"பிள்ளைகளின் வளர்ப்புமுறையில்…../ பகுதி 01 ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும்
காட்டும் வேறுபாடுகள்"
"யாயே, கண்ணினும்
கடுங் காதலளே
எந்தையும், நிலன்
உரப் பொறாஅன்;
‘சீறுடி சிவப்ப,
எவன், இல!
குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, ...... "
[அகநானூறு
12,]
எம்
தாய் தன் கண்ணினும் இவள்பால் மிக்க காதலுடையாள் எம் தந்தையும் (இவள் எங்கேனும்
செல்வது காணின்) நிலத்தே இவள் அடி பொருந்தி நடக்கப் பொறாதவனாகி, ஏடி!
இளைய மகளே!,
நின்
சிறிய அடி சிவப்புற என் செயச் செல்கின்றாய் என்று கூறும் - இப்படித்தான் சங்க
காலத்தில் பெண் பிள்ளையின் நிலை இருந்தது.
ஆனால்
இப்ப வீட்டில் ஆண் குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்து
விட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு
ஏற்பட்டது?
தமிழன்
வரலாற்றில் கிறிஸ்துவுக்கு முன், சங்க கால தொடக்கத்தில் தாய் வழிச் சமூகமே
இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே
நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி
என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பண்டைய தமிழர் வாழ்வில் பெண்
மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் பின் இந்து
சமயம் [வைதீக சமயம்] என்ற போர்வையில், வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை
புகுத்தி தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ் மக்களின் தமிழ்ப்
பெண்களின் வாழ்வுக்கு வீழ்ச்சியாக முதலில் அமைந்தது எனலாம்.
தாய்வழி
மரபு, திராவிடர்களின்
அல்லது ஆரியர் அல்லாதவர்களின் சிறப்பியல்பாக / விசேஷ அம்சமாக முன்பு இருந்தது. அது
இன்னும் நடைமுறை வழக்காக சில தெற்கு இந்தியா பகுதிகளில் காணப்படுகிறது.
திராவிடர்கள் பெண்களுக்கு நன் மதிப்பு கொடுத்தார்கள். இதனால் தான் இன்னும் கிராமிய
/ நாட்டுப்புற மக்கள் அம்மன் வழிபாட்டில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இது சங்க
பாடல்களில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. பண்டைய தமிழர்களுக்கு மகள் / பெண்
தொல்லையாக இருக்கவில்லை. ஆணின் உயிராதாரமான, இன்றியமையாத பாதியாகவே பெண்
கருதப்பட்டது . எப்படியாயினும், சங்க காலத்திற்கு பின் இந்த நிலை, பல
மூட நம்பிக்கைகளாலும் கோட்பாடுகளாலும்,மெல்ல மெல்ல சாய / சரிய
தொடங்கியது. மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பெண் பிள்ளை பிறப்பையிட்டு பெற்றோர்
புலம்புவதை காணக் கூடியதாக உள்ளது.
பொதுவாக
எல்லா பெண்களும் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி, தாய், வீட்டுக்
காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே பண்டைய நாகரிகங்களில் நன்கு
பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, மெசொப்பொத்தேமியா பெண் தெய்வம்
குலாவிற்கான [goddess
Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு நிலைகளை
"நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான்
ஒரு மனைவி,
நான்
ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house
keeper"].என கூறுகிறது. மேலும் சம்பிரதாய வேலைகளான
தானியம் அரைத்தல், சாப்பாடு தயாரித்தல், குடிவகை
வடித்தல், துணி
உற்பத்தி போன்றவற்றை இளம் வயதில் பெண்கள் அங்கு பொதுவாக கற்றுள்ளார்கள். மேலும்
அரண்மனையில் பெண்கள் துணிகளை நூல் நூற்று அல்லது நெசவு மூலம் செய்கிறார்கள். அத்துடன்
சாப்பாடு செய்வதிலும் பங்கு பற்றுகிறார்கள். தமிழினத்தாய் ஒருத்தியின் கூற்றாகப்
பொன்முடியார் பாடிய ஒரு புறப்பாடல் ஒன்றில், மகனைச் சான்றோன் ஆக்குவதும்
அவனுக்கு வேல்வடித்துக் கொடுப்பதும் நன்னடை நல்குவதும் ஆண்களது கடமை எனச் சொன்ன
தாய், மகனை
வயிற்றில் சுமந்து பெற்று வளர்ப்பது மட்டுமே பெண்ணாகிய தனக்கு விதிக்கப்பட்ட கடமை
என உணர்த்துகிறாள்.
"ஈன்று
புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே;[புறநானுறு 312]
அதாவது
சுமேரியானை போன்றே பெற்றுப் பாதுகாத்தல் பெண்ணுடைய கடமையாகும் என்கிறது. பொதுவாக
பெண்கள் நீண்ட தளர் மெய்யங்கியை [long tunics] அணிவார்கள்.
இது உடம்பை சுற்றி மார்பில் பொருத்தப்பட்டு இருக்கும். அது மட்டும் அல்ல
ஒப்பனையும் அணிந்திருந்ததார்கள். உதாரணமாக, சிவப்பு மருதாணி உதட்டுக்கும்
முகச் சிவப்புக்கும் பூசி இருந்தார்கள்
பண்டைய
சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை /
முன்மொழிதல் உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து திருமண ஒப்பந்தம்
நிறைவேற்றப்பட்டு, இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு
வருகிறது. இப்படிதான் பண்டைய சுமேரிய குடும்ப வாழ்க்கை இருந்தது. ஒரு இளம் பெண்
பூப்படையும் [puberty]
போது, அவள்
கல்யாணத்திற்கு தயார் என கருதப்படுகிறது. பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து
விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். குறிப்பாக தென்
இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்’ என்று
இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது.
பொதுவாக கல்யாணம் அவர்களின் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப் படுகிறது. இங்கு
மணமகன் மணமகளுக்கான பணக் கொடுப்பனவு செய்கிறார். மணமகளின் பெற்றோர் சீதனம் / பரிசு
கொடுக்கிறார்கள். இந்த சீதனம் மணமகன் அவளை விட்டு விலகினாலோ அல்லது அவள் விதவை
ஆகினலோ திரும்பவும் அவளுக்கு உரித்தான அனைத்தும் அவளை சேருவதை
உறுதிப்படுத்துகிறது. யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் இப்படியான ஒரு நிலையையே
எடுக்கிறது. இங்கும் மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப் பட்ட
சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருகிறது. மேலும் தேசவழமைச் சட்டம் என்பது
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக
வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம்
ஆகும். மேலும் தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும்
.மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் (Populism) காரணமாக
ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது இந்த
பண்டைய வழக்கம்
சங்க காலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணமே சரியான வாழ்க்கை என கருதப்பட்டது. மேலும் அவர்களுக்கு, தனது கணவனை தெரிந்து எடுப்பதற்கு ஒருவாறு ஏற்றுக்கொள்ளத்தக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டும் இருந்தது. ஆகவே திருமணம் எல்லாம் பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல. ஒரு திருமணத்திற்கு காதலினால் ஏற்படும் இயற்கையான ஒன்று கூடல் முக்கிய சிறப்பியல்பு ஆகவும் இருந்தன, பண்டைத் தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறியும் கற்பாகிய திரு மணத்தில் பொதுவாக முடிந்தது. அதாவது,இறுதியாக மணமகளை தந்தை அல்லது பெண்ணின் பாதுகாவலர், மிகவும் பொருத்தமான மாப்பிள்ளை ஒருவருக்கு பரிசாக [தானம்] கொடுப்பது மூலம் பொதுவாக இது நிறைவேறியது.
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 02 தொடரும்
No comments:
Post a Comment