சித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/27


சிவவாக்கியம்-158 

பிணங்குகின்றது ஏதடா பிரஞ்ஞை கெட்ட மூடரே
பினங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர்
பிணங்கும் ஓர் இருவினைப் பிணக்கு அறுக்க வல்லீரே
பிணங்கிலாத பெரிய இன்பம் பெற்றிருக்கலாகுமே!!!



கோபம் கொள்வது ஏது என்பதை உணராத மூடரே!! சாந்தமான பேரொளியாக ஈசன் உன் பிராணனில் இருப்பதை அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வுலகில் பிறக்க வைக்கும் நல்வினை, தீவினை எனும் இரு வினைகளை யோக ஞானத்தால் பிணக்கு அறுத்து தியானம் செய்ய வல்லவர்கலானால் ஈசன் அருளால் பேரின்பம் பெற்று மரணமில்லா பெருவாழ்வில் இருக்கலாகுமே.
*******************************************
சிவவாக்கியம்-159 

மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீரல்லோ மூழ்வதும் குடிப்பதும்
மான் யாரிச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மானுரித்த தோலலோ மார்பு நூல் அணிவதும்.

மீன் இறைச்சி வேதம் ஓதும் பிராமணர்கள் எப்போதும் உண்பதில்லை. அசைவத்தை உண்பதால் அசுத்தம் வந்துவிடும் என்றிடும் அவர்கள் மீன் இருக்கும் நீரில்தான் குளிக்கின்றார்கள், அதையேதான் குடிக்கின்றார்கள். தின்னாமல் குடிப்பதில் மட்டும் சுத்தமாகிவிடுமா? மான் இறைச்சியை உண்பதில்லை என்று சொல்லும் பிராமணர்கள் அந்த மானை உரித்த தோலில் பூணூல் அணிகின்றார்களே, இறைச்சி உண்ணாமல் இருப்பதால் மட்டும் இறைவனை அடையமுடியாது. சுத்தம் என்பது அவரவர் எண்ணத்தில்தான் இருக்கின்றது.
*******************************************
சிவவாக்கியம்-160 

ஆட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டிறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே
மாட்டிறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டிறைச்சி அல்லவோ மரக்கறிக் கிடுவது.

ஆட்டின் இறைச்சியை அந்தணர்கள் உண்பதில்லை. ஆனால் ஆட்டை பள்ளியிட்டு அவ்விறைச்சியை யாகத்தில் போட்டு செய்வது ஏன்? அக்காலத்தில் யாகங்களில் ஆட்டிறைச்சியை இட்டு செய்தார்கள் வேதியர்கள், இக்காலத்தில் மாட்டின் பாலிலிருந்து உண்டான நெய்யினை இட்டு செய்கின்றார்கள். மாட்டிறைச்சி தின்பதில்லை வேதியர்கள், ஆனால் அவர்கள் உண்ணும் காய்கறிகளுக்குப் போடுவது மாட்டிறைச்சியே. உணவுப் பழக்கத்தினாலோ, ஆசார அனுட்டனங் கலாலோ இறைவனை அடைந்து விடமுடியாது.

 

****************************..அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment