சித்தர் சிந்திய முத்துக்கள் ......3/29

 


சிவவாக்கியம்-171 

 

தாதர் செய் தீமையும் தலத்தில்செய் கீழ்மையும்
கூத்தருக்கு கடைமக்கள் கூடி செய்த காரியம்
வீதி போகும் ஞானியை விரைந்து கல் எறிந்ததும்
பாதகங்கள் ஆகவே பலித்ததே சிவாயமே!


மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று தொண்டு செய்ய வந்தவர்கள் சுயநலமாக செய்யும் தீமைகளும், தலம் எனப்படும் கோயில், பள்ளி, ஆஸ்ரமம் போன்ற அறச்சாலைகளில் நடக்கும் கீழான செயல்களும், கூத்தாடிப் பிழைப்பவர்க்கு இழிவான கடைமக்கள் கூடிச் செய்கின்ற தீங்கும், வீதி வழியாகப் போகும் ஞானியை பழித்துரைத்துக் கல்லால் எரிந்து அடித்ததும் தப்பாமல் திரும்பி வந்து அவர்களுக்கு பாதகங்கள் ஆகவே பலித்துதுன்புற்று சாவார்கள். நீங்கள் செய்த பழிபாவங்கள் நீங்க 'சிவயநம' என்ற அஞ்செழுத்தை ஓதி பாதகங்கள் செய்யாது வாழுங்கள்.
******************************************* 

சிவவாக்கியம்-178

 

சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம்?
சொல்லு கீழு லோகம் ஏழும் நின்றவாறது எவ்விடம்?
அவளதான மேருவும் அம்மைதானது எவ்விடம்/
அவனும் அவளும் ஆடலாம் அருஞ்சீவன் பிறந்ததே!!!

மாடான மனதில்தான் புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய மூன்றும் பிறந்தது. அந்த நான்கு அந்த கரணங்களும் உடம்பில் எங்கு இருக்கின்றது. சொல்லும் வார்த்தைகள் தோன்றுவதும் ஏழு உலகங்களாக நின்றதும் அதுவாக இருப்பதும் எவ்விடம். அவளதான வாலை மேரு சக்கரமாகவும் அம்மையான மனோன்மணியாகவும் அமர்ந்திருந்தது எவ்விடம்? அவனும் அவளும் ஆடியே அருஞ்சீவன் உருவானது. எல்லாம் சிவசக்தியின் திருவிளையாடல் என்பதை புரிந்து தியானம் செய்து இச்சீவனை சிவனோடு சேருங்கள்.   .
******************************************* 

சிவவாக்கியம்-180 

 

திரும்பி ஆடு வாசல் எட்டு திறம் உரைத்த வாசல் எட்டு
மருந்கிலாத கோலம் எட்டு வன்னியோடு வாசல் எட்டு
துரும்பிலாத கோலம் எட்டு சுற்றி வந்த மருளரே
அரும்பிலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே!

மீண்டும் மீண்டும் இப்பூவுலகில் பிறந்திறந்து உழலும் உடல் எண்சான் அளவே. அந்த எட்டான உடலில் திறமாக செயல்படும் உயிர் எட்டாகிய ஆகாரத்தின் வாசலில் உள்ளது. அது ஆகாயமான எட்டாகி இருக்கும் கோலமும் அதிலே வன்னி எனும் தீயாக ஈசன் இருந்து ஆடும் இடம் அகாரம். அந்த எட்டான அகாரத்தில் ஒரு தூசோ, துரும்போ அண்டாது. பரிசுத்தமான கோலமாய் உள்ள இடமாகிய அகாரத்தில்தான் சோதி உள்ளது. இதனை யாவும் எட்டாக விளங்கும் தன் உடம்பிலே காணாமல் வேறு எங்கெங்கோ சுற்றி வருகின்ற மருள் பிடித்த மனிதர்களே! அரும்போ, மோட்டோ இல்லாத பூவாக உன் ஆன்மா உனக்குள் இருப்பதை உணர்ந்து அதிலேயே தியானித்து பிறவா நிலை பெற வாருங்கள். இது என் ஐயன் மீது ஆணையிட்டு உண்மையாகச் சொல்லுகின்றேன்.

 

******************** அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment