கனடாவிலிருந்து ஊருக்கு வந்து நின்ற கருணைராணிக்கு ஆலயத்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. நடந்தது இதுதான்..
ஊரில்
அம்மன் கோவில் திருவிழாவும்அவ்வேளை களை கட்டியிருந்தது. வருடந்தோறும் இடம்பெறுவது
போலவே இவ் வருடமும் பல்வேறு நாடுகளிலிருந்தும் திருவிழாவினை மையப்படுத்தி ஊர்
வந்து சேர்ந்த பல்வேறு உறவினர்களும்
தங்கள் வெளிநாட்டு வசதிகளை விதம் விதமான புடவைகளாலும், தங்கநகைகளாலும் போட்டிபோட்டு வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம்
கண்டும் காணாது இருந்த கருணைராணிக்கு ,திருவிழாக் கூட்டத்தினுள் , நீண்ட
நாட்களின்பின் அவள் கண்ணில்பட்ட ஜீவநாயகியைக் கண்டதும், வெறுப்புடன் முகத்தினை வேறு பக்கம் மாற் றிக்கொண்டாள்.
அவள்
வெறுப்புக்குக் காரணமில்லாமலில்லை. யுத்தகாலத்தில் இருவரும் ஊரில் அக்கம் பக்கம்
வீடுகளில் வசித்த காலத்தில் ,பக்கத்து
ஊரில் விழும் செல் தாக்குதல் காரணமாக ஓடிவரும் உறவுகள் தம் வீட்டுக்குள்
வராமலிருக்க கதவைப்பூட்டி, படலைக்குப் பூட்டும் இட்டு, விளக்குகளையும் அணைத்து
ஒளித்து வாழ்ந்து வந்தவள். அதுமட்டுமல்ல
தனது செயலினைக் கெட்டித்தனமாக வெட்கமின்றிப் பெருமையுடன் பேசித்திரிந்தவள்.
வெளிநாடு
ஒன்றுக்குச் சென்றும் கூட
திருந்தாதவள். அவள் வாழும் நாட்டில் , ஊரில் யுத்தத்தினால்
பாதிக்கப்படவைகளுக்காக நிதி சேகரிப்புக்காக எந்த உதவியும் அவள் செய்வதில்லை என்று
அறிந்திருக்கிறாள்.
கண்டும்
காணாது இருந்த கருணைராணியின் அருகில் வந்தவள் அவள் கையினைப் பார்த்து ''என்ன
கருணை, அம்மாளுக்கு அர்ச்சனை செய்யேலையோ'' என்றவள்
திரும்பிச்சென்று 5000.00 ரூபாய் கட்டி ஒரு அர்ச்சனைத் தட்டினை
கொண்டுவந்து கருணைராணியிடம் நீட்டி கருணைராணியில் கையில் திணித்தபோது, அவள் திடீரென விலகியதும், அத்தட்டுக்
கீழே வீழ்ந்துவிட்டது. கருணைராணியைபற்றி
அவதூறாகப் பேசுவதற்கு ஜீவராணிக்கு அவல் கிடைத்தமாதிரி. அவள் மேலும் தாறுமாறாகப் பேசிக் கொண்டு சென்றுவிட்டாள்.
யாரிடம் முறையிடுவாள் கருணைராணி. மனச்சாட்சி உள்ள கருணைராணிக்குத் துக்கம் தாங்க முடியவில்லை. ஆலய வாசலில்
அமர்ந்துகொண்டு தான் வணங்கும் அம்மனிடமே கண்ணீர் மல்க முறையிட்டாள்.
''அம்மாளே
, நான்
இதுவரையில் எவருக்கும் தீங்கு விளைவிக்கவில்லை.அன்புள்ள சீவன்களை அவர்கள்
அன்பினை என்றும் மதிக்கிறேன். அவர்களைப்
போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.ஆனால் இன்று உனது சந்நிதியில் ஏன்
இப்படி நடக்கவேண்டும்''
என்று புலம்பியவளின் தோளினை தட்டிய ஒரு மூதாட்டி ''. நான் எல்லாம் கவனிச்சுக்கொண்டு தான் இருந்தனான் பிள்ளை. முருங்கை மரம் ஒன்றுக்கும் உதவாது பிள்ளை. சனத்திற்கு முன்னால தான் ஒரு பக்தை என்று நாடகம் போடும் அவளையும் எனக்குத் தெரியும். இவளைப்போல எத்தினை பேரை என்ர வாழ்க்கையில சந்திச்சிருப்பன் பிள்ளை. உன்னையும் இங்க தெரியும் பிள்ளை.. இதுக்கெல்லாம் கவலைப்படாதை. தையிரியமாய் வீட்டுக்குப் போ பிள்ளை'' என்று ஆறுதல்படுத்தினாள். மூதாட்டியின் வார்த்தைகள் கருணைராணிக்கு கொடுத்த தைரியத்தில் அவள் வீடு நோக்கிப் பயணமானாள்.
✍செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment