கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள்
சொல்கின்றார்களே. இது எதனால்?
எஸ். கயூரன் யாழ்ப்பாணம்
பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பார்கள். சில
விதமான சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. குறிப்பிட்ட பகுதியை
மட்டும் மரக்கச் செய்துவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். மயக்க மருந்து
கொடுத்தால் அவர் நினைவிழப்பார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை சற்றேனும் அறிய
முடியாத நிலையில் இருப்பார்.
மயக்க மருந்து கொடுத்திருக்கும்போது எமது இச்சை செயற்பாடுகள் மட்டுமின்றி
அனிச்சை செயற்பாடுகளும் தற்காலிகமாகச் செயற்படாது.
இதன்காரணமாக இரைப்பையில் உணவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக
வெளியேறலாம். அல்லது தொண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மேலெழுந்து வரக்
கூடும். அவ்வாறு மேnலுழுந்து வரும் உணவு அல்லது நீராகாரம்
சுவாசப்பையினுள் சிந்திவிடக் கூடும்.
உணவானது அவ்வாறு மேnலுழுந்து வரும்போது, அது சுவாசக் குழாய்களுக்குள் சென்று அவற்றை அடைத்துவிடும் ஆபத்து உண்டு.
இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து உண்டு. அத்துடன் உணவு அல்லது
நீராகாரம் சுவாசப்பையினுள் சென்றுவிட்டால் சுவாசப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு
நியூமோனியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இவை இரண்டுமே உயிராபத்தைக் கொண்டுவரக்
கூடியவை.
இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்பாகவே மயக்க மருந்து கொடுக்கும்
வேளையில் இரைப்பை வெறுமையாக இருக்க வேண்டும். எனவேதான் வெறும் வயிற்றில்
இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.
இருந்தபோதும் நவீன மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் பாதுகாப்பனவை. சுவாசக்
குழாய்களுக்குள் உணவு அல்லது திரவம் செல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவேயாகும்.
எவ்வாறாயினும் வெறும்வயிற்றில் இருக்க வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. ஆனால்
எவ்வளவு நேரத்திற்கு இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில்
வேறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு.
நீங்கள் சொல்லியபடி 12 மணிநேரம் எதுவும் உட்கொள்ளக் கூடாது என்று
கட்டுப்பாடு விதிப்பது பழைய காலத்தில். இதுவே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த
முறையாகும். இன்றும் ஒருசிலர் இதைச் சொல்லக் கூடும்.
காலையில் 9 மணியளவில் சத்திரசிகிச்சை நடக்கும் என
எதிர்பார்ப்பதால் இரவு உணவு உட்கொண்ட பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ வேண்டாம்
எனச் சொல்லப்பட்டது.
ஆனால் இப்பொழுது அவ்வளவு நீண்டநேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதில்லை
என்ற கருத்தே நிலவுகிறது. பொதுவாக 6 மணிநேரம் வெறும் வயிற்றில் இருந்தால் போதும் என்பதே
தற்போதைய நடைமுறையாகும்.
குழந்தைகளின் இரைப்பை விரைவாகச் செயற்படுவதால் அவர்களுக்கு 4 மணித்தியாலயங்கள் வெறும் வயிற்றில் இருப்பது போதும் என்ற நடைமுறை உள்ளது.
நீண்ட நேரம் ஆகாரம் இன்றி வெறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படக்
கூடிய சாத்தியம் உண்டு. உதாரணமாக மயக்க மருந்தின் வேகம் தணிந்து நினைவு
திரும்பும்போது தலையிடி, தலைச்;சுற்று, ஓங்காளம் போன்ற உடல் சற்று அசௌகர்யங்கள் ஏற்படலாம்.
அத்தோடு நீண்ட நேரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு நிலை
(Dehydration) ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்களைக்
கண்டுபிடித்து அதனூடாக ஊசி ஏற்றுதல், பரிசோதனைகளுக்காக இரத்தத்தை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் மருத்துவர்களுக்கும்
தாதியர்களுக்கும் சிரமமாகலாம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்கள்
பல முன்னேற்றமான சிபார்சுகளைச் செய்துள்ளார்கள்.
அதன்படி மயக்க மருந்து கொடுப்பதற்கு இரண்டு மணித்தியாலயங்கள் முதல் வரை நீர், பால் சேர்க்காத வெறும் தேநீர்,பழநார்கள் அற்ற வெறும் பழச்சாறு, மென்பானம் போன்றவற்றை அருந்தலாம் எனச் சிபார்சு செய்கிறார்கள்.
வரட்டிய பாண், பால் தேநீர் போன்ற ஆகாரங்களை சத்திரசிகிச்சைக்கு ஆறு
மணிநேரத்திற்கு முன்வரை உட்கொள்ளலாம்.
ஆனால் சற்று கனதியான உணவுகளை சத்திரசிகிச்சைக்கு எட்டு மணிநேரத்திற்கு முன்னரே
நிறுத்திவிட வேண்டும். கனதியான உணவு என்னும்போது இறைச்சி, பொரித்த வதக்கிய உணவுகள்ரூபவ் எண்ணெய் பட்டர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்கூறிய அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள்
எமக்கும் பொருந்தும் என்ற போதும் ஒவ்வொருவரும் அவரவரது மருத்துவர்கள் சொல்லும்
கட்டுப்பாடுகளையே கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு தனிநோயாளரது தேவைகளை கருத்தில்
கொண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாறே கட்டுப்பாடுகளை
விதிக்கிறார்கள்.
இருந்தபோதும் அவற்றில் ஏதேனும் இடைஞ்சல்கள் அசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் செய்வதும் சாத்தியமே.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
No comments:
Post a Comment