புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்! /பகுதி 01


"புத்தாண்டை பற்றிய வரலாற்று உண்மைகள் ! [Historical truth of New Year]"

 வரலாற்றில் முதல் முதல் புத்தாண்டு மார்ச் மாதத்தில் கொண்டாடப்பட்டது உங்களுக்கு தெரியுமா ?

 


எளிய மற்றும் வசதியான சந்திரனின் "சுழற்சியை" அடிப்படையாக கொண்ட  முன்னைய அல்லது ஆரம்ப ரோமானிய நாட்காட்டி [Roman Calendar], தொடக்கத்தில் 10 மாதங்களை மட்டும் கொண்டு மொத்தம் 304 நாட்களை உள்ளடக்கி இருந்தன. அந்த பத்து மாதங்களும் மார்ச்சில் இருந்து டிசம்பர் வரை பெயரிட்டு இருந்தன [Martius, Aprilis, Maius, Junius, Quintilis, Sextilis, September, October, November, and December]. ரோம் நகரத்தை கி.மு. 753ல் நிறுவியதாக கருதப்படும் முதலாவது மன்னன் ரோமுலஸ் [Romulus, the legendary first ruler of Rome] இந்த  நாட்காட்டியை கி.மு.700 இல் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. மேலும் அவர்களின் பாரம்பரியத்தின் படி,  நுமா பாம்பிலியஸ் [நுமா பொம்பிலியஸ்] என்ற ஆட்சியாளரால் [the Roman ruler Numa Pompilius] ஜனவரி மற்றும் பெப்ரவரி சேர்க்கப்பட்டு, ஒரு ஆண்டின் மொத்த நாட்கள் 355 ஆக அதிகரித்தது. பண்டைய அறிஞர்களின் கூற்றுப்படி, ரோம் நிறுவப்பட்ட நாளிலேயே, நுமா பாம்பிலியஸ் பிறந்தார் - கிமு 753 ஏப்ரல் 21. அவரது ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி வேறு எதுவும் அறியப்படவில்லை. பின் கிமு 46 இல், ரோமானிய சர்வாதிகாரி ஜூலியஸ் சீசர், சில அதிக நாட்களை சேர்த்து புது ஜூலியன் நாட்காட்டியை [Julian Calendar] சூரியனின் "சுழற்சியுடன்" மறுசீரமைத்து அறிமுகப்படுத்தினார். ஆரம்ப ரோமன் நாட்காட்டி மார்ச் முதலாம் திகதியை புத்தாண்டின் தொடக்கமாக கருதியது. ஆனால் ஜூலியன் நாட்காட்டி,  ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாக கருதியது. இது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு, யூலியன் நாட்காட்டிக்கு பதிலாக  கிரிகோரியன் நாட்காட்டி அல்லது கிரேக்க நாட்காட்டி [Gregorian calendar] அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நாட்காடியில், இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன.

 

ஆங்கிலப் புத்தாண்டு என்றால், எல்லோரும் அது ஜனவரி முதலாம் திகதி என்று இன்று ஏற்றுக்கொள்ளும் நிலையில், தமிழ் புத்தாண்டு சித்திரையா ['ஏப்ரல்' மத்தியில் இருந்து 'மே' மத்தி தமிழரின் சித்திரை மாதம் ஆகும்]? தையா ['ஜனவரி' மத்தியில் இருந்து 'பெப்ரவரி' மத்தி தமிழரின் 'தை' மாதம் ஆகும்]? என்று குழப்பமும் கருத்து மாறுபாடும் காணப்படுகிறது. இதைப்பற்றி பிறிதொரு கட்டுரையில் அலசுவோம்.

 

குறைந்தது 4000 ஆண்டுகளாக, உலகெங்கிலும் உள்ள நாகரிகங்கள் புத்தாண்டை - ஆண்டின் தொடக்கத்தை - கொண்டாடி வருவதாக வரலாறு சான்றுபகிர்கிறது. இன்று கிரிகோரியன் நாட்காட்டியின் படி, டிசம்பர் 31 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி முதலாம் திகதி வரை புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. பொதுவான மரபு அல்லது வழமையின் படி,  விருந்துகளில் வழிபாடுகளில் கலந்துகொள்ளுதல், புத்தாண்டு சிறப்பு உணவுகளை உண்ணுதல், புதிய ஆண்டிற்கான தீர்மானங்களை உருவாக்குதல் [making resolutions for the new year] மற்றும் பட்டாசு கொளுத்துதல் அல்லது அந்த வான வேடிக்கைகளை பார்த்தல் போன்றவையில் மக்கள் ஈடுபடுகிறார்கள்.

 

உலகில் முதல் முதல் பதியப்பட்ட, வரலாற்று ரீதியான புத்தாண்டு விழாவை நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய இராக் [Iraq] எனப்படுகிற நாட்டின் தென்பகுதியில், பண்டைய மெசொப்பொத்தேமியா [சுமேரிய] நாகரிகத்தின் முக்கிய அங்கமாக திகழ்ந்த பாபிலோனிய நாகரிகத்தில் காணக்கூடியதாக உள்ளது. ‘உத்தராயணம்’  [summer Solstice / Sanskrit words "uttara" (North) and "ayana" (movement)] என அழைக்கப்படும் சூரியன் வடக்கு முகமாகச் செல்லும் டிசம்பர் இறுதி பகுதியில் இருந்து [around 22 December] முதல் ஆறுமாத காலத்தில், பூமத்திய ரேகையை அது கடக்கும் நாளில் இரவும் பகலும் சமமாக இருக்கும். இந்த சம இரவு நாளை ஆங்கிலத்தில் Equinox என்று அழைப்பர். ஆண்டுக்கு இரு முறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை [பூமத்தியரேகை, Equator] கடப்பது நிகழுவது வழக்கம். சாதாரணமாக உத்தராயணத்தில் மார்ச் 20 அல்லது 21அன்றும் மற்றும் தட்சிணாயத்தில் செப்டம்பர் 22 அல்லது 23 அன்றும் இவை பொதுவாக நிகழும் [around 20 March and 23 September]. பாபிலோனியர்கள் மார்ச் மாத சம இரவு நாளுக்கு பின் வரும் முதல் அமாவாசையை [first New Moon after the vernal or spring equinox which was used to indicate the first day of spring] தமது புத்தாண்டாக கொண்டாடினார்கள் என்று வரலாறு கூறுகிறது. இவர்களின் புதுவருட கொண்டாட்டம் 12 நாட்கள் நீடித்ததாக அறியமுடிகிறது. இதை அகிடு கொண்டாட்டம் [Akitu festival] என்றும் அழைக்கப் படுகிறது. இந்த புத்தாண்டு தினத்தில், வசந்தக் காலத்தை வரவழைக்கும் பொருட்டும் விவசாயம் அதிக பயன் தரும் பொருட்டும், மேலும் இவற்றை உறுதி படுத்தும் பொருட்டும், உள்ளூர் மன்னன், கி மு 3000 ஆண்டு அளவில் ஆண்ட சுமேரியன் புராண மன்னன் துமுழி (Dumu Zi) அல்லது துமுஸ்/தம்முஸ் (Dumuz /Tammuz) என்ற ஆண் தெய்வகவும், உள்ளூர் பெண் மதகுரு, துமுஸின் காதலி ஈனன்ன ஆகவும், பங்காற்றி [ceremonial union of male [Dumuz] and female [Inanna] fertility gods] விழா நடத்தினார்கள். புது வருடத்தில் இந்த இருவருக்கும் இடையிலான  திருமணம் அல்லது ஆண் பெண் உறவு தான், இந்த பல நாட்கள் நடை பெரும் விழாவின் உச்சக் கட்டம் ஆகும். இந்த நேரத்தில்தான் ஒரு புதிய மன்னர் முடிசூட்டப் படுவார் அல்லது தற்போதைய ஆட்சியாளரின் தெய்வீக ஆணை அடையாளமாக புதுப்பிக்கப் படும் [the current ruler’s divine mandate was symbolically renewed]

 

இவ்வாறு, பழங்காலத்தில் உலகம் முழுவதும், அவர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாக கொண்டு அதிநவீன நாட்காட்டிகள உருவாக்கியது தெரியவருகிறது. அந்த குறிப்பிட்ட நிகழ்வு அதிகமாக, ஆண்டின் முதல் நாளை, ஒரு விவசாய அல்லது வானியல் நிகழ்வுகளுடன் [an agricultural or astronomical event] சம்பந்தப் படுத்தி இருப்பது தெரியவருகிறது. உதாரணமாக, பண்டைய எகிப்து, நைல் நதிக்கு நன்றி சொல்லவும், அது தொடர்ந்து ஓடுவதற்காக பிரார்த்திப் பதற்காகவும் [to give thanks, and to pray for the Nile’s flow] தமது புத்தாண்டை கொண்டாடுகிறது. பொதுவாக இரவு நேரத்தில் ஒளிரும் நட்சத்திரங்களில் மிகவும் பிரகாசமானது சிரியஸ் [star Sirius] என்னும் நட்சத்திரம் ஆகும். இது அடிவானத்தில் முதல் தோன்றும் நாளே எகிப்தியர்களின் புத்தாண்டின் தொடக்கம் ஆகும். ஜூன் நடுப் பகுதியில் இருந்து ஜூலையின் ஆரம்பத்தில் [mid-June to early July] இது நடைபெறுகிறது. மற்றது இந்நாளிலேயே உலகிலேயே மிகப்பெரிய நதியான நைல் வெள்ளப் பெருக்கெடுக்க தொடங்கி எகிப்திய தேசத்தை வளப்படுத்துகிறது. இதை அவர்கள் வெபெட்-ரென்பெட் [Wepet-Renpet / “opening of the year”] கொண்டாட்டம் என்றும் அழைப்பர். அவ்வாறே வசந்த விழா என அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு (Chinese New Year) தட்சிணாயனத்தின் பின் வரும், இரண்டாவது அமாவாசையில் வருகிறது [occurred with the second new moon after the winter solstice]. இது அதிகமாக, ஜனவரி 21 மற்றும் 20 பிப்ரவரி [between 21 January and 20 February] இடையே அமாவாசையை அடுத்து வரும் புதிய நிலவு தோன்றுவதுடன் ஆரம்பமாகின்றது. இன்றும் கொண்டாடப்படும் பழமையான மரபுகளில் ஒன்று இந்த சீனப் புத்தாண்டு. இது ஷாங்க் வம்சத்தின் போது [during the Shang Dynasty], மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமாகியது என்பது குறிப்பிடத் தக்கது.

 

பெரும்பான்மையான தமிழர்கள் மற்றும் இலங்கையர்கள் இன்று கொண்டாடும் சித்திரை மாதத்தில் [ஏப்ரல் நடுப்பகுதியில்] பிறக்கும் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அது தமிழர்கள் மத்தியிலும் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்தது. இது அறுபது ஆண்டு சுழற்சி முறையையும் [The 60 Year Cyclic Calendar (Sexagenary Calendar)] கொண்டது. அதே போல சீன நாட்காட்டியும்  ஒரு அறுபது ஆண்டு சுழற்சி முறை நாட்காட்டி ஆகும். மேலும் அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392ம் பக்கத்தில் அறுபது ஆண்டுகளுக்கான விளக்கம் நம்பமுடியாத புராண கதையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் 'பிரபவ' முதல் 'அட்சய' என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று கூட தமிழ்ப் பெயர் கிடையாது.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி 02 தொடரும்....படிக்க அழுத்துக 👉Theebam.com: புத்தாண்டு வரலாற்று -உண்மைகள்! /பகுதி 02

No comments:

Post a Comment