"மரணம் குறித்த சொற்கள்[11 - 25]":
'இறப்பு' பொதுவாக 'சாவு' என தமிழில் அழைக்கப்படுகிறது. இறப்பு, இழவு என்பன இலக்கிய சொற்களாகும். சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது மரணம் என்ற சொல்லாகும். உயிரியலின் படி, "மனித வளர்ச்சி கருத்தரிப்பின் போதே தொடங்குகிறது". கருத்தரித்த கருமுளை பொதுவாக 'கரு' என குறிக்கப்படுகிறது.
அது ஒரு வடிவத்தை அடையும் போது, 'உரு' என தமிழில் குறிக்கப்படுகிறது. 'உரு + உயிர்' சேரும் போது, பிறப்பு உண்டாகி வாழ்க்கை தொடங்குகிறது. மேலும் இறப்பு என்பது அந்த வடிவத்தை இழப்பதாகும். தமிழர்கள் விஞ்ஞான சிந்தனை கொண்டவர்கள். அதனால் தான் அவர்கள் vowels ஐ உயிரெழுத்துக்கள் என்றும் consonants ஐ மெய் [உடல்] எழுத்துக்கள் என்று குறித்தார்கள். அதாவது மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்காதவை .உயிர் இல்லாமல் உடல் இயங்காது. அதுபோல இந்த 18 எழுத்துக்களும் உயிர் எழுத்துக்களுடன் சேர்ந்தே இயங்கும். 'சாவு' என்ற சொல், வாழ்வு இல்லாத நிலையை குறிக்கும். அது மட்டும் அல்ல, சாவு என்ற சொல் மனித இனத்தைச் சேராத மிருகம், பாம்பு, பூச்சி போன்றவற்றையும் குறிக்கும். ஆனால் மரணம் என்ற சொல் மனித இனத்தைச் சேராதவற்றை குறிக்காது. சாவின் எதிர் சொல் 'வாழ்வு' ஆகும். மரணம் ஒரு பெயர்ச்சொல் ஆகும். இது பெயர் உரிச்சொல்லாக மரண செய்தி, மரணம் அடைந்தான் போன்று வரும். இனி ஏனைய 11 - 25 மரணம் குறித்த சொற்கள் பற்றி பார்ப்போம்.[11] மாண்டார்
"யாண்டுபல வாக , நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?’ என வினவுதிர்
ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு, மக்களும்
நிரம்பினர்;
யான்கண் டனையர்என்
இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான், காக்க; அதன்தலை
ஆன்றுஅவிந்து அடங்கிய
கொள்கைச்
சான்றோர் பலர் யான்
வாழும் ஊரே."
[புறநானூறு 191]
பிசிராந்தையர் என்ற சங்க
புலவன் ஒருவன் தன் நரையின்மைக்குச் சொன்ன காரணங்களுள் ஒன்று ‘மாண்ட மனைவி’. அதன்
பொருள் மாட்சிமை கொண்டது எனப்படும். அதே
போல குறள் 665 இல், செயல் திறனால்
சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்
என
"வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப் படும்"
என்று கூறுகிறது. எனினும்
'மாண்ட' என்னும் சொல்லை 'இறந்த' என்று தவறாகவே
புரிந்துகொள்ளுமளவு அச்சொல் இப்ப பழக்கத்தில் வந்து விட்டது. உதாரணமாக 'ஒழிந்தது' அல்லது 'மறைந்தது'. என்ற கருத்தில் 'மாண்ட' என்ற சொல் சங்க
காலம் மற்றும் திருக்குறளுக்கு பிந்திய திருவாசகத்தில்
"அவனியின் மேல் மயல் மாண்டு, மற்று உள்ள
வாசகம் மாண்டு, என்னுடைய செயல்
மாண்ட”
என்று, 863-911 காலத்தில்
வாழ்ந்த, மாணிக்கவாசகர்
பாடுகிறார். உதாரணமாக, 'அவனியின் மேல்
மையல் மாண்டு' = உலகின் மேல் உள்ள
பற்று மறைந்து / ஒழிந்து என்பதாகும்.
[12] காலகதி
அடைந்தார்
காலத்தின் கதி அடைதல்; ஒருவர் வயதாகி
இயற்கையான மரணம் அடைந்தார் அல்லது மூப்பு
இறப்பு அடைந்தார் என்பதைக் குறிக்கும் மங்கலப் பயன்பாடு. வயதான மனித ஜீவனின்
இயற்கையான இறப்பைக் குறிக்கப் பத்திரிகைகள் முன்பு பயன்படுத்தி வந்த சொல் 'காலகதி' ஆகும்.
[13] காலமானார்
இங்கே, ஏறக்குறைய
காலமானார் என்ற சொல்லின் முந்தைய வடிவமாகக் கூடக் ‘காலத்தினடை’ என்ற பொருள் தரும்
காலகதி என்ற சொல்லைக் கருதலாம். மேலும் நாகரிகம் கருதி, சபையில் அல்லது
சான்றோர் முன் கூறத்தகாத சொல்லை அல்லது சொற்றொடரை வேறொரு சொல் அல்லது சொற்றொடர்
கொண்டு வெளிப்படுத்தும் 'இறந்தார்' என்பதன்
இடக்கரடக்கல் [euphemism]
'காலமானார்' என்பதாகும்.
“இடக்கர்” என்பதற்கு சொல்லக் கூடாத சொல் என்று பொருள். அமங்கள நிகழ்வை
மங்களப்படுத்திக் கூறுவதும் இடக்கரடக்கலாகவே கொள்ளப்படும்.
[14] மடிந்தார்
மடி என்பதன் வினைச்சொல்:
துணி அல்லது காகிதத்தைப் போன்ற பொருளை மடக்கி சிறிதாக்குதல் அல்லது இறந்து போதல்
ஆகும். உதாரணமாக, இத்தெருவில் உள்ள
ஒரு வீட்டில் ஒருவர் உடலோடு ஒன்றிய உயிர் துறந்தார் என்று அலறி யழுகின்றார்கள் என
"இவ் வீதி
மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என்"
என்று மாணிக்கவாசகப்
பெருமான் அருளிய திருப்பள்ளியெழுச்சி பாடுகிறது.
[15] துஞ்சல்
"துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ."
என திருப்பொன்னூசல் -
திருவாசகம் 332 பாடுகிறது. இங்கு "துஞ்சல் பிறப்பு அறுப்பான்" -
இறப்பு பிறப்புகளை அறுப்பவனுமாகிய என்று பொருள் படுகிறது. பண்டைய இலக்கியத்தில் 'இறப்பு', 'துஞ்சல்' என்று
வழங்கப்பட்டது. இறப்பை நீண்ட தூக்கமாகக் கருதியதால் துயிலுதல் என்ற பொருளுடைய
துஞ்சல் வந்திருக்க கூடும். துயில் = ஆழ்ந்த அசைவில்லாத நிலை. துஞ்சல் என்பது
துயிலின் நீட்டமே ஆகும்.
[16] கண்
மூடினார்
கண் மூடினார் என்ற
வழக்கும் ஏறக்குறைய தூக்கம் என்பதன் தொடர்பில் உருவாகியிருக்கக்கூடும்.
[17] போய்ச்
சேர்ந்தாரு / போய்ட்டாரு
போய்ச் சேர்ந்தாரு, போய்ட்டாரு
போன்றவை சொர்க்கம், நரகம் போன்ற மத
நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான பண்பாட்டு சொற்களாகும்.
[18] மண்டயப்
போட்டாரு
[19] தவறிட்டாரு
[20] டிக்கெட்
வாங்கிட்டாரு
[21] உயிர்
நீத்தார்
[22] பிரிந்து
விட்டார்
[23] ஆவி
நீத்தார்
[24] முடிவெய்தினார்
[25] இயற்கை
எய்தினார்
என்னும் மதச் சார்பற்ற
சொற்கள் மூலமாகவும் இரங்கல் குறிப்புகளை எழுதலாம். மேலும் பயன்படுத்தும் மக்களின்
பண்பாட்டுத் தரத்தையும் ஒருவாறு உணர்த்துவதை இங்கு காணலாம். மனித இறப்பால்
பூமிக்குப் பயன் என்றும்,
பாரம் குறைகிறது
என்றும், மற்றும் நிலம்
வாழ் நுண் உயிர்க்கு இறந்த உடல் உணவாகப் பயன்படுகிறது என்றும் அதனால்தானோ என்னவோ ‘பூமி லாபம்’ என்ற சொல்
கூடப் பழந் தமிழில் மரணத்தையே குறித்தது என்கிறார்கள்.
மரணத்திற்குப் பின்னர்
செல்லவிருக்கிற சொர்க்கம் அல்லது நரகம் குறித்த கற்பனைச் சித்திரிப்புடன், உடல்களை வாட்டி, புலன்களை ஒடுக்கி, எப்பொழுதும்
குற்ற மனதுடன் வதைக்குள்ளாக்கி, இவ்வுலக வாழ்க்கையின் கொண்டாட்டங்களை மறுக்கிற பணியை
மதங்கள், கச்சிதமாக
நிறைவேற்றுகின்றன. தொடர்ந்து மரண பீதியில் மனித உயிர்களை ஆழ்த்தி, இறைவன் பற்றிய
கருத்தை வலியுறுத்துவதன் மூலம், மத நிறுவனங்கள் சமூக மேலாதிக்கம் பெறுகின்றன. அவ்வளவு
எளிதில் மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாத மனித மனம் புனைந்த ‘அவ்வுலகு’ என்ற
கருத்தியல் சுவாரசியமானது. பிறப்பிற்கு முன்னரும், மரணத்திற்குப் பின்னரும் நிலவும் இடைவெளியை
எப்படிப் புரிந்துகொள்வது என வியந்த மனிதனுக்கு, புவியுலகு என்ற புரிதலுக்கு மாற்றாக அவ்வுலகம்
என்ற கருத்தியல் புகுத்தி,
இரு வேறு
உலகங்கள் என்ற நிலைப்பாட்டை காட்டி, அவ்வுலகம் என்று ஒரு உலகத்தை கச்சிதமாக [துல்லியமாக]
அறிமுகம் செய்தார்கள். ஆனால் அவ்வுலகம் என்ற ஒன்று இருக்கிறதா? நீங்கள் கட்டாயம்
சிந்திக்க வேண்டிய ஒன்று! இந்த அவ்வுலக கருத்து உருவாக்களால்,
‘இறுதித் தீர்ப்பு நாளின் போது நீங்கள் செய்த பாவங்களுக்காக
பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று அச்சுறுத்துகிற தீர்க்கதரிசிகள், இதற்காக கடவுளை
முன்னிறுத்தி, சொர்க்கம், நரகம் என்ற
அவ்வுலகைப் புனைந்துள்ளனர் எனலாம். இதனால் தான்
"அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை
பொருள்இலார்க்கு இவ்வுலகம்
இல்லாகி யாங்கு"
என்று வள்ளுவர்
கூறிச்சென்றார் போலும். இவ்வாறே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும், பிற்காலத்திய
அறநூல்களும் மனிதர்களை நெறிப்படுத்த அவ்வுலகம் என்ற கோட்பாட்டை முன்வைத்துப்
பேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ளன. அப்படியான முயற்சியின் அல்லது அதை மறுபவர்களின்
விளைவுகளே மேலே கூறிய மரணம் குறித்த சொற்கள் ஆகும்.
பருப்பொருள் சார்ந்த, உடல்
சார்ந்த உலக வாழ்க்கை [material life] ஒரு
தற்காலிகமானதே. நிறைந்த துயர்மிகுந்ததும், மகிழ்ச்சியற்றதும் மாறக்கூடியதும் ஆகும். நேற்று மாதிரி
இன்று இருப்பதில்லை. இன்று மாதிரி நாளை இருக்கப்போவதில்லை. வாழ்க்கை என்பது ஒரு மாயை, ஒரு பரம ரகசியம். அடுத்தது என்ன நடக்கும் என்று
எமக்கு தெரியா. இந்த நிலையற்ற வாழ்க்கையில் நாம் சம்பாதித்த எமது விவேகம் அல்லது
மெய்யறிவு ஒன்றே எமது வாழ்விற்கு ஒரு கருத்தை / மதிப்பை கொடுக்கிறது. ஆகவே முடிவான
உண்மையை அறியும் தேடுதலை கைவிட வேண்டாம். ஏனென்றால் உண்மையை அறிந்தவுடன், உங்கள் வாழ்க்கை
ஒரு கருத்துள்ளதாக மாறுகிறது. ஆகவே இந்த நிலையற்ற வாழ்க்கையில் நிலையான உண்மையை
தேடி அறிதலில் ஒரு தவறும் இல்லை. இது சும்மா நேரத்திற்கு நேரம் குடித்து, சாப்பிட்டு, உறங்குவதை விட
எவ்வளவோ மேல்! அதன் ஒரு படியாக எமது பண்டைய இலக்கியம் என்ன கூறுகிறது என அடுத்த
பகுதியில் பார்ப்போமா ?
(கந்தையா தில்லைவிநாயகலிங்கம்)
பகுதி 08: "பண்டைய
இலக்கியத்தில் மரணம்" தொடரும்
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக Theebam.com: [பகுதி:01] இறப்பும் தமிழரின் நம்பிக்கைகளும்:-
0 comments:
Post a Comment