மனிதனின் தோற்றமும் சமய நம்பிக்கைகளும்.

மனித இனத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விஞ்ஞானிகள் சொல்லும் விளக்கத்தைவிட, பல்வேறு சமய மெஞ்ஞானிகள் வெவ்வேறுவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.


உலகெங்கும் உள்ள விஞ்ஞான வல்லுநர்கள், நிலத்தடி ஆய்வுகளின்போது அகப்பட்ட கடந்த கால மனித எச்சங்களை ரேடியோமெட்ரிக் டேட்டிங் என்னும் தொழில் நுட்பம் மூலம் ஆய்வு செய்து, கூறுகளில் உள்ள கதிரியக்க அணுக்களின் எண்ணிக்கையை வைத்து, மனிதனின் தோற்றம் சுமார் எவ்வளவு காலத்திற்கு முன்னர் நடந்திருக்கும் என்று முடிவு செய்கிறார்கள்.


இவர்களின் ஆராய்ச்சியின்படி, எல்லா உயிரினங்களும், மனித இனம் உட்பட, படிப்படியான பரிணாம வளர்ச்சியின் மூலம்தான் தற்போதைய நிலையை அடைந்திருக்கின்றன. இவ்வளர்ச்சியில், எமது முதல் குரங்கு வடிவ மூதாதையர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினர், அவர்கள் அநேகமாக ஆப்பிரிக்காவில் இரண்டு கால்களில் பல்லிகள் போல் நடக்க ஆரம்பித்தார்கள்.


அவர்கள் 4 கோடி வருடங்களுக்கு முன்னர் நாலு காலில் தவழும் முழுக் குரங்கினமாகவும், ஒன்றரைக் கோடி  வருடங்களுக்கு முன்னர் இரண்டு காலில் நடக்கக் கூடிய குனிந்த குரங்குகளாகவும் மாறினார்.  25 லட்சம்   ஆண்டுகளுக்கு முன்பு, நிமிர்ந்த மனித குரங்குகளாக, கூரிய ஆயுதங்களைப் பாவிக்கும் அறிவு பெற்றவர்களாக ஆசியா மற்றும் ஐரோப்பியப் பிராந்தியங்களை நோக்கி நகர்ந்தனர். 150,000 ஆண்டுகளுக்கு முன்னர், கிட்டத்தட்ட நமது உடலுறுப்புகள் போன்ற உடலமைப்புகள் கொண்ட இனத்தவர்கள் உருவாகத் தொடங்கினார்கள்.


நம்மைப்போல உருவ  அமைப்பு போன்ற மாற்றம் பெறத் தொடங்கியது ஓர் 40,000 வருடங்களுக்கு முன்பிருந்துதான். இந்த மாற்றம் இன்னமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது! ஒரு நூறு வருடத்துக்கு முன்பிருந்தவர்களின் புகைப்படத்துடன் தற்போது உள்ளவர்களின் முக அமைப்பைப் பார்த்தாலே சிறிய வித்தியாசம் தெரிவதை அவதானிக்கலாம்.


இந்த தொடர் பரிணாம வளர்ச்சியானது மனித இனத்திற்கு மட்டுமல்ல சகல ஜீவ-ஜந்துக்களும் பொருந்தும்.


இது விஞ்ஞானிகளின் ஏகோபித்த ஒரு முடிவு.


ஆனால், நம்ம சமயங்கள் என்னதான் சொல்கின்றன?


1. யூத, கிறீஸ்தவ, இஸ்லாமிய நம்பிக்கை:

இவர்களின் கடவுள், பூமி, வானம், வெளிச்சம், இருள், ஒரு நாளைப் பிரிக்கும் இரவு, பகல், நீர், நிலம்,மரம் செடி சூரியன், சந்திரன், வெள்ளிகள், கடல் மற்றும் நிலம் வாழ் உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் என்று எல்லாவற்றையும் படைத்துக் கடைசியில் தனது உருவில் ஆதாம் என்று ஓர் ஆணையும், ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஏவாள் என்ற ஒரு பெண்ணையும் படைத்தார். இவ்வளவு படைப்புகளையும் ஆறு நாட்களில் செய்ததும் ஏழாம் நாள் சற்று இருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.


இந்த ஆதாம்-ஏவாள் தம்பதிகளின் மகன் செத், அவர் மகன் ஈனோஷ்..... இப்படியாக  ....ஹெலி மகன் ஜோசெப் மகன் இயேசு என்று 63 ஆவது (அல்லது 77 ஆவது) பரம்பரைதான் இயேசு என்று சொல்லப்பட்டிருக்கின்றது.


அப்படி என்றால், வெறும் 4000-5000 வருடங்களுக்கு முன்னர்தான் எல்லாமே உருவாக்கப்பட்டன, அதுவும் இதே உருவ அமைப்பிலேயே! அதற்கு முன்னர் இந்தப் பிரபஞ்சங்களும் இல்லை; உயிரினங்களும் இல்லை;.ஒன்றுமே இல்லை!  டைனோசரசுகள் கூடி இல்லை. வேடிக்கைதான்!


நாளென்றால் இதுதான் என்று பூமிக்கு இவர்களின் கடவுள் வகுத்து வைத்துவிட்டுப் போனாலும், அதை எதிர்க்க முடியாத  சமய வாதிகள், நாள் என்பதற்குப் புதிய விளக்கம் கொடுத்து அது 1000 வருடங்கள் என்றும், 50,000 வருடங்கள் என்றும் கூர்ப்புக் கொள்கைகளுக்கு ஈடாக நியாயப்  படுத்தப் பார்க்கிறார்கள். என்றாலும் உயிரினங்கள்  எல்லாம் பரிணாம வளர்ச்சி அடையாது, இதே உருவத்தில் ஓர் ஆண், ஒரு பெண் என்று படைத்தார் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையே!


இந்த விடயத்தில், தொடங்கி 200 வருடங்கள் ஆகியுள்ள பஹாய் மதம் ஓரளவு பரிணாமக் கொளகையை ஏற்றுக்கொண்டுள்ளது.


2.புத்த சமயக் கொளகை:

புத்த சமயத்தில் தேவர்கள் மட்டுப்படுத்திய ஆற்றலையே கொண்டவர்கள். எந்த ஒரு கடவுளும் இந்தப் பிரபஞ்சத்தையோ, உயிரினங்களையோ படைக்கவில்லை; அவை என்றென்றும் உள்ளவை, உயிரினங்கள் எல்லாம் எண்ணுக்கடங்காத காலங்களாக பிறந்து, இறந்து கொண்டே இருக்கும்.

 

இந்தக் கருத்து ஒருவகையில் ஏற்றுக் கொண்டாலும், உயிரினம் தோன்றியது பற்றி பிழையான கொள்கையைக் கொண்டுள்ளது.


3.இந்து சமயக் கொள்கை:

பிரபஞ்சம் எல்லாம் லட்சம் கோடி வருடங்களுக்கு முன் உருவானவை. உயிர்கள் எல்லாம் பிறந்து, இறக்கும் தொடர் சுழற்சியைக் கொண்டவை. பரம்பொருளாகி இறைவனால் இவை படைக்கப்பட்டு 30 கோடி வருடத்திற்கு ஒருமுறை அழிக்கப்படும் . அழிப்புக்கும் படைப்பிற்கும் இடையில் ஒரு 12 கோடி வருடங்கள் ஒன்றுமே இருக்கா. தற்போதைய பிரபஞ்சம்  தற்போதைய பிரபஞ்சத்தில் நாம் இன்னும் அரைவாசிக்கு காலத்திக்கூடி இன்னும் தாண்டவில்லை.


பல குழப்பங்கள் தரக்கூடிய, விளங்கிக்கொள்ள முடியாத பல இலக்கங்களைக் கொண்டிருந்தாலும், இந்து சமயக் கொள்கை ஓரளவுக்கு பரிணாமக் கொள்கைதனை ஏற்றுக்கொள்ள வைக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.


ஆனால், கால நேரம் பிரபஞ்ச உருவாக்கத்திற்குச் சரியாக இருந்தாலும் உயிரின தோற்றம் பற்றி வருடங்கள் லட்ஷக் கணக்கில் இல்லாமல் கோடானு கோடி என்று முடியாது  போய்க்கொண்டிருக்கின்றது, நம்ப முடியவில்லை.


நாம் நேரிலேயே பார்க்கும் உயிரினங்களின் மாற்றங்களை வைத்து சுலபமாக மனித இனத்தின் தோற்றம் பற்றி ஓரளவு ஊகித்து அறிய முடிகின்றது. பரிணாமக் கொள்கையை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.


மாறாக, இந்தக் கடவுள்மார் எல்லாம் சொல்லி வைத்ததில் எது உண்மை, எது பொய் என்று உண்மையான கடவுள் வந்துதான் சொல்லவேண்டும்;

பொறுத்திருந்து பார்ப்போம்.

ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன்

No comments:

Post a Comment