புதிதாக வெளிவந்த திரைப்படங்கள்
படம்:டெடி
நடிகர்கள் :ஆர்யா, சாயீஷா சைகல், மகிழ் திருமேனி
இயக்குனர்: சக்தி சவுந்தர் ராஜன்
கதைச் சுருக்கம்: ஒரு கரடி பொம்மை(teddy bear)க்குள் ஒரு உயிர்(ஆவி அல்ல) புகுந்து தன் உடலை மீட்கப் போராடுகிறது. [குழந்தைகள் மட்டும் ரசிக்கலாம்].)
வெளியீடு:12 மார்ச் 2021
புள்ளிகள்: 2/5
படம்: ராஜ வம்சம்
நடிகர்கள் : சசி குமார், நிக்கி கல்ராணி, சசி குமார்
தம்பி ராமையா, மனோபாலா, ராதா ரவி,ஆர் விஜய்குமார்
சதீஷ், ரமேஷ் கண்ணா, ரமேஷ் கண்ணா, யோகி பாபு
இயக்குனர்:கதிர்வேலு
கதைச் சுருக்கம்:கடந்த 15 வருடங்களாக நவீன தொழிநுட்பம் காரணமாக புவி வெப்பமடைதலால் பாதிப்படைந்த இயற்கையினை அதே தொழிநுட்பத்தை உதவியுடன்பாதுகாக்கப் போராடும் ஒரு இளைஞனின் கதை.
வெளியீடு: 12 மார்ச் 2021
புள்ளிகள்: 3/5
படம்: தீதும் நன்றும்
நடிகர்கள் : அபர்ணா பாலமுரளி
இயக்குனர்: ராசு ரஞ்சித்
கதைச் சுருக்கம்: கொடுமைக்காரனாகிய தன் மகனைக் காக்க இறைவனிடம் தவமிருந்து பெற்ற வரமே ,கொடுமைக்காரனையும் தந்தையையும் கொன்றொழித்த மகா பாரதக் கதை.
புள்ளிகள்: 3/5
வெளியீடு: 12 மார்ச் 2021
அற்புதம் திரைப்படம் - காலத்திற்கு ஏற்ற ஒரு சிறந்த கதை.
(அற்புதம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த இப்படத்தை ஆர். எஸ். வெங்கடேஷ் இயக்கினார்.)
கதையின் நாயகன் அசோக் (ராகவா லாரன்ஸ்) தனது நண்பர்களுடன் வெட்டியாகச் சுற்றித் திரிவதை தவிர வேறு வேலை எதுவுமில்லை. ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து அவன் வந்திருந்தாலும், அசோக்கிற்கு பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அல்லது அவரது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் எண்ணமோ இருந்ததில்லை.
ஒரு நாள், அசோக் பிரியாவை (அனு பிரபாகர்) சந்தித்தபோது அவளுடைய அழகு, பண்பு என்பவற்றால் ஈர்க்கப்பட்டான் . அசோக் பிரியாவிடம் அவன் காதலை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறான்.
[இக்கலாச்சாரம்தான் இன்று தமிழ்நாட்டில் பல பெண்களின் கொலைக்கும், தற்கொலைக்கும், அவர்கள்மீதான வன்முறைக்கும் காரணமாக உள்ளது.]
பிரியா, அசோக்கில் காதல் கொள்ளவில்லை என்றாலும், அவன் முதலில், வாழ்க்கையில் ஏதாவது குறிக்கோள் இருக்கவேண்டும் ,கடுமையாக உழைக்க வேண்டும், அதனை சாதிக்கவேண்டும் என்று கூறிச் சமாளித்து விடுகிறாள். தான் சாதித்தால் அவள் தன்னைக் காதலிப்பாள் என்ற அவா அசோக்கின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் ஏற்படுத்துகிறது.
பல முயற்சிகளுக்குப் பிறகு, அவன் ஒரு மொபைல் துரித உணவு உணவகத்தைத் தொடங்க முடிவு செய்கிறான். வங்கி மேலாளராக இருக்கும் அரவிந்த் (குணால்) நிதியுதவி உதவியுடன் அசோக் படிப்படியாக தனது தொழிலை வளர்த்துக் கொள்கிறான். உண்மையில் ஏற்கனவே அரவிந்தும் பிரியாவும் ஒருவரை ஒருவர் காதலிப்பவர்கள் என்பது , அசோக்கிற்கு தெரியாத விடயம்.
அசோக்கின் வணிகம் ஹோட்டல், சூப்பர் மார்க்கெட்டுகள், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் விரிவடைகிறது, மேலும் அவன் நகரத்தின் முன்னணி வணிகர்களில் ஒருவராக மாறுகிறான். ஒரு தொலைக்காட்சி சேனலுக்கான நேர்காணலின் போது, அசோக் தனது வெற்றியைப் பின்தொடரும் உந்து சக்தியாக இருந்த தனது காதலைப் பற்றி குறிப்பிடுகிறான். இதைக் கேட்டு பிரியா அதிர்ச்சியடைந்து, அரவிந்த் மற்றும் அசோக்கின் நண்பர்களை இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுகிறாள். இருப்பினும், அரவிந்த் மற்றும் அசோக்கின் நண்பர்கள் அசோக்கிற்கு உண்மையை வெளியிட முடியவில்லை, ஏனெனில் அசோக் அவள் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தன்னை அழித்துவிடுவதாக கூறிக்கொண்டிருந்தான்.
அசோக் ஒரு பங்களாவைக் கட்டுகிறார், அவருடைய திருமணம் அங்கே நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். அரவிந்த்தும் அசோக்கின் நிலையினை உணர்ந்து அவனைத் திருமணம் செய்ய பிரியாவை நிர்பந்திக்கிறான்.
[ஆண்களுக்கு மட்டும் தான் ஆசை ,மனம்,என்றில்லை.பெண்களும் மனித இனம்தான்.அவர்களுக்கும் உணர்வுகள், விருப்பங்கள், குறிக்கோள்கள் உண்டு.ஆடு மாட்டை சேர்த்து வைப்பது போல், பெண்களின் ஆசைகளில் மண்ணைப் போட்டு முடிவு எழுதிய பல பழைய திரைப்படங்கள் உண்டு.ஆனால் அது ஆண் ,பெண் இருவருக்குமே சந்தோஷமான வாழ்விவைக் கொடுத்ததில்லை என்றே பெரும்பாலும் உணர்த்தியது.]
பிரியா விருப்பமில்லை என்றாலும், அசோக்கின் தற்கொலை குறிக்கோளுக்குப் பயந்து அவனைத் திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.
[இந்த இடத்தில் இளையோர் சிந்திப்பதில்லை. திருமணம் என்பது பல்லாண்டு சந்தோசமாக வாழவே ஒவ்வொருவனும் விரும்புவான். ஆனால் விருப்பமில்லாத பெண்ணைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்வது என்பது, காலமெல்லாம் ஒரு நரகக் குழியினுள் வீழ்வதற்கு அவ் ஆண் தானே தனக்குத் தோண்டும் குழி ஆகும். இதே போலவே காதல் என்பதும் இருவருக்கும் இருக்கவேண்டியது. அதை விடுத்து ,நீ என்னை காதலிக்கவேண்டும், என்னில் என்னடி குறைகண்டாய் என்று வம்பிற்கு பெண்களை இழுப்பதானது நீ உனக்கு நல் வாழ்வினைத் தேடவில்லை உன்மேல் நீயே தீயை மூட்டுகிறாய் என்பதே பொருள்.
மேலும் காதலிக்கும் வேளையில் பழகியதால் ஆணில் குறை கண்டு கை விடும் பெண்கள் விடயத்திலும் சில இடங்களில் ஆண்களின் பழிவாங்கல் விசித்திரமாக இருக்கிறது. உன்னில் ஒரு குறை கண்டு செல்லும் பெண், நீ கல்யாணம் செய்தபின் எப்படி உன்னுடன் சந்தோசமாக இருப்பார்கள். இந்தளவில் விடை பெற்றது உன் பாக்கியமே என்று கருதாமல், பதிலாக அவர்கள் மேல் வன்முறையினை மேற்கொள்வது ஆண் தன் எதிர்காலத்தினை பாழாக்குவதே ஆகும்.]
திருமண நாளில், பிரியாவிற்கும் அரவிந்திற்கும் இடையிலான உரையாடலை அசோக் ஒட்டுக் கேட்டு அனைத்து உண்மைகளையும் புரிந்துகொள்கிறான் .தனது காதல் ஒரு பக்கமானது என்பதனை உணர்கிறான். இறுதியில், அவன் தனது திருமணத்தை ரத்துசெய்து, பிரியாவை அரவிந்துடன் ஒன்றிணைத்து திருமணம் செய்து வைக்கிறான்.
[அசோக்கும் பிரியாவின் மேல் காதலில் வெறி கொண்டே இருந்தான் .அதுவே அவன் வாழ்வில்பெரும் வளர்ச்சிக்கு காரணமாயிற்று. அவள் விரும்பவில்லை என்றதும் ஒதுங்கிக்கொண்டான்.அது தான் மனிதாபிமானமும் நாகரீகமும். அதை விடுத்து , இன்றய சில இளைஞர் போன்று பழி வாங்க புறப்பட்டிருந்தால் அவன் வாழ்வும் இன்று தொலைந்திருக்கும். இன்றய இளையோருக்கு நல்ல கருத்துக்களை இப்படம் வழங்கியிருந்ததால் இன்று நாம் இதை வழங்கியுள்ளோம்.]
தொகுப்பு:செ.மனுவேந்தன்