அதுதான் குமரிக் கண்டமா? - தமிழர் வரலாறு
(இணையதளத்திலும்
சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில்
உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில்
பிபிசி தமிழ் வெளியிடுகிறது.)
தற்போதைய தமிழக
நிலப்பரப்பிற்கு தெற்கே லெமூரியா கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கு தமிழர்கள்
வாழ்ந்ததாகவும் நீங்கள் ஏதாவது நூலிலோ, செய்தியிலோ, இணையதளத்திலோ குறைந்தது ஒரு முறையாவது படித்திருப்பீர்கள்.
இணையத்தில் இது பற்றிய காணொளிகளும் ஏராளம்.
ஆனால் லெமூரியா
கண்டம் என்ற ஒன்று உண்மையாகவே இருந்ததா என்றால் அந்தக் கேள்விக்கான பதில் 'இல்லை' என்பதுதான்.
மொரிஷியஸ்
தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், இந்தியப் பெருங்கடலுக்குள் புதைந்திருக்கும் குறுங்கண்டம்
ஒன்றுக்கு 'மொரிஷியா' என்று
அறிவியலாளர்கள் பெயரிட்டிருக்கிறார்கள். 2013இல் கண்டுபிடிக்கப்பட்டது இது.
உண்மையைக் கலந்து
சொன்னால் நம்பகத்தன்மை கிடைக்கும் எனும் நம்பிக்கையில், இந்த கண்டம்தான்
லெமூரியா கண்டம் என்றும் சிலர் கூறி வருகிறார்கள்.
ஆனால், அது உண்மையல்ல.
மனித குலத்தின் வரலாறு தொடங்கும் முன்னரே, இந்த நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கி விட்டது.
90 லட்சம்
ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த எரிமலை வெடிப்பின்போது பூமிக்கு அடியில் இருந்த
துகள்கள் மொரிஷியஸ் கடற்கரையில் கிடைத்தன. அந்தத் துகள்களில் செய்யப்பட்ட ஆய்வின்
மூலம் மொரிஷியாவின் காலம் கண்டறியப்பட்டது.
இதன் காலம் 200 கோடி முதல் 8.5 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு வரை என்கிறது நேச்சுர் ஜியோசயின்ஸ் சஞ்சிகையில் 2013 பிப்ரவரியில்
வெளியான கட்டுரை ஒன்று.
அப்படியானால்
லெமூரியா கண்டம் எனும் கருத்தாக்கம் எப்படி உருவானது, அப்படி ஒரு
கண்டமே இல்லை என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றனவா, தமிழ்
இலக்கியங்களில் உண்மையாகவே லெமூரியா கண்டம் பற்றிய குறிப்பு உள்ளதா என்பனவற்றுக்கு
பதில் தருகிறது இந்தக் கட்டுரை.
லெமூரியா
கண்டம் - 'கடலுக்குள்
மூழ்கி அழிந்து விட்டது'
பத்தொன்பதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த விலங்கியலாளர் பிலிப் ஸ்கேட்லர்
என்பவர் 'மடகாஸ்கரின்
பாலூட்டிகள்' (The
Mammals of Madagascar) என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார்.
அதில் 'லெமூர்' விலங்குகளின்
படிமங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மடகாஸ்கரிலும் இந்திய நிலப்
பகுதிகளிலும் இருக்கின்றன. ஆனால் மடகாஸ்கர் ஓர் அங்கமாக இருக்கும் ஆப்பிரிக்க
கண்டத்தின் பெருநிலப்பரப்பில் இல்லை. எனவே கடந்த காலங்களில் மடகாஸ்கர் மற்றும்
இந்தியா ஆகிய இரண்டு நிலப்பரப்புகளையும் இணைத்த, ஒரு கண்டம் இருந்திருக்கலாம். அப்போது லெமூர்
விலங்குகள் இரு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கலாம் என்று கூறினார்.
அந்த கண்டத்தின்
பெயர்தான் லெமூரியா என்றும் அது பின்னாளில் கடலுக்குள் மூழ்கி அழிந்து விட்டது
என்றும் பிலிப் ஸ்கேட்லர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இவர் இதை முன்வைத்தபோது
ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கூற்று பிற்காலத்தில் அறிவியலாளர்களால் மறுக்கப்பட்டது.
ஏன்?
அறிவியல்
வளர்ச்சியால் வெளியான உண்மைகள்
பிலிப் ஸ்கேட்லர்
'லெமூரியா கண்டம்' என்ற ஒன்று
இருந்ததாகக் கூறியபோது, இடையில் ஒரு
நிலப்பரப்பு இருப்பதைத் தவிர, ஒரே விலங்கினம் கடலால் பிரிக்கப்பட்ட வெவ்வேறு
நிலப்பரப்புகளில் வாழ்ந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. எனவே, அதை அறிவியல்
உலகமும் ஏற்றுக்கொண்டது. புவிசார் அறிவியல் இந்த அளவுக்கு வளர்ச்சி அடையாத
காலகட்டம் அது.
17ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்த ஐரோப்பிய புவியியலாளர் ஆப்ரகாம் ஓர்டெலியஸ் என்பவர் கண்டங்கள் அனைத்தும்
ஒன்றாக இருந்து அதன்பின்பு அவை ஒன்றிடம் இருந்து ஒன்று நகர்ந்து வெவ்வேறு
கண்டங்களாக உருவாகின எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.
ஒரு கண்டத்தின்
வெளிப்புற வடிவம் இன்னொரு கண்டத்தின் வெளிப்புற வடிவத்துடன் பொருந்தும் வகையில்
இருப்பதை அதற்கு அவர் சான்றாகக் குறிப்பிட்டிருந்தார்.. ஆனால், அவருக்குப்
பின்னல் வந்த வெகுசில அறிவியலாளர்களைத் தவிர இதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதன்பின்பு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மானிய புவியியலாளர் ஆல்ஃப்ரெட் வெகேனர்
கண்டப் பெயர்ச்சி (Continental
Drift) கோட்பாட்டை முன்வைத்தார்.
அப்போது இதுவும்
ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும் புவியத் தட்டுகள் (tectonic plates) நகர்தல் குறித்த
கண்டுபிடிப்புகள் இதற்கு வலிமை சேர்ப்பதாகவும், அதை நிரூபணம் செய்யும் வகையிலும் அமைந்தன.
பல கோடி ஆண்டுகளுக்கு
முன் தற்போது உள்ள அனைத்துக் கண்டங்களும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன என்றும்
அதன்பின்பு, பூமியின்
மேற்பரப்புக்கு அடியில் இருக்கும் புவியத் தட்டுகளின் நகர்தல் காரணமாக வெவ்வேறு
கண்டங்கள் உருவானதும் பின்னாளில் நிரூபணமானது.
அவ்வாறு அனைத்து
கண்டங்களும் ஒன்றாக இருந்த நிலப்பரப்பு, தற்போதைய தனித்தனி கண்டங்களாக உருவாகும் முன்னர் பல முறை
பிரிந்து பிரிந்து மீண்டும் இணைந்துள்ளன.
வெவ்வேறு
காலத்தில் உருவான பெருங்கண்டங்கள் பான்கையா (pangea), ரொடினியா (rodinia) என்று வெவ்வேறு பெயர்களுடன் அறிவியலார்களால்
அழைக்கப்படுகின்றன.
சுமார் 75 கோடி (750 மில்லியன்)
ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெரும் கண்டமாக தற்போதைய உலகில் உள்ள
ஒட்டுமொத்த நிலப்பரப்பும் ஒன்றாக இருந்தது.
ரொடினியாவில்
இந்தியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நிலப்பரப்புகள் அருகருகே இருந்துள்ளன.
இவை இரண்டும்
சுமார் 8.5 கோடி
ஆண்டுகளுக்கு கண்டப் பெயர்ச்சி காரணமாகப் பிரியத் தொடங்கின. இதன் பின்னர்தான்
இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 'மொரிஷியா' கடலுக்குள்
மூழ்கத் தொடங்கியது.
புவியத் தட்டுகள்
நகர்ந்து உண்டாக்கிய கண்டப் பெயர்ச்சி காரணமாகவே இந்தியா மற்றும் மடகாஸ்கர் இடையே
இடைவெளி உண்டானது; அப்போது ஒரே
நிலப்பரப்பாக இருந்தபோது வாழ்ந்த விலங்குகளின் படிமங்களே பின்னாளில் கிடைத்தன
என்று தெரியவந்தபின், 'லெமூரியா கண்டம்' என்ற ஒன்று இல்லை
என்றும் முடிவு செய்த அறிவியல் உலகம் பிலிப் ஸ்கேட்லர் முன்வைத்த கருதுகோளை
மறுதலித்தது.
குமரிக்
கண்டம் - லெமூரியா கண்டம்
லெமூரியா கண்டம்
குறித்த கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்த காலத்தில் ஆசியா மற்றும் அமெரிக்க
கண்டங்களில் ஒரே விலங்கினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தபின், இடையில்
நிலப்பரப்பு இருந்ததுஎன்று கருதிய சில அறிவியலறிஞர்கள் பசிஃபிக் பெருங்கடலின் சில
பகுதிகளிலும் லெமூரியா கண்டம் நீண்டிருந்தது என்று கூறினர்.
இதன்பின்பு
கடலுக்குள் மூழ்கிய கண்டங்களாக லெமூரியா மற்றும் அட்லாண்டிஸ் ஆகியவை உலக அளவில்
பெயர் பெறத் தொடங்கின. இது குறித்த விரிவான கட்டுரை ஒன்று ஃப்ரண்ட்லைன் இதழில்
புவிநீர் அமைப்பியலாளர் எஸ். கிறிஸ்டோபர் ஜெயகரனால் 2011ஆம் ஆண்டு
எழுதப்பட்டுள்ளது
லெமூரியா கண்டம்
குறித்து மேற்குலகில் எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் வரைபடங்கள் 1941இல் கே.அப்பாதுரை
என்பவர் எழுதிய 'குமரிக் கண்டம்
அல்லது கடல்கொண்ட தென்னாடு'
எனும் நூலில்
பயன்படுத்தப்பட்டதாக அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சங்க
காலத்திலும், அதன் பின்னரும்
எழுதப்பட்ட புறநானூறு, சிலப்பதிகாரம், கலித்தொகை
உள்ளிட்டவற்றின் பாடல்களில் கடலில் மூழ்கிய சில நிலப்பரப்புகள் பற்றிய குறிப்பும்
உள்ளன.
சங்கப்
பாடல்களில் குறிப்பிடப்பட்டிருந்த மலைகள், ஆறுகள், ஊர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் லெமூரியா கண்டத்தில்
இருந்ததாக தமிழில் எழுதப்பட்டதாகவும் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்
கிறிஸ்டோபர் ஜெயகரன்.
அதாவது, உலகின் வெவ்வேறு
பகுதியிலும் 'லெமூரியா' குறித்து தகவல், தங்கள்
நிலப்படப்புடன் தொடர்புடையதாக மாற்றப்பட்டதைப் போல, தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருந்த
தகவல்கள் லெமூரியாவுடன் பொருத்தப்பட்டன.
பின்னாட்களில்
வந்த நக்கீரர், நச்சினார்க்கினியர், அடியார்க்குநல்லார்
உள்ளிட்டவர்களின் எழுத்துகள் சிலப்பதிகாரம் மற்றும் கலித்தொகையில் கடலுக்குள்
மூழ்கியதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலப்பரப்பை மிகைப்படுத்தி கூறியதாகவும்
அவர்களின் கூற்றுப்படி குமரிக் கண்டத்தில் இருந்ததாக கூறப்படும் குமரி ஆறு மற்றும்
பஃறுளியாறு ஆகியவற்றுக்கு இடையேயான தூரம் 770 கிலோமீட்டர் என்றும் அந்த கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெமூரியா கண்டம்
வேறு குமரிக் கண்டம் வேறுதான்; லெமூரியா கண்டம் என்பது ஒருவேளை பொய்யானதாக இருந்தாலும்
பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குமரிக் கண்டம் என்பது உண்மைதான் என்று
கூறும் ஒரு தரப்பினர் கடலில் மூழ்கிய நகரங்கள் குறித்து இலக்கியங்களில்
கூறப்பட்டுள்ளவற்றை தங்கள் சான்றாக முன்வைக்கின்றனர்.
குமரிக்
கண்டத்தில் 49 நாடுகள்
இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் வரலாற்றுக் காலத்தில் நாடு எனும் சொல் ஊர் எனும்
பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதும், சில ஊர்கள் ஒன்று சேர்ந்தாலே நாடுகளாக இருந்துள்ளன என்பதும்
கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அதுமட்டுமல்லாது
உலகில் இருக்கும் பல்வேறு பகுதிகளைப் போலவே, இன்றைய இந்தியாவின் கடலோரப் பகுதிகளும் கடல் அரிப்பின்
காரணமாக கடலுக்குள் மூழ்கியதற்கான அறிவியல் சான்றுகள் நிறைய கிடைத்துள்ளன. ஆனால் 'கண்டம்' என்று கூறப்படும்
அளவுக்கு பெரிய நிலப்பரப்புதான் மூழ்கியது என்பதற்கான எந்த சான்றும் இல்லை.
நிலத்துக்கு
அடியிலும் கடல் நீருக்கு அடியிலும் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை
செயற்கைக்கோளில் இருந்தபடியே படமெடுக்கும் தொழில்நுட்பம் வந்து பல ஆண்டுகள்
ஆகின்றன. இப்போதுவரை கடலுக்கடியில் இருப்பதாகக் கூறப்படும் அந்தக் குமரிக் கண்டத்தின்
படம் ஏதும் தென்னிந்திய கடல்பரப்பை ஒட்டிக் கிடைக்கவில்லை.
ஒருவேளை இனி அப்படி ஒரு நிலப்பரப்பு கண்டுபிடிக்கப்பட்டாலும், தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதைப் போல மனித நாகரிகத்தின் வரலாற்றுக் காலத்துக்கு பிறகு கடலில் மூழ்கியதாக அது இருக்க வாய்ப்பில்லை. மொரிஷியா போல பல லட்சம் முதல் சில கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாகவே அது இருக்கும்.
விக்னேஷ்.அ ….பிபிசி தமிழ்
No comments:
Post a Comment