சென்ற பதிவில் டி. என். ஏ. வின் சர்க்கரை
மூலக்கூறு பற்றியும் அதைச்சார்ந்த சில தகவல்களையும் கண்டோம்!! மூலக்கூறு என்றால்
என்ன? அதன்
தன்மைகள் எத்தகையது?? அணுவின் அடிப்படைகள் பற்றி கண்டோம். இன்று
நைட்ரஜன் சார்ந்த மூலக்கூறு, அதனுடைய தன்மைகள், டி.
என். ஏ. வில் அதனின் பங்கு என்ன என்பது பற்றி பார்ப்போம்.
நைட்ரோஜன் சார்ந்த மூலக்கூறுகள் டி. என். ஏ.
வின் தன்மையினை,
அதனுள்
பொதிந்திருக்கும் மரபணு தகவல்களையும் தீர்மானிக்கின்றன. பொதுவாக நாம் நமது சிறு
வயதில், வேதியலில்
அமிலம் மற்றும் காரத்தன்மையினை பற்றி படித்திருப்போம். ஒரு லிட்மஸ் தாள்
(litmus paper) கொண்டு சில நேரங்களில் அமிலக்கலவைகளுடனோ, அல்லது காரக்கலவைகளுடனோ விளையாடியிருப்போம். உயிரியல் என்பது வேதியல், இயற்பியல் எல்லாம் ஒன்றென இயங்கும் ஒரு விந்தை. ஒரு உயிரியலாளருக்கு வேதியல் மற்றும் இயற்பியல் அறிவு மிக மிக அவசியம், அவற்றின் சில தத்துவங்கள் தான் உயிர்களின் பல்வேறு செயற்பாடுகளை நிர்ணயிக்கின்றது. பொதுவாக திரவங்கள் அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை கொண்டவையாக இருக்கும். எதை வைத்து ஒரு திரவத்தின் இத்தன்மையினை சொல்கிறோம் என்றால், அதனினுடைய ஹைட்ரஜன் அயான்களில் இருந்தே இதனை நாம் சொல்கிறோம். அதென்ன அயான்கள் (ions)? அணு என்பதே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என முன்பு கண்டோம். அந்த அணுக்களின் தேர்ந்த தொகுப்பே மூலக்கூறுகள் என்றும் கண்டோம். ஒரு அணுவில் ப்ரோடான் (Proton), எலெக்ட்ரான் (electron) மற்றும் நியூட்ரான் (neutron) என்று மூன்று நுண் தொகுப்புகள் உள்ளன. மின்சாரத்திற்கு +, - என இரு சார்ஜ்கள் (charge) தேவை (என் தமிழ் சற்று தடுமாறுகிறது என்ன நினைக்கிறேன்). அதை போலவே ஒரு அணுவிலும் இந்த இரண்டு சார்ஜ்கள் உள்ள அணு நுண்தொகுப்புகள் உள்ளன. அவற்றின் ப்ரோடோனுக்கு + உம், எலெக்ட்ரோனுக்கு - உம், நியூட்ரோனுக்கு எந்த சார்ஜூம் இருப்பதில்லை. இதில் ஒரு அணுவில் எத்துணை ப்ரோட்டான் உள்ளது என்பதே அது எந்த அணு என்பதினை தீர்மானிக்கிறது. உதாரணமாக ஹைட்ரஜன் அணுவில் ஒரு ப்ரோட்டான் இருக்கும், ஆக்சிஜென் அணுவில் 8 ப்ரோட்டான்கள் இருக்கும். ஒரு அணுவில் உள்ள ப்ரோட்டான்கள் மாறாதது. எலெக்ட்ரான்கள் மாறக்கூடியது. ஒரு அணுவில் ப்ரோட்டான்களின் எண்ணிக்கைக்கு சமமாக ஏ;எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை இருக்கும். இந்த எலெக்ட்ரான்களின் எண்ணிக்கைகள் மாறும் போது அந்த அணுவின் chargeஉம் மாறக்கூடும், அப்படி மாறும்போது அது அயான் ஆக மாறிவிடும். அயான்கள் + அல்லது - சார்ஜ் பெற்றிருக்கும். ஒரு அணுவில் எலெக்ட்ராங்கள் குறைந்தால் அந்த அணு + சார்ஜ் பெற்று ஒரு அயானாக மாறிவிடும், எலெக்ட்ரான்கள் கூடினால் - சார்ஜ் பெற்று அயானாக மாறும். பொதுவாக ஹைட்ரஜன் அயான்களின் அளவினைக் கொண்டே ஒரு திரவம் அமிலமா அல்லது காரமா என நாம் சொல்கிறோம். எதற்கு இந்த அமிலம், காரம் அயான் கதைகள் எல்லாம்?? காரணம் உள்ளது நண்பர்களே, நிட்ரோஜென் சார்ந்த மூலக்கூறு ஒரு காரத்தன்மை கொண்ட ஒரு மூலக்கூறு. இந்த மூலக்கூறுக்கு அதனுள் இருக்கும் நைட்ரோஜென் தான் காரத்தன்மை அளிக்கிறது. மேலும் டி. என். ஏ. மூலக்கூறு பல்வேறு நிலைகளில் ஸ்திரத்தன்மையுடன் இருக்கவும், செயல்படவும் இந்த + மற்றும் - சார்ஜ் உதவுகின்றன. இந்த நைட்ரோஜன் சார்ந்த மூலக்கூறுகள் நான்கு வகைகளில் டி. என். ஏ. வில் உள்ளன. அவையாவன, அடினைன் (adenine), குவானைன் (guanine), சைட்டோஸின் (cytosine) மற்றும் தையாமின் (thiamine). ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் கொண்டு எப்படி நாம் ஒரு வார்த்தையினை, வாக்கியத்தினை எழுதுகிறோமோ, அந்த அடிப்படையினை வைத்து உணர்ந்து கொண்டால் இனி வரும் தகவல்களையும் எளிதில் உணரலாம். நம் மரபணுவில் உள்ள செயல்பாடுகள் எல்லாம் இந்த நான்கு நிட்ரோஜென் சார்ந்த மூலக்கூறுகள் மூலமாகவே எழுதிவைக்கப்படுகின்றது. முன்னர் கூறிய ரிபோஸ் சர்க்கரை மூலக்கூறும், பாஸ்பேட் மூலக்கூறும் டி. என். ஏ. விற்கு முக்கியம் என்றாலும், இந்த நைட்ரஜன் சார்ந்த மூலக்கூறே டி. என். ஏ. வில் பொதிந்திருக்கும் மரபணு தகவல்களைத் தாங்குகின்றது. சரி நண்பர்களே, டி. என். ஏ. வைப்பற்றிய மற்றைய தகவல்களை அடுத்த படைப்பில் காண்போம்!!! - சௌந்தர்
அறிவியல் -எழுதியவர் : சௌந்தர்
No comments:
Post a Comment