12.12.2010
அன்புள்ள தங்கைச்சிக்கு,
நாம் நலம், அதுபோல் உனது சுகமுமாகுக!
உனது
கடிதம் கிடைத்தது. யாவும் அறிந்தேன்.
தங்கைச்சி, உனது கடிதத்தில் நீயும்
, உனது
கணவரினதும் ஓயாத உழைப்பினை வழமைபோல்
தேவாரம் பாடியிருந்தாய். இருவரும் சந்திப்பது குறைவு என்றும் ,பிள்ளைகளை
வார இறுதியில் சில மணிநேரம் காணலாம் என்று வேறு குறிப்பிட்டுள்ளாய். எனக்குப்
புரியவில்லை.இருவரும் என்ன ஒரு நாட்டினை விலைக்கு வாங்கவா இப்படி ஓயாது
உழைக்கிறீர்கள். சிந்தித்துப் பார்.
கேட்டால்
பிள்ளைகளுக்காக,
பிள்ளைகளுக்காக
என்று கூறுகிறாய். பிள்ளைகள் கல்விக்காக என்று நீ கூறினால் அது நியாயம் என்பதுடன் அதற்கு இவ்வளவு தூரம்,இத்தனை
காலம் ஓட வேண்டிய அவசியம் இருக்காது என
நினைக்கிறேன். அதேவேளை பிள்ளைகள் கல்வியினை
நிறைவு செய்து , அவர்கள் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்னரும் அதே ஓட்டம் இருவரும்
ஓடுகிறீர்கள். அதுதான் ஏன் என்பது புரியவில்லை.
கேட்டால்
பிள்ளைகளுக்கு இனி சொத்து சேர்க்கவேணும் என்று மேலும் புலம்புகிறாய். இன்னும் சிலகாலம் சென்றபின்
பேரப் பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்க்கவேணும் என்று ஓடிக்கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.
அப்படியாயின்
நீங்கள் எப்போது வாழ ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப்பொழுது நீங்கள் பெற்ற பிள்ளைகளுடன் நேரத்தினைச் செலவழிக்கப்
போகிறீர்கள்?
அல்லது
சாகும்வரையில் உழைப்பதுதான் உங்கள் இலட்சியமா? அப்படியாயின் வெறும் இரும்பு
மெஷின்களாகவே நீங்கள் பிறந்திருக்கலாம்.
கணேசன்
குடும்பத்தில் நடந்தது உனக்குத் தெரியாதா? பெற்றவர்கள் வேலை ,வேலை என்று காலமெல்லாம் பாய்ந்துகொண்டிருக்க பிள்ளைகள் தங்கள் பாதையில்
சென்றபின் தலையில் அடித்து அழுது என்ன பயன்?
தங்கைச்சி, உனது
கணவரோ ,நீயோ பெரிதாய் படியாமலேயே , செய்யும்
வேலைமூலம் , உனக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வித
குறைகளும் வைக்கவில்லை என்கிறாய். அப்படியாயின்
தற்காலத்தின் நவீனயுகத்தின்
கல்வியினை நிறைவு செய்யும் பிள்ளைகளால்
எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதினை ஏன் உங்களிருவராலும் உணர முடியவில்லை?. உங்களால்
உழைக்க முடிந்ததை விட பலமடங்கு பிள்ளைகளால் முடியும் என்பதனை ஏன் எண்ணிப்
பார்த்ததில்லை?
பிள்ளைகளுக்கும்
உங்களைப்போல் கை ,கால் உண்டுதானே? ஏன்
உங்கள் உழைப்பினை , தீனியாகப் போட்டு அவர்களின் சுய முயற்சிகளை முடமாக்குகின்றீர்கள்? நீங்கள் பெற்றோர்களாக
கொடுக்கவேண்டிய அரும்பெரும் சொத்து எதுவெனில் கல்வி ஒன்று தான். அவர்கள் வாழ்வில் வெற்றியடைய அது ஒன்று
போதுமானது என்பது அனுபவ ரீதியாக பலரும் கூறும் உண்மை.
வாழ்வதற்கு
உழைப்புத் தேவைதான். அதற்காக உழைப்பதுதான் வாழ்க்கையாகிவிட்டால் ,நீங்கள்
இல்லறத்தில் இணைந்ததில் அர்த்தமேது? இப்புவியில் வாழ்வதில்
அர்த்தமேது?
என்று
நான் கேட்கமாட்டேன் ,ஏனெனில் நீங்கள் வாழவில்லை. இப்புவியில்
நடமாடுவதில் அர்த்தமேது? என்றுதான் கேட்கிறேன்.
தங்கைச்சி, உன் அண்ணன் நான் என்பதால் தான்
உரிமையுடன் கூறுகிறேன். இப்படியெல்லாம் கூறினால் பொறாமையில் கூறுவதாக நீ
கோவித்துவிடுவாய் என்பதால் அடுத்தவர்கள் இக்கருத்தினை உன்னிடம் கூற மாட்டார்கள்.
எதிர்காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடித்து உங்களை விட்டுச் சென்றபின், நான்
கூறுவது உனக்கு மிகவும் சரியாகவே தென்படும்.
மாமா
பரந்தாமன் நிலையினை எண்ணிப்பார். ஒரு பிள்ளை இருந்தும், காலமெல்லாம்
ஆவ் ,ஆவ்
என்று ஓடியோடி உழைத்து நோய்வாய்ப்பட்டு
படுக்கையில் கிடந்தே காலமானார்.
அதேவேளையில் மகளுக்குச் சேர்ந்த அவரது இரு வீடுகளும் ,அவளது
விவாகப் பிரிவினால்,சட்டப்படி பாதி சொத்து அவள் கணவனை அடைய , இன்று யாரோ அந்த ஒருவன் ஒரு
வீட்டினை, தனது
புதிய மனைவியுடன் அனுபவித்துக்
கொண்டிருக்கிறான். இதைத்தானோ ஒளவையாரும் அன்றே
பாடுபட்டுத்
தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்
கேடுகெட்ட
மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்
காவிதான்
போயினபின் பாரே யநுபவிப்பார்
பாவிகாள்
அந்தப் பணம்.
என்று
தனது நல்வழியில் கூறியுள்ளார்.
தங்கைச்சி, ஏதோ
என் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி உனது நலன் கருதியே இக்கருத்தினை எழுதுகிறேன்.
இவற்றினை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உன்னைப்பொறுத்தது.
உன்னுடைய
கருத்துகளை ,உனது
பதில் கடிதத்தில் எதிர்பார்க்கிறேன்.
வேறு
புதினங்கள் இல்லை.
இப்படிக்கு,
அன்பின்
அண்ணன்
செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment