புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்! /பகுதி 02


"புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள்!

 [Historical truth of New Year]"

இன்றைக்கு எமக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல் தொல்காப்பியம் ஆகும். இது "காரும் மாலையும் முல்லை. குறிஞ்சி, கூதிர் யாமம் என்மனார் புலவர்" என்கிறது. ஆக, கார் காலம் [மழைக் காலம்] தான், முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்! எனினும் உறுதியாக, இது தான் புத்தாண்டின்  தொடக்கம் என நேரடியாக இங்கு கூறவில்லை? மற்றயது தமிழ் மாதம் 'ஆவணி', 'புரட்டாசி' பொதுவாக கார்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் இதில் மௌனமாக இருக்கிறது. மேலும் எட்டாம் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்குப் பிந்திய நிகண்டுகளில் [thesauruses], தமிழ் மாதம் 'ஆவணியே' முதல் மாதம் என்ற குறிப்பைக் காணமுடிகின்றது. என்றாலும் அதன் போது புத்தாண்டு என்று பண்டிகை கொண்டாடப்பட்டதா என்பது தொடர்பாக போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, "காரே , கூதிர், முன்பணி, பின்பணி, சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு  இருமூன்று வகைய பருவம் அவைதாம் ஆவணி முதலா இரண்டிரண்டாக மேவின திங்கள் எண்ணினர் கொளலே." என்று திவாகர நிகண்டு பாடுகிறது. திருஞானசம்மந்தரும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் இறந்த ஒரு பெண்ணை உயிர்பிக்க, தேவாரம் பாடும் பொழுது, முதல் பாட்டில், "ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.", நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் [மகேசுரராகிய சிவனை வழிபடும் அடியார்கள் மாகேசுரர் எனப்படுவர்கள்] திருவிழாக்காலங்களில் [தமிழ் மாதம் ஆவணி / பூரட்டாதியில் நிகழ்வது] அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ? என்று தொடங்கி, "ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள் துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்" [ஐப்பசி ஓணம்], "தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்." [கார்த்திகை விளக்கீடு], என பாடி ,.. இறுதியாக, "பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்." [பெருஞ்சாந்தி / நீர்முழுக்கு] என்று முடிக்கிறார். இங்கும் தமிழ் மாதம் ஆவணியில் இருந்து ஒரு ஆண்டில் நடக்கும் திருவிழாக்களை வரிசைப் படி குறிப் பிடுகிறார். எனவே, இங்கே கார்ப்பருவமாகிய தமிழ் மாதம் ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது என நாம் ஊகிக்கலாம்?  பண்டைத் தமிழகத்தில் "மழை வருதலே", முதன்மையாக / மங்களகரமாகக் கருதப்பட்டதோ என்னவோ?

 

எட்டுத் தொகை / பத்துப் பாட்டு போன்ற பல பாடல்களில் தமிழ் மாதம் தை திங்களும் தை நீராடலும் கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் தமிழ் மாதம் தை தான் வருடத்தின் [ஆண்டின்] தொடக்கம் என நேரடியாக எங்கும் கூறவில்லை? எனினும் தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில் ..... மிகச் சிறப்பாக / மிக அதிகமாகப் பேசப்படும் / போற்றப்படும் மாதமாக  = தமிழ் மாதம் தை!  அல்லது "தைஇத் திங்கள்" இருக்கிறது. நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையில், "திண் நிலை மருப்பின் 'ஆடு தலை' ஆக, விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து," [160 /161] என்ற இரு வரிகளை காண்கிறோம். இது, திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசியை முதலாகக் கொண்டு, விண்ணில் ஊர்ந்து திரிதலைச்செய்யும் மிகுந்த ஓட்டத்தையுடைய ஞாயிற்றோடு என்று பொருள் படும் [தலை = முதல்! (தலையாய = முதன்மையான)]. சூரியன் மேஷத்தில் புகுவது, தமிழ் மாதம் சித்திரை மாதம் ஆகும். இங்கு, நக்கீரர் மேஷம் [ஆடு / Aries ] தான் முதல் என்று கூறுகிறார். அதாவது ராசி மண்டலத்துக்கு முதல்! என்கிறார். ஆனால் எங்கும் ஆண்டுக்கு முதல் என்று கூறவில்லை? சிலப்பதிகாரம், இந்திர விழா வைப்பற்றி கூறும் பொழுது, "நடுக்கு இன்றி நிலைஇய நாள் அங்காடியில் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென, 'வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க' எனத் " - என்று சொல்கிறது. இது தமிழ் மாதம் சித்திரை திங்களில், அதாவது  இளவேனில் காலத்தில் [வசந்த காலத்தில்] நடந்தது என்கிறது. அவ்வளவுதான்!. அது காமவேள் விழா / காதல் விழா (Valentines Day) என்று தான் சொல்கிறது. ஆனால் அதைப் "புத்தாண்டு" அல்லது வருடத்தின் தொடக்கம் என்று சொல்லவில்லை? மேலும், அறுபது வருட சுற்றுகளின் பெயர்கள் சோழர் கல்வெட்டில் இருந்தாலும் .. அவை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவையே ஆகும் ? எனவே, தமிழ்ப் புத்தாண்டு நாள் பண்டை இலக்கியங்களில் கிடையாது!  அவை பிற் கால சேர்க்கையே!.

 

இலங்கை தமிழர்கள் தமது பாரம்பரிய புது வருடத்தை, தமிழ் மாதம் சித்திரை ஒன்றில், கை விஷேடத்துடன் கொண்டாடுகிறார்கள். "எவர் கையால் முதற் பணம் கிடைக்கிறதோ, அவரது கைவளம் பணக்காரனாக்கும்" என்ற நம்பிக்கையிலேயே கை வளம் (கை விஷேடம்) நடைமுறை புத்தாண்டு காலத்தில் பின்பற்றப்படுகிறது. இந்த நிகழ்வு ஏர் அல்லது கலப்பை (Plough) மூலம் நிலத்தைக் முதலாவதாக கிளறிப் புது பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக மாற்றும்  நிகழ்வாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட புண்ணிய காலத்தில் சகலரும் "மருத்து நீர்" தேய்த்து குளித்து புது வருடத்தை ஆரம்பிப் பார்கள். போர்த் தேங்காய் உடைத்தலும் மாட்டு வண்டி பந்தயமும் கொண்டாட்டத்தை மெருகேற்றும். அது மட்டும் அல்ல குடும்ப வருகைகளும் நடைபெறும் என்றாலும் பழைய தமிழ் இலக்கியத்திலோ சரித்திரத்திலோ ,சித்திரை மாதத்தில் தான் புது வருடம் பிறக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 

பொதுவாக நாட்டு வழக்கில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற மூதுரை எல்லோரும் அறிந்த ஒன்றாகவே இருக்கிறது. சித்திரை உண்மையிலேயே வருடப் பிறப்பாக இருந்தால், ஏன் "சித்திரை பிறந்தால் வழி பிறக்கும்" என வழக்கில் இல்லாமல் இருக்கிறது? இதுவும் சிந்திக்க வேண்டிய ஒன்று?

 

பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒரு பாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப் படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். பலர் மகர சங்கராந்தி [சமசுகிருதத்தில் 'சங்கரமண' எனில் நகர ஆரம்பி எனப் பொருள் படும்] உத்ராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என தவறுதலாக கருதுகிறார்கள் [There is a common misconception that Makar Sankranti marks the beginning of Uttarayana] இது முற்றிலும் தவறு. மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி என்பது, சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இது ஆரம்பத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். உதாரணமாக கி மு 272 இல், உத்ராயணத்தின் தொடக்கமும், மகர சங்கராந்தியும் ஒன்றாக இருந்தன, பின் முன்னோக்கி நகர்ந்து இன்று ஜனவரி 14 இல் அதிகமாக நிகழ்கிறது. [In 272 BC, Makar Sankranti was on Dec 21. In 1000 AD, Makar Sankranti was on Dec 31 and now it falls on January 14.] என்றாலும் இன்னும் டிசம்பர் 21 க்கும் ஜனவரி 14 க்கும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால், இந்த  தவறான கருத்து இன்னும் தொடர்கிறது. இன்னும் 9000 ஆண்டுகளுக்குப் பின்பு மகர சங்கராந்தி ஜூனில் வந்து தட்சிணாயனத்தின் தொடக்கமாக மாறிவிடும் [Then Makar Sankranti would mark the beginning of Dakshinayana]. எது என்னவென்றாலும், மகர சங்கராந்தி இந்துக்களின் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வேறுபாடையும் நீங்கள் நாட்காட்டியை சிந்திக்கும் பொழுது கருத்தில் கொள்ளவேண்டும். எனவே சூரியனின் அடிப்படையில் நாட்காட்டி உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் ஆரம்ப பயணத்தின் அடிப்படையில் ஒன்று டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் [ஏறத்தாழ தை மாதத்தில்] இருக்க வேண்டும், அல்லது ஜூன் இறுதி அல்லது ஜூலையில் [ஏறத்தாழ ஆடி மாதத்தில்] புத்தாண்டு வர வேண்டும் அல்லவா? கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் மக்கள், கி.மு 400 ஆண்டளவில் தமது நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார்கள். இதன் படி, ஜூலை 26 இல் இவர்களின் புத்தாண்டு வருகிறது. அதாவது ஏறத்தாழ தமிழ் ஆடி மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. இதுவும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று.

 

நன்றி

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

முடிவுற்றது [பகுதி 01 படிக்க அழுத்துக 👉Theebam.com: புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்! /பகுதி 01: "

No comments:

Post a Comment