தொடரும் அதர்மங்கள்

பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவர்.இவர் ஒரு குறுநில மன்னர், வேள் என்ற வம்ச வழி வருபவர்கள். எனவே பாரிவேள் என்று அழைப்பது உண்டு.இவரதுக்காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு.

 


இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும்.அது தற்போது பிறான்மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

 

பிறான்மலை சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி அருகில் உள்ளது.

 

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது.அப்படி இருந்தப்போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தண்மையே.கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

 

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார்.இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார்.நறுமுகையே ...நறுமுகையே எனத்துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

 

பாரி நகர்வலம் சென்றபோது பற்றிப்படர கொழுக்கொம்பு இன்றி தரையில் கிடந்த முல்லைக்கொடிக்காக தேரை தந்து வந்தது அனைவரும் அறிந்த புகழ்ப்பெற்ற சம்பவம் ஆகும்.

 

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது [பொறாமை] கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக்கிடைக்கவில்லை அவர்களுக்கு.

 

முற்றுகை இட்டக்காலத்தில் உணவுத்தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற்கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு.

 

அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

 

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க்களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும்.

 

அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே

அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக்கேட்டார்கள்.

 

நாங்களும் பலக்காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக்கோட்டைக்குள் இருந்துக்கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், , மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக்கேட்டார்கள்,

 

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக்கொண்டே உணவுத்தேவையை சமாளித்துக்கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக்கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

 

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக்கேட்டதர்கு, போரில் அவரை வெல்லமுடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக்கேட்டாலும் கொடுத்துவிடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப்பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக்கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக்காட்டினார் கபிலர்.மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்துவிட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

 

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப்பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

 

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக்கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக்கேட்டாலும் எப்படி உயிரைக்கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

 

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக்கூடாது என்று வாளை எடுத்து வைத்துவிட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

 

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப்பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாட்களை பாரிமீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

 

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை ,சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக்கேட்டுக்கொண்டார்.

 

இல்லை எனாது , கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

 

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி , இனி உயிரோடு இருக்கக்கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

 

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன்வரவில்லை.

 

மூவேந்தர்களைக்கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

 

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம்முடித்து வைத்துவிட்டு, மற்றப்பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப்போக்கிக்கொண்டார்.

 

காரி , பாரி மகளை மணந்துக்கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து , போரில் அவரையும் கொன்றுவிட்டார்கள்.காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக்கொண்டாள்.

 

மற்றொரு மகளுக்கு என்னவாயிற்று என்பது சரி வர தெரியவில்லை, அவ்வையார் அப்பெண்ணுக்கு ஒரு குறு நில மன்னனுடன் மணம் முடித்தார் என்றும் சொல்கிறார்கள்.

 

பின்குறிப்பு.01:பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.


பின்குறிப்பு.02: இன்று ஈழப்போராட்டத்திலும் புலிகளின் வளர்ச்சியே அவர்களின் அழிவுக்கு வழிகோலியதை ஒப்பிட்டு நோக்கலாம்.


பின்குறிப்பு.03: அரசியலாக இருக்கட்டும், (தொழிலகமாக  அல்லது ஊடகமாக இருக்கட்டும் ) தமிழர் அடுத்த தமிழர்  புகழை சகித்துக் கொள்வதில்லை. அதுவே இன்று  ,தமிழரின் பின்னடைவுகட்க்கும் வீழ்ச்சிக்கும்  வழிகாட்டியுள்ளது.


நன்றி  : வவ்வால் [படித்ததில் மறக்க முடியாத துரோகம்] 


No comments:

Post a Comment