அன்றும் இன்றும் / பகுதி 04



செய்தி என்ற தமிழ் சொல் ஆங்கிலத்தில் நியூஸ் (NEWS) என்று பொருள்படும். இந்த ஆங்கிலச் சொல், நான்கு திசைகளைக் குறிக்கும்,  நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது. அதாவது நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது என்பது பொருள். அத்துடன் நியூ (New) என்றால் புதியது என்று பொருள் படும். ஆகவே, புதிதாகக் கேட்கப்படுகின்ற ஒன்று அல்லது இப்பொழுதுதான் நடைபெற்ற, ஏதாவது ஒன்றைப் பற்றிய முதல் தகவல் என்று நாம் அதற்கு விளக்கம் கொடுக்கலாம். உதாரணமாக, மக்களைப் பற்றி மக்களுக்காக மக்களால் எழுதப்படுபவை செய்திகள் ஆகும் என்றும் குறிப்பிடலாம். அப்படியான செய்திகளைத் தான், இன்றைய மின்னணு ஊடகம் ஒன்றில் உங்களுடன் பகிர்கிறேன். இனி செய்தித்தாளின் வரலாற்றையும் மேலும் சிலவற்றையும் பார்ப்போம்

 

5] செய்தித்தாள்

ஒவ்வொரு நாளின் செயல்கள் அல்லது தினசரி செயல்கள் [The Acta Diurna or “daily acts”], என்ற பண்டைய ரோமர்களின் அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் வர்த்தமானி, கி மு 131 ஆண்டளவில் காணப்பட்டது என வரலாறு சாட்சி பகிர்கிறது. உதாரணமாக, இராணுவ வெற்றிகள், கிளாடியேட்டர் என்ற வலிமைப் போட்டி மற்றும் பிற விளையாட்டுகள், பிறப்புகள் மற்றும் இறப்புகள், மனிதர்களுக்கு ஆர்வமான கதைகள் [military victories, gladiatorial bouts and other games, births and deaths and even human-interest stories] போன்றவைகளின் செய்திகளை, ஆட்கள் நடமாடும் இடங்களில், உலோகம் அல்லது கல் மீது பொறிக்கப்பட்டு [inscribed on metal or stone] பார்வைக்கு வைக்கப்பட்டன.

 

இந்த தினசரி செயல்கள் [The Acta Diurna], ரோமன் பேரரசில், தொடர்ந்து வெளியிடப்பட்டன. இதை இன்றைய செய்தி தாள்களின் முன்னைய அல்லது ஆரம்ப வடிவமாக அல்லது முன்மாதிரியாக [prototype] நாம் கருதலாம். என்றாலும் பல நூறு ஆண்டுகளின் பின், கி.பி.1476 இல் இங்கிலாந்தில் வில்லியம் காக்ஸ்டன் என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டறிந்து, அது மேலும் இன்றைய வடிவில், உலக நாடு எங்கும் வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத் தக்கது.

 

ஈழத்தில், உதயதாரகை (Morning Star) முதலாவது தமிழ் பத்திரிகையாக, யாழ்ப்பாணத்தில் 1841 ஆண்டில் அமெரிக்க இலங்கை மிசன் மூலம் வெளியிடப்பட்டது.இப் பத்திரிகை தமிழில் உதயதாரகை என்றும் ஆங்கிலத்தில் Morning Star என்றும் இருமொழிப் பத்திரிகையாக, தொடக்கத்தில் மாதம் இருமுறை வெளியிடப்பட்டு,  பின்னர் வாரத்துக்கு ஒரு முறையாக, தெல்லிப்பழையில் அச்சிட்டு வெளிவந்தது. அதே போல தமிழ்நாட்டில்,1831 ஆண்டில், முதல் தமிழ் இதழாக 'கிறித்தவ சமயம்' என்ற செய்தித்தாள் வெளிவந்தது. அதை தொடர்ந்து, ஒரு முழுமையான செய்தித்தாள் என்று கூறக்கூடிய சுதேசமித்திரன் என்ற பத்திரிகை, 1882 ஆம் ஆண்டு  ஜி. சுப்பிரமணிய அய்யரால் ஆரம்பிக்கப்பட்டது. இதில், மகாகவி பாரதியார் தனது 22ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கெசட், ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற துணிச்சல்மிக்க ஆங்கிலேயரால் அன்றைய இந்தியாவின் சக்திவாய்ந்த நபர்களை பற்றி எழுதும் பத்திரிக்கையாக 1780ஆம் ஆண்டு உருவெடுத்தது [Hicky’s Bengal Gazette was the first English-language newspaper published on the Indian subcontinent]..

அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, ஊழல், லஞ்சம், விதிமீறிய நடவடிக்கைளை அந்த பத்திரிக்கை வெளியுலகிற்கு கொண்டுவந்தது. அன்றைய இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவரான, வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings, governor general of India), மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் சட்டவிரோதமாக படைகளை பயன்படுத்தியதாகவும், பிரதிநிதித்துவம் இல்லாமல் மக்களுக்கு வரி விதித்ததாகவும், பேச்சுரிமையை நசுக்கியதாகவும் அதில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

 

6] பாழ்` அல்லது சுழியம் [பூச்சியம்]

சுழியத்தின் கண்டு பிடிப்பே, கணிதத்துறை வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது எனலாம். இன்றைய நவீன உலகில், உலகின் ஒவ்வொரு நகர்வுக்கும் அடிப்படையாக திகழ்வது இந்த சுழியம் தான். கணிதம், நுண்கணிதம், இயற்பியல், பொறியியல் [Mathematics, Calculus, Physics, Engineering] மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் தொடக்கமும் இந்த சுழியத்தில் இருந்து தான் சாத்தியமானது.

 

சுமேரியர்களின் அல்லது பாபிலோனியர்களின் கணிதத்தில், சுழியம் [பூச்சியம்] இருக்கவில்லை, அதற்கு பதிலாக முதலில் ஒரு காலியான இடம் அல்லது இடைவெளி பாவிக்கப்பட்டது. ஆனால் இதில் பல சிக்கல்கள் அவர்களின் கணிதத்தில் ஏற்பட்டது. எனவே பின்னர், ஒரு சிறப்புக் குறியீடு அவர்களால் பாவிக்கப்பட்டது. என்றாலும் ஒரு எண்ணாக அதன் யோசனையை அவர்கள் முன்வைக்கவில்லை. அதே போல, கி.பி. முதல் நூற்றாண்டில் (தென் அமெரிக்க) மாயா நாகரிகம் ஒரு 'சூனிய'த்தைப் பயன்படுத்தியிருக்கிறது; ஆனால் அதை ஒரு இடமதிப்புத் திட்டத்தின் அங்கமாக அவர்கள் கொள்ளவில்லை. இறுதியாக, இந்தியாவின் கணித மேதை, ஆரியபட்டர் [Aryabhata] கி பி  4-ம் நூற்றாண்டு அளவில், சுழியத்தை முறையாக அறிமுகப் படுத்தினார். “க்க” (kha) என்ற குறியீடு மூலமும், புள்ளி (.) மூலமும், அதை கையாண்டார். அவரைத் தொடர்ந்து பிரம்மகுப்தர் [Brahmagupta] கி பி  6-ம் நூற்றாண்டிலும், மகாவீரர் [Mahavira] கி பி 8-ம் நூற்றாண்டிலும் இயற்கணிதம் அல்லது அட்சர கணிதத்தில் [Algebra]  சுழியத்தின் பயன்பாடு குறித்து தெளிவான சூத்திரங்களை அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.

 

சுழியம் என்பது ஒப்பீட்டளவில் சமீபத்திய கருத்து என நீங்க அறியும் பொழுது, அது  ஆச்சரியமாக இருக்கலாம். எனினும், அதன் மூலம் மிகவும் பண்டையது.

 

7] பாய்ப் படகு

பண்டைய காலத்தில், பொதுவாக நிலபாதை மிகவும் கடினமாகவும் இடர்ப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. இதனால் சுமேரியர்கள், இதற்கு ஒரு மாற்று போக்குவரத்து வசதியை பொருட்கள் மற்றும் மக்களை கொண்டு செல்ல கண்டு பிடித்தார்கள். அது தான் படகுகள் மூலம் செய்யும் நீர் போக்குவரத்து ஆகும். அது ஒரு மிக எளிமையான மரப்படகாக அமைந்தது. அந்த படகின், பாய் மரத்துணி [sails], சதுரமாக துணியால் செய்யப்பட்டதாக இருந்தது. அனால் அதன் கோணத்தையோ திசையையோ மாற்ற முடியவில்லை. உதாரணமாக படகு போக வேண்டிய திசையில் காற்று வீசினால், பயணம் நன்றாக அமைந்தது. ஆனால் அப்படி இல்லை என்றால், அவர்கள் தங்களுக்கு சாதகமாக காற்று அடிக்கும் மட்டும் காத்து இருக்க வேண்டி இருந்தது. அவர்களால் ஒரு அளவிற்கு அதிகமாக பொருட்களையோ அல்லது மக்களையோ அன்று கையாள முடியா விட்டாலும், அந்த அவர்களின் படகு அமைப்பு [boat design], ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கூட, இன்னும், இன்று ஒரு  மூல / அடிப்படை கருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட, புறநானூறு - பாடல் 66, காற்றின் சக்தியால், அன்று தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

 

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் கண்ட உரவோன் மருக!

களிஇயல் யானைக் கரிகால் வளவ!"

 

''வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ!'' என்று கூறுகிறது.

 

 இறுதியாக நான் ஒன்றை கூறவிரும்புகிறேன். இன்றைய நவீன உலகில், தொழில் நுட்பம் முன் சம்பவிக்காத அளவு அபார வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. இன்றைய சமீபத்திய உபகரணம், நாளை பழமைச்சின்னமாக மாறிவிடுகிறது. இந்த விரைவான தொழில் நுட்ப வளர்ச்சியின் பயனாக, நாம் அடிக்கடி பல பொருட்களை. எமக்கு எதோ வழங்கப்பட்டது போல எடுத்து கொள்கிறோம். அப்படியான பொருட்களில் ஒன்று தான் சக்கரம். கி மு 3500 ஆண்டை சேர்ந்த, உலகின் அறிந்த அளவில் மிகப் பழமைவாய்ந்த, போக்கு வரத்துக்கான சக்கரம், மெசொப்பொத்தேமியாவில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மேசொப்பொத்தேமியாவில் மிகப் பண்டைய சக்கரம் தோண்டி எடுக்கப்பட்டு இருந்தாலும், அறிஞர்கள் அதே காலபகுதியில் வேறு இடங்களிலும் சக்கரம் சுதந்திரமாக அதாவது எந்த வித தொடர்பும், மற்ற நாடுகளுடன் இன்றி, தன் பாட்டில் வளர்ச்சி அடைந்து இருக்கலாம் என நம்புகின்றனர்.

-நன்றி

               -கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

👉Theebam.com: அன்றும் இன்றும் / பகுதி 01

 

                                                                                                      -முற்றிற்று

0 comments:

Post a Comment