காகிதமா, தொடுதிரையா?
டேப்லெட் எனப்படும் பலகைக் கணினிகள் வந்து பல ஆண்டுகள்
ஆகிவிட்டன. அவற்றில் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட 'ஸ்டைலஸ்' எனப்படும்
மின்னணு பேனா இப்போது பிரபலமாகியுள்ளன. சரி, ஸ்டைலர் மூலம்
பலகைக் கணினியில் எழுதும்போதும், சாதாரண பேனாவால், காகிதத்தில்
எழுதும்போதும் மூளையில் என்ன நிகழ்கிறது?
அண்மையில். 'பிரான்டியஸ் இன்
பிஹேவியரல் நியூரோசயன்ஸ்', இதழில் இது குறித்த ஆய்வு வெளிவந்துள்ளது. அதன்படி, பலகைக் கணினி
திரை மீது, ஸ்டைலசைப் பிடித்து எழுதுவதைவிட, பேனாவால்
காகிதத்தில் எழுதுகையில், மூளையின் செயல்பாடு அதிகரிப்பதோடு, எழுதிய தகவல்கள்
நன்கு நினைவில் பதிகின்றன.
பலகைக் கணினி திரையில், எழுதிய தகவல்களை மேலும் கீழுமாக தள்ளிவிட முடியும். ஆனால், காகிதத்தில் அப்படி செய்ய முடியாது. பக்க அளவு, அதில் நாம் எழுதிய இடம், வரைந்த படம் போன்றவை அப்படியே நம் மனதில் படமாக நினைவில் வைக்க முடியும்.இதுபோன்ற காரணிகளால் பேனாவும், காகிதமும் இன்னும் முதலிடத்தை வகிக்கின்றன.
மூளை நினைப்பதை படம் பிடிக்க..
வேகமாக வளரும் தொழில்நுட்பங்களில், மூளைக்கும்
கணினிக்கும் இடைமுகம் ஏற்படுத்தும் நுட்பமும் ஒன்று. 'பேஸ்புக்', தனது பயனாளிகளின்
மனதைப் படிக்க ஒரு இடைமுகத்தை ஆராய்ந்து வருகிறது. எலான் மஸ்கிற்கு சொந்தமான, நியூராலிங்க், மனித மூளைக்குள்
ஒரு சிறு கருவியை பதித்து, மூளைத் திறனை பன்மடங்காக்க முயன்று வருகிறது.
இந்த நுட்பங்களுக்காக, மூளை அல்லது
மண்டையோடு அருகே கருவிகளை பதிக்க வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக, நடைமுறை மீயொலி
இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அமெரிக்காவிலுள்ள, கலிபோர்னியா
தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சியாளர்கள், மூளையின்
இயக்கத்தை, நடைமுறை மீயொலி அலைகள் துல்லியமாக படம்பிடித்துவிடும் என
கூறுகின்றனர்.
இதன் மூலம், ஒரு குரங்கின் மூளையை, நடைமுறை மீயொலி கருவி மூலம் கண்காணித்தால், அது அடுத்து எந்த திசையில் கண்களை திருப்பும், எந்தக் கையால் பொருளைத் தொடும் என்பவைகளை இயக்கப் படங்களாக எடுக்க முடியும். இந்தப் படங்களை செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களிடம் கொடுத்தால், 89 சதவீதம் வரை துல்லியமாக, குரங்கின் அடுத்த அசைவுகளை கணிக்க முடிவதாக, ஆய்வாளர்கள் நியூரான் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்து உள்ளனர்.
பாரத்தை தூக்கி செல்ல ட்ரோன்கள்!
விரைவில் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு தரும் சேவைகளுக்கு, ட்ரோன்கள்
பரவலாகிவிடும். ஆனால், இந்த சிறு வாகனங்களால் குறைந்த எடையையே சுமக்க முடியும்.
இக்குறையைப் போக்க, அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா தொழில் நுட்ப நிலையத்தின்
ஆராய்ச்சியாளர்கள், ஒரு புதிய யுக்தியை சோதித்து, வெற்றி
கண்டுள்ளனர்.
நான்கு சிறிய ட்ரோன்களை இணைக்கும் வசதியுள்ள ஒரு பெட்டி
மூலம், அவர்கள் இதை உருவாக்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, அந்த
பெட்டிக்குள் வைக்கப்படும், 5.4 கிலோ எடையுள்ள சரக்கை, நான்கு
ட்ரோன்களும், ஒரே நேரத்தில் துாக்கிச் செல்லவும், பறக்கும் திசை, வேகம், தரையிறங்கும்
நேரம், எடையைப் பொறுத்து தரவேண்டிய அழுத்தம் போன்றவற்றை, நான்கு
ட்ரோன்களையும் ஒருங்கிணைக்கும் தானோட்டி அமைப்பு கணக்கிட்டு செலுத்துகிறது.
இந்த முறையில், சரக்கின் எடையைப்
பொறுத்து, கூடுதலாக இன்னும் பல, ட்ரோன்களை
சேர்ந்து பறக்கும்படி செய்ய முடியும் என, ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
சரக்கு வண்டி, வீட்டின் மதில்
சுவர் அருகே வந்து நிற்க, ஒரு ட்ரோன், சரக்குப்
பெட்டியை எடுத்து, முகவரி தாரரின் வீட்டு, கதவருகே கொண்டு
போய் வைத்துவிட்டு வண்டிக்கு திரும்பிவிடும். சரக்கு அதிக பளுவுடன் இருந்தால், வண்டியில்
இருக்கும், ஐந்தாறு ட்ரோன்கள் ஒருசேர, பெட்டியை
துாக்கிக் கொண்டு போய் வைத்துவிட்டுத் திரும்பும்.
சரக்கு அஞ்சல் சேவை நிறுவனங்கள், இதன் மூலம் ஒரே அளவிலுள்ள ட்ரோன்களை மட்டுமே வாங்கினால் போதும். கூடுதல் எடைக்கு, கூடுதல் திறனுள்ள, பெரிய ட்ரோன்களை வாங்கும் செலவை, இதன் மூலம் தவிர்க்கலாம்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment