அன்பான
ஒரே நம்பிக்கை நட்சத்திரமே
அளப்பெரும்
துயரில் எம்மைத் தள்ளி
அமைதியாய்
சொல்லாமல் மறைந்தது ஏனோ ?"
"வாய்
மடித்துக் கண் சுழன்று
வான்
உயரக் கை அசைத்து
வாட்டம்
இன்றித் துள்ளிச் சென்றவளே
வான்
இருண்டும் வராதது ஏனோ ?"
"மணலில்
கதிரவன் புதையும் மாலையில்
மனதைக்
கல்லாக்கித் திங்கள் நன்னாளில்
மரணம்
தழுவத் தொடர்வண்டியின் முன்
மடையர்
போல் பாய்ந்தது ஏனோ ?"
"செவ்வாய்
நீயோ வீடு வந்தாய்
செவ்
இதழ் நீயோ திறக்கவில்லை
செல்வச்
செழிப்பாய் பல்லக்கில் வராமல்
செத்துச்
சாக்கில் வந்தது ஏனோ ?"
"இறந்த
அவளின் சூக்கும உடல்
இளமுறுவலுடன்
என் முன் வந்தது
இலக்குமி
போல அழகாய் தோன்றி
இதழ்
குவித்து முத்தம் தந்ததேனோ?"
"அம்மாவின்
அறைக்கு மெல்லப் போனது
அமைதியாகப்
பக்கத்தில் சற்று இருந்தது
அவளது
சிறிய விரல்களை விரித்து
அழகாக
முடியை வருடியது ஏனோ?"
"பழைய
மெல்லிசை முணுமுணுத்து
பதுங்கி
அம்மாவின் கண்கள்ப் பார்த்து
பதுமையாக
அம்மாவின் முன் நின்று
பணிந்து
வணங்கி மறைந்தது ஏனோ?"
"எங்கள்
அழகிய குட்டித் தங்கையே
எதற்காக
உன் உயிரை மாய்த்தாய்?
எழுச்சி
அற்று இருப்பதைக் கண்டாலும்
எழுவாய்
என்று நம்பியது ஏனோ?"
"தேர்வு
முடிவுகளைப் பெற்ற பிறகு
தேய்வு
உன்னில் நான் கண்டாலும்
தேவதையே
திருமகளே நீ உன்னைத்
தேற்றிடுவாய்
என்று நம்பியது ஏனோ?"
"என்
அழகான சின்னச் செல்லமே
எங்களை
விட்டுப் போக வேண்டாம்?
எங்கள்
குறும்பு இளவரசி இல்லாமல்
எமக்கு
இனி மகிழ்ச்சி ஏனோ?"
"இறந்ததாக
எவரும் இன்னும் நம்பவில்லை
இன்றும்
உனக்காக அம்மா காத்திருக்கிறார்
இளந்
தென்றல் தொடும் அடிவானத்தில்
இரவும்பகலும்
அம்மா எண்ணுவது ஏனோ?"
"பள்ளிப்
பையை ரயில் பாதையில்
பகுதி
பகுதியாகக் கண்டு எடுத்தேன்
பரவி
இருந்த இரத்தச் சொட்டுக்குள்
பள்ளிப்
புத்தகம் சிவந்தது எனோ?"
"மச்சம்
கொண்ட உன் சிறுகால்
மல்லாந்து
என்னை பார்ப்பதை கண்டேன்
மயான
அமைதியை விட்டுத் தங்கையே
மடிந்தகால் நானென்று சொல்லாதது எனோ?"
[மூலம்
:தயா நிகஹெட்டியா / Mr Daya Nikahetiya 28.02.2021
தமிழாக்கம்:கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
0 comments:
Post a Comment