தமிழர்களும் திசைகளும்

 


உலக மொழிகளின் திசைகளுக்கான சொற்களை உருவாக்குவதில் பின்வரும் கூறுகள் முதன்மை பெற்றிருந்ததாக செசில் பிரவுண் {Cecil H. Brown} என்ற அறிஞர் தனது `where do cardinal direction terms come from ` என்ற கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.


1.வானியல் கூறுகளும், வானியல் நிகழ்வுகளும்

2.நேரடி மொழி பெயர்ப்பு {இது செம்மொழிகளுக்கு முற்று முழுதாகப் பொருந்தாது என்பது எனது கருத்து}

3.{சொல்லாக்கத்தின்} புறத் தாக்கங்கள்

4. வடக்கு, தெற்குத் திசைகள் உருவாக முன்னரே கிழக்கு-மேற்கு ஆகிய திசைகளுக்கான தனிச் சொற்கள் உருவாகிவிட்டன.

                             அவர் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் திசைகளுக்கான சொற்கள் எவ்வாறு உருவாகின எனப் பொதுவாகக் கூறியமையினை அடிப்படையாகக் கொண்டு மேற் கூறிய முடிவுக்கு வந்துள்ளார்.  நாம் இதனை தமிழ் மொழியின் சூழலினையும் கருத்திலெடுத்து தமிழில் எவ்வாறு திசைகளுக்கான பெயர்கள் உருவாகின எனப் பார்ப்போம்.

 

திசை என்ற சொல் சங்ககாலத்திலிருந்தே தமிழர்களால் திக்கு (Direction ) என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது {சான்று = புறநானூறு 30 = `வளிதிரிதரு திசையும்`}. எனவே சங்ககாலத்திலேயே தமிழர்கள் திசை வேறுபாடுகளை அறிந்துள்ளார்கள். இந்தத் திசைகளுக்கான பெயர்கள் எவ்வாறு ஏற்பட்டன என இக் கட்டுரையில் பார்ப்போம்.  ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே`  என்பது தொல்காப்பியச்   சூத்திரமாகும். அந்த வகையில் தமிழிலுள்ள திசைப் பெயர்களுக்கும் பொருள் இருக்கத்தானே வேண்டும்; பார்ப்போம்.

                                                       தெற்கு :-

   தமிழர்களுக்கு மிகவும் பிடித்த திசையாக `தெற்கு` என்ற  திசையே காணப்பட்டுள்ளது. இங்கு தெற்கு என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘தென்’ என்பதாகும். தென் என்றால் அழகு/ இனிமை என்ற  பொருள் பெறும். `தென்`  இனிமையினைக் குறிப்பதாலேயே `தேன்` { Honey } என்ற சொல் உருவாயிற்று. பண்டைக் கால வணிகச் செழிப்புக்கு தென் கடல் மிகுந்த உதவியாகவிருந்தமையால், அத் திசையினை தென் (இனிய) திசை என அழைக்கப் பின்பு `கு` விகுதி சேர்ந்து ` தெற்கு` ஆயிற்று என்றொரு கருத்து அறிஞர்களிடமுண்டு.  அதே போன்று இராம.கி என்ற அறிஞர்

 

 தெல்/தெள் (  தள்(ளு)) காற்றால் படகு, வங்கம், கப்பல் பிரயாணம்

 

எளிதாவதை உணர்ந்ததால் ஏற்பட்ட பெயர்; தெற்கு” என்பார்.  இங்கு தெள் என்ற சொல்லுக்குத் தண்ணீர் என்ற பொருளுமுண்டு.

 

  தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது

  உண்ணலின் ஊங்கினிய தில்”.  { குறள் 1065}.

இங்கு தெண்ணீர் = தெள்+ நீர்.  { தண்ணி ஊத்தி விட்ட பொங்கிய சோறு}.

 

   எனவே இத் திசை தென் கடல் வழி வணிகம் தந்த செல்வச் செழிப்பான இனிமையால் `தெற்கு ` எனப் பெயர் பெற்றது என அடித்துக் கூறலாம்.  இங்கு தமிழில் `தென்புலத்தார்` என்று சிறப்பித்துக் கூறும் ஒரு சொல்லுமுண்டு. அதற்கான விளக்கம் குறித்த பல வேறுபட்ட கருத்துகள் இருப்பதால், அதற்குள் போகாமல் ஒரு செய்தியுடன் இத் திசை பற்றிய பார்வையினை நிறைவு செய்வோம்.  தமிழகத்திற்குத் தெற்கே ஈழம் (இலங்கை) உண்டு. இலங்கையின் வடமுனையில் பருத்தித்துறையும், தென் முனையில் தேவேந்திரமுனை/ தெய்வேந்திர முனை என்றொரு இடமும் உண்டு.  இந்த தென்முனை `தொண்டீ`  என்றே போர்த்துக்கேயர் காலம் வரை அழைக்கப்பட்டது.  இன்றும் ஆங்கிலத்தில் இம்முனை ` Dondra` என அழைக்கப்படுகின்றது.  தென் துறை {Then Thurai} என்ற தமிழ்ச் சொல்லே, பேச்சு வழக்கில் Dondra எனத் திரிந்து விட்டது. எனவே இம்முனையின் பழைய பெயர் தென்துறையே.

 

  இங்கு தெற்கே இருந்து வீசும் இனிய காற்றுக்குத் `தென்றல்` என்று பெயரும் வழங்கலாயிற்று.

                                                           வடக்கு :-

      தமிழர்களால் எவ்வாறு தெற்குத் திசை விரும்பப்பட்டு வந்ததோ, அவ்வாறு வெறுக்கப்பட்ட திசையாக வடக்குத் திசை காணப்பட்டு வந்துள்ளது.  இத் திசைப் பெயரானது `வாட்டு` என்ற வேர்ச் சொல்லை அடியாகக் கொண்டது. `வாட்டு` என்றால் இன்னலுக்கு உள்ளாக்கு என்ற பொருளுண்டு {எ.கா-`வெயில் வாட்டி வதைக்குது`}.  பொதுவாகத் தமிழ்நாடானது (தென்னிந்தியாவே) ஏனைய மூன்று பகுதிகளும் கடலால் சூழப்பட்டு அரண் செய்யப்பட்டிருப்பதால், வடக்கேயிருந்து மட்டுமே எதிரிகள் படையெடுத்து வந்து இன்னலுக்குள்ளாக்கினார்கள். இதனாலேயே வட திசையினைத் தமிழர்கள் ஒரு வாட்டும் (துன்புறுத்தும்) திசையாகக் கருதியிருக்கின்றார்கள்.  அதனாலேயே அத் திசையிலிருந்து வீசும் காற்றினை `வாடைக் காற்று` {வாட்டும் காற்று} எனவும் அழைக்கலாயினார்கள்.

 

   அதே போன்று நாவலந்தீவின் (இன்றைய இந்தியாவின்) வட பகுதியில் மிகையாக் காணப்பட்ட வட மரங்கள் (ஆல மரங்கள்) காரணமாக, `வடக்கு` என்ற பெயர் அத் திசைக்கு ஏற்பட்டதாகக் கூறுவோருமுள்ளார்கள்.  ஆல மரத்துக்கு `வட மரம்` என்றொரு பெயருள்ளமையாலேயே, தேரிழுக்கும் போது பயன்படுத்தப்படும் கயிற்றினை `வடம்` என அழைப்பார்கள் (வடம் பிடித்தல்); அதாவது ஆலம் விழுதுகள் போன்று  வளைந்த கயிறு வடம் எனப்படும்.

 

  வடக்கு என்ற திசையின் பெயர் மேற்கூறிய இரு முறைகளில் எவ்வாறு ஏற்பட்டிருந்தாலும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளால், இன்றும் தொடருகின்ற மொழி-பண்பாட்டுப் படையெடுப்புகளால், அத் திசையினைத் தமிழர்கள் வெறுத்தார்கள் என்பது பின்வரும் மக்களின் வழக்காற்று மொழிகளால் தெளிவாகின்றது.

 

`விடக்கை ஆயினும் வடக்கு ஆகாது’

`வடக்கே தலைவைத்தால் வாடை காற்று, தெற்கே தலைவைத்தால் தென்றல் காற்று`

 

     தமிழ்நாட்டில் காணப்படும் கொற்றவைத் தெய்வங்கள் மிகப் பெருமளவுக்கு வடக்கு நோக்கியே, போர்க் கருவிகளுடன் இருப்பதாகக் கூறும் ஆய்வாளர் தொ.பரமசிவன் அவர்கள்;  இவ்வாறு வடக்கு நோக்கிப் போர்க் கோலத்துடன் பழந் தமிழ் வீரத் தெய்வமான கொற்றவை {இங்கு`கொல்` என்பதே வேர்ச்ச்சொல்} இருப்பதும் வடக்கேயிருந்து வரும் எதிரிகளை எதிர்கொள்ளவே என்று கூறுகின்றார்.

 

   அதே போன்று பழந் தமிழ் மரபில் வடக்கிருத்தல் {வடக்குப் பக்கமாக உண்ணா நோன்பிருந்து இறத்தல்} என்றொரு முறையுமுண்டு. அதே வேளையில் தூங்கும் போது வடக்கே தலை வைத்துத் தூங்கக் கூடாது என்றொரு முறையுமுண்டு. இறப்பவர்களைப் புதைக்கும் போது மட்டுமே வடக்குப் பக்கம் தலையினை வைத்துப் புதைத்த பழக்கம் நெடுங்காலமாகத் தமிழரிடமிருந்து வந்தது. பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றான ஆசாரக்கோவை எனும் நூல் பின்வருமாறு கூறுகின்றது.

 

கிடக்குங்காற் கைகூப்பித் தெய்வந் தொழுது

வடக்கொடு கோணந் தலைசெய்யார் மீக்கோள்

உடற்கொடுத்துச் சேர்தல் வழி.”

 

எனவே வடக்கே தலை வைத்துத் தூங்கக் கூடாது என்ற முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழரிடமுண்டு. 

                                             கிழக்கு :-

             கிழக்குத் திசையின் மற்றொரு தமிழ்ப் பெயர் `குணக்கு` என்பதாகும்.  “தொடுகடற் குணக்கும்” (புறநா. 6,3) என புறநானூறு பாடுவது கிழக்குத் திசையினையேயாகும்.  கடற்கரையிலிருந்து பார்த்தபோது, கதிரவன் ஆழ்நீர்க் கீழ்க்கடலிலிருந்து எழுவது போன்ற தோற்றம் பழந்தமிழருக்கு வியப்பினை ஏற்படுத்தியது.  ஆழ்நீர்’ தமிழில் ‘குண்டுநீர்’ எனப்படும் { குண்டு = ஆழம்}.  இதனாலேயே குண்டுநீரிலிருந்து கதிரவன் எழுவதனைக் கொண்டு, `குணக்கு` என அத் திசை அழைக்கப்பட்டது. `குணக்குதல்` என்றால் `கோணல்` என்றொரு பொருளுமிருப்பதாலும், தமிழகத்தின் கிழக்குத் திசை கோணலாகவிருப்பதால், அத் திசை `குணக்கு` என்றானது என்றொரு கருத்துமுண்டு.

 

  இதே திசை `கீழ்` என்ற வேர்ச் சொல்லினை அடியாகக் கொண்டு `கிழக்கு` என்ற பெயரும் பெற்றது.

 

`குணக்கே பூருவம் ஐந்திரம் பிராசி

கிழக்கின் பெயரே கீழ்த்திசையு மாகும்`

என்பது பிங்கலத்தின் 13 ஆம் நூற்பா.

 

  கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே “(குறுந். 337) என குறுந்தொகை இத் திசையினைக் குறிப்பிடுகின்றது.  தமிழர்கள் கீழ்த்திசையிலிருந்து வீசும் காற்றைத் தமிழர் ‘கொண்டல்’ என்றனர்.

                                                      மேற்கு/குடக்கு:-

     மேற்குத் திசைக்கு `குடக்கு` என்றொரு பெயருமுண்டு.  `குடக்குதல்` என்றால்  `வளைத்தல்` என்றொரு பொருளுமுண்டு. வளைந்து இருப்பதாலேயே ` குடல்` என்ற உடலுறுப்பு அப்  பெயர்  பெற்றது என்பதும் நோக்கத்தக்கது. மேற்குத் திசை வளைந்து காணப்பட்டமையாலேயே `குடக்கு` என்ற பெயரினை அத் திசை பெற்றது. `தொன்றுமுதிர் பௌவத்தின்குடக்கும்` (புறநா. 6) என்று புறநானூறு பாடுவது இந்த கிழக்குத் திசையினையேயாகும். `குடக்கோ நெடுச்சேரலாதன்` என மேற்குத் திசையிலிருந்த சேர மன்னன் அழைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  இதே `குடக்கு` என்ற திசை, `மேல்` என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்டு `மேற்கு` எனவும் அழைக்கப்பட்டது.  மேற்கேயிருந்து வீசும் காற்று `கச்சான் காற்று` எனப்பட்டது.

 

    இந்த `மேல் – கீழ் திசை வேறுபாடுகள் {மேற்கு- கிழக்கு} சிந்துவெளி நாகரிகத்திலேயே உண்டு` என சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஸ்ணன் கூறுகின்றார். அவர் பல்வேறு திராவிட மொழிகளிலும் பயன்படுத்தப்படும் `மேல்-கீழ்` பலபொருளொரு சொற்களைப் பட்டியலிட்டு `சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்` எனும் நூலில் இதனை விளக்கியிருப்பார். அதனைச் சுருக்கின் மேல் திசை மேற்கு எனவும், கீழ்த் திசை கிழக்கு எனவும் {என்ற பொருளில்} சிந்துவெளி நாகரிக காலத்திலேயே இடம் பெற்றிருந்தது என்பதாகும்.

 

     இந்தக் கட்டுரையின் முதற் பகுதியில் பிரவுண் சிசில் கூறிய படி கிழக்கு-மேற்குத் திசைகளுக்கான பெயர்களே முதலில் தோன்றியிருக்கும் என்ற கருத்தினடிப்படையிலும், மொழிகளில் திசைகளுக்கான சொல் உருவாக்கத்திற்கான காரணங்களில் முதலாவது {வானியல் நிகழ்வு} காரணத்தினையும் கவனத்திற் கொண்டு தமிழ்த் திசைகளைப் பார்ப்போம்.

 

                   பின்வரும் சங்ககாலப் பாடலினைப் பாருங்கள்.

கரைபொரு திரங்குங் கனையிரு முந்நீர்த்       

திரையிடு மணலினும் பலரே யுரைசெல

மலர் தலை யுலக மாண்டுகழிந் தோரே

அதனால், குணகடல் கொண்டு குடகடன் முற்றி

யிரவு மெல்லையும் விளிவிட னறியா

தவலு மிசையு நீர்த்திரள் பீண்டிக்”

 {மதுரைக் காஞ்சி: 235- 240}

 

  மேலுள்ள மதுரைக் காஞ்சி பாடலில் முகில்கள் கிழக்கிலிருந்து {தாழ் பகுதி} நீரை எடுத்து மேலே கொண்டு சென்று மழையாகப் பெய்கின்றன எனப் பாடப்படுகின்றது.  இதிலிருந்தே கிழக்குத் திசைக்கான பெயர் தோன்றுவது ஏற்கனவே நாம் பார்த்த விளக்கத்துடன் ஒத்துப் போகின்றது.  அதே போன்று பழந் தமிழிலக்கிய `படிஞாயிறு` {மறையும் கதிரவன்,  படிதல் (மறைத்தல்) , இன்றும் மலையாளத்திலுண்டு படிஞ்ஞாயிறு= പടിഞ്ഞാറ് }என்ற சொல் கதிரவன் மறையும் திசையினைக் காட்டுகின்றது. இவ்வாறு கதிரவனின் எழுச்சி, மறைவுகளை அடியாகக் கொண்டு கிழக்கு-மேற்குத் திசைகளும்; பின்னர் அதனையொட்டி வடக்கு-தெற்குத் திசைகளும் தமிழில் தோன்றின. பின்னர் சிறு வேறுபாடுகளைக் கொண்டு மேலும் நான்கு திசைகளுக்கான பெயர்கள் தமிழில் உருவானதை  நன்னூல் பின்வருமாறு பாடும்.

 

திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்

றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற”.

– (நன்னூல் நூற்பா – 186)

 

             நாம் ஏற்கனவே பார்த்த  கிழக்கு,  மேற்கு,  தெற்கு, வடக்கு ஆகிய  4 திசைகளுடன் கீழுள்ள நான்கு திசைகள் சேர்ந்து அவை `எண்திசைகள்` எனப்படும்.

 

வடக்கு + கிழக்கு     = வடகிழக்கு

வடக்கு + மேற்கு     = வடமேற்கு

தெற்கு + கிழக்கு     = தென்கிழக்கு

தெற்கு + மேற்கு     = தென்மேற்கு

 

இதுவே தமிழில் திசைகளுக்கான பெயர்கள் தோன்றிய வரலாறு ஆகும்.

வி.இ.குகநாதன்

0 comments:

Post a Comment