் கருதினார்
ரியா.
ஆதிச்சநல்லூர்
தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து
மேற்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி -
திருச்செந்தூர் சாலை ஆதிச்சநல்லூர் குன்றை அறுத்துச் செல்கிறது. ஆதிச்சநல்லூர்
மட்டுமல்லாமல், கருங்குளம், கல்வாய்
பகுதிகளிலும் இந்த இடம் பரந்துவிரிந்திருக்கிறது.
ஆதிச்சநல்லூர் மீண்டும் ஆர்வத்தைத் தூண்டியது ஏன்?
"இது புதைக்கும்
இடமா, மக்கள் வசித்த
இடமா என்பதைக் கண்டறிவதுதான் என் நோக்கமாக இருந்தது. இதுவரை இந்த இடம் ஈமத்
தலமாகத்தான் அறியப்பட்டிருந்தது. நாங்கள் நடத்திய அகழாய்வில் இது மக்களும் வசித்த
இடம் என்று கண்டறிந்தோம். குவார்ட்ஸ் மணிகள், அடுப்பு போன்றவை மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள்" என
தன் ஆய்வுக்கான நோக்கத்தை பிபிசியிடம் விவரித்தார் டி. சத்யமூர்த்தி.
தமிழ்நாட்டில்
முதுமக்கள் தாழி உள்ள தொல்லியல் தளங்களில் மிகவும் பாதுகாப்பான தளம்
ஆதிச்சநல்லூர்தான். முதுமக்கள் தாழி எவ்விதமாக பரவியிருக்கிறது, அதன் காலகட்டம், அங்கு வாழ்ந்த
மக்கள் என்னவிதமான பொருட்களைப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் ஆராய
விரும்பினார் சத்யமூர்த்தி.
"அலெக்ஸாண்டர்
ரியாவின் ஆய்வில் கிடைத்த அளவுக்கு எங்கள் ஆய்வில் தொல் பொருட்கள் கிடைத்ததாகச்
சொல்ல முடியாது. காதணிகள் போன்ற சாதாரண பொருட்களே எங்களுக்குக் கிடைத்தன. ஆனால், அலெக்ஸாண்டர்
ரியா எத்தனை ஈமக் குழிகளைத் திறந்தார் என்பதைப் பதிவுசெய்யவில்லை. ஆனால், நாங்கள் 178 தாழிகளை
கண்டெடுத்தோம்" என்கிறார் சத்யமூர்த்தி.
இங்கு கிடைத்த
தாழிகளைப் பொறுத்தவரை, சில பானைகள்
கைகளால் செய்யப்பட்டிருந்தன. சில பானைகள் சக்கரத்தைப் பயன்படுத்தி
செய்யப்பட்டிருந்தன. ஆதிச்சநல்லூர் புதைமேட்டைப் பொறுத்தவரை, "இங்கு
இறந்தவர்களைப் புதைப்பது இரண்டு விதமாக நடந்திருக்கிறது. ஒன்று, இறந்தவர்களின்
உடலை முழுமையாகப் புதைப்பது. இரண்டாவது, இறந்தவர்களை வேறு இடத்தில் புதைத்து, சில
காலத்துக்குப் பிறகு அந்த உடலில் எஞ்சிய எலும்புகளைச் சேகரித்து மீண்டும்
புதைப்பது.
முதலாவது வகையில்
புதைப்பதற்கு பெரும்பாலும் சிவப்பு நிறப் பானைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இரண்டாவது வகையில் புதைப்பதற்கு, கறுப்பும் சிவப்பும் கலந்த பானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பானைகளுக்கு உள்ளும் வெளியிலும் சில பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன"
என்கிறது தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கை.
இங்கிருந்த
முதுமக்கள் தாழிகள் மூன்று அடுக்குகளாக புதைக்கப்பட்டிருந்தன. ஆழத்தில் இருந்த
அடுக்கில், இறந்தவர்களின்
உடல்கள் முழுமையாக புதைக்கப்பட்டிருந்தன. நடுவில் இருந்த அடுக்கில் உடல்கள்
முழுமையாக புதைக்கப்பட்டிருந்த தாழிகளும், எச்சங்கள் புதைக்கப்பட்ட தாழிகளும் கிடைத்தன. மேலே இருந்த
அடுக்கில் பெரும்பாலும் எச்சங்கள் புதைக்கப்பட்ட தாழிகளே கிடைத்தன.
சில இடங்களில்
ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்த்து புதைக்கப்பட்டிருந்தார்கள். சில இடங்களில் தாயும்
சேயும் சேர்ந்து புதைக்கப்பட்டிருந்தார்கள்.
"கலம்செய் கோவே
கலம்செய் கோவே!
அச்சுடைச்
சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி
போலத் தன்னொடு
சுரம்பல வந்த
எமக்கும் அருளி,
வியன்மலர்
அகன்பொழில் ஈமத் தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க்
கலம்செய் கோவே" என்று ஒரு புறநானூற்றுப் பாடல் உண்டு.
"வண்டியின்
ஆரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி, சக்கரம் செல்லுமிடமெல்லாம் செல்வதைப் போல, இந்தத் தலைவனைத்
தவிர வேறு உலகம் தெரியாமல் வாழ்ந்துவிட்டேன். அவனை இழந்த பிறகு நான் தனியே வாழ்வது
எப்படி? ஆகவே அவனுடன்
சேர்த்து எனக்கும் ஒரு இடம் அந்தத் தாழியில் இருக்கும்படி அதை அகலமாகச்
செய்வாயாக" என்பதுதான் இந்தப் பாடலின் பொருள். முதுமக்கள் தாழியில் வைத்து
இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கத்தையும், அதில் ஆணையும் பெண்ணையும் சேர்த்து புதைக்கும்
வழக்கத்தையும் இந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது.
"இப்படி மூன்று
அடுக்குகளாக இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பது இந்தியாவில் மிக அரிது. முதன்
முதலில் கேரளாவில் உள்ள மாங்காட்டில் இந்த முறையில் இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பதை
நான் கண்டறிந்தேன். அதற்குப் பிறகு இங்கும் அதே முறையில் இறந்தவர்கள்
புதைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி அடுக்குகளில் புதைப்பது
நடக்கவில்லை. ஐரோப்பாவில்தான் கல்லறைகளில் இதுபோல செய்திருக்கிறார்கள்"
என்கிறார் சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூர் மக்களுக்கு மூன்று கண் இருந்ததா?
இங்கு கிடைத்த
எலும்புக்கூடுகளை ஆராய்ந்தவகையில், இங்கிருந்த மக்கள் நடுத்தரமான உயரத்தில் வலுவான உடலமைப்போடு
இருந்திருக்கலாம் என்கிறது இறுதி அறிக்கை. சிலருக்கு கால்சியம் போதாமை இருந்தது
எலும்புகளில் இருந்து தெரியவருகிறது. ஒரு மண்டை ஓட்டின் நெற்றியில் ஓட்டை
இருந்தது.
"இதைப்
பார்த்துவிட்டு, அந்த நபருக்கு
மூன்றாவது கண் இருந்திருக்காலம் என்று கிளப்பிவிட்டார்கள். ஆனால், மருத்துவர்களின்
ஆய்வில் அந்த துளை 'சைனஸ்' காரணமாக ஏற்பட்ட
துளை என்று தெரியவந்தது. அந்த எலும்புக் கூட்டிற்கு உரிய நபரின் வயது 60 வரை இருக்கலாம்.
எலும்பில் துளை விழுமளவுக்கு அந்த மனிதர் எப்படி வாழ்ந்தார் என்பது
புரியவில்லை" என்கிறார் சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூர் மக்களுக்கு சைனஸ் எப்படி ஏற்பட்டது?
இங்கிருந்த
மக்கள் தொடர்ந்து முத்துக் குளித்தலில் ஈடுபட்டதால், அவர்களுக்கு சைனஸ் ஏற்பட்டு, இந்த ஓட்டை
ஏற்பட்டிருக்கலாம் என்கிறது அறிக்கை.
ஆதிச்சநல்லூரில் கலையும் எழுத்துகளும்
"இங்கு கிடைத்த
ஒரு பானையின் உட்புறத்தில் 'நடனமாடும் பெண்' வரையப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம். பக்கத்தில் கரும்பு
போன்ற ஒரு தாவரம், ஒரு கொக்கு, ஒரு முதலை
போன்றவை வரையப்பட்டிருந்தன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கலைவடிவங்கள்
வெகு அரிதாகவே கிடைத்திருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று எனச் சொல்லலாம். மண்
பாண்டங்களில் அவற்றைச் சுடுவதற்கு முன்பாகவே மிக நுண்ணிய பிரஷ்ஷால் சில வடிவங்கள்
வரையப்பட்டிருக்கின்றன" என்கிறார் சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூரைப்
பொறுத்தவரை இங்கே கிடைத்த பானை ஓடுகளில் எழுத்துகள் ஏதும் கிடைக்கவில்லை. சில பானை
ஓடுகளில் கிறுக்கல்கள் மட்டும் கிடைத்தன.
"ஆதிச்சநல்லூர்
புதைமேட்டில் இம்மாதிரி கிறுக்கல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், மக்கள் வாழ்ந்த
இடங்களில் சில கிறுக்கல்கள் கிடைத்திருக்கின்றன. கொடுமணல் போன்ற இடங்களில்
மனிதர்கள் புதைக்கப்பட்ட இடங்களிலேயே கிறுக்கல்கள், தமிழ் பிராமி எழுத்துகள்
கிடைத்திருக்கின்றன" என்கிறார் சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூரில்
மக்கள் வசித்திருக்கலாம் என்று கருதப்பட்ட இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் மண்
பாண்டம் செய்திருக்கக்கூடிய இடம், மணிகள் செய்திருக்கக்கூடிய இடம் ஆகியவை தென்பட்டன. இந்தப்
பகுதியில் மக்கள் அமைதியாக வாழ்ந்தார்கள் என்பதை இவை உறுதிப்படுத்துவதாக ஆய்வறிக்கை
தெரிவிக்கிறது.
இங்கே வழிபாடு
தொடர்பான பொருட்கள் ஏதாவது கிடைத்ததா? "இங்கு வாழ்ந்தவர்கள் எதை வழிபட்டார்கள்
என்பதைச் சொல்ல முடியவில்லை. ஆனால், ஒருவிதமான cult இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இங்கே நிறைய காதணிகள்
கிடைத்தன. அலெக்ஸாண்டர் ரியாவும் நிறைய காதணிகளைக் கண்டுபிடித்தார். காதணிகளைப்
பொறுத்தவரை, அவை ஒருவிதமான cult வழிபாடு
இருந்ததையே குறிப்பிடுகின்றன. காரணம், காது குத்துதல் என்பதே ஒருவிதமான சடங்குதான். அதேபோல, இறந்தவர்களின்
உடல்களை இவ்வளவு கவனமாகப் புதைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர்களுக்கு
ஒருவிதமான நம்பிக்கை இருப்பதையே காட்டுகிறது" என்கிறார் சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூரின் காலம் என்ன?
ஆதிச்சநல்லூரின்
காலத்தைக் கணிப்பதற்காக இங்கே கிடைத்த பானை ஓடுகள் அமெரிக்காவில் உள்ள பீடா
அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு கிடைத்த முடிவுகளின்படி, ஆழத்தில் இருந்த
அடுக்கு கி.மு. 750லிருந்து கி.மு. 850ஆம் ஆண்டைச்
சேர்ந்ததாகத் தெரியவந்தது. நடுவில் இருந்த தாழி கி.மு. 610லிருந்து கி.மு. 650ஆம்
ஆண்டுக்குட்பட்டதாகத் தெரியவந்தது. மேலே இருந்த அடுக்கின் காலம் கணிக்கப்படவில்லை.
ஆகவே இந்த இடத்தின் காலகட்டம் என்பது கி.மு. 650லிருந்து கி.மு. 850வரை இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டில், குறிப்பாக
தென்னிந்தியாவில் இரும்புக் காலம் நிலவிய காலகட்டமாகும்.
"ஆனால், என்னைப்
பொறுத்தவரை இந்த இடம் அதைவிடப் பழமையானதாக இருக்கலாம் என்றே கருதுகிறேன்.
கிட்டத்தட்ட 3,500 ஆண்டுகள்
பழமையானதாக இருக்கலாம். பிற்காலத்தில், புதைத்த இடங்களில் ஏதாவது ஒரு கல்லை நடும் வழக்கம்
இருந்தது. ஆனால், இங்கே
புதைக்கப்பட்ட எந்த இடத்திலும் அப்படி ஏதும் கற்கள் கிடைக்கவில்லை. ஆகவே, இந்த இடம்
அதற்கும் முந்தைய காலமாக இருக்கலாம் எனக் கருதுகிறேன்" என்கிறார்
சத்யமூர்த்தி.
ஆதிச்சநல்லூருக்கும் மொஹஞ்சதாரோவுக்கும் என்ன தொடர்பு?
இங்கு கிடைத்த
அனைத்து காதணிகள் மற்றும் உலோகப் பொருட்களில் துத்தநாகம் இருப்பது
தெரியவந்திருக்கிறது. எல்லாப் பொருட்களிலும் 3- 6 சதவீதம் அளவுக்கு துத்தநாகம் இருக்கிறது. "ஒரு உலோகப்
பொருளில் ஒரு சதவீதத்திற்கு மேல் வேறு உலோகம் இருந்தாலே, அவை வேண்டுமென்றே
சேர்க்கப்பட்டதாகத்தான் அர்த்தம். இந்தியத் துணைக் கண்டப் பகுதிகளைப் பொறுத்தவரை, இங்கும்
மொஹஞ்சதாரோவிலும் மட்டும்தான் இம்மாதிரி உலோகப் பொருட்களில் துத்தநாகத்தைக்
கலக்கும் வழக்கம் இருந்திருக்கிறது" என்கிறார் சத்யமூர்த்தி.
அலெக்ஸாண்டர்
ரியா காலத்தில் கிடைத்த எலும்புகள் முதலில் எட்கர் தர்ஸ்டனாலும் பிறகு 1970களில் கே.ஏ.ஆர்.
கென்னடியாலும் ஆராயப்பட்டன. அவரைப் பொறுத்தவரை இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு
இனங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், எலும்புக் கூடுகளைப் பொறுத்தவரை, ஹரப்பாவில்
வாழ்ந்த மக்களின் எலும்புக்கூடுகளைப் போன்றே ஆதிச்சநல்லூரில் வாழ்ந்தவர்களின்
எலும்புக்கூடுகளும் இருப்பதாகக் கருதினார். இங்கே பல்வேறு இனங்களைச் சேர்ந்த
மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்றுதான் தானும் கருதுவதாகச் சொல்கிறார் சத்யமூர்த்தி.
இங்கே கிடைத்த
முதுமக்கள் தாழிகளுக்குள் பல தானியங்கள் கிடைத்தன. அவை பெரும்பாலும் அரிசி, நெல், பாசிப்பயறு
ஆகியவைதான். இதனை வைத்து,
இங்கு வாழ்ந்த
மக்கள், நெல், பாசிப்பயறு
ஆகியவற்றை விவசாயம் செய்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வரலாம்.
இங்கே பெரும்
எண்ணிக்கையில் இரும்புப் பொருட்களும் குறைந்த எண்ணிக்கையில் தாமிரப் பொருட்களும்
கிடைத்தன. இரும்புப் பொருட்களைப் பொறுத்தவரை உழுவதற்கான கருவிகள், ஆயுதங்கள்
போன்றவை கிடைத்தன.
ஆனால், ரியாவுக்குக்
கிடைத்த அளவிற்கு தங்க ஆபரணங்களோ, செம்பு, வெண்கலப் பொருட்களோ சத்யமூர்த்திக்குக் கிடைக்கவில்லை.
ரியாவும் சரி, சத்யமூர்த்தியும்
சரி கட்டடத் தொகுதிகள் எதையும் இங்கு கண்டுபிடிக்கவில்லை.
"மனிதர்கள்
புதைக்கப்பட்ட விதத்தை வைத்து சற்று மேம்பட்ட நாகரீகம் உடைய மக்கள் இங்கு
வாழ்ந்திருக்கலாம் எனக் கருதுகிறேன்" என்கிறார் சத்யமூர்த்தி.
ஆனால், தான் இந்த
அகழாய்வைத் தொடங்கியிருக்கக்கூடாது எனக் கருதுகிறார் டி. சத்யமூர்த்தி.
"ஓய்வுபெறுவதற்கு
ஒரு ஆண்டு இருக்கும்போது இந்த அகழாய்வைத் தொடங்கினேன். அலெக்ஸாண்டர் ரியாவுக்குப்
பிறகு ஏன் அங்கே ஆய்வுகள் ஏதும் செய்யப்படவில்லை என்று தோன்றியதால் இந்த ஆய்வை
மேற்கொண்டேன். ஆய்வில், பல முதுமக்கள்
தாழிகள் கிடைத்தன. அவற்றை சரியான முறையில் பதிவுசெய்தோம். இதனைச் செய்ய மட்டுமே
எனக்கு காலம் இருந்தது. இவற்றை வைத்துத்தான் இப்போது இறுதி அறிக்கை
எழுதப்பட்டிருக்கிறது. ஆனாலும் அலெக்ஸாண்டர் ரியா எந்த இடத்தில் அகழாய்வை
மேற்கொண்டார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் புதைமேட்டின் மையப்
பகுதியில் செய்ததாகச் சொல்கிறார். அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று
தான் இந்த அறிக்கையை எழுதாததற்கான காரணத்தை விளக்குகிறார் சத்யமூர்த்தி.
தற்போது மாநில
அரசு இங்கு அகழாய்வை மேற்கொண்டு வருகிறது. அதில் நிறையத் தகவல்கள் கிடைக்கலாம்
என்கிறார் சத்யமூர்த்தி. "ஒரு தொல்லியல் தலத்தில் நிறைய பொருட்களை எடுப்பதால்
அந்த இடம் பற்றிய புதிர்களை விடுவிக்க முடியாது. கிடைத்த பொருட்களை சரியாக ஆராய
வேண்டும். மாநில தொல்லியல் துறை அதைச் செய்யுமெனக் கருதுகிறேன்" என்கிறார்
அவர்.
முரளிதரன் காசிவிஸ்வநாதன்-{பிபிசி தமிழ்}
0 comments:
Post a Comment