அன்றும் இன்றும் / பகுதி 02



இன்று வாழ்க்கையின் நிலை விரைவாக மேம்படுவதால், காலப்போக்கில் மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் வசதியாகவும் இனிமையாகவும் கட்டாயம் மாறும். எல்லா பண்டைய நாகரிகங்களும், வரலாற்றில் ஓரளவு பெரும் முன்னேற்றம் அடைந்திருப்பதை, நாம் காண்கிறோம், என்றாலும் பண்டைய காலங்களில், இன்று இருப்பது போல ஒரு நவீன வாழ்க்கையை, தாம் வாழ முடியும் என்று, அன்று அங்கு யாராவது கற்பனை செய்தார்களா என்பது எமக்கு சரியாக தெரியாது. எனினும் சில புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் இன்றைய வாழ்வின் சில சில அம்சங்களை காண்கிறோம்.


மேலும், இன்று நாம் அனுபவிக்கும், நன்னீர் சுத்தம் செய்வதற்கான நவீன மேம்பட்ட வழிகளைப் போலன்றி, பழங்கால மக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளில் இருந்து கொதிக்கவைக்காத தண்ணீரை மட்டுமே பொதுவாக குடித்தார்கள். என்றாலும் அன்று நிச்சயமாக, அவர்களின் சூழலில், சிறிய மாசுபாடு அல்லது துாய்மைக்கேடு மட்டுமே,  காணப்பட்டது. எனவே அது அவர்களுக்கு, அன்று ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கவில்லை.

 

அன்று, பண்டைய மக்கள்,  சலவை மற்றும் குளியல் செயல்பாடுகளை இன்று நாம் அனுபவிப்பது போல ஒரு நேர்த்தியான வழியில் செய்யவில்லை, என்றாலும், சில மூலிகைகளைக்கொண்டு உடலை சுத்தம் செய்தார்கள் என்று பண்டைய இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். உதாரணமாக, ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி' எனும் மூதுரையும் மற்றும்  சிலப்பதிகாரத்தில் பாடப்பட்ட

 

"பத்துத் துவரினும், ஐந்து விரையினும்,

முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,

ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,

நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;

புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை

வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி"  

 

என்ற பாடல் வரியும், சில தகவல்களை எமக்கு தருகின்றன. பத்து வகை மூலிகைப் பொருட்கள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், முப்பத்தியிரண்டு வகை நீராடு மணப் பொருட்களினாலும் ஊறிய நல்ல நீரிலே, வாசனைமிக்க நெய் பூசிய தன் மணம் கமழும் கரிய கூந்தலை நலம்பெறுமாறு தேய்த்துக் கழுவி நீராடினாள். நீராடிய பின், தன் கூந்தலை மணம் மிகுந்த புகைக் காட்டி ஈரம் உலர்த்தினாள். கூந்தலை ஐந்து பகுதிகளாப் பிரித்து, கஸ்துரி குழம்பினையும், ஜவ்வாதையும் [ஒரு வகை வாசனை பொருள்] அப்பகுதிகளுக்குத் தடவினாள் என்கிறது. 

 

எது எப்படியாகினும், அன்றைய அவர்களின் வாழ்வின் மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகளின் தடயங்கள் சில அப்படியே இன்றும் இருப்பதை காண்கிறோம். அவைகளில் முக்கியமானவற்றை இனி நாம் பார்ப்போம்.

 

1] காகிதம்

அன்றைய ஆதி மனிதன் பெரும் கற்கள், விலங்குகளின் எலும்பு, மூங்கில் தடி, களிமண், ஓலை போன்றவற்றில் எழுதினாலும், இன்று நாம் தினம் தினம் பாவிக்கும் காகித தோற்றத்தை ஒத்த பொருளில், முதல் முதல் எழுதியவர்கள் எகிப்தியர்கள் ஆவார்கள். இவர்கள் நைல் ஆற்றின் கழிமுகத்தின் [ஆற்றிடைத்திட்டு / Delta] சதுப்பு நிலத்தில், விளையும் பாபிரஸ் (Papyrus) எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்பட்ட,  'தடித்த காகிதம் போன்ற எழுது பொருளை', கிமு 3000 ஆண்டு அளவில் கண்டுபிடித்தார்கள். இதை தொடர்ந்து  கி.மு 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல்,  கி பி 105 ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்குள்,  சீனாவில் மரக்கூழிலிருந்து காகிதம் (Paper) தயாரிக்கப்பட்டதாக அறிகிறோம். எனினும் இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னரே சீனாவில் காகிதம் பயன்படுத்தப் பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில் தற்காலத்தில் நவீனமாக்கப்பட்டு, உலகளாவிய நிலையை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அடிப்படை காகித உற்பத்தியின் செயற்பாடு, 5000 ஆண்டுகளின் பின்பும் அப்படியேதான் இருக்கிறது. 

 

நீதிமன்ற ஆவன காப்பாளராக வேலை பார்த்து வந்த கைய் லுன் (Cai Lun)  முதலில், மரநார்கள், தாவரத்தின் இலைகள், மீன்பிடி வலைகள், மற்றும் துணி கழிவுகள் ஆகியவற்றை கொண்டு காகிதம் தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். எனினும் இம்முறையில் கண்டறியப் பட்ட காகிதம் தடிப்பாக இருந்தது. உதாரணமாக ஏறத்தாழ, 5 மில்லி மீட்டர் வரை இருந்தது. பிறகு தற்செயலாக, ஒரு வகை குளவி [wasp], மரத்தை கொத்தி துளையிட்டு, அதன் மூலம் கிடைத்த மென்மையான சிறு மரத்தூள்களை கொண்டு, பலம் பொருந்திய கூடு கட்டுவதை அவர் கண்டார். எனவே மரத்தை கூழ்மமாக அரைத்தால் காகிதத்தை, நாம் விரும்பும் வடிவில் மற்றும் அளவில் தயாரித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்து, அவ்வாறே காகித தரத்தை உயர்த்தினார். எனினும் அவர்கள், இந்த காகிதம் தயாரிக்கும் முறையை மிகவும் ரகசியமாக 500 ஆண்டுகள் வைத்திருந்தார்கள். அந்த கால பகுதியில் சீனவின் சொகுசு தயாரிப்பாக [Chinese luxury product], மற்ற நாடுகளுக்கு எடுத்து சென்று வியாபாரம் செய்தனர். எனவே, பல இடங்களில் / நாடுகளில்  காகிதத்தின் பாவனையை எட்டாம் நூற்றாண்டுக்கு முன் கண்டுபிடிப்பது, உற்பத்திக்கான சான்று அல்ல, மாறாக பயன் பாட்டிற்க்கான சான்றுகளே ஆகும். 

 

கி.பி எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சீனாவின் மீது படையெடுத்து சென்றனர். கி.பி.751 இல் நடந்த தாலஸ் போரில் [The Battle of Talas or Battle of Artlakh] அரேபியர் வெற்றி பெற்றனர். அப்போது தாள்களை உருவாக்கத் தெரிந்த சிலரை அடிமைகளாக்கி தங்களுடன் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் இருந்தே அரேபியர்கள் தாள்கள் உருவாக்கும் கலையைக் கற்றனர். அரேபியர்களிடமிருந்து மேற்கு ஐரோப்பியர் [West European] கற்று, உலகெங்கும் தாள் உருவாக்கும் கலையை பரப்பினர்.

 

எனினும் காகிதத்தின் உற்பத்தியும் அதன் பயன்பாடும் சுற்று சூழலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உலகளாவிய காகித நுகர்வு கடந்த 40 ஆண்டுகளில் 400% அளவுக்கு உயர்ந்துள்ளது, காடுகள் அழிப்பு அதிகரிக்க, காகித நுகர்வு வழிவகுக்கிறது. உலகெங்கிலும் 35% மரங்கள் காகித உற்பத்திக்காக வெட்டப்படுகின்றன. பெரும்பாலான காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் வெட்டப்படும் மரங்களுக்கு ஈடாக, புதிய மரங்களை நடுவதாகக் கூறினாலும், காடுகள் அழிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

 

2] கண் ஒப்பனை

பண்டைய எகிப்தில் கண் மை [kohl] மூலம் கண்ணை எகிப்திய அரசிகளும்  சீமாட்டிகளும் கி மு 3100 ஆண்டளவில் அலங்கரித்தது தெரியவருகிறது. அவர்கள் பொதுவாக, மேல் கண் இமைகளுக்கு  கருப்பு வண்ணம் பூச்சியும், கீழ் கண் இமைகளுக்கு பச்சை வண்ணம் பூச்சியும் தம்மை அலங்கரித்தார்கள். அது மட்டும் அல்ல, உலகத்தில் முதன் முதலாக, தங்கள் அழகிய கண்களை மேலும் அழகாக்க, பெண்களால் பயன்படுத்தப்பட்ட, முதல் அழகுப்பொருள் அதிகமாக, இந்த கண் மை தான். மேலும் ஆழமாக ஆராய்ந்தால், 5000 ஆண்டுகள் முன்னர் தோன்றிய இந்த கண்மை, இன்று வரை அதே முக்கியத்துவத்துடன் இருந்து வருகிறது என்பது ஆச்சரியத்திற்குரியதே. உதாரணமாக,  குறுந்தொகை 5, இல் தலைவி தோழியிடம் குருகுகள் [ஒரு வித பறவை] உறங்குவதற்கு இடமாகிய இனிய நிழலையுடைய புன்னை மரங்களை கொண்டவனும், கரையை அலைகள் மோதும்போது உடைகின்ற நீரால் வீசப்படும் துளியால் அரும்புகின்ற கண்ணுக்கு இனிதாகிய நீர்ப்பரப்பையுடைய மெல்லிய கடற் கரையையுமுடைய எம் தலைவன் எம்மை விட்டுப் பிரிந்ததால் பல இதழ்களையுடைய தாமரை மலரைப் போன்ற, கண் மை இட்ட எம் கண்கள் காம நோயால் தூங்க முடியாதவை ஆக வாடுகின்றன. இது தான் காதல் நோயின் தன்மையோ?என வினாவுகிறார்.

 

"அது கொல் தோழி காம நோயே

வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீ நீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல் இதழ் உண் கண் பாடு ஒல்லாவே"

 

மேலும் ஒரு குறிப்பாக, ஒப்பனையியல் பற்றிய பண்டைய அறிவியல் எகிப்தில் ஆரம்பமாகியதாக பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், ஒப்பனை பொருட்கள், அதன் பாவனைகள் பற்றிய முன்னைய குறிப்புகளை காண நாம் கி மு 2500-1500 ஆண்டு இந்தியா உபகண்டத்தின் சிந்து சம வெளி நாகரிகத்திற்கு போகவேண்டியுள்ளது. அங்கே,சிந்து சம வெளி பெண்கள் உதட்டுச் சாயம் (Lipstick) பூசினார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.இவர்கள் தேன்மெழுகு [beeswax], தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் [pigments] என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ் மத்தைத் (Colloid) தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர்.இதுவே இன்றைய நவீன உதட்டுச் சாயங்களின் முன்னோடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒப்பனை என்ற சொல்லிற்கு அழகுபடுத்தல் என்று பொருள்.இத்தகைய ஒப்பனைக் கலை தமிழ் இலக்கியங்களில் பழங்காலந்தொட்டு இடம் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

பகுதி 03 தொடரும்  

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

👉Theebam.com: அன்றும் இன்றும் / பகுதி 01: 

0 comments:

Post a Comment