நயன்தாரா -மூக்குத்தி அம்மன்:விமர்சனம்


 எல்.கே.ஜி. படத்திற்குப் பிறகு ஆர்.ஜே. பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் படம். தன் பக்தன் ஒருவன் மூலம் போலிச் சாமியாரை கடவுளே அம்பலப்படுத்துவதுதான் கதை.

நாகர்கோவிலில் வசிக்கும் ஏங்கல்ஸ் ராமசாமி (ஆர்.ஜே. பாலாஜி) ஒரு உள்ளூர் டீவியின் செய்தியாளர். தந்தை ஓடிப்போய்விட்டதால், தாயும் (ஊர்வசி) மூன்று சகோதரிகளும் இவரது வருமானத்தை நம்பியே வாழ்கிறார்கள். வாழ்க்கையின் கடுமை தாங்காமல் குலதெய்வம் மூக்குத்தி அம்மனை (நயன்தாரா) வேண்டி அழுகிறான் ஏங்கல்ஸ். அவன் முன்பாகத் தோன்றும் அம்மன், தான் இருக்குமிடத்தை திருப்பதி போல பிரபலமாக்கும்படி கூறுகிறாள்.

 

இதற்கிடையில் நாகர்கோவிலில் 11 ஆயிரம் ஏக்கரை சுருட்ட முயல்கிறது ஒரு கும்பல். அதன் பின்னணியில் ஒரு பெரிய சாமியார் (அஜய் கோஷ்) இருக்கிறார். தன் குடும்ப பிரச்சனைகளை சமாளித்தபடி, அந்த சாமியாரை அம்பலப்படுத்தி எப்படி நிலத்தை காப்பாற்றுகிறார் ஏங்கல்ஸ் என்பதே மீதிக் கதை.

 

படம் துவங்கி இடைவேளைவரை விறுவிறுப்பாகவே நகர்கிறது படம். ஆனால், போலிச் சாமியாரை அம்பலப்படுத்தும்படி மூக்குத்தி அம்மன் சொன்னதும் நடக்கும் நிகழ்வுகளில் பெரிய சுவாரஸ்யம் ஏதும் இல்லை. மிகப் பெரிய சக்தி வாய்ந்த சாமியாரை வீழ்த்த எவ்வளவு வியூகம் வகுக்க வேண்டும்? அதற்குப் பதிலாக சின்னச்சின்னதாக ஏதோ செய்கிறார்கள். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சாமியாரை மடக்குகிறார் கதாநாயகன். பிறகு ஒரு கட்டத்தில் போலிச் சாமியாரும் பக்தர்களும் கூடியிருக்கும்போது அம்மனே நேரில் வந்துவிடுகிறது. இதை அம்மன் முதலிலேயே செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

 

போலிச் சாமியாரை அம்பலப்படுத்தும் காட்சிகளுக்குப் பெரிதாக மெனக்கெடவில்லையென்றும், பாலாஜி பேசும் சில 'சுருக்' என்ற வசனங்களில் அதை ஈடுகட்டியிருக்கிறார்கள்.


படத்தின் நாயகனாக வரும் ஆர்.ஜே. பாலாஜி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வேகமாக, சத்தமாகப் பேசுவதுதான் அவரது பாணி என்று அறியப்பட்டிருந்த நிலையில், இந்தப் படத்தில் வேறு முகத்தைக் காட்டியிருக்கிறார். தன் குடும்ப கஷ்டத்தைத் தாங்காமல் புலம்பும் இடங்களில் ஒரு கீழ் மத்தியத்தர இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.

 

நாயகனின் தாயாக வரும் ஊர்வசி, ஒவ்வொரு படத்திலும் தனது முந்தைய படங்களைத் தாண்டிச் செல்கிறார். படத்தின் பிற்பகுதியில் தன் மகன் தன்னைத் திட்டிய பிறகு, ஊர்வசி அதற்கு அழுதபடி பதிலளிக்கும் நீண்ட காட்சி, அவர் நடித்த காட்சிகளிலேயே சிறந்த ஒன்று என்று சொல்லலாம்.

 

மூக்குத்தி அம்மனாக நடித்திருக்கும் நயன்தாராவுக்கு கையில் சூலாயிலத்தோடு வந்து சில நிமிடங்கள் பேசிப்போவதைத் தவிர பெரிதாக வேலை ஏதும் இல்லை. வில்லனாக நடித்திருக்கும் அஜய் கோஷின் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது.

 

பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்களில் எல்.ஆர். ஈஸ்வரி பாடும் 'மூக்குத்தி அம்மனுக்கு' பாடல் படத்தோடு பொருந்துகிறது.

 

படத்தின் முதல் பாதியிலிருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால், இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும்.

 

--முரளிதரன் காசிவிஸ்வநாதன்/BBCTAMIL  

 

குறிப்பு 1:அம்மனாக நயன்தாராவா? என்ற பல்வேறு விமர்சனங்களின் தாக்குதல்களுடன் படப்பிடிப்புடன் ஆரம்பமான ''மூக்குத்தி அம்மன்''   சிறந்த வசூலுடன் இன்று காட்சியளித்தாலும், மதம் பரப்புவதற்காக ,நோய் தீர்ப்பதாக கூறி நாடகமாடும் பொய்யான மதபோதகராக நடித்த மனோபாலாவின் காட்சிகளை படத்திலிருந்து அகற்றியது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.  

ஆனால் அவர்கள் அகற்றிய அக்காட்சி மட்டும் இன்று சமூக வலைத் தளங்களில் ''மூக்குத்தி அம்மன்'' படத்தினை விட அதிக இரசிகர்களின் பார்வையினை எட்டியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

குறிப்பு 2:திரைப்படக் கதையின் நோக்கம் போலிச்சாமியார்களை அம்பலப்படுத்துவதேயாகவே புரிகிறது. இத்திரைப் படத்திற்காக வருத்தப் பட வேண்டியவர்கள் போலிச்சாமியார்களும் போலிப் பக்தர்களுமே  மட்டுமே அல்லாது ஏனையவர்கள் அல்ல.

-செ.மனுவேந்தன் 

 

 

No comments:

Post a Comment