👉[பகுதி:04]👉
வருடங்கள் பல எப்படி ஓடியது என்று தெரியவில்லை.
அதற்குள் என் குடும்பம் பிள்ளைகளும் கனடா வந்து வீடு வளவு என்று மாற்றங்கள்
வந்தபோதும் யோகநிதியை அவள் கணவன் 2 பிள்ளைகளுடன் நானும், மறக்க முடியாத ,கலகலப்பான அந்தச் சந்திப்பு நிகழ 20 வருடங்கள் கடந்தன.
இலங்கை
ஒருமுறை சென்று வருவோம் என்று புறப்படுவதற்காக டொரோண்டோ பியர்சன் விமான
நிலையத்தில் நாங்கள் குடும்பமாக சென்றிருந்தபோது
அன்று அவளும் தன் கணவன் பிள்ளைகள்
குடும்பமாக வந்திருந்தாள்.
''ஓ ,யோகநிதியோ ,ஆளை விளங்கவே இல்லை''என்று ஆரம்பித்துக்கொண்டேன்.
அவளும் '' ஓம், நெடுக ஒரேமாதிரி இருக்க முடியுமே மனு ,பிள்ளையள் பிறந்தா எல்லாரும் இப்பிடித்தான்.'' என்றவள் தன கணவனுக்கு என்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
''கனடா வந்தத்துக்கு, நாட்டுப் பிரச்சனையால ஊருக்குப் போனதில்லை. இவற்ர அம்மா ,அப்பாவும் நெடுக கேட்டபடி. அதுதான் இந்தமுறை துணிஞ்சு வெளிக்கிட்டு விட்டோம்.'' என்று கூறியவள் என்னிடம்,
''நீங்களும் ஊருக்கோ போறியள் மனு ?''
''ஓம்,நாங்களும் இது 2ம் முறை.அப்போ ,உங்க மாமி....என்று நான் இழுத்தபோது....''
'' அவதானே ,எனக்கு அம்மா மாதிரி இருந்தா, 5 வருசத்துக்கு முதல் மேல போயிற்றா ,எனக்குத் தானே யாரையும் கொடுத்து வைக்கேலை'' என்று வருந்திக்கொண்டாள் யோகநிதி.
''சரி, இப்பதானே உங்களுக்கு இவரால மாமா ,மாமி கிடைச்சிருக்கினம்'' என்று நானும் அவளைத் தேற்றிவைத்தேன்.
எனக்கு அவளை நீண்ட காலத்தின் பின் மீண்டும்
சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. அதிலும் விமானத்தில் இரு குடும்பங்களுக்கும்
அருகருகே இருக்கை கிடைத்ததில் இரு தரப்பினருக்கும் பெரு மகிழ்ச்சி. கொழும்புப்
பயணம்வரையில் நான் ,என் மனைவி, அவர்களிருவர் , எனது பிள்ளைகள், அவர்களின் பிள்ளைகள் நட்பாகவே பழகிய முறையில், கொழும்பு வரையிலான பயணம் எமக்கு மிகமிகக்
குறுகியதாகவே தோன்றியது.
இருந்தாலும்
ஆச்சரியம் என்னவெனில், முன்னர் வரிக்கு வரி அண்ணா என்றழைத்த அவள், தனது கணவனுக்கு 'மனு அண்ணா' என்னை என்று அறிமுகம் செய்யாது மனு என்று
கூறியதுடன் அப்படியே தொடர்ந்து என்னை அழைத்தும்
பேசிக்கொண்டாள். சற்று வருத்தத்தினை அது கொடுத்தாலும், என்ன இருந்தாலும் அவளும் இப்போது ஒரு குடும்பத்தலைவி, ஒரு பெரியமனுஷி தானே என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
கொழும்பில் நாங்கள் , எங்கள் ஊர் செல்வதற்காக அவர்களை விட்டுப் பிரியும்போது , தங்கள் ஊருக்கு ஒரு நாள் அவசியம் குடும்பமாக
வந்து ஒரு நாள் தங்கிச் செல்லுமாறு இருவரும் வேண்டிக் கொண்டதை சந்தோசமாக
ஏற்றுக்கொண்டோம்.
என் மனைவிக்கும் கனடாவில் வாழும் நல்ல தொரு
குடும்பம் நட்பாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி. அவர்கள் அழைத்தது போன்று, அங்கு சென்று ஒரு நாள் சந்தோஷமாகவே பேசி உண்டு, கழித்து வந்தோம். அவர்களையும் நம்
ஊருக்கு வந்து செல்லும்படி நாங்கள் கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை.
நாமும் அதனை அப்போது பெரிதாக
எடுத்துக்கொள்ளவில்லை. நேரப் பிரச்சனைகளாக இருக்கலாம் என்று நாமே நமக்குச்
சமாதானம் கூறிக் கொண்டோம்.கனடா வந்து எமது வழக்கமான கடமைகளில் ஆழ்ந்து சில மாதங்கள் தான்
கடந்திருக்கும்.
வானொலியில் அன்று அறிவித்துக் கொண்ட அறிவித்தல்
என் காதில் தீயாய் பாய்ந்திட என் மனைவியும் அதிர்ச்சியானாள்.
''ஐயகோ! யோகநிதி உனக்கு என்ன நடந்தது? என்று அலறிவிட்டேன்.
எதுவும் புரியாமல் அறிவித்தலில் கூறியபடி அவளைப்
பார்வைக்காக வைத்திருந்த மண்டபத்தினை நோக்கி விரைந்தோம்.
அவள் மீளாத்துயிலில் பெட்டிக்குள் ..... அருகில்
அவளின் கணவன்...................... என்னைக் கண்டதும் என்னை கட்டிப்பிடித்து
அழுதான்.
sorry ,பிரதர் ...sorry பிரதர் என்று திரும்பத் திரும்பக்
கூறிக்கொண்டிருந்தான்.
எனக்கு அதுவும் புரியவில்லை. இதுவும் புரியாது
அங்கு இருந்த இருக்கையில் என் மனைவியுடன் இருந்தபோது
அருகில் இருந்த முதியவர் ஒருவர்
'' என்ன மாதிரி வாழ்ந்த பிள்ளை.ஊருக்குப் போகாம இருந்திருந்தால் ,இண்டைக்கும் அது சந்தோசமாய் வாழ்ந்திருக்கும் '' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
''என்ன ஐயா நடந்தது?
''தம்பி தாயில்லாப் பிள்ளை. தாய்க்குத் தாயா இருந்த மாமியாரும் போயிற்றா.
புருஷன்ர தாயை ஒரு தாயா மதிச்சுக் கொண்டு தான் இந்தப் பிள்ளை இருந்தது. சகோதர
பாசத்தைத் தேடி 4 பேரோட வஞ்சகமில்லாமல் பிளங்கின பிள்ளை.
ஊருக்குப் போன இடத்தில ,பெடியன்ர அம்மா, மேனுக்கு சந்தேகம் எண்ட நஞ்சை ஏத்தி விட்டுட்டா. திரும்பி வந்ததில இருந்து
பெடியன், அவளை ஒருத்தரோடும் பிளங்கக் கூடாது, கதைக்கக் கூடாது எண்டு தொடர்ந்து
பிரச்சனையாம் . தமயனவையும் கவனியாயினம். அவள் தன்ர கவலைகளை ஆரோட பகிர்ந்து
கொள்ளுறது. நெஞ்சுக்குள்ள அடக்கி ,அடக்கி மன அழுத்தம் அதிகரிச்சு ,முதல்ல பேச்சு நிண்டுது.பிறகு கோமா நிலைக்கு அது கொண்டு போயிற்றுது. ஒரு மாதம்
[HOSPITAL] கொஸ்பிரல். அதோட எல்லாம் முடிஞ்சுது.'' என்றவாறே ஒரு பெருமூச்சினை விடுத்துக்
கொண்டார் அந்த முதியவர்.
என்ன அநியாயம் இது. எமது சமுதாயத்தில் ஒவ்வொரு
பெற்றோரும் பிள்ளைகளுக்காகப் பல தியாகங்களை செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள் திருமணம் முடித்தபின் அவர்கள் வாழ்வில்
தலையிடும் ஒரு சில பெற்றோர்களின் வார்த்தைகள், அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கைக்கே
எமனாகவே வந்துவிடுகிறது. இப்படி எத்தனை சகோதரிகளின் வாழ்க்கை இன்று இந்த
நாட்டில் தீயோடு பொசுங்கிக் கொண்டிருக்கிறது.
அன்புக்கு இலக்கணமான ஒரு ஜீவன் உறங்கிவிட்டது. அதனை அந்த மண்டபம்
நிறைந்திருந்த சனக்கூட்டம் மேலும் நிரூபித்துக்கொண்டிருந்தது. ஆனால் அவளது கூடப்
பிறந்தவர்கள்......?
உலகின் முன்
வேஷமிட அவர்கள் வைத்த மலர்வளையங்கள் மட்டும் கருவேப்பிலைகளாக வெந்து
கண்ணீர் விட்டு வாடிக்கொண்டிருந்தன.
ஆனால் அவள் இன்னும் என் நெஞ்சில் ஒரு அன்புச்
சகோதரியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். நிச்சயமாக எனக்கு இன்னொரு பிறவி இருந்தால் அவளின் சகோதரனாகவே நான் கூடவே பிறந்திடல் வேண்டும்.
[-யோகநிதி அத்தியாயம் முற்றுப் பெற்றது , ஆனால் வருடல்கள் மீண்டும் ஒருநாள்
தோன்றும்.]
👉[பகுதி:03]👉
................சந்தித்தேன்.
இலங்கையின்
வடக்கிலும், கிழக்கிலும்
விடுதலைப் புலிகளுக்கும் , இலங்கை அரச இராணுவத்திற்கும் இடையில் போர் தொடர்ந்த வண்ணம்
இருந்தது. அங்கும் இங்குமாக நாளாந்தம் ஆலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ,மக்கள் கூடும் இடங்கள் எல்லாம் வந்துவிழும் எறிகணைகளாலும் , குண்டுகளாலும்
பலியாகும் உயிர்கள், ஊனமடைபவர்கள் , இடம்பெயர்ந்தவர்கள்
, அகதியானவர்கள்
தொடர்பான செய்திகள் வானொலிகள் மூலம் எம் உள்ளங்களைச் சுட்டுக் கொண்டிருந்தன. மனசு
ஆறுதல் இல்லா நிலையில் ஒரு வெள்ளிக்கிழமை , அருகில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயம் சென்றிருந்தேன்.
வழிபாடு
முடிந்ததும் , பெட்டிகளில்
சாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும், அங்கு தோன்றிய வரிசையில் நானும் ஒருவனாக
நின்றுகொண்டிருந்தேன்.
1987 ற்கு முன் ,இலங்கையரசு- புலிகள் போரின்போது ,பொம்பரின்
குண்டுத்தாக்குதலாலும்,செல்
வீச்சுகளாலும் மட்டுமே மக்கள்
கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அமைதிப்படை
என்ற போர்வையிட்டு 1987இல் இலங்கையின்
வடக்கு,கிழக்குக்கு வந்த
இந்திய இராணுவம் மின்சாரம் மட்டுமல்ல, உணவுப் பொருட்கள்
வரவையும் தடை செய்து , எல்லோரையும் பட்டினி போட்டு , பல அப்பாவி மக்களை குடும்பம் ,குடும்பமாக
வீட்டுக்குள் இருந்து வெளியில் இழுத்து வந்து சுட்டுக் கொன்று , பெண்களையும்
வேட்டையாடி கொடுமைகள் பல செய்து மேலும், ''போர் என்றால் இப்படித்தான்'' என்று இலங்கை
இராணுவத்திற்கு வழிகாட்டி த்
துணிவியினையும் ஊட்டி சென்றது.
தமிழரைப்பொறுத்தவரையில் மிகவும் கசப்பானதும் ,ஆறாத வடுக்களை இந்தியா ஏற்படுத்திய பேரவலங்கள் நிறைந்த
நம்பிக்கைத் துரோகத்தினை இலங்கைத்தமிழர்
என்றைக்குமே மன்னிக்கமாட்டார்கள். இந்திய
மத்திய அரசில் விபி சிங்க் என்பவரின் ஆட்சி மாற்றம் மட்டும் 1989 இல் இல்லையெனில்
நானும் இந்த வரிசையில் இன்று இப்படி நின்று
கொண்டிருக்கமாட்டேன்.
அவ்வமயம் , எனது நினைவலைகள்
கலைத்தது பின்னால் நின்ற ஒரு முதியவரின் குரல்.
''தம்பி உங்களை
எங்கோ கண்டமாதிரி இருக்கு''
தமிழரின் வழமையான
உரையாடல் இது. 'கண்ட மாதிரி' யில் ஆரம்பித்து
ஊரை அறிந்து பிள்ளையார் கோவிலுக்கு
வடக்குப் பக்கமோ ,தெற்குப்பக்கமோ
என ஆராய்ந்து ,மேலும் அவரது
சாதியினை உறுதி செய்வதற்கு கனகலிங்கத்தை தெரியுமோ? சிவலிங்கத்தை தெரியுமோ? என்று நான்
கூறும் லிங்கத்தை பொறுத்து சாதி
இன்னதென்று உறுதியடைந்த பின்தான்
இவர்களுக்கு மனம் ஆறுதல் அடையும் என்பது இங்கு வந்தபின் நான் புரிந்துகொண்டதொன்று.
''ஓம் , கண்டிருப்பியள் , ஒரு நாட்டில
இருந்துதானே வந்திருக்கிறம்''
''இல்லைத் தம்பி, நல்லா அறிஞ்ச
முகமாய் தெரிஞ்சுது, அதுதான் கேட்டன்.
இலங்கையில எந்த ஊர் தம்பி ?''
அந்த நேரத்தில்
என் மனசிலும் எப்படியோ திடீரென வந்த ஒரு சிறு
குறும்புத்தனம். அது வரும் என்று
நான் எண்ணியிருக்கவில்லை. அப்போது இளம் வயது தானே - வந்துவிட்டது.
''எப்பிடி ஐயா சொல்லுறது,
அம்மாவின்ர ஊர் யாழ்ப்பாணம், அப்பாவின்ர ஊர் மட்டக்களப்பு , நான் பிறந்தது
திருகோணமலை.''
முதியவருக்கு தலை
சுற்றியதோ என்னவோ தன் தலையினைக் கீழே
தொங்க விட்டவர் நிமிரவேயில்லை.
எனது பதிலை எண்ணி
எனக்குள் சிரித்துக் கொண்டேன். என் சிரிப்பினை உடைத்துக்கொண்டு வந்தது அவளது
குரல்.
[யோகநிதி:]
என்னண்ணா ,இங்க
நிற்கிறியள். சாப்பாடு இருக்கு வாருங்கோ!
தயங்கிய என்னிடம்
மீண்டும் அவள்,
''என்ர மாமியோட
வந்தனான் அண்ணா . அவ சாப்பாடு கூடவே எடுத்து வைச்சிருக்கிறா.வாருங்கோ சாப்பிடலாம்.
பின் தொடர்ந்து சென்ற என்னை அவளின் மாமியாருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன் ஒரு சாதம் கொண்ட பெட்டியினை என்னிடம் தந்து தம்மோடு இருந்து சாப்பிட வேண்டினாள்.
அப்படியாயின்
இவளது அண்ணா? மனதில் ஏற்பட்ட
வினாவுடன் சுற்றுமுற்றும் பார்த்த என்னை அவள் பார்வையால் என்னைக் கேட்டிடவே நானும் எனது ஆவலினை உதிர்த்தபோது ''இருந்து மாமியோட
கதையுங்கோ ,நான் அர்ச்சனைச்
சாமான் வேண்டிக்கொண்டு வாறன்'' அவள் அப்பால் சென்றுவிட்டாள்.
மாமியாரே பதில் கூறினார். ''அது தம்பி
அண்டைக்கு காரில கூட்டி வந்தவரைக் கேக்கிறியளா? அந்த தம்பியும் உங்களைப்போல இங்க சந்திச்ச ஒருவர் தான்.
நல்ல பிள்ளை தம்பி.''
எங்கள் நாட்டில இன்று பெண்கள் நம்பி ஆண்கள் எவரோடும் பிளங்க முடியாத நிலை மட்டுமல்ல ,பிளங்கினாலும் ஆணையும் ,பெண்ணையும் இணைத்து மோசமாகப் பேசும் எமது நாட்டிலிருந்து இந்த மண்ணுக்கு வந்த எனக்கு இது புதினமாகவே இருந்தது. மேலும் ஒரு முதியவரான பெண் அதை சாதாரணமாக கூறுவது காலத்தின் மாற்றமாகவே தெரிந்தது.
''அப்போ
யோகநிதிக்கு கூடப் பிறந்தவர்கள் இங்கை கனடாவில இல்லையோ அம்மா?''
''இருக்கினம்
தம்பி.ஒன்றுக்கு இரண்டுபேர் இருக்கினம். எல்லாம் காலம் செய்த கோலம் தம்பி.'' என்றவாறே ஒரு
பெருமூச்சினை உதிர்த்தார் அந்த அம்மா.
''என்னம்மா என்ன
சொல்லுறியள்? அவய ளென்ன கோவமே?''
''ஒரு பிரச்சனையுமில்லத் தம்பி. ஒரு கலியாணத்தை இவளுக்கு பேசி முடிச்சுப்போட்டு , தங்கட மனுசியும்,மனுசியின்ர
ஆட்களும் எண்டு ஒதுங்கி விட்டாங்கள். இவள் தாய், தகப்பனு மில்லாமல் ,கூடப்
பிறந்தவர்களும் இல்லாமல் கவலைப்பட்டுக்கொண்டு திரியிறாள். சகோதரங்கள் இருந்தும் , அவர்கள் பழகாத
குறையிலதான் ,உன்னைப்போல நல்ல
மனுஷரை கண்டால் தன்னை மறந்து சகோதரம்
போல பழகித் தன்ர தாகத்தினை தீர்த்துக் கொள்ளுவள். நானும் அதை
புரிஞ்சுகொண்டுதான் விட்டுக் கொடுத்து வாறன்.''
இதைக் கேட்டதும்
எனக்கு பாடசாலையில் படித்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவை தொட்டது.
அப்பொழுது 18 வயதுதான்
நிரம்பியிருந்தது. ஆண்களும் ,பெண்களும் கலந்த பாடசாலை வகுப்பறை என்றால் சில சோடிகள்
மட்டும் காதல் பேசாமல் ,
உரையாடிப் பொழுதினை
கழிப்பது வழமைதான். அதில் 100 இல் ஒன்று
காதலாகி, கசிந்து பள்ளியை
விட்டுச் செல்வதுண்டு. அச்செய்திகளை பாடசாலை,கோவில் சுவர்களும்
கரிக்கட்டை எழுத்துக்கள் மூலம் ஊருக்கு அறிவிக்கும்.
ஆனால் எங்கள்
வகுப்பில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட சலசலப்புக்கு காரணமாக இருந்தவள் வேதநாயகி
என்ற மாணவி ஒருத்திதான். ஏனெனில் அவள் எங்களில் எவரை நேருக்கு நேர் சந்திக்கும்போதும்
ஒரு நிறைவான புன்னகையை உதிர்த்துக்கொள்வாள். இது சும்மா இருந்த பெடியளை சுண்டி
விட்டதுடன் ,அவங்களுக்கு
தலையிடியையும் கொடுத்துவிட்டது.
இதற்கொரு முடிவு
கட்டிட வேண்டும் என்று என் மனம் உந்தினாலும், ஒரு
பெண்ணோடு பேசுவதென்றால் நான் பின்
பக்கமாகத் தான் ஓடுவேன் என்பது என் நண்பர்களுக்குத் தெரியும். எனவே என் வகுப்பு
நண்பன் இந்திரனை பேசுவதற்காக இணைத்துக்கொண்டு அவள் வகுப்பில் தனியாக இருந்தவேளை
சந்தித்தோம்.
''இங்க பார் நீ
சிரிக்கிற ஏண்டா ஒருத்தன பார்த்து சிரி, அது ஆர் எண்டது உன்ரை விருப்பம், எல்லாரையும்
பார்த்துச் சிரித்து பொடியள குழப்பாதை, சொல்லிப்போட்டன்''
''எட , இவன் இந்திரன்
இப்பிடி முறைப்பாய் அவளை கேட்கிறானே '' என்று
பக்கமாக என் முழங்கையால் இந்திரனை இடித்த எனக்குள் ஏற்பட்ட புதுக் குழப்பம், நியாயம் என்பதனை
கண்ணீரில் கலங்கிய அவள் கண்கள் நிரூபித்தன.
அவ்விடத்திலிருந்து
எழுப்பிய அவள் பேச ஆரம்பித்தாள்.
எழுப்பியதுகூட அவள் எமக்களித்த மரியாதை என்றே நான்
எடுத்துக்கொண்டேன். ஆனால் என் நண்பனோ 'அவள் எழும்பி அடித்துப் போட்டாள்' என்றே
கருதியதாக பின்னாடி என்னிடம்
கூறியிருந்தான்.
''ஏன் இப்பிடிப்
பேசுறியள், எங்கட வீட்டில
அப்பா, அம்மாவுக்கு
நாங்கள் 5 உம் பெண்
பிள்ளையள், ஒரு சகோதரன் கூட
இல்லை என்ற கவலை எனக்கு நிறையவே இருக்கு.
அதுதான் உங்களை எல்லாம் சகோதரங்களாய்
நினைச்சு சந்தோசப்படும்போது, உங்களைக் கண்டால்
என்னை அறியாமலே மெல்ல சிரிச்சுக் கொள்ளுவன். அது தப்பு எண்டா சரி நான் இனிமேல்
சிரிக்க மாட்டன்.'' எனத் தாழ்
குரலில் கூறிய ,அவளை நினைக்க எனக்கு
பரிதாபமாகவே இருந்தது.
இதுக்குமேல்
எங்களால் அவளோடு எதுவும் பேசமுடியவில்லை. ''சரி,சரி நாங்கதான்
தப்பு கணக்கு போட்டு விட்டோம்'' என இந்திரன் கூறவே அவ்விடத்தினை விட்டு நாம் நகர்ந்துவிட் டோம்.
''அண்ணா கோப்பி
குடியுங்கோ'' என்று என் சிந்தனையைக் குழப்பியவாறு ,
3 கோப்பி முகவையுடன் தட்டில் ஏந்தியவண்ணம் வந்து நின்றாள்
யோகநிதி.
''கோப்பியா?'' என்று
ஆச்சரியத்துடன் விளித்த என்னை, புன்முறுவலுடன் எனை நோக்கிய அவளின் மாமியார்
''உப்பிடித்தான்
தம்பி யோகநிதி. உன்னோடையே இப்பிடி எண்டா , கூடப்பிறந்தவையைக் கண்டால் உயிரையும் கொடுப்பாள். ஆனால்
அவங்கள் தான் ...''
குறுக்கிட்ட
யோகநிதி ''என்ன அண்ணா ,
மாமி என்ர கதை
முழுக்க உங்களுக்கு வாசிச்சு விட்டா போல
..'' என்று அவள்
சிரித்துக் கொண்டாலும் அச்சிரிப்பில் வெறுமையே தெரிந்தது.
அப்ப யோகநிதிக்கு
கல்யாணம் முடிஞ்ச எண்டா, அவர் ...என்று
இழுத்துக் கொண்டேன்.
''தம்பி ,கல்யாணவீடு
முடியேல. இங்க வந்துதான் கல்யாணம். அதுக்குமுதல் போய் பிரண்ட் [BOY FRIEND] எண்டு ஸ்பொன்ஸர்
[SPONSER] பண்ணிக்
கூப்பிடலாம் தானே. அதைத்தான் செய்திருக்கிறம்.''
''அப்போ நீங்களோ
மாப்பிள்ளையின் அம்மா''
''இல்லைத் தம்பி .
[என் கணவர்] இவர்தான் யோகநிதியின்ர தாய்மாமன். கலியாணம் முடியுமட்டும் எங்களோடதான்
பிள்ளையும் இருப்பாள்.இவள் வேலைக்கும் போறதாலை எல்லாம் சந்தோசமாய் முடியும் எண்டு
நம்பிறம்'' என்றவாறே
மூலஸ்தானத்தினை பார்த்து ஒருமுறை கை கூப்பி வணங்கிக் கொண்டாள் அந்த அம்மா.
இந்த நாட்டிற்கு தனிமையாக வந்த எனக்கு இப்படியான நல்ல உறவுகள் கிடைத்ததால் ஏற்பட்ட மனநிறைவு தொடரும் என்று எண்ணியது சரியா? தவறா? என்பதனை காலமே தீர்மானித்தது.
பகுதி:04 அடுத்த வாரம் தொடரும்.... ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழே செல்க...
👉[பகுதி:02]👇
அப்பொழுது
,
அண்ணா!
எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? என்று
தமிழில் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.
அதே
வர்ணத்தில் உடை , அதே சிரிப்பு ,வயதும் என்
தங்கச்சியின் வயதுதான் இருக்கும். கடைசியாக என் தங்கச்சி, இராணுவமுகாமிலிருந்து
ஏவப்பட்ட செல் எமது வீட்டில் விழுந்து , என்
கண் முன்னாலேயே அலறி த் துடித்து அவள் உடல் சிதறி இறக்கும்போது இதே பஞ்சாபி தானே அணிந்திருந்தாள். என்
நெஞ்சில் ஆறாத காயமாக்கிவிட்ட அந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை என்னைச் சுட்டுச்
கொன்றது.
குளிரில்
விறைத்த நிலையிலும் என் கண்களில்
இருந்து வெளிவந்த கண்ணீரினை , அவளுக்கு
தெரியாமல் இரு கைகளாலும் முகத்தினைத்
துடைப்பதுபோல ,என் கழுத்தில் குளிருக்காகச் சுற்றியிருந்த துணியால் துடைத்துக்கொண்டேன்.
எனது
மெளனத்தினைக் கண்டுகொள்ளாத அவள் '' அண்ணா! எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? '' என
தனது கேள்வியினை மீண்டும் தொடுத்தாள்.
நானும்
தயங்கியபடியே ''என்ன
உதவி?'' என்று
அடைத்த குரலுடன் கேட்க , விண்ணப்பப்
படிவம் ஒன்றினை என்முன் வைத்தவள்
''குறை நினைக்காதீங்கண்ணா! எனக்கு இது நிரப்பத் தெரியா தண்ணா. பிளீஸ்
அண்ணா!
அவளின்
கெஞ்சலும்,
வரிக்கு
வரி அண்ணா என்று அழைப்பதும் என் தங்கையை இழந்து,உறவுகளைப்
பிரிந்து, சொந்த
நாட்டினை விட்டுத் தொலைதூரம் வந்துவிட்ட எனக்கு
பாலைவனத்தில் கிடைத்த பசுந்தரை போல் மனசுக்கு இதமாகவே இருந்தது.
அவளது
படிவத்தினை எடுத்த நானும் ''நான் தமிழ் என்று உங்களுக்கு எப்படித்
தெரியும்? என்று
எனது சந்தேகத்திற்கு வந்தேன்.
''சொறி
அண்ணா! நீங்கள் வச்சிருக்கிற தமிழ் நியூஸ் பேப்பரை பார்த்துத் தானண்ணா, கேட்டன்.''
எனக்குள்
வந்த சிரிப்பினை அடக்கிக் கொண்டே '' ஏன் உதவிக்கு உன் கூட வருவதற்கு உனக்கு ஒருவரும் இல்லையா? என
வினவினேன் நான்.
''எல்லாரும்
வேலை யண்ணா. அண்ணா தான் வேலைக்குப்
போகும்போது இங்கை இறக்கிவிட்டுப் போனவர். இனி வேலை முடிஞ்சு போகும்போது கூட்டிச்செல்ல வருவர். ''
''அப்போ
அண்ணா கார், எண்டால் வசதியாய் வாழுகினம் போல!''
நகைத்துக்
கொண்ட அவளும் ''என்னண்ணா
,இந்த
குளிரையும் ,சிநோவினையும்
[பனிமழை] தாங்க ஏலாமல் தானே எங்கட
ஆட்கள் கடன்பட்டாவது இங்கை கார்
வைச்சிருக்கினம். இதைப்போய் வசதியெண்டு சொல்லுறியள்.''
அவள்
சொல்வது நியாயம் தான். நான் தெரிந்துகொண்டு குசும்புக்காக கேட்டிட அவளும்
உண்மையாகவே எடுத்துக் கொண்டாள் போலும், அதனால் தான் அவள் தன்கருத்தினை
சற்று அழுத்தமாகவே கூறினாள்.
படிவத்தினை
நிரப்புவதற்காக அவள் தந்த தகவல்களில் அடிப்படையில் அவளது பெயர் யோகநிதி என
அறிந்துகொண்டேன்.அவளே தொடர்ந்தாள்.
'' அண்ணா
நீங்கள் பஸ்ஸிலையா வந்தனீங்கள்? அப்படியெண்டா
எங்களோட வாருங்கோ! அண்ணா உங்களையும் உங்கட
வீட்டில இறக்கிவிடுவர்.'' என்றவளின் வஞ்சகமில்லா முகத்தினை நிமிர்ந்து
பார்த்தேன்.
இந்த
நாட்டில் ஒவ்வொருவரும் இயந்திரங்களுடன்
இயந்திரமாய் இயங்கிக்கொண்டு தலையிலும், நெஞ்சிலும் எவ்வளவோ
தீர்க்கப்படவேண்டிய பெரும் சுமைகளைச் சுமந்துகொண்டு , உறவுகளை, பெற்றபிள்ளைகளை
பார்க்கவோ ,பேசவோ நேரமில்லாமல் இயங்கிக் கொண்டிருப்பதனை நான்
அறியாமலில்லை. அதுவும் இந்த பனிவிழும் காலநிலை என்றால், நம்மவர்கள்
படும் கஷ்டம் சொல்லத் தேவையில்லை.
''பரவாயில்லை, நான்
வந்த மாதிரியே போய்க்கொள்ளுறன். நீங்கள் கேட்டதுக்கு நன்றி'' என
என் முடிவினை புன்னகையுடன் கூறிவைத்தேன்.
''அண்ணா
,உங்கட
அப்பா,அம்மா
ஊரில சுகமாய் இருக்கிறார்களா?'' என்ற அவளின் கேள்விமுலம் அவள்
கனடாவில் நீண்ட காலம் வசிக்கிறாள் என நிரூபித்துக் கொண்டாள். ஏனெனில் இங்கு
கனடியர் முதலில் எமது சுபம் கேட்பார்கள். கொஞ்சம் அதிகம் பழகுவோர்கூட அடுத்ததாக குடும்ப சுகம் விசாரிப்பது அவர்களின்
வழக்கமாக இருந்தது.
''ஓம்
,அவை
சுகமாய் ஊரில இருக்கினம்'' என்று கூறிய நானும் எனது பங்கிற்கு அவளது அப்பா,அம்மா
சுகத்தையும் கேட்டுவைத்தேன்.
''பதிலாக
அவள் கண்களிலிருந்து பொல,பொலவென்று கண்ணீர் ஆறாய் பாய்ந்தது.
எனக்கு
என்ன செய்வது என்று புரியவில்லை. 'அவள் கேட்டாள் என்று தானே நானும்
கேட்டேன். இவள் ஏன் இப்படி ...' என தடுமாறிய நான்
''என்ன
யோகநிதி, நான்
கேட்டது பிழை எண்டா , நீங்க ஒண்டும் சொல்லவேண்டாம், அதை
விடுங்கோ''
''பிழை
இல்லை அண்ணா''
என்றவாறே
குரலை அடக்கியவாறு விக்கி, விக்கி
அழுதுகொண்டாள் அவள்.
''அப்ப
ஏன்?... ஆக்களுக்கு
முன்னாலை ...இப்பிடி..''
''முடியலை
அண்ணா , அப்பாவும்
அம்மாவும்.. தம்பியும் தங்கட்சியும்... கிளிநொச்சியிலை ஓட்டோ ஒன்டில
வந்துகொண்டிருக்கும்போது , மிதிவெடியில ஓட்டோ மிதிச்சு நாலுபேரும்
போயிட்டினம்''
என்றவள்
முகத்தினை கைகளால் பொத்தியபடி அழவே ஆரம்பித்துவிட்டாள்.
என்
நெஞ்சு நடுங்க ஆரம்பித்தது. என் நெஞ்சினை இருகைகளாலும் பொத்தியபடி எதுவும்
பேசமுடியாமல் சில வினாடிகள் விக்கித்து நின்றுவிட்டேன்.
அங்கு
நின்ற காவல் உத்தியோகத்தர் இருவர்
அவளருகில் வந்து 'ஏதாவது உதவி தேவையா' என
அவளை விசாரித்தனர். அவள் 'நோ' என்று சுருக்கமாக கூற, நானும்
நிலைமையினை அவர்களுக்கு விளக்கியபோது தங்கள் தலையில் தம் கையினை வைத்து ''ஓ மை கோட் '' என்றவர்கள், அவளிடம்
கைகொடுத்து ஆறுதல் வழங்கி, தண்ணீர் போத்தல் ஒன்றினை வழங்கிக்
குடிக்கவைத்துச் சென்றனர்.
இனவாத
அரசியலும் ,யுத்தமும்
நிறைந்த நம் நாடெங்கே, அமைதியும் , மனிதாபிமானமும் நிறைந்த இந்த நாடெங்கே என எண்ணிக்கொண்டு சுவரினை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கண்ணாடி யன்னலூடு ஒருமுறை வெளியில்
பார்த்தபோது வெளியில் கொட்டிக்
கொண்டிருக்கும் பனிமழை என்னைப் பார்த்துச்
சிரிப்பது போல் இருந்தது.
''அண்ணா
, அண்ணை
வேலையால வாற நேரம் நான் வாசலில நிற்க வேணும், இண்டைக்கு உங்கட உதவிக்கு நன்றி
அண்ணா,போயிற்று
வாறன்.''என்றவள், அங்கு
தாங்கியில் கொழுவி வைத்திருந்த ஜாக்கட் இனை
எடுத்து அணிந்துகொண்டு ஒரு
சிட்டுக் குருவிபோல் பறந்து சென்றாள்.
''சிக் , இந்த யுத்தம் வந்து ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் ஆறாத காயங்களை உண்டாக்கிக் கொண்டு அல்லவா இருக்கிறது. எப்படித்தான் வசதியான நாட்டில வாழ்ந்தாலும் ,எவர் முகத்திலும் சந்தோசத்தினைக் காண முடிவதில்லையே! தமிழனுக்கு ஏன்தான் இப்படி நிலைமையோ'' என வருந்தியவாறே என் வேலைகளை முடித்துக்கொண்டு வீடு வந்து அடைந்தேன்.
அவளை மீண்டும் நான் சந்திப்பேன் என்று நான் கனவிலும்
நினைத்திருக்கவில்லை.
ஆனால்
.... சந்தித்தேன்
[பகுதி 03 வாசிக்க மேலே செல்க ....பகுதி 01
இனைப் படிக்க கீழே செல்லுங்கள்]
👉பகுதி:01👇
1990 ஆம் ஆண்டு. அது ஒரு
மார்கழி மாதம். இலங்கையின் கொடிய யுத்தத்திலிருந்து விடுபட்டு , கனடிய
மண்ணில் கால் வைத்தபோது, எதோ ஒரு விதமான விடுதலை பெற்றுக்கொண்ட ஒரு
உணர்வு என் நெஞ்சினை வருடிச் செல்ல, என்
கனவுகள் இனியாவது ஈடேறும் என்ற எதிர்பார்ப்புடன் டொரோண்டோ நகரினை எனது தங்குமிடமாக
என் நண்பனுடன் அரவணைத்துக்கொண்டேன்.
குளிர்
என்றால் ஜாக்கெட் அணிந்தால் சரியாய்ப்போய்விடும்
என்ற எனது கருத்துக்கு , முற்றுப்புள்ளி வைத்து டொரோண்டோ குளிர் -40 வரையில் தனது கைவரிசையினைக் காட்டி என்
நரம்புகள் வரையில் நடுங்கச்செய்து , எலும்புகளை ஒன்றோடு ஒன்று
மோதவைத்து நோகடித்துக் கொண்டிருந்தது.
இந்த
நிலையினுள்ளும் என் நண்பன் ஓடிச்சென்று அன்றய சமையலுக்கென்று சில பொருட்கள்
வாங்கிக்கொண்டு வந்தான்.
ஊரில் மாரி காலத்தில் அடை மழையினை
அனுபவித்திருக்கிறேன். அந்த அடை மழையினுள்
சந்தைக்குப் போக முடியாத நிலையில் அப்பு
படுத்திருந்து ,
பழைய
வாரமலர் பத்திரிக்கைகளைப் புரட்டிக்கொண்டிருக்க
, ஆச்சி
இருப்பில் இருந்த கருவாடு -அதில்
குழம்பும் , வளவில் கொய்த முருங்கையிலையில் வறையும் -நினைத்தபோது வாயினில் ஊறி நிரம்பிய
உமிழ்நீரினை விழுங்கிக்கொண்டேன். எங்கள் சோறு,கறி சாப்பிட்டே பல வாரங்களாகிவிட்டது, இந்த
லட்ஷணத்தில ,ஆச்சியின்
சமையலை எண்ணிய என்னை ஒருமுறை நொந்துகொண்டேன்.
ஊரில்
யுத்த விமானத்தில் இருந்து குண்டுகள் பொழிந்து ,பட்டவர்கள்
உயிர்துறக்க மீதி ஓடித்தப்ப , கனடா ஓடிவந்த எனக்கு இங்கு வெள்ளை நிறத்தில்
குண்டு,குண்டுகளாக
பனிமழை ,ஊரில்
மார்கழி அடைமழைக்குச் சமமாகத் தொடர்ந்து
கொட்டிக்கொண்டு இருந்தது ஆச்சரியமாகவே இருந்தது. வீடுகள்,வீதிகள் ,நிலங்கள்
எல்லாம் பனிக்குவியல்கள் ஆக்கிரமித்து வெள்ளொளி பிரகாசித்துக்கொண்டிருக்க , வானம்
மட்டும் கருமுகில்களால் சூழப்பட்டு , மேலும் பனிமழையின் தொடர்ச்சிக்கு
கங்கணம் கட்டிக்கொண்டிருந்தன.
இங்கு வேலை
செய்வதற்கு ,
தொழில்
அனுமதிப்பத்திரம் எடுக்கவேண்டும் என்ற என் நண்பனின் அறிவுரையினை ஏற்றுக்கொண்டு ,அவன்
தந்த குறிப்புகளுடன் , தலையிலிருந்து கால் வரையில் குளிருக்கான
எத்தனையோ உடைகளை வரிந்து வலிந்து கட்டிக்கொண்டு , வான்
நிலாவில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ரோங் வேஷத்தில் பேருந்து ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டேன்.
பனிமழையின்
மத்தியில் , வீதிகள்
தோறும் நீல வர்ண விளக்குகளின் சமிக்கைகளுடன் பனிக்குவியல்களை அகற்றும் வாகனங்களும், வீதிக்கு
பனியினை கரைக்கக்கூடிய உப்புக்களை
விசுறும் வாகனங்களும் தம்பணியினை செய்துகொண்டிருக்க , ஊரும்
வாகனங்களுடன்,
என்
பேருந்தும் ஊர்ந்து சென்றடைய பல மணி நேரம் கடந்துவிட்டது.
பேருந்திலிருந்து
இறங்கியதும் ,அவசரமாக
அனுமதிப்பத்திரம் பெறும் அலுவலகம் செல்ல மனம் உந்தினாலும் ,நண்பன்
கூறிய எச்சரிக்கையினை எண்ணி மெல்ல ,மெல்ல கால்களை எடுத்து வைத்து
நடந்தேன்.
அந்தோ
பரிதாபம்!. பனியினுள் ஒருவர் சறுக்கி விழ ,அவரினை
தாங்கிப் பிடித்த பெண்ணும் கீழே வீழ்ந்து இருவரும் பலத்த அடி என்று உணர முடிந்தது.
அவர்கள் இருவரும் எழுந்து , மிகவும் சிரமப்பட்டவாறு தாண்டித் தாண்டிச்
சென்றனர்.
பனியினுள்
சறுக்கி விழல் என்பது மிகவும் வேகமாக வீழ்வதால் அடி பலமாக இருக்கும் என்று என்
நண்பன் கூறியிருக்கிறான்.
ஊரில் ஒரு
பணிமனைக்குள் சென்றால் முறைத்திடும் எம் அதிகாரிகளுடன் பழகிப்போன எனக்கு இங்கு
அலுவலகத்தினுள் நுழைந்ததும் வரவேற்பாளரிடம் வணக்கம் கூறி, சுகமும் பகிர்ந்து கொண்டதில்
எனக்கோ மற்றுமொரு புதிய அனுபவம். சிரித்துக்கொண்டே அவள் தந்த விண்ணப்பப்
படிவத்தினை ,அவள்
காட்டிய மேசையில் வைத்து நிரப்புவதற்காக வந்து அமர்ந்து கொண்டேன்.
கையுறைகளைக்
கழற்றிக்கொண்ட நான் பேனாவினை எடுப்பதற்கு ஜாக்கெற் திறக்க கை விரல்கள் இயங்க
மறுத்தன. மேலும் அவை சிவந்து, வெந்த புண் போல் நொந்துகொண்டிருந்தன. எனவே
சிறிது நேரம் கை இரண்டையும் ஒன்றுடன் ஒன்று தடவி , கை
வைத்தியம் செய்து விரல்களை ஓரளவு இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாலும், வேதனையுடன்
அவ் வேதனையை மை ஆக்கி படிவத்தினை நிரப்ப ஆரம்பித்தேன்.
அந்த
வேளையில் ...யாரோ ஒருவர் என்னருகில் ,மிக அண்மையாக வந்து நிற்பது போன்ற
உணர்வு தென்பட ,நிமிர்ந்து
பார்த்திட எண்ணியபோது, என் நண்பன் கூறிய அவனது அனுபவம் என்நெஞ்சினை
வருட ஆரம்பித்தன.
''இங்க பார் , பாங்க் [வங்கி] போன இடத்தில ஒரு
தமிழன் ,ஒரு
கோ சையின் வச்சாத்தான் தனக்கு வாழ்வெண்டு கெஞ்சினான். சரி எண்டு சைன்
வைச்சுவிட்டன்.கடைசியில என்ர வருமானத்தில பாங்க் கையை வச்சிட் டான். கவனமாய் இரு.''
எண்ணியவாறு
கடைக் கண்ணால் ,களவாகச்
சற்று தரையினை நோக்கினேன். பஞ்சாபி உடையணிந்த பெண் என்று மட்டும்
உணர முடிந்தது.
''என்னருகில் இவள் ஏன் வந்தாள்..?'' என்ற
கேள்வி, கணைகளாக
நெஞ்சினும் அலைமோத, நெஞ்சம் படபடக்க, படியாமல் பரீட்சைக்குப் போன
மாணவன்போல் விண்ணப்பப் படிவத்தினையே பேய்
போல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ....
வருடல்கள் பகுதி :02 படிக்க மேலே செல்க .........
✍செ.மனுவேந்தன்
No comments:
Post a Comment