எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [உடுப்பிட்டி]போலாகுமா?

  உடுப்பிட்டி [Udupiddy]



உடுப்பிட்டி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல்வெட்டியும் வடக்கே கொம்பந்தறையும் மேற்கே கெருடாவில், தொண்டைமானாறு ஆகியவையும், தெற்கே வல்லையும் உள்ளன.

 

உடுப்பிட்டி கிராமத்தைச் சுற்றிவந்து உற்று கவனித்தால் அதன் அமைப்பும் அதைச் சூழஅமைந்திருக்கும் நிலங்களும் சுற்றாடலில் வசிக்கும் மக்களும் இந்தக் கிராமம் மற்றைய கிராமங்களைவிட வேறுபட்டதென்பதை உணர்த்தும். செந்நெற்கழனிகளும், தோட்டக்காணிகளும், அவற்றிற்கிடையே நன்னீர் கிணறுகள் மற்றும் சிறு குளங்களும், கால்நடைகள், அவற்றிற்கு தேவையான புற்றரைகள், குட்டடைகள், கேணிகள், துரவுகள், நீர்த்தொட்டிகள், ஆவுரோஞ்சிக் கற்கள், தெற்கு மேற்காக ஓடும் உப்பாறும், இயற்கையில் விளையும் உப்பும், பருவகாலங்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் பல பறவைகளும்; ஒரு தனித்துவமான அழகையும், ஐசுவரியத்தையும் தன்னகத்தே கிராமம் கொண்டுள்ளதென்பதை அவதானிக்கமுடிகிறது.

 

அத்துடன் பெருந்தொழில், கைத்தொழில், பாரம்பரியத்தொழில் மற்றும் வணிகத்தொழில் புரிவோரையும், சிறந்த கல்விமான்களையும், பிரபலமான பாடசாலைகளையும், நாம் காணமுடிகிறது. பாரம்பரிய விளையாட்டுக்களான அம்பெறிதல், கிட்டிப் புள்ளு அடித்தல், ஓலாக் கிட்டி அடித்தல், உறிவாணம் எறிதல், மாட்டுவண்டிச்சவாரி, (யாடு)கிளித்தட்டு, மரமந்தி ஏறுதல், வார் ஓட்டம், பேணிப்பந்து அடுக்குதல்(பிள்ளையார்) வட்டப்பாடி, எல்லை, றாட்டினம் சுற்றுதல், எட்டு தாயம், போர்த்தேங்காய் அடித்தல், பட்டம் விடும் போட்டி போன்ற பல விளயாட்டுகளில் சிலவற்றை இன்றும் விளையாடிவருகிறார்கள்.

 

வாய்மொழிப் பாரம்பரியமான நாட்டுப்பாடல்கள், தாலாட்டுப்பாடல்கள், சடங்குப்பாடல்கள், மற்றும் ஒப்பாரிப்பாடல்கள் எமது முன்னோர்களின் பாடிய வந்நததையும், கூத்துக்கலையின் தனித்துவத்தையும் வரலாற்றையும் நாம் அறியமுடிகிறது. பாதசாரிகள் வழிப்போக்கர்கள் தமது சுமையை இறக்கி வைத்து ஆறுவதற்கு சுமைதாங்கியையும் தாகம் தீர்பதற்கு கிணறும் இளைப்பாறுவதற்கு மரங்களையும் வைத்து உதவிய சுவடுகளும் இன்றும் அழியாமல் உள்ளது.

 

வடக்காக மூன்றுமைல் தொலைவில் கடல், அருகே கொம்மந்தறை மற்றது கம்பர்மலை. ஆராய்ந்ததில் இவை இரண்டுமே மருவிய பெயர் என தெரிந்தது. ஒன்று கொம்பன் தறை அதாவது ஆனைகள் மேயும் வெளி. அடுத்தது கொம்பன்மூலை. அதாவது யானைகள் கட்டுமிடம். வடமேற்காக கெருடாவிலில் அமைந்திருக்கும் மண்டபக் குகையில் யாழ்ப்பாண அரசர்கள் போர்த்துக்கீசர் காலத்தில் தலைமறைவயாக வாழ்ந்ததாகவும், மருதங்குள சிவாலயத்தை போர்த்துக்கீசர்கள் இடித்ததாகவும், வடகிழக்காக சமரபாகுத் தேவனும், கிழக்காக இமையாணனும் தளபதிகளாக இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. வல்லை வெளி முன்பு பெருங்காடாகவும் ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்த தேசாதிபதிக்கு பத்து மான்தோல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளிவந்த உதயதாரகை பத்திரிகையில் புலிகள் உலவியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது உடுப்பிட்டியில் ராச்சிய பரிபாலனம் நடந்திருக்குமோ என எண்ணி ஆராய்ந்தபோது பின்வரும் சரித்திரத்தை அறிய முடிந்தது.

 

பூர்வ காலத்தில் குமரிக்கண்டம் இந்துமகா கடலுள் பரந்திருந்தது. இந்தியாவுடன் இணைந்தேயிருந்தது. நடைபெற்று முடிந்த சங்ககாலங்களில் (முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம்) ஏற்பட்ட கடற்கோள்களினால் குமரிக்கண்டத்தின் பல பாகங்கள் சிதைந்து பல தீவுகளாகவும், நாடுகளாகவும் பிரிந்து போயின. இடைச்சங்ககால முடிவில் இந்தியாவிற்கும், இலங்கைக்குமான நிலத்தொடர்புகள் அற்றுப்போனதென்பதை வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

 

இலங்கையின் மிகப் பழமையான பெயர்கள் இலங்காபுரி, ஈழம் என்பதேயாகும். காலத்திற்கு காலம் இரத்தினதுவீபம், சேரதீபம்(சேரன்றிப்), சிலோன் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டும் தற்போது சிறீலங்கா எனும் பெயரோடு இந்து மகாசமுத்திரத்தின் முத்தாக விளங்கி வருகின்றது.

 

ஈழத்தின் வடபாகத்தை மணிபல்லவம்(நாகதீபம்) என்று கி.மு 6ம் நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்து அழைக்கப்பட்டது. ஈழத்தின் தென்பாகத்தை தாமிரபர்ணி என்றும் அழைத்தார்கள். நாகதீபமானது தொடர்ந்து வந்த இயற்கையின் சீற்றங்களாலும்;, பூகம்பங்களாலும், மற்றும் கடற்கோள்களினாலும் மேலும் பல தீவுகளாகப் பிரிக்கப்பட்டது. மேற்கே காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, எழுவைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, முதலிய தீவுகளாகவும், வலிகாமம் அப்பெருந்தீவின் பகுதிகளாகவும் கிழக்கே களப்புக்கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என்ற பகுதிகளாக பிரிக்கப்பட்டது. தற்காலம் இப்பகுதி முழுவதையும் யாழ்பாணக் குடாநாடு என்று அழைக்கப்படுகிறது.

 

உடுப்பிட்டியில் ஐவகைப் பண்புகளுடைய நில அமைப்புக்கள் கொண்டிருப்பதுடன் உயர்பீடமான பல பகுதிகளும் அமையப்பெற்றுள்ளன. இப்பகுதிகளில் பருவகால மழை ஆவணி மாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரை பெய்யும் கோடைகால மழை பங்குனி சித்திரை மாதங்களிலும் பெய்வதால் இம்மழை நீரை நம்பியும் கிணறுகள் மூலமும் தமது வாழ்வாதாரங்களை அமைத்துக்கொள்ளக் கூடிய நிலையிருப்பதாலும் பருவகால மழை நீரைச் சேமிக்க வேண்டிய தேவையும் நிலத்தடி நீரைப் பேணவேண்டிய அவசியமும் இருந்ததால் நமது மூதாதையர்கள் ஒரு சிறந்த வழிமுறையைக் கண்டுபிடித்து வெற்றியும் கண்டார்கள்.

 

மேடான நிலங்களுக்கிடையே வெட்டு வாய்க்கால்களையும், வெள்ளவாய்க்கால்களையும் அமைத்தும் மதகுகள் மூலமும் குளங்களுடனும், குட்டைகளுடனும் இணைத்தும் சிறு ஏரிகளில் தேங்கும் படியாகவுமுள்ள பொறிமுறையைக் கையாண்டு மழைக்காலங்களில் நீரைச் சேமித்தும் எஞ்சிய நீரை கடலுக்குச் செல்லும்படியாகச் செய்தார்கள்.

 

வடக்காக செல்தும் வெள்ளம் இலந்தைக்காடு, பொலிகண்டி, ஊறணிக் கடல்வரையும் சென்றடையும்.

 

தெற்காக இலந்தைக்காடு, இலக்கணாவத்தை, கும்பவாளி, வல்லவாளி, துவாளியூடாக கட்டுக்குளம், துவாளிக்குளம் நிரம்பி கிராய்க்குளம், நெசவாலைக்குப் பக்கத்தில் உள்ள மதகுகளினூடாகம் தெற்காக ஊரி மதகுகள் ஊடாகவும் சென்ற நீர் வல்லை வெளிகளில் நிரம்பியபின் தொண்டமானாற்றில் கலக்கும்.

 

மேற்காக இலந்தைக்காடு, வல்வெட்டி, வன்னிச்சிஅம்மன் கோவில் வழியாக வந்த வெள்ளம் கம்பர்மலைக்கும், உடுப்பிட்டிக்கும் இடையே சென்று விறாச்சிக்குளத்தையடைந்து, நிரம்பியதும் தலைவக்குளம், மிலாவில்குளம் சென்று தெற்காகவுள்ள தில்லையடிக்குளம், ஆனைவிழுந்தான் குளம் சென்றடைந்து மதகுகள் வழியாக முழுதைவெட்டிக்குளம், மற்றும் கொட்டளி வெளியில் நிரம்பியபின் தொண்டமானாற்றை வந்தடையும்.

 

இமையாணன் பகுதியிலிருந்து செல்லும் வாய்கால் வழியாக மூத்தவிநாயகர் ஆலயத்திற்குப்பக்கத்தில் இரண்டாகப்பிரிந்து கல்லுவக்குளத்திற்கும் பின்னர் முள்ளிக்கு கிழக்காக உள்ள வாய்க்கால் வழியாக தொண்டமானாற்றுக் கடலைச் சென்றடையும்.

 

கெருடாவிலிருந்து சின்னமலைக்கும், கம்பர்மலையில் இருந்து மயிலியதனையூடகவும் செல்லும் வெள்ளம் வல்வெட்டித்துறைக் கடலினையடையும்.

 

சந்திரகுளத்தை வந்தடையும் வெள்ளம் நிரம்பியதும் தெற்காக கிராய்க்குளத்திற்கும், மேற்காக தில்லையடிக்குளத்திற்கும் சென்றடையும்.

 

உடுப்பிட்டியில் 25இற்கு மேற்பட்ட சிறு குளங்களும், குட்டைகளும் இருந்திருக்கின்றன. (சந்திர குளம், ஆனைவிழுந்தான் குளம், கிராய்க் குளம், தில்லையடிக்குளம், விராச்சிக் குளம், ………)

 

 உடுப்பிட்டியில் முன்னோர்கள் தாம் வாழ்ந்து வந்த இடங்களின் நிலப்பண்புகள் மற்றும் இயற்கையை  நன்கறிந்தும் வரலாற்று நிகழ்வுகளையும் தொடர்புபடுத்தி தோட்டங்கள், வயல்கள், மற்றும் காணிகளுக்கும் குளங்கள், கிணறுகள், பிரதான சந்திகள் வீதிகள் என்பனவுக்கெல்லாம் மிகப்பொருத்தமான பெயரைச் சூட்டியுள்ளார்கள்.

 

உதாரணமாக: உடுப்பிட்டி வாசிகசாலையடி, வீரபத்திரர் கோவிலடி, வல்லவாளி, பெரும்பற்று, கும்பவாளி, துவாளி, கரம்பவாளி, குளவாளி, முள்ளி, ஊரி, நிரை, கல்லுப்பிடார் சந்தி, யாமங்கலை, மாதிவில், பள்ள காடு, வல்லை, எட்டுத்திட்டி, கப்புதூ, கல்லுவம், முள்ளி, இமையாணன், சமரபாகு, கொம்பர்மூலை(கம்பாமூலை – கம்பர்மலை), கொம்பந்தறை(கொம்பன் தறை), மல்லந்தறை, ஆதியாமலை, கோம்பு, பண்டகை, பணிக்கர்வளவு, ஆனைப்பந்தி, பொக்கணை, மருதடி, வாகையடி, தியவில் நாவலடி, 15ம் கட்டை, 7ம் கட்டை(சுமைதாங்கியடி), ……..

 

 உடுப்பிட்டியூருக்கும் மிகப்பொருத்தமான பெயராகவே அமைந்துள்ளது. உடு (அகழ்தல், நட்சத்திரம், சேர்ந்திருத்தல்) பிட்டி (திடர்) மேடான நிலப்பகுதிகளில் அகழ்ந்து வெட்டப்பட்ட குளங்கள் வெட்டுவாய்க்கால்கள் பல இணைந்திருப்பதால் உடுப்பிட்டி எனும் பெயர் வரக்காரமாக இருந்ததை நாம் அறியமுடிகிறது. இதன் எல்லைகளை இணைத்துப் பார்க்கும் போது ஓர் நட்சத்திரத்தின் வடிவத்தையும் ஒத்திருக்கிறது.(நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நூல்களிலும், எமது ஆய்வாளர்களின் அனுபவத்திலும் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது)

 

மிகத்தொன்மையான உடுப்பிட்டிக்கு பல்வேறு கால கட்டங்களில் தொண்டைநாட்டு மக்கள் (உடுப்பூர் – பஞ்சபூதத்தலங்களில் வாயுத் தலமாக விளங்கும் திருக்காளத்திக்கும், திருப்பதிக்கும் வடக்கேயுள்ள ஊராகும்), சேரநாட்டு மக்கள் சேரன்தம்பை (கெருடாவில், மயிலியதனை, கொம்பந்தறை, ஊரிக்காடு போன்ற இடங்களிலும்) சிறு தொகையினர் கல்லுவம், கரணவாய், (சேரன்எழு) நவுண்டில், வல்லுவெட்டிதுறை(மல்லியம்-மல்லியோன்), ஊரிக்காடு(உரிகாட்) பகுதிகளிலும், மற்றும் மட்டக்களப்பில் உள்ள கல்லடித்தெரு, செங்கலடி, கொக்குவில் போன்ற இடங்களிலும் வசித்து வருகிறார்கள்.

 

காசநோயினால் பீடிக்கப்பட்ட சந்திர சேகர மாப்பாண முதலியார் தனது குடும்பத்தாருடன் 1365ம்ஆண்டு வைகாசி மாதம் 20ம்தேதி காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு உடுப்பிட்டியை வந்தடைந்து மாந்தோப்பிலருகில் உள்ள குளத்தில் நீராடி நோய்நீங்கப் பெற்றார். தீராநோய் விலகியதால் தான் நீராடிய குளத்திற்கு சந்திரகுளமெனவும் பெயரிட்டும் குளத்தருகே சந்திர சேகர வீரபத்திரர் ஆலயத்தையும் ஸ்தாபித்தார்.

 

கரணவாய் (சோழிங்கன்-சோழங்கன்) ,தொண்டைமானாறு(கி.பி.1110 இல் குலோத்துங்க சோழன் தளபதி கருணாகர தொண்டைமான் தொண்டைமானாற்றுத் துறைமுகத்தை அமைத்து தானாக விளையும் உப்பை சோழநாட்டுக்கு ஏற்றுவித்தான்), சோழநாட்டு மக்கள் பொலிகண்டி(கண்டி), கப்பு-தூ (துவ்வூர்) பாண்டியநாட்டு மக்கள் (இராமநாதபுர மாவட்டத்தின் கோடிக்கரை, தனுஸ்கோடி, வல்லை கிராமங்களிலிருந்து) வல்லைவெளிப் பகுதியிலும், சமரவாகுத்தேவன் குறிச்சியிலும், (வல்வெட்டி)வல்லித்தேவன் குறிச்சியிலும், செயக்கொடிபாகுதேவன் குறிச்சியிலும், குறுளிபாகுத்தேவன் குறிச்சியிலும், சங்கிலிமன்னனின் தளபதி (இமையாணன்) இமையாணன் குறிச்சியிலும் குடியேறி இங்கு வாழ்ந்த வரலாற்றுப் பதிவுகளை அறியமுடிகிறது.

 

யாழ்ப்பாண அரசபரம்பரையின் வாரிசுகளான பரநிருபசிங்கன் மகன் பரராசசிங்கனுடைய ஏழு புத்திரர் வழித்தோன்றல்களும் சந்ததியினரும் உடுப்பிட்டியில் வசித்ததாகவுமுள்ள வரலாற்றுச் சுவடுகளில் பதிவாகியருக்கிறது. பின்னர் வந்த போத்துக்கீசரின் நிர்வாகத்தில்; யாழ்ப்பாணத்தை 32 கோவிற் பற்றுகளாகப்பிரித்து நிர்வகித்தார்கள். வடமராட்சியை வடமராட்சி கிழக்கு வடமராட்சி மேற்காகவும் பிரித்தார்கள். வடமராட்சி மேற்கை உடுப்பிட்டி, கட்டைவேலி, பருத்தித்துறை ஆக மூன்று கோவிற்பற்றுகளாகவும் உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் வல்லிப்பட்டித்துறை, தொண்டைமானாறு, இமையாணன், சமரவாகுதேவன், கெருடாவில், கரணவாய், கல்லுவம், வல்லுவெட்டி, பொலிகண்டி, மயிலியதனை, கொம்பந்தறை, ஊரிக்காடு, ஆகிய இடங்களை உள்ளடக்கியதாகும்.

 

கி.பி 1645ம் ஆண்டு ஆனி மாதம் 26ம் தேதி போர்துகீசருக்கு சந்திரசேகர மாப்பாண முதலியாரின் வாரிசுகளும், பெரும் செல்வந்தர்களும் தமது காணிகள், நிலங்களுக்கு வரியாக இரண்டு கொம்பன் யானைகள் அல்லது நான்கு கொம்பில்லாத யானைகள் தருவதாக ஒப்பந்தம் செய்து யானைகளை பணிக்கர்கள் மூலம் பிடித்து பணிக்கர் வளவு, ஆனைப்பந்தி, கொம்பன்தறை, கொம்பர்மூலை போன்ற இடங்களில் பராமரித்தும் வல்வெட்டித்துறை மற்றும் காங்கேசன்துறை துறைமுகங்களினூடாக இந்தியாவிற்கு அனுப்பிவைத்த விடயங்களும், உடுப்பிட்டியில் ஆனைவிழுந்தான் குளம், வல்வெட்டித்துறையில் ஆனைவிழுந்தான் பகுதி போன்ற பெயர்களால் இன்றும் அழைக்கப்படுகின்றன.

 

உடுப்பிட்டியில் பிரசித்தி பெற்ற ஆலயங்களும்(வீரபத்திரர், பண்டகைப் பிள்ளையார், மருதங்குள வைரவர், மருதங்குள சிவாலயம், வல்லை மருதடி முனியப்பர், பகவதி அம்மன், …………..)

 

முதல் முதலில் திண்ணைப் பள்ளிக்கூடம் (உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் தந்தையார் அருளம்பல முதலியாராலும், வல்வெட்டியில் குமாரசாமி முதலியாராலும்) ஆரம்பிக்கப்பட்டது. சைவப்பிரகாச வித்தியாசாலை உடுப்பிட்டி சின்னத்தம்பிப் புலவரின் உறவினர் வீரகத்திப்பிள்ளை அவர்களாலும் ஆரம்பிக்கப்பட்டது. உடுப்பிட்டியில் அமெரிக்கன் மிஷனால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் பாடசாலைகள் மிகப்பிரபல்யமானவையாகும்.

 

வல்லை நெசவாலையும், வல்லை வைத்தியசாலையும் வரலாற்றுப் பதிவில் உடுப்பிட்டி மக்களால் மறக்க முடியாததொன்றாகும். கரம்பைவாளி, முள்ளி போன்ற மயான பூமியைக் கூட மிகப் பொருத்தமான இடத்தில் தெரிவு செய்துள்ளார்கள்  முன்னோர்கள். உடுப்பிட்டியில் வலிமையான உடல் உழைப்பாளர்களும், நுட்பமான கம்மாளர்களும், கைத்தொழிலாளர்கள், நியாயமான வணிகர்களும், தான தர்மசிந்தையுள்ள விவசாயிகளும், சிறந்த கல்விமான்களும், கலைகளில் பல சாதனைகளைப் படைத்தவர்களும் வாழ்ந்து வருவதையும் வாழ்தவர்களின் வரலாறும் அவர்களின் சிறப்பை உணர்த்தி நிற்பதையறிய முடிகிறது. உடுப்பிட்டியில் இயற்கையான வளங்களையும் சூழ்நிலைகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதால் தனித்துவமான சிறப்பைப் பெற்றவர்கள் தோன்றுவதற்கு அவ்வூர்  காரணமாக அமைகிறது.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

 


0 comments:

Post a Comment