"பண்டைய இலக்கியத்தில் மரணம்
(புறநானுறு & நாலடியார்)":
பண்டைத்
தமிழரின் வாழ்க்கை குறித்த பதிவாக விளங்குகின்ற சங்க இலக்கிய காலம் பொதுவாக கி மு 500
ஆண்டுகளுக்கும் கி பி 200 ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம்.
இயற்கையாக நடைபெற்ற மரணத்தைக் கண்டு பயந்த சங்க கால மனிதர்களின் மனித மனம், மரணத்தில்
இருந்து, எவருமே
விடுபட இயலாது என்பதை உணர்ந்தவுடன், அதனைக் கூற்றுவன், கூற்று, காலன்
எனப் பழித்தது அவர்களின் பாடலில் இருந்து தெரிய வருகிறது. அவ்வகையில், யானைகள்
மதிற் கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த
யானைகள், மனித
உயிர்களை இரக்கம் எதுவுமின்றி கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளித்தன என்கிறார்
இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட புலவன் ஒருவன்.
"களிறே
கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி
மழுங்கிய வெண் கோட்டான்
உயிர்
உண்ணும் கூற்றுப் போன்றன;"
[புறநானூறு
4 / மரணத்தின்
தமிழ் கடவுளை - கூற்றுவன், காலன், மறலி என சங்க இலக்கியத்தில்
கூறுவர்]
இந்த
பாட்டில் ஒரு பயத்தை,கலக்கத்தை காண்கிறோம்.அந்த குழப்பமே இன்றைய
நூற்றாண்டு கவிஞரை [கண்ணதாசனை]
"காற்றொன்றை
இந்தக் கட்டையிலே விட்டு வைத்த கூற்றுவனைக் காணாமல் குழப்பம் அகல்வதில்லை"
என்று சொல்லவைத்ததோ? "யாதும்
ஊரே யாவருங் கேளிர்" என்று தொடங்கும் புறநானூற்றப் பாடலைப் பாடிய சங்ககாலப்
புலவர் பூங்குன்றனார் சாதல் புதியதன்று என்று. புறநானூறு 192, இல்
"யாது மூரே
யாவருங் கேளிர்
தீதும்
நன்றும் பிறர்தர வாரா
நோதலுந்
தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும்
புதுவ தன்றே வாழ்தல்
இனிதென
மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னாதென்றாலு
மிலமே"
என்று
கூறுகிறான்.அதாவது சாதலும் புதிதன்று, கருவிற்றோன்றிய நாளே
தொடங்கியுள்ளது என்கிறான். அது மட்டும் அல்ல புறநானூறு 214
இல் கோப்பெருஞ் சோழன் ஒருவேளை மாறி மாறி பிறவாமல் போய்விட்டா லும் [மறு பிறப்பு
என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்], இமய மலையின் ஓங்கிய சிகரம் போல், நம்
புகழை நிலை நிறுத்த பழியற்ற தன் உடலோடு சேர நின்று இறத்தல் சிறந்தது என்று ஆலோசனை
வழங்குகிறார்.
"மாறிப்
பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந்
தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில்
யாக்கையடு மாய்தல் தவத் தலையே"
அதேபோல, புறம்:238
இல் சினத்துடன் கூடிய, வலிய கூற்றுவனின் கொடிய செயலால் என் தலைவன்
இறந்தான். ஐயகோ! அதை அறியாமல் நான் அவனைக் காண வந்தேன் என
"வெந்திறல்
கூற்றம் பெரும்பேது உறுப்ப
எந்தை
ஆகுதல் அதற்படல் அறியேன்; ",
என்று
பெருஞ்சித்திரனார் பாடுகிறான். கார் காலத்து இடியைப் போல் சட்டெனத் தோன்றி, ஆரவாரமாக, அரிய
பல உயிர்களைக் கவர்ந்தும், உன் ஆர்வம் குறையாது மீண்டும் உயிர்களைக்
கொள்வதற்குச் சுழலும் கூற்றமே, உன் வருகைக்கு எங்கள் தலைவன் அஞ்சமட்டான் என
புறநானூறு 361,
இல்
"கார்எதிர்
உருமின் உரறிக் கல்லென
ஆருயிர்க்கு
அலமரும் ஆராக் கூற்றம்,
நின்வரவு
அஞ்சலன் மாதோ;
"
என்று
கயமனார் பாடுகிறார். அதே போல "மருந்து இல கூற்றத்து அருந்தொழில்" என
புறநானூறு 03
சொல்லுகிறது. மேலும் புறநானூறு 363 இல், கரிய கடல் சூழ்ந்த பெரிய
இடத்தையுடைய உலகின் நடுவே, உடைமரத்தின் [Acacia Latronum] இலை
அளவு கூட இடத்தையும் பிறர்க்கு இல்லாமல் தாமே ஆண்டு பாதுகாத்தவர்களின் எண்ணிக்கை, கடலின்
அலைகள் கொழித்தொதுக்கும் மணலின் எண்ணிக்கையை விட
அதிகம். அத்தகைய அரசர்கள் அனைவரும் தம் நாட்டைப் பிறர் கொள்ள, சுடுகாட்டைத்
தங்கள் இடமாகக் கொண்டு இறந்தனர். அதனால், நான் சொல்வதை நீ கேட்பாயாக.
அழியாத உடம்போடு என்றும் உயிரோடு இருந்தவர் யாரும் இல்லை. சாதல் என்பது உண்மை; அது
பொய்யன்று கள்ளி (Cactus) பரவிய முட்செடிகள் உள்ள சுடுகாட்டின் அகன்ற
வெளியிடத்தில்,
உப்பில்லாமல்
வேகவைத்த சோற்றை, பிணம் சுடும் புலையன் பிணத்தைத் திரும்பிப் பார்க்காமல், நிலத்தில்
வைத்துப் படைத்த வேண்டாத உணவைப் பெற்றுக் கொண்டு, உண்ணும்
கொடிய நாள் (இறக்கும் நாள்) வருவதற்கு முன்பே, கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைத்
துறந்து நீ கருதியதைச் செய்க என அறிவுரை கூறுகிறான்.
உலகம்
தொடங்கிய காலம் தொட்டே, மரணம்
மனிதனுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அந்தப் புதிரை யாரும் இன்னும்
தீர்த்த பாடாக இல்லை. மரணத்தின் பின் மறுபிறப்பு உண்டா? உண்டு
என்று சமய நம்பிக்கையின் அடிப்படையில் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அதற்கு எதிராக
இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக, பதிணென்
சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியார் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை இல்லைவே என்று.
"கறந்தபால்
முலைப்புகா,
கடைந்தவெண்ணெய்
மோர் புகா,
உடைந்து
போன சங்கின் ஓசை உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ
உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர்
பின் பிறப்பதில்லை, இல்லை, இல்லை இல்லையே!"
என
அடித்துச் சொல்கிறார். இனி சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின்
தொகுப்பான, பதினெண் கீழ்க்கணக்கு நூல்
தொகுப்பைச் சேர்ந்த, பிந்தைய சங்க காலத்து, கி
பி 100 -
500 சேர்ந்த நாலடியாரில் சில பாடல்களை பார்ப்போம். உற்ற
நண்பர்களின் தொடர்பு அற்றுபோகும், மகிழ்ச்சி யூட்டினாரும் குறைந்து போவர், ஆய்ந்து
பார்த்தால் வாழ்வின் அர்த்தம் இருக்காது, அமைதியான ஆழ் கடலில் மூழ்கும்
கலம் ஏற்படுத்தும் முனகல் போன்றது மரணத்தின் அழு குரல் என
"நட்புநார்
அற்றன நல்லாரும் அஃகினார்
அற்புத்
தளையும் அவிழ்ந்தன;-உட்காணாய்;
வாழ்தலின்
ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
ஆழ்கலத்
தன்ன கலி"
என்று
நாலடியார் 12
சொல்கிறது. மேலும் நாலடியார் 4 இல், வாழ்க்கையில் எதை நிலையானது
என்று நினைத்து மனம் அலை பாய்கின்றதோ அது நிலையற்றது. செய்ய வேண்டியது ஒரே காரியம்
என்றாலும்,
அதை
விரைந்து செம்மையாக முடியுங்கள், மரணம் எப்போது வேண்டு மானாலும் வரலாம், வாழ்
நாள் அறுதியில் முடிந்து விடும். ஏனெனில், வாழ்நாட்கள் விரைந்து
போய்க்கொண்டே யிருக்கின்றன. கூற்றுவன் வந்து கொண்டேயிருக்கிறான். மரணம் எதன்
பொருட்டும்,
யார்
பொருட்டும் நில்லாது என்று வாழ்வு எவ்வளவு நிலை இல்லாதது என்பதை,
"நின்றன
நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின
ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன
சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது
வந்தது கூற்று."
என்று
பாடுகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கம்பராமாயணத்தில், "நீர்கோல
வாழ்வை நச்சேன்,
தார்கோல
மேனி மைந்தா" என கூறப்படுகிறது. அதாவது நறுமண பூக்களை மாலையாக அனிந்த அண்ணா, நீரின்
மீதிட்ட கோலத்தை போன்றது வாழ்கை, இவ்வுயிரை காக்க முனையேன். ராமனுடன் போர்
புரிந்து உயிர் விடவே என் விருப்பம் என்பான் கும்பகருணன்.
சங்க
இலக்கியம் நம் முன்னோர்களின் வாழ்வை பிரதிபலிக்கின்றன என்பதற்கு இன்று நம்மிடையில்
காணப்படும் பண்புகள் சான்றுபகிர்கின்றன. உதாரணமாக, இறந்தவர்களை
பாடையில் கிடத்தி சுடுகாடு எடுத்து செல்லும் முறையும் மாரடித்து புலம்பும் பண்பும்
இறந்தவர்களின் மீது கோடித்துணி போர்த்தும் பண்பும் இன்றும் நம்மிடம் உள்ளன. அன்று
பாடையை, கால்வழி
கட்டில் அல்லது வெள்ளில் என்று அழைத்தனர். உதாரணமாக, புறநானூறு, 286 , மகனைப்
பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத்
தரவில்லையே என
"கால்கழி
கட்டிலிற் கிடப்பித்
தூவெள்
அறுவை போர்ப்பித் திலதே"
என்று
புலம்பும் தாயை எடுத்து காட்டுகிறது. மேலும், கணவன் அல்லது தலைவன் இறந்த பொழுது
அவனைச் சார்ந்த மகளிர் மார்பினில் தட்டி புலம்பியதையும் புறநானூறு
எடுத்துக்காட்டுகின்றது. அது மட்டும் அல்ல தமிழர்களின் திருக்குறளில் நிலையாமை
குறித்து 34வது
அதிகாரத்தில் மிகவும் சிறப்பாக கூறப்பட்டுள்ளது .
[கந்தையா
தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 09: "பண்டைய இலக்கியத்தில் மரணம் (திருக்குறள்,
தேவாரம் & திருவருட்பா)"
தொடரும்
0 comments:
Post a Comment