சிவவாக்கியம்-196
வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய்
ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடி வைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே
போடுகின்ற புட்பபூஜை பூசை என்ன பூசையே!!
ஆசாரமாக வேடம் போட்டு ருத்திராட்சம் ஸ்படிகம் போன்ற
மணிகளால் ஆன மாலைகளைக் கழுத்தில் போட்டு மணியோசையுடன் இறைவனுக்கு தூப தீபங்கள்
காட்டுகின்றீர்கள். ஆட்டை அறுத்துக் கூறுபோட்டு விற்பவர்கள் போல சடங்குகள்
பண்ணுகின்றீர்கள். தேடிக் கொணர்ந்து வைத்து செம்புகளில் நீர் நிரப்பி அதனை அங்கு திரளாகப் பரப்பி பூக்களால் அர்ச்சித்து செய்வதாக போடும்
பூசை என்ன பூசையோ. உயிரை வளர்க்க செய்யும் பூசையை அறியாமல் வயிறை வளர்க்க செய்யும் பூசை என்ன பூசையோ?
*******************************************
சிவவாக்கியம்-197
முட்டு கண்ட தூமையின் முளைத்தெழுந்த சீவனை
கட்டிக் கொண்டு நின்றிடம் கடந்து நோக்க வல்லிரேல்
முட்டும் அற்று கட்டும் அற்று முடிவில் நின்ற நாதனை
எட்டுத்திக்கும் கையினால் இருந்த வீடதாகுமே !!!
தாயின் கருவிலே தூமையினால் உருவாக்கி பிறந்த உயிரானது
உடலாகி வளர்ந்துள்ளது. உடம்பிலே நாத விந்தாக ஒன்று சேர்ந்து இலிங்கமாக கட்டிக்
கொண்டு நின்று கொண்டிருக்கின்றது. அதனை அறிந்து கொண்டு எதனுடனும் முட்டாமலும், கட்டாமலும், ஒட்டாமலும் தனித்திருக்கும் முடிவாக நின்ற ஈசனை
உணர்ந்து மனதை அங்கேயே இருத்தி அதையும் கடந்து சென்று நினைவு, உணர்வு, அறிவு என மூன்றையும் ஒன்றாக்கி தியானம் செய்ய வல்லவர்கள் தனக்குள் நின்ற
நாதனான ஈசனைக் கண்டு அருள் பெறுவார்கள். அவ்வீசன் நின்ற இடமே கைலாயம். அது உனக்குள்ளேயே எட்டு
திசைகளாகவும், நான்கு வேத கைகளாக இருக்கும் இடமே ஈசன் வாழும் வீடாகும்.
*******************************************
சிவவாக்கியம்-199
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்சு எழுத்தின் மேல்
கோல வட்டம் மூன்றுமாய் குலைந்தலைந்து நின்ற நீர்
ஞான வட்டம் மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே!!!
மூலவட்டம் எனும் பிரம்மத்திலிருந்து தோன்றிய பஞ்ச
பூதங்கள் உடலாகிய கோலத்தில் மூன்று வட்டங்களாகி சூரிய, சந்திர, அக்னி மண்டலங்களாக உயிராகி நீராக நின்றது. அது இவ்வுலகம்
முழுமையும் சொல்லுகின்ற ஞானமாக உனக்குள்ளேயே புருவமத்தி எனும் மன்றினுள் ஏகமாகி
ஒரேழுத்தாக இருந்தது சிவமாகிய மெய்ப்பொருளே. இதனை ஞானிகளின் போதனையால் அறிந்து யோக
ஞான சாதகத்தால் 'சிவயநம'' என்று தியானியுங்கள்.
********** அன்புடன்-கேஎம்தர்மா.
0 comments:
Post a Comment