சித்தர் சிந்திய முத்துக்கள் நான்கு /16

 


சிவவாக்கியம்-151


உண்டகல்லை எச்சில் என்று உள்ளெரிந்து  போடுறீர்  
கண்ட எச்சில் கையலோ பரமனுக்கும் ஏறுமோ
கண்ட எச்சில் கேளடா கலந்த பாணி அப்பிலே
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே!

புறச்சடங்குகளால் செய்யப்படும் பூஜைகளில் நிவேத்தியமாக படைக்கப்படும் பிரசாதங்களை ஒரு குழந்தை அறியாது எடுத்து தின்றுவிட்டால் அது எச்சில் பட்டுவிட்டது என்று சொல்லி யாருக்கும் பயனில்லாது கீழே எறிந்து விட்டு வேறு பிரசாதம் செய்து படைக்கின்றார்கள். கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கைப்பட்டு எச்சிலான இவர்கள் கையால் செய்த பிரசாதங்களை மட்டும் இறைவன் ஏற்று உண்பானோ? எச்சிலாலே தோன்றிய உடம்பில் தானே கைகள் கலந்து இருக்கின்றது? அதனை சுத்தமான நீரில் கழுவி கைகளைத் துடைத்தால் சுத்தம் வந்துவிடுமா? குறிக்கோள் ஏதும் இல்லாத மூடரே! சுத்தம் என்பது என்ன? இவ்வுடலில் பரிசுத்தனாய் ஈசன் இருக்கும் இடம் எது என்பதை அறிந்து மனமாகிய அகத்தை சுத்தம் செய்து இறைவனை தியானியுங்கள்.


***************************************** 

சிவவாக்கியம்-152

ஓதி வைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும்
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை
ஏதுபுக்கொளித்ததோ எங்குமாகி நின்றதோ
சோதிபுக் கொளித்த மாயம் சொல்லடா சுவாமியே!!!  

படித்தறிந்து பாதுகாக்கும் நூல்களும், உணர்ந்து கற்ற கல்வியும், மனைவி, சுற்றத்தினர் என யாவையும் மறக்கும் படியான மரணம் என்று ஒன்று வந்ததே! அது ஏன் வந்தது என்பதை சிந்தியுங்கள். உடலோடிருந்து உலாவிய உயிர் மரணம் வந்ததும் எங்காவது சென்று ஒளிந்து கொண்டதோ? அல்லது எங்குமான வானத்தில் நின்றதோ? சோதியான ஈசனை அடைந்ததாஒளியாக நின்ற உயிர் ஒழிந்த மாயம் எங்கு என்பதை சுவாமி வேடம் போட்டு திரிபவர்களே சொல்லவேண்டும். எல்லாம் ஈசன் செயல் என்பதை உணர்ந்து, மரணமில்லாப் பெரு வாழ்வை அடைய முயற்சியுங்கள்.
*******************************************
சிவவாக்கியம்-153 

 ணெருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்  
மூணு நாலு சீலையில் முடிந்தவிழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே!

கன்று ஈன்ற எருமை மாட்டின் கழுத்தில், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக மூன்று பொட்டணங்களை வைத்து முடிச்சுப் போட்டு வைப்பார்கள். அதுபோல பிராமணர்கள் குளிக்கும்போது ஒரு துண்டில் மூன்று முடிச்சுப்போட்டு கழுத்தில் போட்டுக்கொண்டு தண்ணீரில் மூழ்குவார்கள். பின் அந்த முடிச்சுக்களை அவிழ்த்துத் தண்ணீரிலே போட்டுவிட்டு முன்ஜென்மம், இந்த ஜென்மம், மறுஜென்மம் ஆகிய முப்பிறவிகளின் கர்மவினையை தொலைத்துவிட்டேன் என்று சொல்லித் தலை முழுகுவார்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை விட்டுவிட்டேன் என்றும் விளக்கம் சொல்லுவார்கள். இதனால் அவைகள் அகன்றுவிடுமா? ஏழு உலகங்களிலும் ஆதியந்தம் இல்லாத அநாதியான ஈசனை உங்கள் ஊண் உடம்பிலே உணர்ந்து அதிலே ஊன்றி அறிவு, உணர்வும், மனம் ஆகிய மூன்றையும் முடிந்து தியானியுங்கள். மும்மலங்களும், மூவினைகளும் தானே விலகும். இதுவே உண்மையாக இறைவனை அடையும் வழி.
*******************************************
சிவவாக்கியம்-154

சாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயதான வாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக்கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே!

நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும்பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிரை, உடம்பில் புகுந்து எமன் கொண்டு போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 

 ********************* அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment