சிவவாக்கியம்-131
சாவதான தத்துவச் சடங்கு செய்யும் ஊமைகாள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் செய்வேன்
மூவராலும் அறியொணாத முக்கணன் முதற்கொழுந்து
காவலாக உம்முளே கலந்திருப்பன் காணுமே!!
ஒன்றுக்கும் உதவாத தத்துவச் சடங்குகள் செய்து செத்துப் போகும், உண்மையை உணராத ஊமை மனிதர்களே!! வெறும் கல்லுக்கு செய்யும் சடங்குகள் இறைவனைச் சேருமோ? எல்லாம் படைத்த ஈசன் கல்லாகவா இருப்பான்!!! இதைக் கண்டு சிரிக்காமல் வேறு என்ன செய்வேன். அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றாலும் அறிய முடியாத முக்கண்ணனான ஈசனின் முதல் பிள்ளையான கணேசன் உனக்குக் காவலாக உனக்குள்ளேயே பிண்டக்கல்லாக கலந்திருப்பதை கண்டு தியானம் செய்யுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-132
காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே!!!
காலையும் மாலையும் மனச்சுத்தம் செய்யத் தெரியாமல் உடல் சுத்தம் மட்டுமே செய்து
நீரில் மூழ்கி குளித்துவிட்டு மோட்சம் அடைவோம் எனக்கூறும் மூடர்களே!!! எப்போதும்
நீரிலேயே வாழும் தவளையால் முத்தி அடைய முடியுமா?
அதிகாலையிலே எழுந்து தியானம் செய்து மூன்றாவது கண்ணாகிய புருவமத்தியில் ஒன்றி
யோக ஞானப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை
வாசியால் மேலேற்றி மெய்ப் பொருளை நினைத்து தியானித்து இருப்பிராகில் அதுவே முத்தி
அடைவதற்கும், சித்தி பெறுதற்கும் வழியாகும்.
*******************************************
சிவவாக்கியம்-133
எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ
இங்கு மங்குமாய் இரண்டு தேவரே இருப்பாரோ
அங்கும் இங்கும் ஆகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே!!!
எங்கள் கடவுள் இது என்றும் உங்கள் கடவுள் அது என்றும் இரண்டு கடவுளா
இருக்கின்றது? இங்கொன்றும்
அங்கொன்றும் இரண்டு தெய்வம் இருக்குமா?
அங்கும் இங்கும் எல்லாமாய் ஆகி நின்ற ஆதிமூர்த்தியான சிவம் ஒன்றல்லவா,
எங்கும் உள்ள ஒரே கடவுள். இது பெரியது என்றும் உங்களது சிறியது என்றும் கூறி
இறைவனின் உண்மையை உணராது வாதம் பேசுபவர்கள் வாய்புழுத்து மாள்வார்கள்.
********************அன்புடன் கே எம்
தர்மா.
Very good.I would like to introduce Yogaswami-our sither to our youngsters. Kavi Uthamy.
ReplyDelete