சிவவாக்கியம்-143
காலை மாலை தம்மிலே கலந்து நின்ற காலனார்
மாலை காலை யாச்சிவந்த மாயம் ஏது செப்பிடீர்
காலை மாலை அற்று நீர் கருத்துளே ஒடுங்கினால்
காலை மாலை ஆகி நின்ற காலன் இல்லை இல்லையே!
இரவும் பகலும் தனக்குள்ளேயே கலந்து நிற்கும் இறைவனார், இரவும் பகலுமாய் சிவந்த சோதியாக நின்றிலங்கும் மாயம் எப்படி என்பதனைச் சொல்லுங்கள். அது மெய்ப் பொருளாக இருப்பதை அறிந்து இரவும் பகலும் எந்நேரமும் கருத்துக்கள் உதிக்கும் சிந்தையிலே நினைவு ஒடுங்கி சிவத்தியானம் செய்து வந்தால் இராப்பகல் இல்லாத இடத்தில் ஈசன் சோதியாக திகழ்வான். அதனால் எமன் வருவான் என்பதோ, எமபயம் என்பதோ, தியானம் செய்பவர்களுக்குக் கிடையாது.
*******************************************
சிவவாக்கியம்-144
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து
இட்ட மண்டலத்துளே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்
நட்ட மண்டபத்திலே நாதன் ஆடி நின்றதே!!
எட்டாகிய எண்சான் உடம்பிலே இரண்டாகிய உயிர் உள்ளது. இப்படி
எட்டும் இரண்டுமாய் இணைந்த இத்தேகத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞா ஆகிய ஆறு ஆதாரங்கள் உள்ளது. இவ்வுடம்பில்
சூரியமண்டலம், சந்திரமண்டலம், அக்நிமண்டலம், என்ற மூன்று
மண்டலங்கள் இருக்கின்றது. இப்படி உள்ள உடம்பாகிய மண்டபத்தில் நடுவாக இருந்து
நாதனாகிய ஈசன் ஆடி நின்று ஆட்டுவிக்கின்றான்!!!
*******************************************
சிவவாக்கியம்-149
புலால் புலால்
அதேன்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்திருப்பது
எங்ஙனே
புலாலுமாய்ப் பிதற்றுமாய் பெருலாவும்
தானுமாய்
புலாலிலே முளைத்தெழுந்த பித்தன் காணும்
அத்தனே!
நாறும் இறைச்சியிலான
இவ்வுடம்பு இதுவென்று அறிந்தும் வேறுபடுத்தி இகழ்ச்சியாகப் பேசுகிறீர்கள்.
இறைச்சியிலான உடம்பைவிட்டு இறைவன் பிரிந்து தானாகி
இருந்தது எவ்வாறு? உடம்பாகவும், உயிராகவும் இருந்து வாசியாகி
உலாவிக்கொண்டு தானாகி நின்ற பரம்பொருள் இவ்வுடம்பில்தான் வித்தாக முளைத்து முதலாக
உள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்டு இவ்வான்மாவை மேம்படுத்த, சோதியாக எழுந்த ஈசானை கண்டு தியானம்
செய்யுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-150
உதிரமான பால் குடித்து ஒக்க நீர் வளர்ந்ததும்
இதரமாய் இருந்தது ஒன்று இரண்டு பட்டது என்னலாம்
மதிரமாக விட்டதேது மாமிசப்புலால் அதென்று
சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே!!!
தாயின் இரத்தத்திலிருந்து உருவான பாலைக் குடித்துதான்
நீங்கள் வளர்ந்தீர்கள். சதையாக இருந்த ஒன்றிலிருந்தே பிண்டம் உருவாகி வெளிப்பட்டு
தாயாகவும், சேயாகவும்
இரண்டானது. அமிர்தமான தாய்ப்பால் கொடுப்பதும் மாமிசப்புலாலான சதைதானே. மாமிசத்தில்
இருந்தே உருவாகி மாமிசமாகவே வளர்ந்த நீங்கள் மாமிசமில்லாத சதுரமான நான்கில் நின்று
வளராமல் இருந்தது எது என்பதை அறிவீர்களா? மற்றவரை சைவர் இல்லையென வெறுக்காது சைவத்தைக்
கடைப்பிடியுங்கள்.
*******************************************
.அன்புடன் கே எம் தர்மா.
0 comments:
Post a Comment