தமிழ் தொலைக்காடசி ஒன்றில் தற்சமயம்
நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி பற்றி பொதுமக்களால்
பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இது, உள்ளிருப்போர்
இடையில் ஒர் இயல்பில் நடக்கும் சம்பவங்களைக்
கோர்வைப்படுத்தி, மாற்றம் ஒன்றும்
இன்றி அப்படியே காண்பிக்கிறார்களா அல்லது இயக்குனர்களின் கடுமையான நெறியாழ்மையுடன்
ஏற்கனவே சொல்லிவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் படி நடிக்க வைக்கப்பட்டு மீள்
ஒழுங்குபடுத்தி ஓட விடுகிறார்களா?
இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு என்னதான் சொல்ல
விழைகிறார்களோ என்னவோ, மக்கள் இதை வெறித்தனமாக ஆவலுடன் பார்க்கத்தான்
செய்கின்றார்கள். தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் அதுதான் வேண்டும்.
நிஜ வாழ்க்கையில் இல்லாத முழு நீள வில்லத்தனங்களாகவே
அமைந்திருக்கும் நாடகங்களை ஆசையுடன் விழுந்து, விழுந்து பார்க்கும்
ரசிகர்களுக்கு, அதே போல ஒரு நிகழ்ச்சியினை ஒரு வீட்டுக்குள் இருந்து நடத்தி, ஏராளமான மக்களை பார்க்க வைக்கின்றார்கள்.
பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், இங்கு நடைபெறும் (நடத்தப்படும்?) சண்டைகள், சச்சரவுகள், வாக்கு வாதங்கள், எல்லாம், ஒரு சேரிப்பகுதியில்
நடக்கும் குழாயடிச் சண்டைக்கு ஒப்பாகும்.
சினிமாவிலும் சரி, நாடகங்களிலும் சரி
தெருச் சண்டை ஒன்று நடந்தால், போகிறவர், வருபவர் எல்லாம் கூட்டமாய் (மிகவும் ஒழுங்கான வரிசையில்)
நின்று வேடிக்கை பார்ப்பார்கள். தெருச்
சண்டை கண்களுக்கு குளிர்ச்சிதானே. சிலர்
கைகளைக் காட்டிக், காட்டி அபிப்பிராயமும் தெரிவிப்பார்கள். இந்த மனித
நடத்தையின் பலவீனத்தைப் பணம் ஆக்குவதற்குப் பயன்படுத்தி இருப்பது போலத்தான் இந்த
பிக் பாஸ் நிகழ்ச்சி தோன்றுகிறது.
அதற்கு ஏற்றால் போல, சமூகத்தில் இருக்கும்
பலதரப்பட்ட மட்ட, வெவ்வேறு துறையில் ஆர்வம் உள்ள கிராமத்து மற்றும் நகரத்து
மக்களை தெரிவு செய்து உள்ளே விட்டிருக்கிறார்கள். என்றால்தான் சண்டை வரும் என்று
எதிர்பார்க்கிறார்கள். வந்தால் பார்க்க கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கும்.
படிக்காடு,
பட்டணம், படித்தவர், படியாதவர், அலங்கார ராணி, கலாச்சார மங்கை, நல்லவர், சகுனி வேலை பார்ப்பவர்,கோபம் வருபவர், சாந்தமானவர், ஆங்கிலம் தெரியாதவர், (தற்காலிகமாக} நடித்துக் காதலிக்க
இருவர் என்று பலவிதமாக வேடங்களில் ஆட்கள் இருப்பார்கள்.
24 மணித்தியாலங்களுக்கும், அத்தனை பேருக்கும்
எப்படி வசனம் எழுதிக் கொடுக்க முடியும் என்று மறுப்பார்கள். அப்படி சொல்லுக்குச்
சொல்,
வசனத்திற்கு வசனம் என்று எழுதிக் கொடுப்பதில்லை. ஆனால், முழு நிகழ்ச்சியும் இன்று, இந்த முறையில்தான் போகவேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டு
இருப்பார்கள்.
அறிவுறுத்தல்கள் தெளிவானவை மற்றும் வரையறுக்கப்பட்டவை.
விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் பணிகள் முடிக்கப்படுகின்றன. ஒருவர்
கூறும் ஒரு கடினமான வார்த்தைக்கு, மற்றவர் என்ன
கூறவேண்டும் என்று சொல்லிக்
கொடுக்கப்படும். அதை எவர், எவர் வந்து, யார் பக்கம் நின்று அந்தச் சண்டையை பெரிது படுத்திக்கொண்டு
போகவேண்டும் என்று கட்டளைகள் கொடுக்கப்படும்.பின்னர் எப்படித் தீர்த்து
வைக்கவேண்டும் என்றும் கூறப்படும். தொலைக்காடசியில் காட்டும்போது இடையில்
நிறுத்திய கணங்கள் ஒன்றும் வரமாட்டா.
உள்ளிருப்போர் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் பிரபலமானவர்கள்.
இவர்கள் எல்லோரும் முட்டாள்கள் போல
சண்டையிடுவதும், உயர் தொனியில் கத்துவதும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட
முறையில் தாக்குவதும் என்று காட்டுவதை நம்ப முடியவில்லை. ஒருபோதும் இவர்கள் பல கேமராக்களின் முன் இப்படிச் சின்னத்
தனமாகச் செயல் பட மாட்டார்கள். தரம் குறைந்த வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள்.
எல்லோருமே நடிக்கிறார்கள், பணத்திற்காக!
நாடகங்களின் கருக்கள், வடிவங்கள்
மாற்றப்படும். சில வதந்திகள், போட்டி விளையாட்டுகள், நாட்டிய நாடகங்கள், கொடுமைச் சொற்கள், சிரிக்கும் தருணங்கள், நடவடிக்கை ஒவ்வாமை, வேறுபட்ட இயல்பு ரீதியான துஷ்பிரயோகம், மாறுபட்ட குணாதிசய ரீதியான கருத்து வேறுபாடுகள், காதல், பாசம் என்று
இருக்கும்.
இந்தியாவில், ஒரு பொது விடுதியில்
தங்கி இருக்கும், அல்லது வேலைத் தலத்தில்
ஊழியம் செய்யும், அல்லது
சந்தையில் வியாபாரம் செய்யும் பலதரப்பட்ட
குணம் உடைய ஆண்கள், பெண்கள் எல்லாம் இப்படியா நாய்கள் போல், வாள் , வாள் என்று தொடர்ந்து குலைத்துச் சண்டை பிடித்துக்
கொண்டு இருப்பார்கள்?
ஒருவர் இங்கு நின்று யாரோ ஒரு நபரைப் பற்றி பேசினால்,அதே சமயம் வெளியே அல்லது சமையல் அறையில் அதே நபரைப் பற்றி
இன்னொருவர் பேசுவது எப்படி? திரிகால ஞானிகளோ?
சமைக்கும்போது சில சின்னப் பாத்திரங்களில் சமைத்த ஒரு சிறிய
அளவு உணவு அவ்வளவு பேருக்கும் எப்படி அப்பா போதும்? அட்ஷய பாத்திரமோ?
நடிகர்களின் அசைவுகள், முக வெளிப்பாடுகள்
எல்லாம் zoom
பண்ணி அங்குலம், அங்குலமாக, பக்கத்திலேயே இருந்து பார்த்து எடுப்பதுபோலக்
காட்டுகிறார்களே, அது எப்படி? புது தானியங்கித்
தொழில் நுட்பமோ?
தொலைக்காட்சிகள் எல்லாம் தங்கள் TRP தர நிர்ணய புள்ளியை உயர்த்துவதற்காக எந்த மட்டத்திற்கும்
போய் நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்கள்
எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதை நிச்சய படுத்திக்க கொள்வார்கள்.
உங்கு எந்த துறையினரும் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை
ஊட்டுவதற்காக செயல்படுவதில்லை. தங்கள் பண வருவாயை மேம்படுத்த, நல்லதோ கெட்டதோ மக்கள் வாயைப்பிளந்து பார்க்கக்கூடியதாக
எந்த விதமான சரக்குகளையும் காட்டிக்கொள்வார்கள்.
அங்கே காட்டுவதெல்லாம் உண்மையும் இல்லை, முழுமையும் இல்லை.
நடிப்பவர்கள் ஒப்பந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள்; உண்மைச் செய்தியை வெளிவிட்டால் மிகப்பெரிய இழப்பு அவர்களுக்குத்தான்!
பல மணித்தியாலங்களாக எடுக்கப்பட்ட நாடகம் ஒன்றின் 'சுவாஸ்கரியமான' சில காட்சிகளே உங்களை வந்தடைகின்றது!
பார்த்துப் பரவசமடையுங்கள்!
ஆக்கம்:செ.சந்திரகாசன்
No comments:
Post a Comment