அழுங்குப்பிடியான பண்பாடுகள்


எதை நோக்கிப் பயணிக்கிறார்கள் தமிழர்கள் 

தற்சமயம், நம்மவர்களிடையே பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற கலாச்சார நடவடிக்கைகள் சிலவற்றை அழுங்குப்பிடியாகப் பின்பற்றிக்கொண்டிருப்பது நகைப்புக்கிடமாக உள்ளது.

 

முக்கியமாக, புலம் பெயர்ந்திருக்கும் தமிழ் மக்கள் இன்று மிகவும் பண வசதியுடன் இருப்பதால், தாங்கள் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் என்று  ஏனையோருக்கு காட்டுவதற்காகவென்றே, தேவையற்ற பல சம்பிரதாயங்களை 'வெகு விமரிசையாக'  நடத்தி அதனைப் பெருமை எனக் எண்ணும் கற்பனையில் வாழ்கிறார்கள்.

 

ஏற்கனவே நாம் செய்து கொண்டிருப்பனவற்றைப் பெரிதுபடுத்தியும், அத்தோடு பிற ஊர், பிற மத, பிற இன மக்களின் கிரிகைகளையும் பிடித்து இழுத்து [பண்ணித் தமிழில் கூறுவதாயின் காப்பி பண்ணி] அவற்றையும் செய்து முடித்தும், தம்மை  அடையாளப்படுத்திக்  காட்டிட கடன் அட்டையில் கடன்காரன் ஆவதில்  போட்டி போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.

 

முக்கியமாக, வெள்ளைக்காரர்/வேற்று நாட்டுக்காரர்  செய்யும் நல்ல விடயங்களைப் புறம் தள்ளி, அவர்கள் முக்கியம் கொடுக்காத விடயங்களைப் படு தீவிரமாகப் பின்பற்றுவார்கள். அத்தோடு, அர்த்தமற்ற பல கிரிகைகளையும் அளவுக்கு மிஞ்சிய ஆடம்பரமான விதத்தில் கொண்டாடி, பண விரயம் செய்துகொள்வதிலேயே ஆர்வமாக உள்ளனர்.

 

உதாரணமாக:

 

பூப்புனித நீராட்டு விழா:

அந்தக் காலத்தில் வெறுமனே குடும்பத்தினரோடு செய்துவந்த (தேவையற்ற!) ஒரு சிறு சடங்கை இப்பொழுது பெரிதுபடுத்தி, 600 பேரை அழைத்து, பல்லக்கு, குதிரை, யானை, ஹெலிஹாப்டர் மேல் எல்லாம் ஏற்றி, இறக்கி கோமாளித்தனம் செய்து, இயற்கையாய் ஒரு சிறுமிக்கு ஏற்பட்ட பருவ வளர்ச்சியை அசிங்கப் படுத்துகிறார்கள்.

 

திருமணவிழா:

குடும்பத்தோடும், உண்மையில் அவர்கள் குடும்பத்தின்மேல் கரிசனையுடன்  பழகிய உறவினர்களோடும், நெருங்கிய நண்பர்களுடனும் செய்யவேண்டிய ஒரு நிகழ்வுக்கு, அவர்களில் சிலரைத்  தவிர்த்து தெரியாத பல ஆயிரம் பேரை அவர்கள் வெறுப்புடன் வரச்செய்து பெரும் விழாவாகக் கொண்டாடுவார்கள்.

 

விழாவுக்கு முன்னர் வெள்ளைக்காரரிடம் கடன் வாங்கிய 'bachelors party (மணமகனின் பார்ட்டி), hens party (மணமகளின் பார்ட்டி), facial makeup (paint அடித்துப் பெண்களைப் பொம்மைகள் ஆக்குவது) மற்றும், வட இந்தியரிடம் பெற்றுக்கொண்ட mehndi (கை , கால் எல்லாம் சாயக் கோலம் பூசி பேய்கள் ஆக்குவது) மேலும் புகைப்படக்காரரின் direction க்காகவே பல, பல வினோத சினிமா விளையாட்டுக்கள் என்று எல்லாம் இன்று நடந்தேறுகின்றன. படப்பிடிப்புக்காகவென்றே நூற்றுக் கணக்கானவர்களுக்கு ஒரே நிறத்தினாலான உடுப்புகள், போர்வைகள், மாலைகள், அலங்காரங்கள், இராட்ஷத சொகுசு வண்டிகள்  என்று இராச பரம்பரை மட்டத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

அது போதாதென்று, இறை பக்தர்கள் , கலாச்சாரம் பேணுபவர்கள், மரபுவழி நிற்பவர்கள் என்று சொல்லிக்கொண்டு, மணமக்களின் நண்பர்களோடு செய்யவேண்டிய ஒன்றுக்கு, வேறு பலரையும் அழைத்து மிகப்பெரிய ( reception) வரவேற்பு வைபவமும் நடத்தி, குடிக்காதவர்கள் பார்த்துக்கொண்டிருக்க, எடுப்பவர்கள் எல்லோரையும் தண்ணீர்க் கடலுக்குள் மூழ்க வைப்பார்கள்.

 

தமிழ் கலாச்சார விழா என்று சொல்லிவிட்டு, வெள்ளைக் காரர்   கைவிட்ட 'கோட்' டுகளையும், 'சூட்' டுகளையும், ரைகளையும், எடுத்துத் தூசு தட்டி,  இறுக்க, இறுக்க உடுத்து வெள்ளைக்காரனாட்டம் அமர்ந்திருப்பார்கள். [இதேவேளை  தாம் 'கோட்' 'சூட்' 'ரை' யோட பிறந்தவர்கள் போன்று  அடுத்தவரின் மேற்படி உடைகளில் சரி ,பிழை பேசுவதையே பொருளாகக் கொண்டிருப்பர்.]

 

கர்ப்பத்தின் போதும், பிள்ளை பிறந்த பின்னரும்:

கரப்பமாகிவிட்டால், வெள்ளைக் காரனிடம்  கடன் வாங்கிய gender reveal (பிள்ளை ஆணா, பெண்ணா என்று சேர்ப்பிரைசாக வெளிப்படுத்தும் ) பார்ட்டி. - ஏதோ, அதை நாம் அறிய ஆவலோடு அங்கலாய்த்துக்கொண்டிருந்தது போல-  ஒரு 400 பேருக்கு முன்னால்  நடைபெறும்.

 

பின்னர், தென் இந்தியாவில் இருந்து பெற்றுக்கொண்ட வளை காப்பு விழா நடைபெரும்.

 

மேலும், முடி வழித்தல், துடக்கு கழித்தல், பெயர் சூட்டுதல், தொட்டிலில் ஏற்றுதல் என்பனவற்றைப் பெரிதுபடுத்திச் சினிமா வழியில் செய்பவர்களும் உள்ளனர். 

 

பிறந்த தின விழா:

தமிழ் சினிமா, தொலைக்காடசித் தொடர்களில் அதிகமாக வரும் சம்பவம், கதாநாயகன், மோசமான வில்லனின் வீட்டிற்குள் இரகசியமாக உட்சென்று, கதாநாயகியின் ஜன்னலூடே, சரியாக 'டாங்' நள்ளிரவு 12 மணிக்கு அறையினுள் ' சேர்ப்பிரைஸ்'  ஆகக் குதித்து, கொண்டுவந்த பிறந்த நாள் கேக்கை வெட்டுவானாம்.

 

எதற்கும் கேக் வெட்டுவது சாதாரணமாகி விட்டது. கேக் வெள்ளைக்காரருடையது. தமிழருக்கு நாள் பிறப்பது காலை 6மணிக்குத்தான், இரவு 12 மணிக்கு அல்ல. நாலு வெள்ளைக்காரரை விசாரித்துப் பார்த்தால் அப்படி ஒன்றும்  அவர்கள் இரவு 12 மணிக்கு செய்வதாக அறிய முடியவில்லை.

 

வெள்ளைக்காரர், குழந்தைகள் மற்றும் இளையோர்கள் பிறந்த நாள் என்றால் வீட்டு அங்கத்தவர்களுடன் முடித்து விடுவர். இளைஞர்கள் என்றால், பிறந்த நாளைத் தொடர்ந்துவரும் சனிக்கிழமையில், நண்பர்கள் 4-5 பேருடன் வெளியில் சென்று, குடித்து, உணவுண்டு மகிழ்வார்கள். கேக் என்பதும் பெருபாலும் இருக்காது, நள்ளிரவு சமாச்சாரமும் கிடையாது.

 

நம்மவர்களோ எனில், ஒரு வயதில் இருந்து கிழம் வயதுவரை, பல நூறு ஆட்களை வரவழைத்து, சிலவேளை இரண்டு, மூன்று தடவைகளாகவும் கொண்டாடிக்கொண்டு இருப்பார்கள். எல்லாவற்றிலும், பெரிய, சிறிய கேக்குகள் இருக்கும். விதம், விதமான போஸ்களில் படம் பிடிக்கப்படும். முகநூல் வந்தபின் அடுத்தவர்களுக்குக் காட்டும் போட்டிகள் பல.


மரண விழா: 

உயிருடன் இருக்கும்போது கவனித்தார்களையோ இல்லையோ, இறந்தபின்னர் அளப்பரிய பாசத்தை அள்ளி, அள்ளி  வீசுவார்கள்.மரண வீட்டிற்கு கவலையுடையவர்களாகக் காட்டுவதற்கு உறவுகள் எல்லோரும் கறுத்த உடை தயார் செய்வதற்கு ஆலாய் பறந்து திரிவர். எவ்வளவுக்கு அதி விமரிசையாய்க் கொண்டாட முடியுமோ, அவ்வளவுக்கு செய்து  'show' காட்டிக்கொள்ளுவார்கள். அப்புறம், எட்டு, எட்டாம் எட்டு, அந்தியட்டி, மாசியம், ஆட்டத்திரி என்று தொடர்ந்து ஐயருக்கு கொடுத்து சிறப்பாகச் செய்து அன்பின் உச்சத்தினை உலகிற்கு  அறிவித்துக் கொள்ளுவார்கள்.

 

சமீபத்தில் புதிய ஒரு கோமாளித்தனம் அரங்கேறியதாகக் கேள்வி! இறந்த கணவனின் பிரேதத்தின் கையைத் தூக்கி, மனைவியின் நெற்றிப்  பொட்டினை அழித்து அவளை விதவை ஆக்கிக் கொண்டார்களாம்! என்னே அறிவியல் கலந்த சமுதாய வளர்ச்சி! அப்பப்பா! கேட்கவே புல்லரிக்கின்றது!

 

காட்டிக் கொடுத்தல்:

 

தமிழ் ஆட்களின் இரத்தத்தோடு ஊறிய ஒன்று காட்டிக்கொடுக்கும் கலாச்சாரம் ஆகும். இதன் காரணமாக தமிழ் சமூகம், அரசியல், வசதி, வளம், முன்னேற்றம் என்று எங்கும் பல பின்னடைவுகளைத்தான் சந்தித்து வந்து இருக்கின்றது.

 

ஒரு வேலைத்தலத்தை எடுத்தால், பிற சமூகத்தவர்கள் தம் சொந்த இனத்தவர்களை எப்படியும் மேலே கொண்டுவர முயற்சி செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால், நம்மவர்கள் மேலிடத்திற்கு முறையிட்டுக் குழி பறிப்பதற்கு எங்கேயென்று சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

 

நட்பின்மை:

ஒரு வீதியால் போகும்போது, எதிரே நடந்து வரும் அல்லது சைக்கிள் ஓட்டும் வெள்ளைக்காரர்/வேற்று நாட்டவர்  எவர் என்றாலும், தெரிந்தவரோ, தெரியாதவரோ, நம் முகத்தை நேரில் பார்த்து வணக்கம் கூறுவது, வாழ்த்துத் தெரிவிப்பது, நலம் விசாரிப்பது அல்லது சிறிய புன் முறுவலுடனான தலை அசைப்பது எல்லாம் நாம் நாளாந்தம் காண முடியும்.இது ஒவ்வொரு இனத்தவரும்  தங்கள் நாட்டினரைக் கண்டால் பழகும் விதம் இன்னும் அதிகமாக  இருக்கும்.

 

ஆனால்..., ஆனால், நம்மவர் ஒருவர் முன்னே வந்தாரேயானால், அவர் முகத்தை நாம் பார்த்தாலும் அவர் எம்மை ஒரு பரம எதிரி போல முறைத்துப் பார்த்துக்கொண்டு போவார். அல்லது முன்னால் ஒருவர் வருவதே தெரியாது, கீழேயோ, மேலேயோ, பக்கத்தில் உள்ள மரங்களையோ பார்த்தவண்ணம் போய்விடுவார். சிறிது தூரம் போனபின்னர் திரும்பிப் பார்த்துக்கொள்ளுவார்.

 

நிமிர்ந்து கண்ணைப் பார்த்து தலையை அசைத்தால்  அவர்கள் மண்டை சுக்கு நூறாக வெடித்துவிடுமோ என்னவோ? இப்பொழுது, ஆங்கிலமே தெரியாத சீன வயோதிபர்கள் கூடி எதோ ஒன்றைச் சொல்லித் தலையை ஆட்டி விட்டுப் போகிறார்கள்! நம்மவர்கள்தான் மண்டைக்குள் ஏதோ களிமண் உருட்டி அடைத்து  விட்டது போலவல்லவா போய்க்கொண்டிருக்கிறார்கள்?

 

ஐயப்படியாக இன்னும் பல!

 

உலகம் இப்பொழுது உயர்வை நோக்கிப் போய்க்கொண்டிருக்க, நாம் மட்டும் இன்னும் குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டு இருந்தால், நம்மவர்கள் கற்கால யுகத்தினை நோக்கிப் பயணிக்கின்றோம் என்பதுதான் உண்மை.

👉செ.சந்திரகாசன் 

No comments:

Post a Comment