சிவவாக்கியம்-192
அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே
சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே
கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!!
அரும்பசிக்கு அன்னதானம் செய்தவர்கள் கோடி வளம் பெற்று
பல்லாண்டு காலம் வாழவேண்டும். அன்னதானம் செய்வதற்கு பொருள் வேண்டி
செல்வந்தர்களிடம் சென்று உதவி கேட்டால் அவர்கள் அதிகாரம் செய்து இல்லை என்று
விரட்டலாம். அன்னதானம் செய்வதை குற்றம் என்று சொல்லி வில்லங்கம் செய்பவர்கள்
பாழும் நரகக் குழியில் வீழ்ந்து அல்லலுறுவார்கள். அனைத்து உயிரிலும் ஆண்டவன்
இருப்பதை அறிந்து அவனைத் தனக்குள்ளேயே கண்டு கள்வர்கள் கன்னமிடுவதைப் போல் யோக ஞான
சாதனத்தால் தியானிப்பவரால் பத்தாம் வாசலைக் கடந்து கடவுளை அடைவது நிச்சயம்.
*******************************************
சிவவாக்கியம்-194
பிறந்த போது கோவணம் இலங்கு நூல்
குடுமியும்
பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு நாள் சடங்கெலாம்
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ
நிலம் பிளந்து வான் இடிந்து நின்றது என்ன ஈசனே!!!
பிறந்தபோதே கோவணமும் பூணூலும் குடுமியும் கூடவே
பிறக்கின்றதா? பிறக்கும்போது இறைவனைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவது
இல்லை என்பதை மறந்துவிட்டு வெறும் சடங்குகளை எல்லாம் குரங்குப் பிடியாக பிடித்துக்
கொண்டு அதிலேயே மனம் வைத்து ஈசனை அறியாமல் இருக்கின்றார்கள். நான்கு வேதங்களும்
மனதினுள்ளே உதித்ததா? அறிவிலே உதித்ததா? பிரம்மாவும், விஷ்ணுவும் தானே பெரியவன் என்ற சர்ச்சையில் எச்சன்
நிலத்துக்கும் வானுக்கும் லிங்கோத்பவராக நின்று தானே அநாதி என நிரூபித்ததை அறிந்து
அவ்வீசனை உங்களுக்குள் உணர்ந்து அவனை ஆயா தவம் செய்ய முயலுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-195
துருத்தியுண்டு கொல்லன் உண்டு சொர்ணமான சோதியுண்டு
திருத்தமாய் மனத்தில் உன்னித்திகழ ஊதா வல்லிரேல்
பெருத்ததூண் இலன்கியே பிழம்பதாய் விரிந்திடும்
திருத்தமான சோதியும் நீயும் அல்லது இல்லையே !
நாம் விடும் மூச்சில் வாசியைக் கண்டு அதனை யோகமாக்கி
செய்ய உடம்பு உண்டு. அதில் உள்ள ஆன்மாவில் பொன்னார் மேனியாகிய ஈசன் விளங்கும் சோதி
உண்டு. இந்த வாசி யோகத்தை தினமும் முறை பிசகாமல் மனதில் நிறுத்தி இறைவனை எண்ணி ஊத ஊத
மனம் இலயமாகி பெருத்த தூணாக மறைக்கும் நந்தி விலகி நெருப்பாறு ஒளிபிழம்பாக விரிந்து நிற்கும். அங்கு மயிர்பாலம் எனும் பிரம்மாந்திரத்தில் ஏறிக் கடந்தால்
கோடி சூரியப் பிரகாசமான சோதியில் சிவனும் சீவனுமின்றி வேறு எதுவுமில்லை. நீயே அந்த
பரம்பொருள் என்பதை உணர்ந்து யோக தியானமும் செய்து ஈசனைச் சேருங்கள்.
********************** அன்புடன் கே எம் தர்மா.
0 comments:
Post a Comment