அண்மையில் இலங்கையில்
ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசுக்கான பரீட்சையின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகள் நம்மைத்
திடுக்கிட வைக்கின்றன.
பரீட்சையில் பூரண 200 புள்ளிகள்
எடுத்தவர்கள் 10 பேர்களில், 9 சிங்கள
மாணவர்கள், 1 முஸ்லீம்
மாணவர். ஒரு தமிழ் மாணவன் தன்னும் இல்லை!
யாழ்ப்பாணத்தில் எடுத்த
உயர் புள்ளி 193 மட்டுமே.
கிழக்கிலும், மலையகத்திலும் 192. எவருமே 200 புள்ளி
எடுக்கும் அளவுக்கு வர முடியவில்லை!
ஈழம் வாழ் தமிழரின்
கல்விமேல் உள்ள ஆர்வம் மேலும் மேலும் மங்கிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கின்றது
என்பதுக்கு இதுவும் ஒரு சான்றாக இருக்கிறது.
யுத்த காலத்திற்கு முன் வரையில் , தமிழனின் கல்வித்
தரத்தினை எதிர்கொண்டு வென்றுவிட எவராலும் முடியவில்லை. சர்வகலாசாலை நுழைவுகளை 90% அளவுக்கு
ஆக்கிரமித்துக் கொள்ளும் அளவுக்கு படிப்பில் சூரர்களாய் இருந்தார்கள். அதில் வட
பகுதித் தமிழர் பெரும்பான்மையான இடங்களை நிரப்பிக் கொள்வார்கள். தென் பகுதிகள்
பெரும் நீர் வளமும், நில வளமும், தொழில்
அபிவிருத்தி வசதிகள் பலவற்றையும் கொண்டிருப்பதால் அங்குள்ளோருக்குப் படிப்பு
என்பது அவசியமற்ற ஒன்றாக இருந்தது. ஈழப்
பகுதி ஒரு வறண்ட பூமியாய் இருப்பதால், வாழ்க்கையில் உயர, கல்வி ஒன்றுதான் அவர்களின் ஒரே வழியாக இருந்தது.
உயர் கல்வி கற்பதற்காக
தெரிவு செய்யப்படும் தமிழரின் எண்ணிக்கை, அரசாங்கத்தின் தரப்படுத்தல் கொள்கையினால் கணிசமாகக்
குறைந்தது. இதனால், யாழ் அல்லாத பிற
ஈழப் பகுதி மாணவர்களுக்கு சிறிது நன்மை அடைந்தார்கள். ஆனால்,
பெரும் நன்மை அடைந்தவர்கள் சிங்கள மாணவர்களே.
30 வருட காலத்தில் கூட, பல இடம் பெயர்வுகள், எறிகணைத் தாக்குதல்கள், பதுங்கு குழி வாழ்க்கைகள், பல மரணங்கள்
நடுவிலும் ஓரளவுக்கு கல்வியில் அக்கறை செலுத்தி வந்தனர் என்றுதான்
சொல்லவேண்டும். ஆனால், யுத்தம்
முடிந்ததில் இருந்து கல்வித்தரம் இறங்கு முகமாகவே வீழ்ந்து கொண்டு இருப்பது என்பது
கவலை தரும் செய்தியாகும்.
கல்வியின் தரம்
குன்றியதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும்?
1. தரப்படுத்தலால் வந்த மனச் சோர்வு:
எப்படித்தான் கடினமாய்ப்
படித்தாலும், தரப்படுத்தல்
முறை காரணத்தினால் முழுப் புள்ளி எடுத்தால்தான் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தால்
வந்த மனச் சோர்வினால், படிப்பில்
ஆர்வம் குன்றியமை.
2. வாழ் வெட்டுக்
கலாச்சாரத்தில் வந்த நாட்டம்:
இலங்கை அரசுக்கு எதிராகச் சண்டை
இட்ட தமிழ் மக்களை, அவர்களுக்குள்ளேயே
வெட்டுப்படவும், மக்களை திகிலுடன்
வைத்திருக்கவும் கொண்டு வரப்பட்டு, ஊக்கப்படுத்தி
வைக்கப்பட்டிருக்கும் ஓர் இளைஞர் கூட்டம் 'ஆவா (சிங்களம்:
வந்திட்டான்) குழு'. பிரபாகரனையே
ஒழித்தவர்களுக்கு இந்தச் சின்னப் பயல்களை
அடக்க முடியாதாம். இந்தக் குழுவில் சேர்ந்தால் பொலிஸ் வரும், ஆமி பிடிக்கும்
என்ற பயமே இல்லாமல், கொக்கரித்து
திரிந்து, வேண்டாதவர்களை
வாள்களால் வெட்டிச் சரித்து, (துப்பாக்கிக்கு அனுமதி இல்லை - பயம்தானே) எல்லாரையும் அடக்கி ஒரு சினிமா ஹீரோக்களாக வலம்
வரலாம் என்று நினைத்து, கல்வி கற்பதனைப்
புறம் தள்ளியமை.
3. போதை பொருள் பாவனை ஊக்கத்தால் வந்த மயக்கம்:
திரும்பவும் தமிழ் மக்கள்
கையில் ஆயுதம் எடுப்பதைத் தடுக்க, அவர்களின் மூளையை
மந்த நிலையில் எப்பவுமே தொடர்ந்து வைத்திருக்க, தெற்கிலிருந்து தாராளமான அளவில், வேண்டிய போதைப்
பொருள் வஸ்துக்கள், தமிழருக்கு
சுலபமான வழிகளில் விநியோகம் செயயப்படுகின்றன. 30 வருடங்கள் இல்லாது இருந்தது இப்பொழுது இருக்கிறது. இதற்கு
அடிமையாகி இருப்பவர்களுக்கு பாடசாலையும் ஏன்? படிப்பும் ஏன்?
4. விபசாரிகளில் ஏற்பட்ட மோகம்:
மேலும் ஓர் ஆயுதமாக, இப்பொழுது தெற்கு விபசார பெண்கள் வடக்கில் கொடி
கட்டிப் பறக்கின்றார்கள். இவர்களுக்குத் தண்டனை வழங்க ஒருவரும் இல்லை. காமமும், மோகமும்
சேர்ந்தால் புத்தகமும், கல்வியும் எங்கே
தென்படும்?
5. வெளிநாட்டுப் பணத்தால் வந்த சோம்பேறித் தனம்:
இது ஒரு பிரதானமான காரணம்
ஆகும். தமிழ் மக்களுக்கு,
முக்கியமாக
வடக்கு வாழ் தமிழருக்கு, அதுவும் யாழ்
குடா நாட்டவர்களுக்கு, ஒருவரோ
அல்லது பலரோ வெளிநாடுகளில் நல்ல நிலையில்
வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். பிள்ளைக்கு டெலிபோன், மோட்டார் சைக்கிள், ஓட்டோ வேண்டும்
என்றால் ஒரு போன் கோல் போதும், பிரச்சனையே இல்லை, பணம் வந்து சேரும். வருடக்கணக்காகப் படித்து, மாதம் 20, 30, 40 ஆயிரம்
சம்பளத்துக்கு நாளாந்தம் அலைந்து திரியாது, வெளிநாட்டு மகனோ, மகளோ, அண்ணாவோ, அக்காவோ, மாமாவோ, மச்சானோ அவர்களின் ஒரு நாள் சம்பளத்தை அனுப்பி வைக்கலாமே
என்று கணக்குப் பார்த்து,
(அவர்களின் செலவு விகிதத்தை இலகுவில் மறந்து), எதிர்பார்த்து இருந்து, தேவைப்படும்
போதெல்லாம் கேட்ட பணம் கிடைத்து, பிள்ளைகள் காவாலிகளாக ஊர் சுற்றித் தெரியவே நேரம் இல்லையாம், படிக்க எங்கு
நேரம்?
நாம் கெட்டு, சீரழிந்த, வலுவிழந்து
போகத்தான் போகின்றோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கும்போது, அதிகாரம் கொண்ட
புறச் சதிகாரக் கூட்டம் தொடர் வெற்றி அடைந்து கொண்டே இருக்கும்.
மற்றயவர்களைக் குறை
சொல்வான் ஏன்; நமக்கு எங்கே
அறிவு போனது?.
சுய புத்தி என்று ஒன்று வந்தால்தான் தமிழன் மீண்டெழுந்து வெற்றி கொள்வான்!
எண்ணம்: செல்வதுரை ,சந்திரகாசன்
0 comments:
Post a Comment