பொறுப்புத்
துறப்பு: இது ஓர் அவசரநிலை. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் புனீத்
டாண்டன். டாக்டர் புனீத் போபாலின் காந்தி மருத்துவக் கல்லூரியில் நோயியல்
நிபுணராகப் பணியாற்றுகிறார். அவருக்கு வயது 53. அவருக்கு
வேறு எந்த நோயும் இல்லை. தடுப்பூசியைப் (கோவிஷீல்ட்) போட்டுக்கொண்டு,
அவர்
ஒரு மருத்துவராக தனது சேவைகளை வழங்கி வருகிறார். இவரது மனைவி மயக்க மருந்து
மருத்துவர். கோவிட் நோய்க்கான ஐ.சி.யுவில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்.
இவரது சகோதரியும் நோயியல் துறையில் மருத்துவராக உள்ளார். டாக்டர் புனீத்தின்
கதையைப் படிக்கும்போது, இந்த
உண்மைகளை மனதில் கொள்ள வேண்டும். இந்த செய்திக் கட்டுரையின் நோக்கம் உங்களை
அச்சுறுத்துவது அல்ல. ஆனால் இதுவரை கிடைத்த உண்மைகளின் அடிப்படையில் தேவையான
தகவல்களை உங்களுக்கு வழங்குவதாகும்.
"ஜனவரி 15 2021. அடுத்த
நாள் எனக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தொலைபேசியில் ஒரு செய்தி வந்தது.
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொரோனா தொற்றுடன் போராடி வந்த
மருத்துவர்கள் பலரை அருகில் இருந்து பார்த்தவன் நான். ப்ளாஸ்மா முறைப்படி சிகிச்சை
அளிக்கும் குழுவிலும் நான் இருந்தேன். எனது மனைவியும் கொரோனாவுக்கான ஐ.சி.யூ-வில்
பணியமர்த்தப்பட்டுள்ளார். சகோதரியும் இதே தொழிலில் இருக்கிறார். இறுதியாக ஒரு
பாதுகாப்புக் கவசம் கிடைத்துவிட்டது என்றே நினைத்தேன். "
ஜனவரி
16 அன்று, எனக்கு
முதல் சுற்று தடுப்பூசி போடப்பட்டது. எனக்கு எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
தடுப்பூசி மையத்தில் அரை மணி நேரம் கண்காணிக்கப்பட்ட பிறகு,
நான்
சாதாரணமாகவே உணர்ந்தேன். ஒரு நோயியல் மருத்துவராக இருந்ததால்,
தடுப்பூசி
எடுப்பதற்கு முன்பு எனது உடலின் ஆன்டிபாடி அளவைச் சரிபார்த்தேன்,
இது
முதல் டோஸுக்கு முந்தைய நாள் 0.05
ஆகும். தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு ஜனவரி 30
அன்று இது 0.88 ஆக இருந்தது.
பிப்ரவரி
24, 2021 அன்று,
முதல்
டோஸுக்கு 38 நாட்களுக்குப் பிறகு,
தடுப்பூசியின்
இரண்டாவது டோஸ் எனக்கு கிடைத்தது. இரண்டாவது டோஸுக்கு ஒரு நாள் முன்பு,
நான்
மீண்டும் ஒரு முறை ஆன்டிபாடி சோதனை செய்த போது இது 2.28 ஆக
இருந்தது. அதாவது, ஆன்டிபாடியின்
அளவு படிப்படியாக உயர்ந்துகொண்டே இருந்தது. இரண்டாவது டோஸுக்குப் பிறகும் எந்த
பிரச்னையும் இல்லை. இரண்டாவது சுற்றுக்குப் பிறகு ஓய்வு எடுக்க வேண்டும் என்று
கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் நான் சரியாகப் பின்பற்றினேன்.
இரண்டாவது
டோஸுக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, 20
மார்ச் 2021 அன்று,
என்
உடலில் உள்ள ஆன்டிபாடி அளவு 11.75
ஆகிவிட்டது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தேன்.
ஆனால்
மார்ச் 30 காலை,
என்
உடலில் லேசாக குத்துவது போன்ற உணர்வு இருந்தது. அது தவிர,
எல்லாம்
சாதாரணமாக இருந்தது. நான் ஒரு ரன்னரும் கூட. நான் தினமும் காலையில் ஓட்டப்பயிற்சி
செய்கிறேன். அன்று அந்த குத்தல் உணர்வைப் புறந்தள்ளி,
நான்
ஓட்டத்திற்குச் சென்றேன். ஆனால் நடுவில், நான்
சோர்வாக உணர ஆரம்பித்தேன். இது எனக்கு விசித்திரமாக இருந்தது. வழக்கமாக நான் ஒரு
நேரத்தில் 10 கி.மீ. ஓடும் பயிற்சி பெற்றவன்.
இருந்தும் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. மற்ற நாட்களை ஒப்பிடுகையில் எனது இதயத்
துடிப்பின் வேகம் அதிகரித்ததை உணர்ந்தேன். அதன் பிறகு,
அன்றைய
அனைத்து வேலைகளையும் செய்தேன். மருத்துவமனைக்கும் சென்றேன். ஆனால் மாலைக்குள்,
எனக்கு
சளி பிடித்தது, கொஞ்சம் குளிரவும் செய்தது.
மறுநாள்
31 மார்ச் 2021
அன்று எனக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. வெப்பநிலை 99
டிகிரி தான் இருந்தது. ஒரு வேளை கொரோனாவாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் நான்
இரண்டு டோஸ் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட நிலையில் அது எப்படி சாத்தியம்
என்றும் தோன்றியது. ஆனால் ஒரு மருத்துவராக, கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தாக்க வாய்ப்புண்டு என்பதை நான் நன்கறிந்திருந்தேன்.
ராபிட் ஆன்டிஜென் சோதனை செய்துகொண்டேன். கோவிட் -19
பாசிட்டிவ் என்று அறிக்கை கூறியது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்
எனக்கு அறிவுறுத்தினார். பின்னர் நான் வீட்டிற்கு வந்து ஒரு தனி அறையில் தன்னை
தனிமைப்படுத்திக்கொண்டேன்.
கோவிட்
-19 சிகிச்சையின் முழு திட்டத்தையும்
எனது மருத்துவ நண்பர் மூலம் அறிந்துகொண்டேன். இன்னும் சில ரத்த பரிசோதனைகள் செய்து
கொண்டேன். நான் ஒரு மருத்துவர் என்பதால், மார்பின்
சி.டி ஸ்கேன் ஒன்றையும் எடுத்தேன். இந்தத் தொழிலில் இருப்பதால்,
அதிக
அக்கறை எடுத்துக் கொண்டேன். இரத்தப் பரிசோதனை முடிவில் சில பிரச்னைகள் இருப்பது
தெரியவந்தது. ஆனால் கவலைப்பட எதுவுமில்லை. மார்பு சி.டி ஸ்கேன் சரியாகவே இருந்தது.
எந்தப் பிரச்னையும் இல்லை. மருத்துவரின் ஆலோசனையை முழுமையாகப் பின்பற்றி,
ஆன்டிபாடி
சிகிச்சையை முழுவதும் பெற்றேன். அறையில் அடைபட்டிருந்தாலும்,
உள்ளுக்குளேயே
நடைப்பயிற்சியும் செய்தேன். இருப்பினும், வெப்பநிலை
இரண்டு நாட்களுக்கு 99-100 டிகிரி
வரை இருந்தது. நான்காவது நாளில் மீண்டும் இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன,
இதில்
எல்லாம் சீராக இருந்தது. மூன்றாம் நாளிலிருந்து காய்ச்சலும் நின்றது.
ஏப்ரல்
6 ஆம் தேதி ஆர்டிபிசிஆர் சோதனைக்குப் பிறகு,
எனக்கு
கோவிட் - 19 இல்லை என்பது உறுதியானது. ஆனால் நான்
இன்னும் வீட்டில் தனிமையில் தான் இருக்கிறேன்.
வீட்டில்
வயதான பெற்றோர்களும் உள்ளனர். அவர்கள் மீது அக்கறை இருந்தது. ஆனால் ஒரு டாக்டராக,
கடந்த
ஓர் ஆண்டாகவே அவர்களிடமிருந்து நான் விலகியே இருந்தேன். எனது மனைவி மற்றும்
குழந்தைகளைப் பரிசோதித்தபோது அவர்களும் நலமாகவே இருந்தனர். ஆனால் நோயியல் துறையில்
இருக்கும் என் சகோதரி, எனக்கடுத்து
கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இவ்வளவு
விளக்கமாக என் கதையை நான் கூறுவதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. எனக்கு கடுமையான
தொற்று ஏற்பட்டிருக்கலாம், கொரோனா
காரணமாக மருத்துவமனைக்குச் செல்ல நேரிட்டிருக்கலாம். உயிரிழக்கும் அபாயமும்
இருந்திருக்கலாம்… எப்போது என்றால், ஒரு
வேளை நான் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருந்திருந்தால். இந்தத் தடுப்பூசியின்
விளைவால்தான் எனக்குத் தீவிரமான பாதிப்பு இல்லாமல் தப்பினேன். அதனால்தான்
கூறுகிறேன், நீங்கள் தடுப்பூசி அவசியம்
போட்டுக்கொள்ளவேண்டும். அதன் பிறகும், உங்களுக்குக்
கொரோனா தொற்று ஏற்படலாம். ஆனால் அது தீவிரமானதாக இருக்காது. உயிருக்கு ஆபத்து
இருக்காது. தடுப்பூசிக்குப் பிறகும், முகக்கவசம்
பயன்படுத்துங்கள், இரண்டு
கஜம் இடைவெளியும் அடிக்கடி கைகளைக் கழுவுவதும் மிக முக்கியம்."
டாக்டர்
புனீத்தின் கதையைப் படித்த பிறகும்,இது
அவருக்கு ஏன், எப்படி நடந்தது என்ற சில கேள்விகள் உங்கள்
மனதில் எழுகின்றனவா? இதைப்
புரிந்து கொள்ள பிபிசி, மௌலானா
ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறையின் தலைமை மருத்துவர் சுனிலா
கார்க்குடன் பேசியது. டாக்டர் சுனிலா அரசாங்கத்தின் கோவிட் -19
பணிக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். கேள்வி - பதில்களிலிருந்து சில பகுதிகள்,
உங்களுக்காக:
கேள்வி:
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் டாக்டர் புனித்துக்கு கொரோனா ஏன்
ஏற்பட்டது?
பதில்:
தடுப்பூசிக்குப் பிறகு அவரது நிலை பற்றி நாம் அறிய வேண்டும். ஆனால் இரண்டு சுற்று
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளது என்பது உண்மை
தான். ஆனால், இது மிகவும் அரிதாகவே நிகழ்கிறது. இதனால்தான்
எஃபிகஸி தரவு ஆய்வு செய்யப்படுகிறது, இது
தடுப்பூசி எத்தனை சதவீதம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது. எந்தவொரு தடுப்பூசி
உற்பத்தியாளரும் இதுவரை 100% செயல்
திறன் இருப்பதான தரவை முன்வைக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின்,
80 சதவிகித செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது,
அதாவது
அதைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு கொரோனா ஏற்பட 20 சதவிகித
வாய்ப்பு உள்ளது. கோவிஷீல்டின் செயல்திறன் 70% எனக்
கூறப்படுகிறது. கோவிஷீல்டின் செயல்திறன் இரண்டு டோஸ்களின் இடைவெளியிலும்
மாறுகிறது. 28 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது
டோஸ் எடுத்துக்கொண்டால் சற்று குறைவான செயல்திறனும் இரண்டு மாத இடைவெளியில்
இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டால் செயல்திறன் அதிகமாகவும் உள்ளது. டாக்டர்
புனீத்தின் விஷயத்தில் இந்த செயல்திறன் குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.
கேள்வி:
பிறகு எதற்கு கொரோனா தடுப்பூசி?
பதில்:
தடுப்பூசிக்குப் பிறகு, உங்களுக்குக்
கொரோனாவின் தீவிரம் அதிகம் இருக்காது. உயிருக்கு ஆபத்து ஏற்படாது. லேசான அல்லது
அறிகுறி இல்லாத கொரோனா தாக்க வாய்ப்பு உள்ளது. அதாவது,
பாதுகாப்புக்
கவசம் இல்லாமல் இருப்பது, பாதுகாப்புக்
கவசம் பயன்படுத்துவது இவை இரண்டில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
நிச்சயமாகப்
பாதுகாப்பு கவசத்தைத் தான் தேர்ந்தெடுப்பீர்கள். எனவே,
தடுப்பூசி
போட்டுக்கொள்ள வேண்டும். எளிமையாகக் கூற வேண்டுமானால்,
நீங்கள்
தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், உங்கள்
உடலில் மெமரி செல்கள் உருவாகின்றன, கொரோனாவுக்கு
எதிராக எவ்வாறு போராட வேண்டும் என்பதை இவை நினைவில் கொள்கின்றன. வைரஸ் உங்களைத்
தாக்கியவுடன், அவை உடனடியாக வேலை செய்யத் தொடங்குகின்றன.
எனவே, தடுப்பூசிக்கு முன்னும் பின்னும் தடுப்பூசி
போட்டுக்கொள்ளும் போதும் தனி நபர் இடைவெளி, முகக்கவசம்,
கை
கழுவுதல் ஆகியவை பின்பற்றப்பட வேண்டும்.
கேள்வி:
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பொதுவாக எத்தனை நாட்கள்
பாதுகாப்பாக இருக்க முடியும்?
பதில்:
இதுவரை வெளிவந்துள்ள அறிக்கைகள் கொரோனா தடுப்பூசி மூலம் ஒரு வருடத்திற்கும் மேலாக
மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு விஷயம் இங்கே
கருத்தில் கொள்ள வேண்டும், தொடர்
ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேரம் செல்ல செல்ல,
புதிய
முடிவுகள் வரலாம். இந்த கால அவகாசங்களும் மாறும். தடுப்பூசி பூஸ்டர் டோஸ் அல்லது
கூடுதல் டோஸ் தேவையா என்பது குறித்தும் விவாதம் நடைபெறுகிறது.
கேள்வி:
கோ-மார்பிடிட்டி (இணை நோய்) உள்ளவர்களுக்கு, தடுப்பூசி
போட்ட பிறகு ஆபத்து அதிகமா? அவர்களுக்கு
கடுமையான தொற்று ஏற்படுமா?
பதில்:
தடுப்பூசி அவர்களுக்கு ஒரு சிறந்த வழி. கோமார்பிடிட்டி உள்ளவர்களுக்குத் தடுப்பூசி
இல்லாமல் லேசான கொரோனா தாக்கினால் கூட தீவிரம் அதிகமாக இருக்கக்கூடும்.
தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு, அவர்களுக்கும்
லேசான தொற்று மட்டுமே இருக்கும், அதை
எதிர்த்துப் போராட உடலில் ஆன்டிபாடிகள் இருக்கும். இதன் காரணமாக,
தடுப்பூசி
பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:
தடுப்பூசிக்குப் பிறகு எத்தனை சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா தாக்கும்
வாய்ப்புள்ளது?
பதில்:
இதுபோன்ற வாய்ப்புகள் அரிதானவை. இது குறித்து அமெரிக்காவில் இரண்டு வெவ்வேறு
ஆய்வுகள் நடைபெற்றன. ஒன்றில், 8177 இல்
நான்கு பேருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இரண்டாவது ஆய்வில்,
தடுப்பூசி
போட்டவர்களில் 14,000 பேரில் ஏழு பேருக்கு மட்டுமே
கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
-சரோஜ் சிங்-பிபிசி செய்தியாளர்