"பிள்ளைகளின் வளர்ப்பு முறையில்../ பகுதி 02

 

ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் காட்டும் வேறுபாடுகள்"


உலகளவில், எல்லா சமுதாயத்திலும் ஆண் பிள்ளைகளுக்கு ஓரளவு முன்னுரிமை காணப்படுகிறது, என்றாலும் கிழக்கு மற்றும்  தெற்காசியாவில் இந்த முன்னுரிமை மிகவும் அதிகமாக காணப்படுகிறது. உதாரணமாக சீனா, தென் கொரியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை குறிக்கலாம். இங்கு கூடுதலான பெண் குழந்தை இறப்பு ஒரு நீண்டகால பிரச்சினையாக நீடிக்கிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற பகுதிகளில் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு முதலில் இருந்தே பெண் சிசுக்கொலை  நடைபெற்று வருவதாக புள்ளி விபரங்கள் காட்டுகிறது. மேலும் இதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால்,  முக்கிய காரணம், பெண்பிள்ளைக்கு சீதனம் கொடுப்பது என வாதிடப்படுகிறது. சீனாவை பொறுத்த வரையில், அங்கு அரசால் விதிக்கப் பட்டிருக்கும் கடுமையான கருவுறுதல் கட்டுப்பாடு காரணமாக தென்படுகிறது [In India the main cause is, it is argued, the need to pay dowries for daughters. In the context of China it has been suggested that stringent fertility regulation is responsible for heightened discrimination against daughters]  அதே போல, தென் கொரியாவை எடுத்து கொண்டால், அங்கு நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பும் மற்றும் குறைந்த பெண் சுயாட்சியும் [patriarchal family systems and low female autonomy] ஒரு காரணமாகும். இந்த காரணம் இந்தியாவிற்கும் ஓரளவு பொருந்தும்.  இனி மூன்று முக்கிய கேள்விகளுக்கு கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

 

1] ஒரு வீட்டில் பெண் பிள்ளை பிறந்துள்ளாள் என்பதற்கும் ஆண் பிள்ளை பிறந்தமைக்குமான மகிழ்ச்சி வேறு பாடு எப்படி வந்தது?

 

முன்னைய நாகரிகங்கள் தோற்றம் பெற்று, அங்கு ஏற்பட்ட  மத குருமார்களின் ஆட்சி காலத்தில், அல்லது  ஒரு அரசமுறை ஆட்சி காலத்தில், கடுமையான வேலைகள் செய்யவும், நாடு கடந்த வர்த்தகம் செய்யவும், கடலில் சென்று மீன் பிடிக்கவும் காடு அழித்து விவசாயம் செய்யவும் மற்றும் போரிடுவதற்கும் வலுவான ஆண்கள் இயல்பாகவே தேவை பட்டன. இதனாலும் வேறு பல காரணங்களாலும் ஆணின் முக்கியம் தலை தூக்கியது என்பது எதோ உண்மைதான். என்றாலும் பெண்ணின் முக்கியமும் பங்கும் சங்க காலம் வரை பெரிதாக குறைந்து விடவில்லை. அதை இலக்கியம் சான்றாகவும், பெண் தெய்வ வழிபாட்டு முக்கியத்தாலும் மற்றும் 32  பெண்பாற் புலவர்கள் சங்ககாலத்தில் காணப்பட்டது மூலமும் நாம் அறிகிறோம். என்றாலும் இந்த நவீன உலகிலும் இது தொடருவது என்னவோ உண்மைதான். இதற்கு முதல் காரணம் குடும்ப பெயரை காவிக்கொண்டு முன் செல்பவர்கள் ஆணாக இருப்பதும் ஒரு காரணம். அதே போல திருமண சந்தையில் இன்னும் ஆணுக்கு கூடிய வாய்ப்பு இருப்பதும் மற்றும் ஆண்கள் பொதுவாக எல்லா விதமான வேலைகளுக்கும் வேலை நேரங்களுக்கும் இலகுவாக சரி செய்யக்கூடியதாக இருப்பதும், ஆகவே வருமானத்தை பொறுத்த வரையில் முன்னணியில் இன்னும் இருப்பதும் மற்றும் ஒரு காரணமாகும். இன்னும் ஒரு காரணத்தையும் சொல்லியே ஆக வேண்டும், அதாவது ஆண் ஒரு வீட்டிற்கு காவலாக இன்னும் கருதப் படுவதுடன் , எங்கும் எந்த நேரமும் போய்வரக்கூடியதாக இருப்பதும் ஆணின் முன்னுரிமையை அதிகரிக்கிறது எனலாம்

 

2] பெண் பிள்ளைகள் கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் கொடுமை இன்னும் சிலவேளைகளில் தொடருவது ஏன் ?

 

பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க நிறைய செலவாகும் என்பதால் சிறிதும் ஈவு இரக்கம் இல்லாமல் அந்த கொடூரத்தை சிலர் அரங்கேற்றி வந்தனர் என்பது உண்மையே! சில திரைப்படங்கள் கூட இதை எடுத்து காட்டி உள்ளன. உதாரணமாக, மதுரை உசிலம்பட்டி பகுதியில் பெண் சிசுவை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் வழக்கம் முன்பு இருந்தது என கேள்வி பட்டுள்ளேன். ஆனால் இன்றும்,  மார்ச் 06, 2020  இல், ஒரு செய்தி பத்திரிகையில் வந்தது. மதுரை மாவட்டம், செக்கானூரணியை அடுத்த புல்லநேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமுருகன் (வயது 32). இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சவுமியா மீண்டும் கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து அவரை உறவினர்கள் செல்லம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஜனவரி மாதம் 31-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த வைரமுருகன் குடும்பத்துக்கு இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிறந்து 31 நாட்களே ஆன பெண் சிசுவை குடும்பத்தினரே கள்ளிப்பால் கொடுத்து கொன்று புதைத்து விட்டனர் என அது கூறுகிறது. இது ஆச்சிரியமாகவே உள்ளது. எனினும்  இப்படியான நிலை, ஒரு சில சந்தர்ப்பங்களில் நடைபெற்றாலும், அது இன்று அருகி வருகிறது என்றே கூறலாம்.

 

3) பெண் பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே விதிக்கும் கட்டுப்பாடுகள் ஏன் ?

 

நம் சமுதாயத்தில் இன்று பல நடைமுறைகள் மாறி இருப்பினும் இன்னும் ஆண், பெண்பாற்களின் பாகுபாடு மட்டும் மாறாமல் ஓரளவு அதே நிலையோடு இருந்து வருகிறது என்பது உண்மையே. உதாரணமாக, இன்றும் எங்கள் சமூகத்தில் என்ன உடை அணிய வேண்டும், யாருடன் பழக வேண்டும் எனத் தொடங்கி, ஒரு பெண்ணை, குறிப்பாக இரவு நேரத்தில்,  தனியாக அனுப்ப தயங்குவதில் இருந்து பெண்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். மேலை நாட்டில் வாழும் எம் பெண்களிடம் இந்த கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்ந்து காணப்பட்டாலும், இலங்கை, இந்தியா போன்ற பகுதிகளில் இவை இன்னும் அப்படியே தான் பெரும்பாலும் இருக்கின்றன, இக்கட்டுப்பாடுகள் குறித்து பேசுபவர்கள், இவ்வனைத்துமே பெண்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படுகிறது என வாதாடுகிறார்கள். ஆமாம், பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதற்கேற்றவாறு குழந்தைகளுக்குச் சம உரிமை வழங்கி ஆண், பெண் வேறுபாடின்றி வளர்க்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சாலையில் இரவு நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்பு உணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் முக்கிய காரணம், பாலியல் வன்முறைக்கு உள்ளாவதை தடுப்பதுவே என்கிறார்கள். ஆணின், பெண்ணின் உடல் அமைப்பு இதற்கு சான்றாக கூறுகிறார்கள். உதாரணமாக, பெண்ணின் உடலமைப்பால், வலுக்கட்டாயமாக ஆணை தீண்ட முடியாது இருப்பதும், ஆனால் அதேவேளை, ஆணின் உடலமைப்பால், ஒரு பெண்ணை  வலுக்கட்டாயமாக தீண்டக் கூடியதாக இருப்பதும் [பாலுறுப்பு அமைப்பின் வேறுபாடுகளால்] இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவதையும் நாம் மறுக்க முடியாது.

 

வெறுமனவே பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் இவற்றிற்கு தீர்வு வரா. ஆணும் பெண்ணும் இயற்கையின் இயல்போடு, பழகி. தவறுகள். செய்யக் கூடாது என்பதை அவர்களே உணரும் சூழலை உருவாக்கின், இதை, இந்த வேறுபாடை குறைக்க முடியும். மனித சமூகப் புரிதல் இருபாலாருக்கும் ஏற்படுத்த வேண்டும். ஆணும் பெண்ணும் தம் தம் பங்கை அங்கு உணரவேண்டும். ஒரு காலத்தில் பெண் கருவுற்று பிள்ளை பெற்று, அதனால்  குடும்ப நீட்சிக்கு, அன்று பெண்ணின் பங்கை அறியாமல், ஆணே காரணம் என கருதியதால், வளம் செழிக்க லிங்கம் அல்லது ஆண் குறி வழிபாடு அமைந்தது என வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல, புராணக் கதைகளும் இந்திரன், விஸ்ணு போன்ற கடவுள்களின் பாலியல் வன்முறைகளை துதி பாடுகின்றன. ஆகவே, எம் சமூக அடித் தளத்தில் விஷ விதைகள்  விதைக்கப் பட்டு விட்டன என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். எனவே எம் சமூகமும் விழித்தெழுந்து, ஆண் பெண் இரு பாலாருக்கும் இவைகளை சமமாக உணர்த்தி, சிறு வயதில் இருந்தே அவர்களை சரியான வழியில், ஒருவரை ஒருவர் மதித்து நடக்க பழக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன் 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 03 தொடரும் 

 

 

0 comments:

Post a Comment