சித்தர் சிந்திய முத்துக்களில்......3/28

 

 

 சிவவாக்கியம்-162 

 

ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙகனே
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின்
வையத்தில் மாந்தரோடு வாய் திறப்பது இல்லையே!

ஈசன் ஏன் உடன்பின் உள்ளே புகுந்தது எங்ஙகனமெனில் தென்னை மரத்தின் மேலே இளங் குரும்பையில் நீர் புகுந்து இருப்பது போலத்தான். இறைவன் என் மெய்யாகிய உடம்பில் உள்ளமாகிய கோயிலில் உறைவதை நான் அறிந்து கொண்டபின் அந்த மெய்ப்பொருள் நாட்டத்திலேயே ஒன்றி தியானம் செய்வதைத் தவிர வேறு எண்ணம் ஏதுமில்லையே. ஆதலால் இவ்வுலகில் மதத்தாலும், இனத்தாலும், சாதியாலும் பிரிந்து தீங்கையே செய்து தீவினைகளை சேர்த்துக் கொண்டு இறக்கப் போகும் மாந்தர்களோடு நான் வாய் திறந்து பேசுவதில்லை.

******************************************* 

சிவவாக்கியம்-167
 

நீரை அள்ளி நீரில்விட்டு நீ நினைந்த காரியம்
ஆரை உன்னி நீரெல்லாம் அவத்திலே இறைக்கிறீர்
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்தெழுந்த
சீரை உன்ன வல்லிரேல் சிவபதங்கள் சேரலாம்.

பிராமணர்கள் குளித்து முடித்த பின்னர் அந்நீரில் நின்றபடியே, மூன்று முறை தண்ணீரை கைகளில் அள்ளி அத் தண்ணீரிலேயே மந்திரங்களை முணுமுணுத்து விடுவார்கள்.  இதற்கு வாக்கு, மனம், செயல் என்ற மூன்றையும் திரிகரண சுத்தி செய்வதாகச் சொல்லுவார்கள். இவையெல்லாம் இறைவனுக்கே செய்கின்ற சடங்குகள் தானே!! இதனால் இறைவனை அடைய முடியுமா? உனக்குள்ளேயே வேராக இருக்கும் ஆன்மாவையும், வித்தாக இருக்கும் இறைவனையும் அறிந்த அதிலேயே முளைத்து எழுகின்ற சிகரத்தை உணர்ந்து 'சிவயநம' என்று உனக்குள் பரவச் செய்து தியானம் செய்ய வல்லவர்களானால் சிவத்தின் திருவடியில் சேரலாம்.
******************************************* 

சிவவாக்கியம்-170
 

கருத்தரிக்கு முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்
உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்
அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்
திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்.

ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு 'சிவயநம' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.

******************* அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment