"முடிவுரை"
உடல்நலக் குறைபாடு, விபத்து, மனநிலை மாற்றம், மன அழுத்தம் என
பல காரணங்களால் இறப்பு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் இயற்கை மரணங்கள் என்பது
அரிதிலும் அரிதாகி விட்டது. பிறப்பென்றால், இறப்பு என்பது நிர்ணயம் செய்யப்பட்டது தான். ஆனால், அது தானாக நிகழ
வேண்டுமே தவிர நாமாக ஏற்படுத்திக் கொள்ள கூடாது. சித்தார்த்தன் ஒரு மரணத்தை
முதன்முதலாகப் பார்த்த பின்னர்தான் ஆன்மீகத் தேடல் ஏற்பட்டு புத்தரானான்.
மரணத்தைப்பற்றி எப்போது ஒருவர் சிந்திக்க தொடங்குகிறானோ அப்போதுதான் ஆன்மீகத்
தேடல் உண்டாகிறது எனலாம். இந்த நூற்றாண்டின் கவிஞன் கண்ணதாசன் இறப்பை பற்றி இப்படி
கூறுகிறான்:
"வீடு வரை
உறவு வீதி வரை மனைவி
காடு வரை
பிள்ளை கடைசி வரை யாரோ?"
இதன் கருத்து ஒரு மனிதன்
இறக்கும் போது, அவனது
உறவினர்களும் நண்பர்களும் வீடு வரை மட்டும் வருகிறார்கள். அவனது துணைவியார்
[மனைவி] வீதி வரை வருகிறாள். அவனது அன்பு பிள்ளைகள் சுடலை வரை வருகிறார்கள். அதன்
பின் அவனை தொடர்வது யாரோ?
என கேள்வி
கேட்கிறான். இதன் உண்மையான அர்த்தம் உடல் எரித்த பின் அவரை ஒருவரும் அல்லது
எதுவும் தொடர்கிறதா என்பது தெரியாது என்பதே அல்லது அப்படி ஒன்றும் இல்லை என்பதே
ஆகும். என்றாலும் அதற்கும் தனது பதிலை கொடுக்கிறான் கண்ணதாசன் -வேறு ஒரு பாட்டில்
அல்ல - அதே பாட்டில் .
"விட்டு
விடும் ஆவி பட்டு விடும் மேனி
சுட்டு
விடும் நெருப்பு சூனியத்தில் நிலைப்பு"
மிகவும் எல்லோராலும்
அறியப்பட்ட பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த சித்தர் பட்டினத்தாரும் அதற்கான விடையை தருகிறார். அவரின் ஒரு பாடல்
மேலே கூறிய பாடல் வரிகளை ஒத்து போகிறது.
"அத்தமும்
வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பு ஒழுக
மெத்திய
மாதரும் வீதி மட்டே விம்மி விம்மி இரு
கைத்தல
மேல் வைத்தழுமை ந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித்
தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே"
ஒரு மனிதன் இறந்த பின், அவனது இறுதி
பயணத்தில் உடன் வருவது யார்? என்ற கேள்விக்கு இந்த பாடல் பதில் அளிக்க முயல்கிறது.
"சேர்த்துக் குவித்துள்ள செல்வமா?" "அது வீட்டோடு
தங்கிவிடும்!"
"மனைவியா?" "வீதிவரை துணை வருவாள்!"
"மகனா?" "சுடுகாடு வரை துணை வருவான்"
"கடைசிவரை வரும் துணை யார்?" "நல்வினை
தீவினைகளே!" என்று பதில் அளிக்கிறது.
பட்டினத்தாருக்கு இப்படி
ஒரு ஞானம் தந்த வாக்கியம்: "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"
என்ற வாக்கியமே! இதன் கருத்து "மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கடைசியில்
பயனில்லாத காதற்ற ஊசியைக் கூட கடைசியில் கையில் கொண்டு செல்ல முடியாது'' என்கிறது.
பொதுவாக சித்தர் பாடல்கள்
மிகவும் தத்துவமானவை, அப்படி பட்ட
பாடல்களில் ஒன்று:
"நந்தவனத்தில்
ஓர் ஆண்டி
நாலாறு
மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு
வந்தான் ஒரு தோண்டி.
அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி"
இந்த பாடலின் கருத்தை
மேலோட்டமாக பார்க்கும் போது, இந்த ஏழையின் முயற்சி, இரங்கி பெற்ற மட்பானையை பாதுகாக்காமல், வீணாய் போயிற்று
என்று தோன்றும். ஆனால் அது உண்மையான கருத்தல்ல. நந்தவனம் என்பது பூமியை
குறிக்கிறது. அது போல ஆண்டி என்பது மனிதனை குறிக்கிறது. இந்த பூமியில் பிறக்கும்
எவரும் ஒன்றும் கொண்டு வருவதில்லை. ஆகவே அவன் ஒரு ஆண்டி. நாலு ஆறு, மொத்தம் பத்து
மாதத்தின் பின் பிறக்கிறான். ஆகவே இந்த பத்து மாதத்தை, தன்னை இந்த மனித
உடலில் இந்த பூமியில் கொண்டு வந்த படைத்தவனை வேண்டுவதாக கருதலாம். தன்னுடைய உயிரை
வைத்திருந்த உடலை மட்பானைக்கு ஒப்பிடுகிறார். ஆகவே அந்த குயவர் கடவுளாகிறார். தன்னுடைய
உடல்நலத்தை பேணாது,
வீணாக இந்த
பூமியில் சுற்றித்திரிந்தது தனது வாழ்வை போட்டு உடைக்கிறான் என்கிறது.
"ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்ற தமிழ்
பழ மொழியையும் நினைவு கூறுங்கள். அது சொல்லுவது என்னவென்றால் ஒரு மனிதன் ஆறு
வயதிலும் சாகிறான். நூறு வயதிலும் சாகிறான்.ஆகவே வாட்டமுறுவதிலும் அல்லது தன்னிலை இழப்பதிலும் ஒரு அர்த்தம் இல்லை. ஆகவே
உங்கள் நல்ல முயற்சிகளை வைத்து, நீங்கள் வாழும் மட்டும் வாழுங்கள் என்பதே.
வாழ்க்கையும் இறப்பும்
ஒரு நாள் சந்தித்தன. வாழ்க்கை மிகவும் பெருமையாகவும் கர்வத்துடனும் இறப்பிடம்
சொன்னது என்னை எல்லோரும் விரும்புவார்கள். ஆனால் உன்னை யாரும் விரும்புவதில்லையே
என்று கூறி கொக்கலித்து சிரித்தது. அதற்கு மிக அமைதியாக, ஒரு புன்னகையுடன்
இறப்பு கூறியது: "நீ [வாழ்க்கை] ஒரு அழகான பொய். நான் [இறப்பு] ஒரு கசப்பான
உண்மை." என்றது.
ஒவ்வொருத்தரும்
வாழ்க்கையில் ஒவ்வொரு பயணத்தில் போகின்றனர். பயணத்தின் நோக்கமும் அது போய் சேரும்
இடமும் வெவ்வேறாக இருந்தாலும், கடைசியில் எல்லோரும் மரணத்தை நோக்கியே போகிறோம் என்பதை
மறுக்க முடியாது. மரணத்தை பற்றிய தெளிவும்,மரணதிற்கு பின் நடக்க போகும் நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து
இருந்தால் மனசுக்குள் ஆத்திரமும், அவசரமும் தலை தூக்க வாய்ப்புகள் ரொம்ப குறைவே. இதனால் என்ன
ஆகும். மனசு சந்தோசமாக இருக்கும். மனசு சந்தோசமாக இருந்தால் ரொம்ப நாள் உயிர்
வாழலாம். சும்மா சாப்பிடுவதும் நித்திரை கொள்வதும் தான் வாழ்க்கை என்று வாழ்ந்தால்
அதில் நீங்கள் ஒன்றும் அடையப் போவதில்லை. உங்களை அறிவுள்ளவராக மாற்றும் எந்தவித
அனுபவத்தையும் நீங்கள் பெறவில்லை என்றால், உங்கள் பார்வையில் இந்த உலகம் எப்படிபட்டது என்பதையும்
அறியமாட்டீர்கள். ஞானம் மிக பயனுடையது. நீங்கள் இந்த உலகை விட்டு போகும் போது, "நான்
எந்தவித கவலை அல்லது வருத்தம் இன்றி
வாழ்ந்தேன்" என்று சொல்லவேண்டும். ஆகவே இந்த வாழ்வை நாம் நல் வழியில், நல் நோக்கத்துடன்
விவேகானந்தர் கூறியது போல,
"மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது, மேலான இலட்சியத்திற்கா வாழ்ந்து இறந்து போவது
சிறந்தது" என வாழ்வோமாக! புறநானுறு 356:1 - 4,
"களரி
பரந்து கள்ளி போகிப் பகலும் கூஉம் கூகையொடு பேழ்வாய் ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
அஞ்சுவந் தன்றுஇம் மஞ்சுபடு முதுகாடு"
என பாடுகிறது. களர் நிலம்
பெருகிக் கள்ளி முளைத்தது. பகலில் கூவும் கூகைகளாலும் பிணம் சுடும் தீயின்
வெளிச்சத்தாலும் சூழ்ந்த இந்த சுடுகாடு காண்போர்க்கு அச்சத்தை வரவழைப்பது போல
உள்ளது. அப்படிபட்ட காண்போர்க்கு அச்சத்தைத் தரும் கொடிய இடம் சுடுகாடு. நாடாண்ட
மன்னர்கள் கூட முடிவில் அந்த சுடு காட்டைத்தான் சென்றடைகின்றனர். வாழ்க்கை
நிலையாதது. ஒருவன் செய்த செயல்களுக்கேற்ப அவனைச் சாரும் பழியும் புகழும் அவன்
இறந்த பிறகும் நிலைத்து நிற்கும். ஆகவே, இறப்பதற்கு முன், நற்செயல்களைச் செய்து புகழைத் தேடிக்கொள் என்பதேயாகும்.
இவ்வாறே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடலான மற்றும் ஒரு புறநானுறு 359:8-18 பாடலும்
"காடுமுன்
னினரே நாடுகொண் டோரும்;
நினக்கும்
வருதல் வைகல் அற்றே;
வசையும்
நிற்கும்; இசையும்
நிற்கும்;
அதனால், வசைநீக்கி
இசைவேண்டியும்
நசைவேண்டாது
நன்றுமொழிந்தும்
நிலவுக்கோட்டுப்
பலகளிற்றோடு
பொலம்படைய
மாமயங்கிட
இழைகிளர்
நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
கொள்என
விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ
பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு
விளங்கும் நீ எய்திய புகழே."
என ஆலோசனை வழங்குகிறது:
அதாவது நாடுகளை வென்றவர்களும் அத்தகைய சுடுகாட்டைத்தான் சென்றடைந்தனர். உனக்கும்
அந்த நாள் வரும். இவ்வுலகில் அவரவர் செய்த பழியும் நிலைத்து நிற்கும்; புகழும் நிலைத்து
நிற்கும்.அதனால்,பழியை நீக்கிப்
புகழை விரும்பி, விருப்பு
வெறுப்பு இல்லாமல், நடுநிலையில்
இருந்து, நல்லவற்றையே பேசி, ஒளிறும்
தந்தங்களையுடைய களிறுகளையும்,பொன்னாலான அணிகலன்களை அணிந்த குதிரைகளையும், பொன்னிழை அணிந்த
தேர்களையும் இரவலர்க்குக் குறையாது கொடுத்து அனுப்பினால், வெளிப்படையாக, நீ
மேலுலகத்திற்குச் சென்ற பின்னரும் உன் ஈகையால் உண்டாகும் புகழ் இவ்வுலகில் நீண்ட
காலம் நிலைத்து நிற்கும் என்கிறது.
"இரவல்
தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி
அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே
கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப்
போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில்
நுழைந்தால் திரும்பாது
போனால்
போகட்டும் போடா..."
[பாலும் பழமும்/கவிஞர் கண்ணதாசன்]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
............................முடிவுற்றது ............................
மாபெரும் தேடலில் ஆழமான ஆதாரங்களுடனும், இதுவரையில் அறியாத கருத்துக்களும் , அறிவுக்கு தேவையான விளக்கங்களும் , இக்காலத்திற்கு உகந்த செய்திகளையும் தந்து நிறைவடையும் இத்தொடரினை தொகுத்து தீபத்தில் அனைவரும் வாசிக்க வழிசமைத்த எழுத்தாளருக்கு பாராட்டுகள்.நன்றிகள்.
ReplyDelete