"பண்டைய இலக்கியத்தில் மரணம் (திருக்குறள், தேவாரம் & திருவருட்பா / இரண்டாம் பாகம்)"
இறக்கும் தருவாயில் படுத்து இருக்கும் போது, கண் ஒன்றையும் பார்க்காது, காது ஒன்றையும் கேட்காது, எல்லா உறுப்புகளும் தளர்ந்து விடும், நா வாய்க்குள் மாட்டிக்கொள்ளும், கடைசி மூச்சு விக்கலாக வரும் - அந்த நேரத்தில் புகழ்த் தகுதியுடைய எந்த காரியமும் செய்ய முடியாது. அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலை வரும் முன், உடனடியாக நற்பணபுள்ள, நன்மார்க்க செயலை செய்து சிறப்பு பெறுவாயாக. நேரத்தை வீணாக்க வேண்டாம். இறப்பு எந்த நேரமும் கதவை தட்டலாம் என்று திரு வள்ளுவர், தனது குறள் 335 இல்
"நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யாப் படும்"
என ஆலோசனை கூறுகிறார். இந்த ஆலோசனையை உறுதி படுத்துவது போல மகாபாரதத்தில் இப்படி ஒரு சம்பவம் காணப்படுகிறது. ஒரு பிரமணன் பாண்டவர்களின் அரண்மனை வாசலில் வந்து உதவி கேட்டான். தர்மன் ஒரு முக்கிய வேலை செய்ய வேண்டி இருந்ததால், அடுத்த நாள் வந்து தருமத்தை பெறும்படி கூறுமாறு செய்தி அனுப்பினான். பக்கத்தில் இருந்த பீமன் தனது மூத்த சகோதரனிடம் கேட்டான்: அண்ணா, எனக்கு அதிசயமாக இருக்கிறது, நீங்கள் நாளை உயிருடன் கட்டாயம் இருப்பீர்கள் என்பது உறுதியா? தருமனுக்கு தனது முட்டாள்தனம் விளங்கி விட்டது. உடனடியாக பிராமணனின் தேவையை தருமன் கவனித்தான் என்கிறது அந்த கதை. ஒவ்வொன்றும் மற்றதை விட சிறந்தது. ஆயினும், எவரையும் பயம் கொள்ள வைத்த குறள் – ”நேற்று வரை உயிரோடு இருந்தான், ஆனால் இன்று இல்லையே” என்று சொல்லுவதைப் போன்று நிலையற்றை தன்மை உடையது இந்த உலகம் என்று கூறும், குறள் 336 ஆகும். அது,
."நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு".
என கூறுகிறது.
“நேற்று வரை உன்னுடன், உண்டு, பேசி, சிரித்து, சண்டையிட்டு, மகிழ்ந்திருந்த நெருங்கிய நண்பன் இன்று இல்லை, இனி ஒருபோதும் பேசவோ, சண்டையிடவோ போவதில்லை, இதோ உன் முன் மவுனமாக, மரணமாய், கிடத்தப்பட்டுள்ளான், இந்த உலகு, இத்தகைய சிறப்பு உடையது”
எனச்சொன்ன இந்த குறள்.எவ்வளவு கொடுமையானது? நாம் ஒவ்வொருவரும் நெருங்கிய ஒருவரின் மரணத்தை சந்தித்திருப்போம், அப்போதெல்லாம் நம் மனம், இன்றைய தினமும் நேற்றையை போலவோ, நேற்று முன்தினம் போலவோ இருந்திருக்க கூடாதா? என்று கட்டாயம் புலம்பி இருக்கும். நீ விரும்பும் இந்த உலகில் எது மிகவும்
பெரியது?. ஒவ்வொரு நாளும் மக்கள் இறக்கிறார்கள். ஒவ்வொரு
நாளும் ஒருவர் ஒருவரை மரணத்தால் இழக்கிறார். வாழ்வு நிலையற்று இருக்கும் போது, நிலையற்ற பொருட்களை, நல்ல செயல்களை செய்யாமல், வைத்திருப்பதால் என்ன பயன்? இறந்த பின் என்னத்தை கொண்டு போகப்போகிறாய்? மீண்டும் மகாபாரத்தத்தில் ஒரு சம்பவத்தை பார்ப்போம், யக்கர் / யக்ஷகர் ஒருவனின் கேள்வி ஒன்றிற்கு தருமன் இப்படி பதில் அளிக்கிறான்.
யக்கர்: இந்த உலகில் மிகவும் .வியப்படையச்
செய்வது எது ?
தருமர்: ஒவ்வொரு நாளும் மக்கள்
மரிணிக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், உயிருடன் இருக்கும் இந்த மனிதன் தான் சாகப்போவதில்லை என நினைக்கிறான். இது
தான் இந்த உலகின் திகைக்கவைத்த ஒன்று என்கிறான்.
உலகில் தோன்றிய அனைத்து உயிர்களும் பிறந்து வாழ்ந்து மாண்டு போய் விடுகின்றன. உயர்ந்த அறிவு படைத்த மனிதனும் அதே போல் பிறந்து வாழ்ந்து மாண்டு போகின்றான். இவை உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும் என்ற கருத்தை உடையவர். இவர் தனது ஒரு பாடலில்
" ... பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்க ளேநீர்
கணங்கழுகுண் டாலும்ஒரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்டே ...
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர் ... "
[திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5609]
என்று கேட்கிறார். மேலும் இவர்
"இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர் இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய
மாட்டீர்?"
[திருவருட்பா/ஆறாம் திருமுறை / சமாதி வற்புறுத்தல்/பாடல் 5600]
என்றும் தனது அவாவை வெளிப்படுத்துகிறார். அதாவது உலகத்து நன்மக்களே! செத்தவர்களை அடக்கம் செய்ய எடுக்கும் போது வாய்விட்டுப் புலம்புகின்றீர்களே அன்றிச் சாவாத பெரிய வரத்தை ஏனோ பெறாது ஒழிகின்றீர்கள் என கேட்க்கிறார். அது மட்டும் அல்ல, பறை மேளத்தின் சத்தம் கேட்டு தான் கலங்குவதையும் கூறுகிறார்.
"மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின்
வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம்
கடவுள்நீ யேஅறிந் திடுவாய்"
[திருவருட்பா 3428.]
மெய்ம்மை பொய்ம்மைகள் பகுத்துணர்ந்த பெருமக்கள் உள்ளத்தே ஒளி நிறைந்து விளங்குகின்ற ஒருவனாகிய பெருமானே! உலக வாழ்வில் மக்களின் சாவைக் குறிக்கும் பறை மேளத்தின் வன்மையான ஓசையைக் கேட்ட போதெல்லாம் என் மனம் வெதும்பிக் கலங்கிய கலக்கத்தைக் கடவுளாகிய நீ நன்கு அறிவாய்; உயர்ந்த இவ்வுலகில் சாக்காடு என்றால் என் உள்ளம் நடுங்குவது இயற்கை என்கிறார்
இறுதியாக திருநாவுக்கரசர் தேவாரம் ஒன்றை பார்ப்போம்:
"நடலை வாழ்வுகொண்டு என் செய்திர் நாணிலீர்
சுடலை சேர்வது சொற்பிரமாணமே
கடலின் நஞ்சமுது உண்டவர் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே."
உடலைப் பேணுதலிலேயே காலத்தை வீணாக்காதீர்.
இவ்வுடலானது ஒரு நாள் உயிர் பிரிந்த பொழுது ஊரார் பிணம் என்று சொல்லி
வெறுக்கத்தக்க பொருளாகக் கிடக்கும் என்கிறது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 11:
"மரணத்தை தள்ளி போடலாமா?"
தொடரும்
0 comments:
Post a Comment