விருந்தும், மருந்தும் !

விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.


அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை என்று சிலர் மனிதர்களையும் அவர்கள் தம் சமூக வாழ்வியலை ஒப்பிட்டு அலுத்துக் கொள்வது உண்டு, எந்த காலத்திலும் மனிதர்களின் மனம் பெரிய அளவில் மாறுபடுவது கிடையாது, அப்படியே ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவை இன்றைய வாழ்க்கைச் சூழல் ஏற்றியிருக்கும் சுமைகளின் அழுதத்தினால் தான் மாறி இருக்கின்றன. இதைத் திறந்த மனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த காலத்திலும் மனிதனின் பொருளாசைகள், பேராசைகள் தான் நாடுகளின் எல்லைகளை விரித்திருக்கிறது, ஆட்சிப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது, இதைத்தாண்டி உலக மக்களுக்கு நன்மைச் செய்யப் போகிறேன் என்று கூறி அரசை விரிவு படுத்தியவர்கள் எவரும் இல்லை, அதே போன்று மனிதனின், குறிப்பாக ஆண்களின் காம இச்சைகளும் எல்லாக் காலத்திலும் மிதமிஞ்சியதாகவே தான் இருந்திருக்கிறது , இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பல மனைவிகளை மணந்து கொண்டார்கள், பின்னர் பொருளாதார வசதிக் குறைவால் சின்னவீடு என்ற அளவுக்குச் சுருக்கிக் கொண்டனர்,

இப்பொழுதெல்லாம் உறவினர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை, அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்று முள்மேல் நிற்கும் மனநிலையே உள்ளது என்று பதிவர் பெரியவர் பழனி கந்தசாமி மாறுவது மனமா ? காலமா ? எழுதி இருக்கிறார். மனிதர்கள் பணத்தை தேடி அலைகிறார்கள் என்று எழுதி இருக்கிறார். உண்மை தான், பிதுங்கும் மக்கள் தொகையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவதே பெரும் அறைகூவல் என்னும் நிலைக்குச் சென்ற பிறகு இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ? இந்த நிலைக்குக் காரணம் என்ன ? பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே ? இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கறை கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் ? இன்றைய தம்பதிகளுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா ?, பெற்றெடுக்கும் அவஸ்தை என்பதை ஒப்பிட்டு பெண்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத் 'தலைவன்' என்கிற அந்தஸ்தில் 100 குழந்தைகளுக்குக் கூட தந்தையாகும் ஆசை ஆணுக்கு உண்டு, ஆனால் ஒன்று இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு தேவையான படிப்பும் வசதியும் செய்து வளர்த்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் ஆண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவதை நினைத்துப் பார்க்கவே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண்களின் மீது இன்றைய போட்டி நிலைச் சமூகம் ஏற்படுத்தி உள்ளவை தான்.

 

இன்றைய தேதிக்கு இளைஞர்களின் (ஆண் / பெண் தம்பதிகளின்) இலக்கே தனக்கென ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்வது, 55 வயதை நெருங்கும் எவரும் கடந்த கால பொருளியல் நிலைமை, குறைவான ஊதியம் என்ற நிலையில் கிட்டதட்ட ஓய்வு பெரும் நிலையில் சொந்த வீட்டைக் கட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், தற்பொழுது சொந்த வீட்டுக் கனவு 30 - 35க்குள் கை கூடிவிடுகிறது, 'அப்பன்காரன் சம்பாதித்து வைத்திருந்தால்' ஒரு வீடுகட்ட நான் நாயாகப்படும் நிலை வந்திருக்காது' என்கிற இளைஞர்களின் மனக் குரலை எங்கும் கேட்கமுடிகிறது, முனிசிபல் பள்ளியில், அரசு இலவசக் கல்வியில், முயற்சிகளில் ஓரளவு படித்து வெளியே வந்தவர்களுக்கு முதலில் இருக்க நல்ல வீடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காக கடுமையாக உழைக்கும் மனநிலையில் வேலைக்கும் போகும் பெண் தான் வேண்டும் என்று கூறி திருமணமும் செய்து கொள்கின்றனர், பின்னர் ஓய்வில்லாத உழைப்பு, இதில் உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் உபசரிக்கவும் நேரம் இருக்குமா?.  மாமனார் மாமியார் வந்தாலே எப்போ கிளம்புவாங்க என்று இருக்கும் சூழலில் பிற உறவினர்களுக்கு ஊட்டிவிடுவது என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று. போட்டித் தன்மை மிக்க உலகில் தனியார் நிறுவனங்களில் பார்க்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடவே வாரிசுகளுக்கு நல்ல கல்வி அளிக்க, நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றெல்லாம் உட்கார நேரம் இல்லாத வாழ்க்கைச் சூழலில் உறவினர்களை கண்டு கொள்வதற்கான நேரம் ?

 

எனது வீட்டுக்கு அருகே, மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம், அவருடைய மனைவி  'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது, நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள், நிறைய வேலை இருக்கும், எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும், தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்' தேர்வு முடிய இன்னும் ஆறுமாத காலம் இருக்கிறது என்றாலும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது, அதையே தான் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாம் நிலைமை புரியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாமும் தடையாகிப் போகும் போது 'இவர்களை யார் அழைத்தது ?' என்று நினைக்கத்தான் செய்வார்கள்,  குடும்பங்கள் சுருங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபசரி க்கும்  நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா ? நம்மால் ஒழுங்காக கவனிக்க முடியாத சூழலில், பணிவிடை செய்ய முடியாத சூழலில், விருந்தினரை அவமானப்படுவதை தவிர்க்க, உறவினர்கள் வந்தாலும் உடனே கிளம்பிடுவது தான் நல்லது என்றே நினைக்கின்றனர்.

 

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுடன் அருகே வீட்டு உரிமையாளரும் குடி இருந்தால் வீட்டு விருந்தினரை 'எப்போ கிளம்புவீர்கள் ?' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ?' என்று மகிழ்வோடு வெளியே இருந்த குழந்தைகள் கணைத் தொடுப்பார்கள். முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு பார்க்கப் போனால் யாரும் அதைக் குறை காண்பது இல்லை.

 

முதலில் உறவுக்காரர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர் வீட்டுக்குச் செல்ல போதிய காரணம் இருக்க வேண்டும், சும்மா பார்த்துச் செல்ல காதுகுத்தி, திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் அழைப்புகள் என்று எத்தனையோ குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கிறது, நான் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் சென்றாலும் எனக்காக விடுமுறை எடுக்காதீர்கள் என்றே என் அக்கா, தங்கையிடம் சொல்வதுண்டு, அன்றைக்கு எதுவும் மற்ற வேலை இருந்தாலும் போய்விட்டு வாருங்கள், பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதுண்டு, 'நான் எப்போ ஒருமுறை வருகிறேன், என்னைக் கவனிப்பதைவிட உனக்கு என்ன வேலை ?' என்று நாம் கேட்டால் அவர்களுக்கும் வெளியே சொல்லமுடியாத சங்கடங்களையும் சேர்த்தே கட்டிவிடுகிறோம், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒருவரை பிடித்து இழுத்து வைப்பது நாம் சென்ற பிறகு அவர்களுக்கு பிற சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கும். சீனர்கள் விடுமுறை நாட்களில் எவரையும் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. நான் சென்று வந்த சீன நண்பர்களின் வீடுகள் அனைத்திற்கும் எதாவது நிகழ்ச்சியின் அழைப்பின் பேரில் மட்டுமே சென்றிருக்கிறேன், அக்கம் பக்கம் சீன வீடுகளில் உறவினர் நடமாட்டங்களும் மிக அரிதாகவே இருக்கும்.

 

முன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா ? நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட... அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் 'இருங்க காபி எடுத்துவருகிறேன்' என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி 'திருப்பதி லட்டு, பிரசாதம்' இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

 

இன்றைக்கு இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கைச் சூழலில் ஆணுக்கு ஆசை இருந்தாலும் பெண்ணின் விருப்பம் குறித்த புரிந்துணர்வு இருப்பதால் கணவன் - மனைவி இடையே கட்டாய பாலியல் வல்லுறவுகள் கிடையாது. பெண்ணின் விருப்பம் குறித்தும் கேட்கப்படுகிறது, இன்றைக்கு ஆண் சமூகம் எவ்வளவோ அடக்கப்பட்டுள்ளது, அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளது, அடங்கும் சூழலில் உள்ளது, அதையெல்லாம் ஒப்பிட 60 வயதிற்கு மேலானவர்கள் அதிர்ஷடக்காரர்கள், அவர்களுக்கு தன்னளவில் இழப்பு என்று எதுவுமே இருந்திருக்காது, பெரு நகரச் சூழலில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவு கூட திருமணம் ஆன சில ஆண்டுகளில் வாரம் ஒருமுறை பின்னர் மாதம் ஒருமுறை, அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என்றே குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் யாரும் விரும்பிப் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது, வாழ்க்கைச் சூழல் அழுதத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், இவை தனிமனித தவறுகள் இல்லை. இதைப் புரிந்து கொள்பவர்கள் காலத்தை ஒப்பிட்டுப் பேசுவது கிடையாது.

 

பெரியவர்கள் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் குழந்தைகளும் ஒன்று போல் தான் இருக்கிறார்கள், அவர்களிடம் மாற்றமாக நாம் பார்ப்பது இன்றைய காலத்தில் அவர்களுக்கு கிடைத்த வசதிகளில் கிடைத்த கூடுதல் அறிவுதான், எந்த காலத்திலும் குழந்தைகளிடம் நெருப்பைக் கொண்டு சென்றால் எட்டிப்பிடித்து நெருப்பில் விரலைச் சுட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள்.

 

நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு, அவரவருக்கு என்ன வேலையோ என்று நினைத்து மற்றவர்களின் நேரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், தற்பொழுது பலவற்றை இழந்து தான் வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்கிறது. இதில் தனிமனிதனையோ, இன்றைய சமூகத்தையோ குறையாகப் பார்க்க ஒன்றும் இல்லை

பதிவர்: கோவி.கண்ணன்


No comments:

Post a Comment