கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்

[The Truth About Christmas!]

 


நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் ..  கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது  ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை  டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை  ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

 

நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட  பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா?  நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன்

 

உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும்  மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம்  மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது

 

இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும்  வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ?  ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும்.

 

கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர்  15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.]

 

ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு  டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம்.  

 

கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான  'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று  பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என  நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும்.  இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது.

 

கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி ..  காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்;  கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது


இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! 

எல்லோருக்கும் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


1 comment: