ஆரணி (AARANI) இந்தியா மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த
திருவண்ணாமலை மாவட்டத்தில், இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது.
இந்த நகரம் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
சோழர், பல்லவர்கள் காலத்தில் ஆரண்யம் என்று அழைக்கப்பட்டு வந்த ஆரணி ஜாகீர்தார்களின் தலைமையிடமாக விளங்கியது. இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் (ARANI SILK CITY) என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் (ARANI RICE CITY) என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது.
ஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆரணி நகரம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளது'
கிபி.4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சியின்போது
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால
மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய வணிகத் தலமாக ஆரணி விளங்கியது.
சுமார் 300வருடங்கள் சோழர்களின் பரம்பரையான, சோழர்கள், விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்கன் சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய மன்னர்கள்
ஆரணியை ஆட்சி செய்தனர்.
இராஷ்ரகூடர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு
மன்னர்களும் ஆரணியை ஆட்சி செய்தனர்.
கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைமையிடமாக
கொண்டு திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூர், ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
கி.பி.1640 முதல் 1901 ஆம் ஆண்டு வரை ஆரணி ஜாகீர்தார், சிவாஜி ஆகியோர்கள் ஆரணியை நகரமைத்து சத்திய விஜய
நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு உள்ளது.
1902 ஆம் ஆண்டு முதல் 1948 அதாவது இந்தியா விடுதலை அடையும் வரை
பிரிட்டிஷின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆரணி ஜாகீர்தார்களான ராஜா திருமலை IV ராவ் சாஹிப் - (1902-1931) மற்றும் ராஜா சீனிவாச IV ராவ் சாஹிப் - (1931-1948) [3] ஆகியோர்கள் ஆரணியை ஆட்சி செய்து வந்தனர்.
பெயரின் பிறப்பு
பழங்காலத்தில் ஆரணியை ஆரண்யம் என அழைக்கபட்டது
ஏனெனில் இந்த பெயர் சமஸ்கிருதம் மொழியிலிருந்து வந்திருக்கலாம் எனவும். ஆர் என்பது
அத்தி மரம். முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரம் இருந்துள்ளது.
இந்த இடத்தில் கமண்டல நாகநதி ஆறு உள்ளது. நதியும் மரமும் ஆபரணமாக உள்ளதால் அதாவது
(ஆறு+அணி) ஆரணி என இறுதியாக பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.
ஆரணி கோட்டை / அரண்மனை
ஆரணி மண்டலேஷ்வரர்கள் தங்களின் ஆட்சிக்குட்பட்ட
பகுதிகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை
கட்டிக்கொள்ள அனுமதி அளித்தனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட்
கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை.
மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது.
அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி
அமைந்தன. கிபி.1760 ல் நடந்த கர்நாடகப் போரில் ஆரணி கோட்டையின் பெரும்பகுதி நாசமானது. இதில்
இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரணி கோட்டை இப்போது
ஜெயமஹால் அரண்மனை / ஜெயமஹால் அரண்மனை ஹோட்டல் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம், எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் ஆலயம், அருள்மிகு பச்சையம்மன் ஆலயம், பெரியநாயகி அம்மன் ஆலயம், ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம் அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம் ஆகியவை கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு கோவில்கள் உள்ளதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளமை சிறப்புமிக்கவை ஆகும்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment