இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும் / பகுதி 11:

 [மரணத்தை தள்ளி போடலாமா?]

 


எமக்கு முன்பு இந்த பூமியில் ஏறத்தாழ 100 பில்லியன் மக்கள் வாழ்ந்து இறந்து இருக்கலாம். ஆனால் அவர்களில் ஒருவர் கூட திரும்பி வந்து, மறுமை இருக்கிறது என்பது [existence of an afterlife] பற்றி எந்தவித ஐயப்பாடும் இன்றி, தெளிவான ஆக்கபூர்வமான சாட்சியம் அளித்ததாக வரலாறு இல்லை. என்றாலும் பல சமய புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் இவைபற்றி பல தரவுகளை, கதைகளை தம் கற்பனைக்கு ஏற்றவாறு கூறுகின்றன. நாம் ஏன் இறக்கிறோம் என்பதற்கு இறையியலாளர்கள் மற்றும் மத விசுவாசிகள் [Theologians and religious believers] நீண்ட காலமாக இரண்டு அடிப்படையில் பதிலை கூறுகிறார்கள். முதலாவது இறப்பு என்பது இந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்றம் அடைதல் என்கிறார்கள் [death is simply a transition from this stage to the next in a cosmic proscenium]. இரண்டாவதாக, கடவுளின் வடிவமைப்பின் ஒரு பகுதியாக அது உள்ளதுடன், அதற்கான காரணம் நீங்கள் இவ்வுலகத்தை விட்டு அவ்வுலகம் சென்றதும், உங்கள் செயல்களுக்கான தார்மீக மதிப்பெண்களை கணக்கிட்டு அது உங்களுக்கு தெரிய படுத்தப்படும் [that will be disclosed once we get to the other side, usually involving a cosmic comeuppance for one’s actions and a settling of all moral scores] என்கிறார்கள். என்றாலும் விஞ்ஞானிகள், பரிணாமத்தின் கொள்கையின் படி, அது எங்கள் சந்ததியினூடாக அழியாத மரபணுக்களையும் ஆனால் அழியும் உடல்களையும், ஏனென்றால், உங்களை பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன், பரன் என்று உயிருடன் வைத்திருப்பதை விட, எதிர்கால தலைமுறையினரை நோக்கி வளங்கள் சிறப்பாக ஒதுக்கப்படுகின்றன என்பதால், மற்றவர்கள் வாழ நாம் இறக்கிறோம் என்கிறது [Due to the logic of evolution, or the fact that natural selection created immortal genes through our offspring but mortal bodies because resources were better allocated toward future generations than keeping alive great great grandparents — we die so others may live]. அதாவது மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பது ஆகும்.

 

என்றாலும் மனிதன் ஆண்டுக்கணக்காக மரணத்தை வெல்ல, அதன்மூலம் ஒரு இறவாநிலை அல்லது மரணமின்மையை அடைய முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறான். தன் எண்ணங்களுக்கு வடிவமாகவே புராணங்களிலும் இதிகாசங்களிலும் அதை புகுத்தினான். உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [“Gilgamesh Epic”/ written c. 2150 - 1400 BCE] என்கிடு இறந்ததும், கில்கமெஷ் மிகவும் கலக்கம் அடைந்து, குழப்பம் அடைந்து, இறப்பு அற்ற நிலையான வாழ்வை பெறுவதற்க்காக உட்னபிசிதிம் (Utnapishtim) என்ற கடவுளை நாடி, மரணமில்லாமை பற்றிய ரகசியத்தை அறிய முயற்சிக்கும் கில்கமெஷின் பயணத்தை இந்த நூல் விவரிக்கிறது. கில்கமெஷ் அழியாத வாழ்வை பெறாவிட்டாலும், 126 ஆண்டுகள் ஆட்சி நடத்தியதாகவும் [the Sumerian King List records his reign as 126 years] மிகப்பெரிய வலிமை கொண்டவனாகவும் இருந்தான் என்கிறது. அதே போல மந்தர மலையை மத்தாக்கி வாசுகிப்பாம்பை நாணாக்கி, பாற்கடலை  கடைந்து அங்கு திரண்டெழும் (சாகாமல் உயிர்வாழ உதவும்) அமுதத்தை அசுரர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆனால் பின் மகாவிஷ்ணுவின் உதவியுடன் ஏமாற்றி, தேவர்கள் மட்டும் குடிக்கும் ஒரு "பால் கடல் கடைதல்" என்ற புராண கதையை இந்து புராணத்திலும் காண்கிறோம். ஆனால் ஒரு உண்மையான முயற்சி ஒன்றை, கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் யிங் ஷெங் [Ying Zheng] என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் ,கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210, [Qin Shi Huang, 'First Emperor of Qin, 18 February 259 BC – 10 September 210 BC ] என்பவர், தான் பெற்ற அதிகாரத்தையும் வலிமையையும் நிரந்தரமாக பாதுகாக்க, என்றென்றும் இறவாமல் வாழும் யோசனை ஒன்றை கொண்டிருந்தார். தனது கடைசி காலத்தில், புராணத்தில் கூறப்பட்டிருந்த, அனைத்து நோய் நிவாரணியான அமுதம் ஒன்றை [mythical elixir of life] இறவா மருந்தாக அருந்த பாடுபட்டார். ஆனால் அவர் பாதரச மாத்திரைகளை [mercury pills] அந்த முயற்சியில் சாப்பிட்டு தன் உயிர் நீத்தார் என வரலாறு கூறுகிறது.

 

 

இன்றைய நவீன உலகில் கூட, இந்த முயற்சி இன்னும் தொடர்கிறது. இதனால், மனித வாழ்வின் நீண்ட ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ளது புள்ளிவிபரங்கள் படி தெரியவருகிறது. உதாரணமாக கடந்த இருநூறு ஆண்டுகளில், சராசரி மனித ஆயுள் 40 இல் இருந்து 72 இற்கு அதிகரித்துள்ளது. மேலும் சில வளர்ந்த நாடுகளில் [developed countries], இன்று சராசரி ஆயுள் காலம் 80 ஆகிவிட்டது. ஆகவே வரும் காலத்தில் அது 100 ,150 , 200 றைக் கூட தாண்டலாம் ? ஆனால் இறவா நிலை அடையும் என்பது இப்போதைக்கு, இப்ப இருக்கும் சூழ்நிலையில் சொல்லமுடியாது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதலாக 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும், உலகளாவிய வயது கண்காணிப்பு அட்டவணை [Global AgeWatch Index], 2050 இல் 60 வயது வரை உள்ளவர்களின் தொகை ஒரு கணிசமான அளவு அதிகரிக்கும் என்கிறார்கள். அப்பொழுது 60, 40 போலாகிவிடும் என எதிர்வு கூறுகிறார்கள் [By then, people may start saying that sixty is the new forty]. அடுத்த நூற்றாண்டில், அதிகமாக மனிதர்களின் முக்கிய உறுப்புகள், இயந்திரங்கள் மற்றும் கணினிகளால் [with machines and computers] மாற்ற முடியும் என நம்புகிறார்கள். உதாரணமாக, பேராசிரியர் யூவால் நுவா அராரி (Yuval Noah Harari 24 பிப்பிரவரி 1976), தான்

எழுதிய ஹோமோ டியூஸ் ['Homo Dais' / நாளைய வரலாறு] என்ற புத்தகத்தில், சமய நம்பிக்கை உள்ள மக்கள், கடவுளின் தீர்ப்பே மரணம் எனலாம், ஆனால் விஞ்ஞானிகளுக்கு இது உடலில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறு [a technical glitch in the body] என்றும், ஆகவே விஞ்ஞானிகள் இதற்கான தீர்வை ஆய்வகங்களில் கண்டு பிடித்து மரணத்தை ஒரு காலம் தவிர்க்கலாம் என்கிறார். அதே போல படிவளர்ச்சிக்கு அமைய மனிதரில் இருந்து அல்லது மனிதருக்கு அடுத்தபடியாக ஆதிக்கம் செலுத்த மீவுமனிதர் [Transhuman] என்ற ஒன்று மரபணு பொறியியல், தானியங்கியல், நனோ தொழில்நுட்பம் போன்ற நுட்பங்கள் மூலம் உருவாக்கலாம் என்ற ஒரு ஜோசனையும் இன்று உண்டு. உதாரணமாக, ஊனம், வலி, நோய், முதுமை, இறப்பு போன்ற விரும்பப்படாத அம்சங்களை குறைக்க அல்லது தீர்க்க இந்த திட்டம் முயல்கிறது. மரணத்தை வெல்ல இவை எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது இன்றைய சூழலிலும், இன்றைய விஞ்ஞான கோட்பாடுகளிலும் இல்லை என்றே கூறலாம், அனால் தள்ளிப் போட முடியும் [Researchers use mathematics and cell science to conclude that the aging process and death are inevitable, no matter how hard you try.but we can still live longer]. ஒரு மனித ஜீவனானவன் ஒரு மோட்டார் காரைப் போன்றவனல்ல. அவனது பாகங்களை தொடர்ந்து மாற்றிச் சரி செய்து, வியாதிகளிலிருந்து அவனை காப்பாற்றி, வயோதிகமடைவதை தடுத்து நிறுத்தி மரணத்தை வென்று என்றென்றைக்குமாக அவனை வாழ வைத்துவிட முடியாது என்பதே உண்மை.

 

ஆகவே இயற்கையின் நியதிகளில் மரணமும் ஒன்றாகும். ஆகவே நாம் மரணத்தைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும். ஏன் என்றால் மரணத்தைப் புரிந்து கொள்ளாமல் நம்மால் வாழ்க்கையை முறையாகப் புரிந்து கொள்ள முடியாது. வாழவும் முடியாது என்பதாலாகும். இது தான் இந்த கட்டுரையின் நோக்கமும் ஆகும். 

 

கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே"

 

ஒரு சித்தர் தன் பாடல் மூலம் உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம் மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச் சேர்த்து, இரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல்  என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறதாம் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூறி உள்ளார். இன்று நாம் மிகவும் நுண்ணியமாக உடல் அமைப்பையும் அதன் இயக்கத்தையும் அறிகிறோம். ஆகவே எம் உடல்  ஒரு இயந்திரம் போல் காட்சி அளிக்கிறது. எனவே இதை எமக்கு தெரிந்த இலகுவான மின்விசிறி இயந்திரத்துடன், ஒரு உதாரணத்துக்கு  ஒப்பிடுவோமாயின், ஒரு மின்விசிறி சுழல்கின்றது என வைப்போம். ஆகவே அதில் இருந்து காற்று வெளியேறுகிறது. இப்போது இந்த வெளியேறும் காற்றை நாம் மீண்டும் மின்சக்தியாக மாற்றி, இதை மட்டுமே கொண்டு, மீண்டும் மீண்டும் இந்த செயலை தொடரமுடியுமா என்று சிந்தித்தோம் என்றால், வெப்ப இயக்க வியலின் இரண்டாம் விதியின் [the Second Law of Thermodynamics, or the fact that there’s an arrow of time in our Universe that leads to entropy [the amount of energy which is unavailable to do work /  a measure of disorder] and the wearing down and eventual death of all systems, from stars and people to the Universe itself;] படி இது சாத்தியமற்றது. நேரம் செல்ல செல்ல, மின்விசிறியின் திறம் குறைந்து கொண்டே வரும். ஒரு சமயத்தில் அது நின்று விடும். அப்படித்தான் எம் உடலும் என்கிறார்கள்.

 

 உலகில் பிறந்தவர் யாரும் இருந்ததில்லை. எல்லோரும் இறந்தே போனார்கள். சித்தர், முக்தர், ஞானிகள், யோகிகள், முனிவர்கள் எல்லோரும் மரணத்தை வெல்ல எதையெதையோ செய்து பார்த்தார்கள். மூச்சை அடக்கிப் பார்த்தார்கள். மௌனத்தில் இருந்து பார்த்தார்கள். காயகல்ப்பம் [இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் கொண்ட ஒரு மருந்து / காயம் என்றால் உடல். கல்பம் என்பது நீண்ட கால அளவை குறிக்கும் சொல்] உட்கொண்டு பார்த்தார்கள். ஆனால் மரணத்தை வெல்ல முடியவில்லை.

புத்தன், யேசு, முகமதுநபி, இராமன், சங்கரர், இராமானுஜன்  எல்லோருமே மாண்டு போனார்கள்.

 

"காலா உன்னைச் சிறு புல்லென மதிக்கிறேன்! - என்றன் காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன்"

 

என முழங்கிய பாரதியும் இன்றில்லை. இதுதான் உண்மை!

 

 "நொந்த புண்ணைக் குத்துவதால் பயனொன்றில்லை

நோ யாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராச் சார்யன் மாண்டான்

அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்!

பார்மீது நான் சகா திருப்பேன், காண்பீர்!"

(பாரதியார் சுயசரிதை)

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:12 "முடிவுரை" தொடரும்

No comments:

Post a Comment