ஒரு டொக்டருக்கு மணமகள் தேவை

 

டொக்ரர் வரதராஜன்  அப்பொழுதுதான் கடினமான ஆப்பரேசன் ஒன்றினை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு களைப்புடன் வந்து தனது அலுவலக அறை சோபாவில்  அமர்ந்துகொண்டார்.

 

''உள்ளை வரலாமா சேர்?'' என்று கேட்டுக்கொண்டு அவரது பதிலை எதிர்பாராமலே, அவருடன் கூடவே அவ் வைத்தியசாலையில் பணிபுரியும் உதவியாளர் [attendant] வாஸந்தியும்  அருகில் உள்ள சோபாவில்  வந்து அமர்ந்துகொண்டாள்.

 

 ''என்ன சேர், களைச்சிட்டீங்களா? '' என்றவள் எழுந்து அங்கிருந்த ப்பிறிட்ஜ்ஐத்  திறந்து ஒரு கிளாசில் ஒறேன்ஜ் ஜூஸினை வார்த்து கொடுத்தபோது அதை வாங்கிய வரதராஜன் அவளை உற்று நோக்கினார்.

 

அழகுடன், பண்போடு பழகும் வாஸந்தி, அருகிலுள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தில், ஒரு தாழ் சாதிக் குடும்பத்தில் பிறந்தவள். அக் கிராமத்திலே ஓரளவு படித்து அரச வேலை என்று ஒன்று செய்வது என்றால் அவள் ஒருத்தி தான்.

 

''என்ன சேர், யோசிக்கிறியள்? இது உங்கட ஜுஸ்தான்நான் வேறை ஒண்டையும் கலக்கேல்லை'' என்றவாறு சிரித்துக்கொண்டாள் வாஸந்தி.

 

சேர்ந்தே சிரித்துக்கொண்ட வரதராஜன்  தொடர்ந்தார், ''இல்லை வாஸந்தி, நான் படிச்சு முடிச்சு 15  வருஷமாயிற்று, நான் இன்னும் ........'' 

 

இடையில் குறுக்கிட்ட வாஸந்தி.

 

''15 வருசமாய் வேலையும் செய்யிறன். 10 வருசமாய் வீட்டில பெண்ணும்  பார்க்கினம், சாதி பார்த்தும், சாதகம் பார்த்தும், சீதனம் பேசியும்  கல்யாணம் எல்லாம் குழம்பிக்கொண்டே போய்க்கொண்டு இருக்கு. இப்போ எனக்கு வயதும் 39 ஆகுது. இதைத் தானே 100 நாள் சொல்லிப் போட்டியள் எனக்கு''.

 

ஜூஸினை குடித்து முடித்ததும், அதை வாங்கி வைத்த வாஸந்தியிடம்,

 

''ஏன் வாஸந்தி", சற்று தயக்கத்ததுடன், ''ஏன்  நீ என்னை கல்யாணம் பண்ணக்கூடாது?.  என்று மனதில் இருந்த நீண்ட நாள் ஆசையைப் படாரென்று போட்டு உடைத்து வைத்தார் வரதராஜன்.

 

பெரிய ஒரு ஜோக்கொன்றைக் கேட்டதுபோல் விழுந்து,விழுந்து சிரித்தாள் வாஸந்தி.

''ஏன் சேர், உங்களுக்கென்ன பைத்தியமாஇப்பதானே சொன்னனீங்கள், உங்க வீட்டில சாதி பார்க்கினம் எண்டு, அதிலையே நான் அவுட்.  அடுத்தது சாதகம், நான் செவ்வாய் தோஷம். அதிலையும் நான் அவுட். மற்றது சீதனம், நினைக்கவே முடியாது, இப்ப முற்றிலும் நான் அவுட்! ஏதாவது நடக்கிற விசயமாய்ப் பேசுங்களேன்!.

 

என்றவாறே , கலங்கிய கண்களுடன் பொய்யாகச்  சிரித்தாள் வாஸந்தி.

 

''ஏன் வாஸந்தி , இப்ப ஓர் ஆப்பரேஷன் செய்து முடித்தனே, அவள்.... உங்கட சாதி தானே?"

 

தலை குனிந்தவள் கண்களைத் துடைத்தவாறே '' ஓம் டொக்ரர் '' எனத் தன் குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.

 

''ஒரு நாளைக்கு இப்பிடி எத்தனை சாதிக்காரர் வருகினம். அவர்களை எல்லாம் சாதி பார்த்தா தொட்டு, அளைந்து வைத்தியம் செய்கிறோம். இல்லை, ஒரு சாதி குறைஞ்ச சமுதாயத்துல பிறந்து வந்த டொக்டர் வேலை செய்தால், வைத்திய சாலைக்கு உயர் சாதி நோயாளர்கள் என்ன வராமலா இருக்கிறார்கள்?"

 

"அடுத்தது சாதகம்; சாதகம் பார்த்து செய்து இங்கை எத்தனைபேர் இணைஞ்சு வாழ்ந்திருக்கினம் எண்டு காட்டு பார்க்கலாம்?".

 

"இந்தப் பாழாய்ப்போன சீதனம்; இப்ப பெண்களும் வேலைக்குப் போய் உழைக்கிறார்கள்தானே. திருமணம் செய்தபின்னரும் இருவரும் உழைக்கத் தானே போகிறோம், டொக்டர்மார் பெரிய சம்பளக்காரர் எண்டால் பிறகு ஏன் சீதனமாயும் இன்னும் வேணும் எண்டு கேட்டு அலையவேணும்?"  என்று மனதில் உள்ளதை உளறிக் கொட்டினார் வரதராஜன்.

 

''உங்க வீட்டிலை இதுக்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டினம். டொக்ரர் உத்தியோகம் எண்டா  எங்கையும் மதிப்புத் தானே சேர். கல்யாணம் எண்டு போனால், ஊருக்குள என்றால் சாதி பார்க்கிற சமூகம் எல்லே எங்கட தமிழ் சனம். வேறு நாடு, வெளி இனத்தவர்கள் என்றால் என்ன சாதியெண்டாலும் செய்து வைப்பினம்; ஊருக்குளை என்றால் அவையளின்ரை சாதியை விட்டு அங்காலை போக மாட்டினம்".

 

தொடர்ந்தாள் வாஸந்தி,

 

"அதோடை உங்கடை  வீட்டில நீங்க கடைசிப் பிள்ளை. உங்களுக்கு முதல் 5 சகோதரங்கள் ரீச்சர், எஞ்சினியர், ஜட்ஜ் போலீஸ், நேர்ஸ் ஆக இருந்தும், ஒரு கலியாணவீடு மற்றும் கொண்டாட்டங்கள்ளை உங்கட அப்பா அம்மா தங்களை அறிமுகம் செய்யேக்கை, உங்கட 5 சகோதரர்களையும் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டு விட்டு,  'எங்கட கடைசி மகன் ஒரு டொக்டர்என்றுதானே சொல்லுறவை. அப்பிடியானவை உங்கள இழக்க விரும்ப மாட்டினம் தானே".

 

சிந்தித்தவர் ''ஏன் வாஸந்தி!.. என்னை இழக்கவும் விரும்பாயினம் எண்டு சொல்லுறியே, அந்த வீக் பொயிண்ற் ஒன்று போதாதா அவர்களைச் சமாதானப் படுத்த?''

 

நாணத்துடன்  ''என்ன சேர், எதோ முடிவான மாதிரிக் கதைக்கிறியள்''

 

''சரி,சரி உந்த சேர் எண்டு சொல்லுறத விட்டுட்டு, வீட்ல போய் யோசிச்சு நல்ல ஒரு முடிவு வந்து  நாளைக்கு  சொல்லு. ஏனெண்டா எனக்கு வயது வட்டுக்கை போவிட்டுது. இனி அப்பா, அம்மாவை நம்பி இருந்து சரிவராது'.'

 

தயக்கத்துடன் '' இது..வந்து  ...அவசர முடிவில்லையே சேர்?''.

 

''இல்லையம்மா இல்லை, இது என்ரை நீண்ட கால எண்ணம்" என்று அவர் கெஞ்சும் குரலில் அம்மா  என விழித்துக்கொண்டதும், அவள் முகத்தில் பளிச்சிட்ட பிரகாசமான சந்தோஷம்நிச்சயம் அவர்களை திருமண வாழ்வில் இணைத்துக்கொள்ளும்.

 

டொக்ரர் என்றால் நிறையவே எதிர் பார்க்கும் எமது சமுதாயமும், இவர்கள் வாழ்வினைக் கண்டு நிச்சயம் பாடம் கற்றுக்கொள்ளும்!.

 

   💏 கதை:செ.மனுவேந்தன்


 

 

0 comments:

Post a Comment