"ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்"

 

"ஒவ் வொரு வளைவு நெளிவும்

ஒளிவு மறைவற்ற உன் பேச்சும்

ஒழுங்கான உடையும் அதன் பளபளப்பும்

ஒய்யாரமான நடையும் அழகின் அழகே"

 

"தூங்கையிலே உன் சிந்தனை கொண்டு

தூய்மையான காதலை உனக்கு சொல்ல

தூரிகை கொண்டு உன்னை வரைந்து

தூது அனுப்புகிறேன் கனவில் தினம்"

 

"உச்சங் கொண்டையும் கரும் விழிகளும்

உகவைதரும் உன் உடல் வனப்பும்

உள்ளம் கவரும் உன் புன்னகையும்

உரிமை கொண்டு என்னை அழைக்கிறது"

 

"புயலாய் மோகம் மழையாய் காதல்

புரண்டு ஓடும் வெள்ளமாய் ஆசை

புரியாத உணர்வு கண்களில் ஏக்கம்

புதுமை பெண்ணின் புன்னகை காண"

 

"உன் இயற்கை நறுமணம் உவகைதந்து

உன்மேல் பல்லவி பாட வைக்க

உன் முணு முணுப்பில் பரவசமடைந்து

உன்னை அணைத்து என்னை இழக்கிறேன்"

 

"ஓவியமாக வந்தாய் கவிதை தந்தாய்

ஓசை இன்றி என்னில் கலந்தாய்

ஓரமாய் இழுத்து முத்தம் தந்தாய்

ஓங்கார நாதமாய் நெஞ்சை நிறைத்தாய்"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

0 comments:

Post a Comment