கிள்ளை மொழி பேசும் பிள்ளைக்கு ஒரு தாலாட்டு"

 


"கிள்ளை மொழி பேசும் மரகதமே

கிளியே எங்கள் குலக் கொடியே

கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாட

கிருத்திகை நன்னாளில் கண் உறங்காயோ?"

 

"மஞ்சள் முகத்தாளே குதலை மொழியாளே 

மடியில் தவழ்ந்து தள்ளாடி சத்தமிட்டு 

மல்லிகை பந்தலில் ஓடி விளையாடி  

மகரிகை தொங்கும் மஞ்சத்தில் உறங்காயோ?"

 

"சின்ன பூவே சிங்கார பூவே 

சிஞ்சிதம் காதில் தேனாய் விழ

சித்திரம் பேசும் கண்ணும் ஓய 

சிந்தைநிறுத்தி இமைகள் மூடாயோ ?" 

 

"வடந்தை உன்னை தழுவாது இருக்க

வண்ண மலர்களால் தூளி கட்டி

வஞ்சகர் கண் படாது இருக்க

வட்ட  பொட்டிட்டு விழிகள் மூடாயோ ?"

 

"பச்சை இலுப்பை அளவாய் வெட்டி

பவளக்கால் தொட்டில் அழகாய் கட்டி

படுக்க இதமாய் கம்பளி விரித்து

பல்லாண்டு வாழ்வாய் நீ உறங்காயோ ?"


"யாழ் எடுத்து ராவணன் இசைமீட்க 

யாவரும் ஒன்றுகூடி கானம் கேட்க

யானை துதிக்கையால் ஏணை ஆட்ட

யாழ் மொழியாளே கண் உறங்காயோ?" 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 

[குறிப்பு :கிருத்திகை - கார்த்திகை,

குதலை - மழலைச் சொல்,

 சிஞ்சிதம் - அணிகலவொலி,

தூளி - ஏணை,

வடந்தை - வாடை]




No comments:

Post a Comment