தொண்டை வலிகள் ஏன், ஆன்ரிபயோரிக் மருந்துகள் எப்போதும் அவசியமா?

 

'உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். வழக்கமான பிரச்சனைதான். டொன்சில். ஸ்ரோங்கான அன்ரிபயோடிக் போட்டால்தான் எனக்கு நிற்கும்'.

 


தொண்டை வலி மட்டும் அவருக்கு இருந்தது. காய்ச்சலோ விழுங்குவதில் சிரமமோ இல்லை என்பது விசாரித்தபோது தெரியவந்தது.


நாள் முழுவதும் ஓடித்திரியும் மனிதர். ஒவ்வொரு நிமிடமும் தொழிலில் பணம் கொட்டும். நேரத்தை வீணாக்க முடியாது. உடனடியாகக் குணமாக வேண்டும். பணத்தைக் கொடுத்தால் எதையும் செய்விக்க முடியும் என்பதும், எந்த நோயானாலும் கடுமையான அன்ரிபயோடிக் போட்டால் குணமாகும் என்பதும் அவரது திடமான நம்பிக்கைகள்.

 

அந்த எண்ணங்கள் இரண்டும் தவறானவை என்பதை அனுபவங்கள் சொல்லிக் கொடுத்தும் அவரது அகங்காரம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

 

மற்றொருவர் நல்ல காச்சலோடு நடுங்காத குறையாக வந்திருந்தார். சாப்பாடு விழுங்க முடியாதளவு தொண்டை வலி.


'இரண்டு நாளா உப்புத் தண்ணியாலை அலசிக் கொப்பளிச்சன். குணமாகவில்லை' என்றார்.

 

தொண்டை வலிகள்

தொண்டை வலிகள் அடிக்கடி ஏற்படுபவை. வலியானது பொதுவாக அடித் தொண்டையில் இருப்பதை உணர்வீர்கள். வேதனையைக் கொடுக்கும். அரியண்டப்படுத்தும். கடுமையாக வலிப்பது. சாதாரண நோ, ஒரு பக்கம் மட்டும் வலிப்பது, சுரண்டுவது, அரிப்பது, எரிவது, விழுங்குவதில் சிரமம் எனப் பல வேறுபாடுகள் உண்டு.

 

ஆனால் பெரும்பாலான தொண்டை வலிகள் நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. மருந்துகள் சாப்பிடாமலே மாறக் கூடியவை. தொண்டை வலி என்பது ஒரு நோயல்ல.  ஒரு அறிகுறி மாத்திரமே. பல்வேறு நோய்களில் இதுவும் ஒரு அறிகுறியாக வெளிப்படும். சில தருணங்களில் காது வலியும் சேர்ந்து வருவதுண்டு.

 

வைரஸ் தொற்று நோய்கள்

முக்கிய காரணம் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான். பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்கள் தொண்டை வலியுடன், மெல்லிய தடிமன், உடல் உழைவு போன்ற அறிகுறிகளுடன் வரும். சிலருக்கு இருமல் தொடரும். சில தருணங்களில் இதன்போது வயிற்றால் சில தடவைகள் இளக்கமாகப் போவதும் உண்டு. இதற்கு மருந்துகள் தேவைப்படாது. தானாகவே குணமாகிவிடும்.

 

குரல்வளையில் ஏற்படும் வைரஸ் தொற்று நோயில் தொண்டைக் கரகரப்பு, பேசுவதில் சிரமம், குரல் மாற்றம் போன்றவற்றோடு தொண்டை வலியும் சேர்ந்து வரலாம்.

 

மொனோநியுகிளியோசிஸ் என்பது வழமையான வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். தொண்டை வலியுடன் டொன்சில் வீங்கியிருக்கும். ஆனால் இங்கு தடிமன் மூக்கால் ஓடுதல் போன்ற அறிகுறிகள் இருக்காது. ஆனால் காய்ச்சல், களைப்பு, சோர்வு, இயலாமை, தலையிடி போன்ற அறிகுறிகள் முக்கியமாக இருக்கும். அத்துடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் போட்டிருக்கும். நோய் தணிய ஒரிரு வாரங்கள் செல்லும். நெறிக்கட்டிகள் மறைய மேலும் ஒரிரு வாரங்கள் செல்லும்.


கூகைக்கட்டு, இன்புளுவன்சா காய்ச்சல் போன்றவற்றிலும் தொண்டை வலி சேர்ந்திருக்கும்.

 

மேற்கூறிய அனைத்தும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுபவை. அன்ரிபயோரிக் மருந்துகள் உதவாது. ஓய்வு எடுத்தல், பரசிற்றமோல் மாத்திரைகள், உப்பு நீரால் அலசல் போன்றவை உதவும்.

 

ஆனால் 'ஸ்ரோங்கான அன்ரிபயோடிக் போட்டால்தான்' மாறும் என நட்டுப் பிடித்தவருக்கு உண்மையில் சாதாரண வைரஸ் கிருமித் தொற்றே ஏற்பட்டிருந்தது.

 

பக்றீரியா தொற்று நோய்கள் 

இதில் முக்கியமானது ஸ்ரெப்ரோகோகஸ் கிருமியால் ஏற்படும் தொண்டை வலியாகும். காய்ச்சல் இருந்தபோதும் தடிமன் சளி மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருப்பதில்லை. மிகக் குறைவாகவே இப்பொழுது வருகிறது. ரூமடிக் இருதய நோய் வருவதற்குக் காரணம் இதுதான்.


தொண்டை வலியுடன் வரும் பக்றீரியா தொற்றில் ரொன்சில் வீக்கம்,

epiglottitis, uvulitis இவற்றுடன் பாலியல் தொற்று நேயர்களான கொனரியா, கிளாமிடியா போன்றவையும் அடங்கும்.

 

'காச்சலோடு நடுங்காத குறையாக வந்திருந்த'வர் என நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டவருக்கு கடுமையான டொன்சில் வீக்கம் இருந்தது. அதற்கு ஏற்ற அன்ரிபயோடிக் மருந்து கொடுக்க வேண்டியிருந்தது.

 

கிருமித் தொற்று அல்லாத தொண்டை வலிகள்

சூழலிலிருந்து தொண்டையை உறுத்தும் பொருட்களாலும் சாதாரண தொண்டை வலிகள் ஏற்படுகின்றன. வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவான நேரங்களில் தொண்டை வலி பொதுவாக ஏற்படுகிறது. புகைத்தல், சூழலில் தூசி அதிகரித்து மாசுறுதல் போன்றவையும் காரணமாகலாம்.

 

இதைத் தவிர தொண்டைக்குள் நாசி நீர் இறங்கல் (Postnasal drip) மற்றொரு காரணமாகும். பொதுவாக எந்நேரமும் எமது நாசியில் நீர் சுரந்து கொண்டேயிருக்கிறது. நாம் இதை உணர்வதில்லை. தடிமன் போன்ற நோய்கள் ஏற்படும்போது மூக்கால் நீராக ஓடும்போதே நாம் அதனை அவதானிக்கிறோம். அத்தருணங்களில் மூக்கிலிருந்து அதிகளவு சுரந்து தொண்டைக்குள் இறங்கும்போது சில தருணங்களில் தொண்டைவலியும் ஏற்படுவதுண்டு.

 

பலர் மூக்கிற்கு பதிலாக வாயால் மூச்சு எடுத்துவிடும் நிலமை ஏற்படுகிறது. ஓவ்வாமைகளால் மூக்கு அடைப்பு ஏற்படுவது, குறட்டை விடுவது போன்றவற்றால் இது நேரலாம். இதுவும் தொண்டைவலியை ஏற்படுத்துவதுண்டு.

 

இரைப்பையில் இருக்கும் அமிலம் மேலெழுந்து வருவது தொண்டைவலிக்கான மற்றொரு முக்கிய காரணமாகும். மொட்டந் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள தொடர்பு போலானது அல்ல. தெளிவானது.

 

எமது இரைப்பையில் அமிலம் பொதுவாகச் சுரக்கிறது. இது இரைப்பையிற்குள் மட்டுமே இருந்து உணவுச் செரிமானத்துடன் சேர்ந்து சிறு குடலுக்குள் செல்ல வேண்டியது. மாறாக, மேலெழுந்து நெஞ்சறைக்குள் இருக்கும் களத்திற்குள் வந்தால் அது புண்ணாகலாம்.

 

இதை மருத்துவத்தில் gastroesophageal reflux என்பர். நெஞ்செரிப்பு, உணவு மேலெழுந்து வரல், புளித்த ஏப்பங்கள், வாயில் அமிலச் சுவை போன்ற பல அறிகுறிகள் இருக்கலாம். சிலருக்கு இதனால் இருமலும், ஆஸ்த்மாவும் ஏற்படுவதும் உண்டு.

 

சில தருணங்களில் அத்தகைய அறிகுறிகள் ஏதும் இன்றி தொண்டைவலி மட்டும் தோன்றவும் கூடும்.

 

அன்ரிபயோரிக் மருந்துகள் தேவையா?

இக் காரணங்கள் அனைத்தையும் சேர்த்து நோக்கும் போது தொண்டை வலியானது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுவது தெரிகிறது. கிருமித் தொற்று அல்லாத காரணங்கள் பலவும் இருக்கின்றன. எனவே அவசரப்பட்டு அன்ரிபயோரிக் மருந்து போடுவது அவசியமற்றது.

 

அவசியமற்றது மட்டுமல்ல கூடாது, ஆபத்தானது எனவும் கூறலாம்.

 

ஏனெனில் அவற்றால் ஒவ்வாமை எதிர்வினைகள் (Allergy) ஏற்படலாம். ஒரு முறை ஒவ்வாமை ஏற்பட்டால் மீண்டும் அந்த மருந்தை அவர் உபயோகிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

 

அத்துடன் அன்ரிபயோரிக் மருந்துகளால் பல பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. ஓங்காளம், வயிற்றுப் புரட்டு, பசியின்மை, வாந்தி, வயிற்றோட்டம், தோல் அழற்சி எனப் பல வகையானவை. அத்துடன் பங்கஸ் கிருமிகளின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.

 

முக்கிய பாதிப்பு அன்ரிபயோடிக்கிற்கு எதிரான ஆற்றலை கிருமிகள் (Antibiotic reistance)   பெருகுவதாகும். அடிக்கடியும் தேவையற்ற விதத்திலும் இவற்றை உபயோகிக்கும் போது நோய்க் கிருமிகள் அவற்றை எதிர்த்து வளரும் ஆற்றலைப் பெறுகின்றன. இதனால் அடுத்த முறை அதைவிட வீரியமான அன்ரிபயோரிக் மருந்துகளை உபயோகிக்க நேர்கிறது.

 

முன்பு வழமையாக உபயோகிக்கப்பட்ட பல மருந்துகள் வீரியமிழந்து இப்பொழுது பாவனையில் இல்லாமல் போய்விட்டன.

 

"புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றவே" என நீங்கள் கேட்கலாம். உண்மையில் புதிய வர்க்க அன்ரிபயோரிக் மருந்துகளைக் கண்டுபிடிப்பது மிகக் குறைவாகவே இருக்கின்றன. இதனால் கடுமையான கிருமிகளுக்கு எதிரான மருந்துகள் மிகக் குறைவாகவே உள்ளன. Methicillin-resistant Staphylococcus aureus (MRSA)  போன்ற மருந்துகளுக்கு கட்டுப்படாத கிருமிகள் மருத்துவத்திற்கு உலகளாவிய ரீதியில் பெரும் சவாலாக மாறியுள்ளன.

 

எனவே அவசியமற்று அன்ரிபயோரிக் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. இன்று பலர் தடிமன் தொண்டை நோ காய்ச்சல் என்றவுடன் அமொக்சசிலின் போன்ற மருந்துகளை மிட்டாய் சாப்பிடுவது போல முழங்கித் தள்ளுகிறார்கள். இதன் ஆபத்து கால ஓட்டத்தில்தான் புரியும்.

 

நீங்கள் செய்யக் கூடியவை எவை?

உடலுக்கும் தொண்டைக்கும் சற்று ஆறுதல் கொடுங்கள்.

உப்பு நீரால் அலசிக் கொப்பளிப்பது நல்லது.

சூடான நீராகாரங்களைப் பருகுவதும் லொசன்ஞசை lozenges உமிவதும் உதவக் கூடும்.

நீராவி பிடிப்பதில் பலர் சுகம் காண்கிறார்கள்.

பரசிட்டமோல் மாத்திரைகளை அவசியமானால் உபயோகிக்கலாம்.

 

எத்தகைய நிலையில் மருத்துவரைக் காண்பது அவசியம்?

தொண்டை வலியுடன் வீக்கமும் ஏற்பட்டு சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

தொண்டை வலியுடன் நாக்கு உதடுகளில் வீக்கம் ஏற்பட்டால்

நீராகாரங்களை அருந்துவதும், மருந்துகளை விழுங்குவதும் கூட சிரமமான நிலையில் தவறாது அணுக வேண்டும்.

நாக்கு வரண்டு தாகம் அதிகரித்து நீரழப்பு நிலை ஏற்படுதல், தலை நிமிரந்த முடியாதபடி மயக்கம் போல வருதல்.

தொண்டை வலியுடன் கழுத்தில் நெறிக்கட்டிகள் தெரிந்தால்.

கடுமையான காச்சலுடன் திடீரென தொண்டை வலி ஏற்பட்டால்.

அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு மேல் நீடித்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0 comments:

Post a Comment