"தாய்ப்பால் ஒன்றே கலப்படத்தை ஏய்த்திட
தாரத்தின் உறவிலும் சகோதரர் நட்பிலும்
தான் பெற்றவள்மேல் தந்திடும் அன்பிலும்
தாராளமாக இன்று எங்கும் கலப்படம்"
"எட்டிப் பழகும் மனிதசுத்திலும் கலப்படம்
எச்சிப் படுத்தும் செவ்வுதட்டிலும்
கலப்படம்
எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்
எழுதிய திருமண பந்தத்திலும் கலப்படம்"
"பெண் முட்டையுடன் விந்து இணையும்
பெரும் கலவையிலும் சிலசில கலப்படம்
பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி
பெற்று எடுத்தால் அரவாணி கலப்படம்"
"குழந்தைசிரிப்பையும் மழலை குறும்பையும் தவிர
குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம்
குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம்
குடிகொண்ட வீட்டின் ஒற்றுமையிலும்
கலப்படம்"
"ஓதிடும் மந்திரத்திலும் போதகர்
போதனையிலும்
ஓதுவார் ஓசையிலும் ஒழுகிடும் நெறியிலும்
ஓர்மனமாய் நின்று வழிபடும் அடியாரிலும்
ஓகை கொண்டு இணைந்துவிட்டது கலப்படம்"
"உழைத்து பெற்ற ஊதியத்திலும் கலப்படம்
உண்மை தந்த உயர்விலும் கலப்படம்
உணர்வுகொள் தாய் மொழியிலும் கலப்படம்
உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம்"
"கூட்டம் சேர்க்கும் அரசியலில் கலப்படம்
கூர்மையான அரச அறிக்கையில் கலப்படம்
கூறிடும் ஊடக செய்தியில் கலப்படம்
கூசாமல் பேசிடும் வரலாற்றில் கலப்படம்"
"தெரிந்து வேண்டும் என்று சேர்ப்பதும்
தெரியாமல் தவறி அங்கு சேர்ப்பதும்
தெளித்து பட்டும் படாமலும் சேர்ப்பதும்
தெளிவாக அவை எல்லாம் கலப்படம்தான்"
👉கந்தையா தில்லைவிநாயகலிங்கம் (ஓகை - உவகை, மகிழ்ச்சி)
No comments:
Post a Comment